|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? |    |  
	                                                        | - கதிரவன் எழில்மன்னன் ![]() | ![]() நவம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| பாகம்-2 
 (இதற்கு முன்: இரண்டாம் சுற்று முதலீடு பெறுவதற்கு நிறுவனம் பல எல்லைக் கோடுகளைத் தாண்டியிருக்க வேண்டும். அதற்கான பண்புகள்: தொழில்நுட்ப நிலை, குழுவின் பலம், வாடிக்கையாளர் நிரூபணம், பொருளாதாரத் திட்டம், விற்பனை முறை. இவற்றில் பல பண்புகள் முதல் மூலதனம் பெறுவதற்குத் தேவையானவை என்றாலும், இரண்டாம் சுற்றில் தொழில்நுட்பத்தை விடப் பொருள் விற்பனை சம்பந்தப்பட்ட மதிப்பீடுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்போது மேல் குறிப்பிட்ட பண்புகளின் மதிப்பீடுகளையும் எல்லைக் கோடுகளையும் சற்று விவரமாகக் காண்போம்.)
 
 1. தொழில்நுட்பம் (technology):
 
 நிறுவனத்தின் தொழில்நுட்பம், எந்த நிலைக்கு முன்னேறி உள்ளது? தொழில்நுட்ப அபாயத்தை (technology risk) முழுவதும் கடந்து விற்பனைப்பொருள் தயாராகியிருக்க வேண்டும்.
 
 இரண்டாம் சுற்று முதலீடு பெற மிக முக்கியமான பண்பு வாடிக்கையாளர் நிரூபணம். அதைப் பெற முதல்படி தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று விற்பனைப்பொருள் தயாராவது.
 
 முதல் சுற்று மூலதனம் பெறுகையில், பெரும்பாலான ஆரம்பநிலை நிறுவனங்களின் தொழில்நுட்பம் ஒரு யோசனை அளவிலேயே இருக்கும். சில நிறுவனத்தார் ப்ரோட்டோடைப் எனப்படும் முதல் நிலையில் தொழில்நுட்பத்தைக் காட்டுவார்கள். தொழில்நுட்பம் மிக எளிதாக இருந்தால் முதலீட்டாளர் தயங்குவார்கள். ஏனென்றால் அத்தகைய எளிய தொழில்நுட்பத்தைப் பலப்பல நிறுவனங்கள் உருவாக்கிவிட இயலுமே? அப்போது அந்த விற்பனைப்பொருளுக்கான வாய்ப்பு பல நிறுவனங்களுக்கும் சிதறி, விற்பனைக் காலம் மிக நீளமாகி விற்பதே பெரும்பாடாகி விடும் அல்லவா?
 
 மேலும், ஓர் ஆரம்பநிலை நிறுவனத்துக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் எனில், அதே துறையில் அப்போது உயர்நிலை பெற்ற பெரும் நிறுவனங்கள் இன்னும் அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கவில்லை; அப்படியே உருவாக்க முயன்றாலும் அதற்கு வெகுநாட்களாகும்; அதற்குள் ஆரம்ப நிலை நிறுவனம் படுவேகமாக வேலை செய்து வாடிக்கையாளர்களைப் பெற்று முன்னிலை அடைந்துவிடும் என்பதுதான்.
 
 எனவே, தொழில்நுட்பம் ஒரளவு கடினம், அதைச் சமாளித்து விற்பனைப்பொருளை உருவாக்குவதில் அபாயம் உள்ளது என்ற ஒரு கேள்விக் குறியுடன் தான் பெரும்பாலான ஆரம்ப நிலை நிறுவனங்கள் தொழில்நுட்பத் தயாரிப்பில் துவங்குகின்றன. தொழில்நுட்பக் குழுவினருக்கு அந்தத் துறையில் மிகுந்த பயிற்சியும் நிபுணத்துவமும் இருந்தால், அல்லது ப்ரோட்டோடைப் காட்ட முடிந்தால் அந்தக் கேள்விக் குறியின் அளவு குறைந்து, மூலதனம் இடப்படுகிறது.
 
 ஆனால் இரண்டாம் சுற்று மூலதனம் பெற வேண்டுமானால் அந்தக் கேள்விக் குறிக்கு அங்கு இடமே இல்லை. தொழில்நுட்ப அபாயம் ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். விற்பனைப்பொருள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
 மென்பொருள் (software) விற்பனைக்கு இந்த விதியில் விலக்கேயில்லை. பெரும்பாலான மென்பொருட்களுக்கு நிலைக்கக் கூடிய அனுகூலம் (sustainable competitive advantage) தொழில்நுட்பத்தில் அல்ல, விற்பனையில் முந்திக் கொள்வதுதான். முதல் விற்பனை அனுகூலம் (first mover advantage) என்று சொல்வார்கள். மென்பொருட்கள் ஓரளவு வெற்றி பெற்றதுமே, பலப்பல போட்டியாளர்கள் புது நிறுவனங்களோ அல்லது நிலை பெற்ற நிறுவனங்கள் கூட, ஓடிவந்து குவிந்து அதே மாதிரி மென்பொருளை உருவாக்கி விடுகிறார்கள். அதனால், மென்பொருள் நிறுவனங்கள் விற்பனைப்பொருளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி மெருகேற்றி, அதன் துறையில் மிகச்சிறந்த விற்பனைப்பொருள் (best of breed) என்ற பட்டத்தைப் பெற்றால் அவ்வளவு எளிதில் போட்டியாளர்கள் அதே அளவுக்கு வெகுசீக்கிரத்தில் இணையாகிவிட முடியாது. அத்தகைய முன்னோட்டத்தைப் பெற்றால் இரண்டாம் சுற்று முதலீடு பெறுவது எளிதாகிறது. சில மென்பொருட்கள் கடினமான செயல்முறையைப் (algorithm) பயன்படுத்துகின்றன. அவற்றுக்குத் தொழில்நுட்ப அபாயமும், அதனால் அனுகூலமும் சற்று அதிகம். அத்தகைய மென்பொருட்களுக்கு வாடிக்கையாளர் நிரூபணம் தேவை, ஆனால் சற்றுக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை -- மூலதனம் பெற வாய்ப்புண்டு.
 | 
											
												|  | 
											
											
												| கணினி அல்லது மின்வலை வன்பொருள் (networking hardware) சாதனங்களும் ப்ரோட்டோடைப் நிலையைத் தாண்டி குறைந்த பட்சம் பேட்டா எனப்படும் விற்பனைக்குச் சற்றே முந்திய நிலையிலாவது வாடிக்கையாளர் சோதனையில் ஓரளவுக்கு முன்னேறியிருக்க வேண்டும். அத்தகைய சாதனங்களில் உள்ள தொழில்நுட்பத்தை உடனே சாதிப்பது மென்பொருள்களை விடச் சற்றுக் கடினம் என்பதால் பேட்டா நிலை பரவாயில்லை என்று சகிக்கப்படுகிறது. ஆனால் ஒரே சாதன வகையில் சில நிறுவனங்கள் இருப்பின் அவற்றில் விற்பனை நிலைக்கே வந்து பலப்பல வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனத்துக்குத்தான் முதலீடு தரப் போட்டியிட்டு முந்துவார்கள்! அந்த நிறுவனத்தில் பணம்போட முயன்று முடியாமல் போன முதலீட்டு நிறுவனங்கள் அதே வகையைச் சார்ந்த அடுத்த நல்ல நிறுவனத்தைத் தேடுவார்கள். ஒரே வகையில் மூன்று நான்கு நிறுவனங்கள் இரண்டாம் சுற்றுப் பெற்று விட்டால், அந்தக் களம் மிகவும் நெருக்கடியாகிவிட்டது (getting crowded) என்று தீர்மானிக்கப் பட்டு மீதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைக்காமலே போனாலும் போகலாம். அதற்கு விதி விலக்கு: தாமதமானாலும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தால் முதலில் விற்க ஆரம்பித்த சாதனங்களின் பலவீனங்களை நீக்கி, அவற்றை விட நன்கு விற்க முடியும் என்று நிரூபிக்க முடியக் கூடிய நிறுவனங்கள். அத்தகைய நிரூபணத்துக்கு, அத்தகைய இன்னொரு சாதனம் தேவை என வாடிக்கையாளர்கள் சாட்சி கூற வேண்டும். 
 பேட்டா நிலை கூட அடையாமலே இரண்டாம் சுற்றுப் பெறக்கூடிய ஒரே துறை சிப் துறை. ஏனென்றால் சிப் உருவாக்குவதில் மிகுந்த தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. சிப் உருவாவதற்கு பல நிலைப் படிகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும், தொழில்நுட்ப அபாயம் சற்று நீக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கடைசி நிலையில் சிப் உற்பத்தி செய்வதற்கான mask போன்ற சாதனங்கள் செய்ய மிக அதிக அளவு மூலதனம் தேவை. மேலும், நிறுவனத்தைத் தொடங்கவும், முதல்நிலை மூலதனம் பெறவும் மிக அதிக அளவு வாடிக்கையாளர் அத்தாட்சி தேவைப் படுகிறது. அதனால் சிப் நிறுவனங்கள் பெரும்பாலும் FPGA model எனப்படும் நிலை வந்து சிப் வேலைசெய்ய முடியும் என்று காட்டியதுமே அதை இறுதியாக உற்பத்தி செய்வதற்கு இரண்டாம் சுற்று மூதலீடு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனாலும், FPGA model-களையே பேட்டாவாக வாடிக்கையாளர்களிடம் நிரூபணம் பெற்றிருந்தால் மூலதனம் பெறுவது இன்னும் எளிதாகிறது. அத்தகைய நிரூபணம் இல்லாமல் வெறும் தொழில்நுட்பம் மட்டும் காட்டினால் முதலீடு பெறுவதும் சற்றுக் கடினம், நிறுவனத்தின் மதிப்பீடும் (valuation) குறைக்கப்படுகிறது.
 
 எனவே, இரண்டாம் சுற்று மூலதனம் பெறுவதற்கு தொழில்நுட்பம் பூர்த்தியாவது மட்டுமன்றி, வாடிக்கையாளர் நிரூபணமும் மிகவும் முக்கியம் என்று தெரிகிறது; அடுத்து அந்தப் பண்பை விவரிப்போம்.
 
 (தொடரும்)
 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |