|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய ஒப்புயர்வற்ற நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இதன் பெருமை மற்றும் கருத்துக்களை அமெரிக்காவில் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னோடி முனைவர் இர. பிரபாகரன் என்றால் மிகையல்ல. அவர் 2003ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் என்ற அமைப்பை வாஷிங்டன் வட்டாரத்தில் உருவாக்கி, அதன் வழியே திருக்குறளைப் பல உரைகளுடன் ஒப்பிட்டு பலரும் கூடிப் படிக்க வழிசெய்தார். 2005ஆம் ஆண்டு இவர் தலைமையில் வாஷிங்டனில் 'பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு' சிறப்பாக நடைபெற்றது. 
 அமெரிக்காவிலும் தமிழகத்திலும் பல ஆண்டுகளாகப் பல ஊர்களுக்குச் சென்று பிரபாகரன் திருக்குறளைப் பற்றி சொற்பொழிவாற்றி வருகிறார். அவற்றில் அவர் விரித்துரைத்த குறள் கருத்துக்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் 'The Ageless Wisdom' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். வள்ளுவக் கருத்துக்களை அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பீட்டர் டிரக்கர், ஸ்டீவன் கவ்வி போன்ற உலக அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிடும் 22 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.
 
 தமிழரல்லாதோர்க்குத் திருக்குறளை அறிமுகப்படுத்த மிகவும் பயனுள்ள நூல் இது. கட்டுரைகள், அறிவு, சுயகட்டுப்பாடு, நேர்மை, தனிமனித வெற்றி, மனிதநேயத்தின் கூறுகள், காதல் வாழ்க்கை போன்றவற்றை ஆழமாகத் தொடுகின்றது. ஆங்காங்கே, புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் காதல், இல்லற வாழ்வியல், அறம்சார்ந்த வாழ்க்கை போன்ற கருத்துக்களை வள்ளுவமும் மற்ற நூல்களும் எங்ஙனம் சொல்கின்றன என்பதை மிகத்தெளிவாகக் கூறியுள்ளார்.  மேலும், வள்ளுவத்தில் கூறப்படும் தலைமைப் பண்புகள், ஹார்வர்டு பல்கலைக் கழகம் வெளியிடும் மேலாண்மை இதழில் கூறப்படும் பண்புகளோடு எங்ஙனம்  ஒத்துப் போகின்றன என்பதையும் நேர்த்தியாக விளக்கியுள்ளார்.
 
 இந்த நூலுக்கு பேரா. ஜார்ஜ் ஹார்ட், முனை. இறையன்பு, இ.ஆ.ப. ஆகியோர் சிறப்பான அணிந்துரைகள் வழங்கி உள்ளனர். தமிழறியாத இளைய தலைமுறைத் தமிழர்களும் திருக்குறளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஏதுவாக இந்நூல் அமைந்துள்ளது. உலகெங்கிலும் சென்றடையும்  வகையில், விழாக் கொண்டாட்டங்களிலும், விருந்தினர்களுக்கும் பரிசளிக்கத் தக்க நூலாகும் இது.
 | 
											
												|  | 
											
											
												| நூலை வாங்க: 
 இந்தியாவில்
 Emerald Publishers, 15A, First Floor, Casa Major Road, Egmore, Chennai – 600 008.
 தொலைபேசி: +91 44 2819 3206; 42146994
 
 அமெரிக்காவில்
 கீழுள்ள முகவரிக்கு $20.00 தொகைக்கான காசோலையுடன் முகவரியை அனுப்பவும்:
 Dr. R. Prabhakaran, 1103 Bluebird Court East, Bel Air, MD 21015.
 மின்னஞ்சல்: prabu0111@gmail.com
 
 செந்தில் முருகன்,
 மேரிலாந்து
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |