|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| முத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்போது நோய் குறுக்கிட்டது. என்ன நோய் என்று கண்டறியவே சில ஆண்டுகள். சிகிச்சைகள், அலைச்சல், அலைக்கழிப்பு. பின்னர்தான் தெரிந்தது அது 'கைஃபோஸ்காலியாஸிஸ்' (Kyphoscoliosis-முதுகெலும்பைப் பாதிக்கும் ஒரு நோய்) என்பதும், அதன் தொடர்ச்சியான முடக்குவாதம் என்பதும். பொருளாதார வசதி இல்லாததால் உயர்சிகிச்சைக்கு வழியில்லாத நிலைமை. நாளாக நாளாக நோயின் தாக்கம் அதிகமாகி, பிறர் உதவியின்றி எதுவுமே செய்ய இயலாத நிலை. பத்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்றுவிட, சக்கர நாற்காலிதான் வாழ்க்கை என்றாகிப் போனது. நாளடைவில் உடல் வளர்ச்சி முற்றிலும் குன்றி, கழுத்துக்குக் கீழே எதுவும் செயல்படாத நிலையும் வந்துவிட்டது. 
 மனம் தளரவில்லை யாழினிஸ்ரீ. ஆர்வத்தோடு கம்ப்யூட்டர் கற்றார். மீதி நேரத்தை வாசிப்பில் கழித்தார். அது பல வாசல்களைத் திறந்துவிட்டது. இணையம் நட்பானது. இயங்கிய இரு விரல்களைக் கொண்டு நூற்றுக்கணக்கில் கவிதைகளை எழுதினார். தளராத முயற்சியின் விளைவு 'மரப்பாச்சியின் கனவுகள்' என்னும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. கவிஞரும், பாடலாசிரியரும், திரைப்பட இயக்குநருமான குட்டி ரேவதி சமீபத்தில் இந்நூலை வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்.
 
 தனது படைப்பார்வம் குறித்து யாழினிஸ்ரீ, "எனது கவிதை உலகம் இந்தப் பிரபஞ்சம்தான். இந்தப் பிரபஞ்சத்தில் இருந்த, இருக்கும், இருக்கப்போகும் அனைத்தும் என் எழுத்துகளுக்கானதே. உடலுக்குதான் நோய்மையே தவிர என் சிந்தனை ஆரோக்கியமானது. அதை முடக்கிவிடமாட்டேன்." என்கிறார் ஒரு நேர்காணலில். இந்த உறுதி இவரது கவிதைகளிலும் வெளிப்படுகிறது.
 
 மேட்டுபாளையம் அருகே உள்ள தென் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் யாழினிஸ்ரீ. தந்தைக்கு வயது 75க்கு மேல் ஆகிவிட்டது. தாயும் அறுபதைத் தாண்டிவிட்டார் என்பதால் இருவரும் இவருக்கான உதவிகளை மிகுந்த சிரமத்துடன் செய்து வருகின்றனர். சிறு அதிர்வைக்கூடத் தாங்க இயலாத உடல்நிலை யாழினிக்கு. சக்கர நாற்காலியில்கூட அதிக நேரம் உட்கார்ந்திருக்க முடியாது. உட்கார்ந்தால் மூச்சுத் திணறல், கால் வீக்கம். அதனால் பெரும்பாலான நேரம் படுக்கையில்தான். எப்போதும் படுக்கையிலேயே இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் உண்டு. வலியுடன் நகர்கிறது வாழ்க்கை. என்றாலும் அயராமல் படுக்கையில் படுத்தவாறே கணினியில் கவிதைகளைத் தட்டச்சு செய்கிறார் யாழினிஸ்ரீ. இவற்றையும் மீறி இவரது கவிதைகளில் வெளிப்படுவது அன்பும், அக்கறையும், சக மனிதர்கள் மீதான கரிசனமும், மனிதநேயமுமே!
 
 
  
 'மரப்பாச்சியின் கனவுகள்' நூலிலிருந்து சில கவிதைகள் (அப்படியே கொடுத்திருக்கிறோம்)
 | 
											
												|  | 
											
											
												| உடனடித்தேவை சிறு புன்னகை தூண்டில்முள் கூர்மையில் தப்பிய மகிழ்வில்
 வலையகப்பட்ட மீனாய்
 வாட்டும் சூழல்கள்
 மீளும் போராட்டத்தில்
 இழப்பது வலையையா? வாழ்வையா?
 முடிவறியாது துள்ளும் மனதுள்
 கருமை பூசி கெக்கலிக்கிறது எதிர்காலம்...
 பயம் புதைத்த புன்னகையில் மலரலாம் ஓர் வெளிச்சப்பூ
 இப்போதைய உடனடித்தேவை
 சிறு புன்னகை மட்டுமே...
 
 ★★★★★
 
 உணவளிப்பவர் யாரோ
 சிதைந்து உதிரும் மண்டபத்தூண்களில்
 சித்திரங்களை வரைந்து களிக்கும்
 பைத்தியக்காரிக்கு துணையாக
 வண்ணங்களை குழைத்து கொண்டிருக்கும் ஜிம்மிக்கு
 ஒரு கவளம் உணவளிப்பவர் யாரோ....
 
 ★★★★★
 
 குளிர்காயும் வெயில்
 சற்றுநேரத்தில் பூமியை
 சுட்டெரிக்கத் தொடங்கிவிடும்
 அப்பத்தா பற்றவைத்த வென்னீர் அடுப்பில்
 குளிர்காயும் வெயில்...
 
 ★★★★★
 
 வெறுமையின் இருப்பு
 அந்த அறையில்
 நிசப்தத்துடன் பதுங்கியிருக்கும்
 வெறுமையின் இருப்பை
 துல்லியமாய் காட்டிக்கொடுத்தது
 கிழிக்கப்படாத நாட்காட்டித்தாள்கள்
 
 ★★★★★
 
 மகளிர் தினமாம்
 பேரழகு பெருமாபத்தாய் தானுள்ளது...
 கள்ளிப்பாலுக்கு தப்பியவை
 வன்புணர்வில் சிக்கியும்...
 
 வறுமையில் நீந்தியவை
 பலமிழந்து மூழ்கியும்...
 
 அடைக்கலமாய் சென்றவை
 சிறகுடைக்கப்பட்டு வாடியும்...
 
 அகாலத்தில் பிறந்தவை
 அவதூறில் புழுங்கியும்...
 
 மணமாலையில் இணைந்தவை
 எரிவாயுக்குடுவையோடு சிதறியும்...
 
 மென்மையும் கவர்ச்சியும் மெருகேற
 சுயம் உதிர்த்தபின் ரட்சிப்பாரற்று...
 
 சகதி சூழ் சமூகவாழ்வை
 கோட்டான்களின் சொர்க்கமாக சபித்து பறந்த
 வண்ணத்துப்பூச்சிகள் மொய்க்கும் சுடுகாடு
 
 ★★★★★
 
 தொகுப்பை வாங்க: amazon
 
 ஸ்ரீவித்யா ரமணன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |