Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-21-d)
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2026|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பற்பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.

வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இந்தக் கட்டுரை வரிசையில் என் அனுபவ பூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும், ஒன்று சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.

இப்போது ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்!

★★★★★


கேள்வி: நான் ஒரு பெரிய நிறுவனத்தில் விற்பொருள் மேலாண்மை அதிகாரியாக உள்ளேன். என் சொந்த நிறுவனத்தை ஆரம்பிக்க யோசனை உள்ளது. அதற்காகப் பெரிய ஆராய்ச்சிகள் செய்து, நீங்களும் பரிந்துரைத்ததைப் போலவே பலரையும் கலந்து ஆலோசித்தாயிற்று. என் யோசனைக்குச் சாதகமாகக் கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஓரளவு சந்தேகமும் உள்ளது! வேலையை விடுத்து நிறுவனத்தை ஆரம்பிக்கத் தயக்கமாக உள்ளது. உங்கள் பரிந்துரை என்ன?
கதிரவனின் பதில்: இந்த யுக்திக் கட்டுரையின் முன்னொரு பகுதியில் தயங்காதீர்கள், தாவி விடுங்கள் என்று பதில் அளித்திருந்தேன்! ஆனால் அப்படித் தாவுவதற்கும் கண்மூடித்தனமாக அல்ல, புத்திசாலித்தனமாக சில முன் நிபந்தனைகளை அனுசரித்து, பின்பே தாவ வேண்டும் என்றும் சுருக்கமாகக் கூறியிருந்தேன். இப்போது அந்த முன் நிபந்தனைகள் என்ன, ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தாவ எம்மாதிரியான செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவற்றை விவரித்து வருகிறோம்.

முன்னர், முதல் நிபந்தனையாக, நீங்கள் பெரும் நிறுவன வேலையிலிருந்து விலகி ஆரம்பநிலை நிறுவனத்திலுள்ள சிக்கல்களைச் சந்தித்து, பல வருடங்கள் பாடுபடத் தயாரா என்பதைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். இந்த முதல் நிபந்தனையில் பல துணை அம்சங்கள் உள்ளன என்றும் முதலிரண்டு துணை அம்சங்களாக, குடும்ப நிதிநிலைமை பற்றியும், எந்தப் பிரச்சனை, பணியானாலும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கினோம். இப்போது அடுத்த துணை அம்சத்தைப் பார்ப்போம்:

எதற்காக ஆரம்பநிலை நிறுவன முயற்சியில் இறங்குகிறீர்கள் என்பதை நீங்கள் நன்கு உணர்ந்த பின்பே களத்தில் இறங்க வேண்டும்.

நீங்கள் அவ்வாறு களத்தில் இறங்க காரணங்கள் இருக்கக் கூடும். தங்கள் யோசனையைச் சாதித்தே தீர வேண்டும் என்னும் தீவிர அவா சிலரை உந்தக் கூடும். ஆனால் எல்லாருக்கும் அப்படித்தான் என்றில்லை. சிலரை, மாதச் சம்பளத்துக்கு வேறு யாருக்கோ பதிலளித்துக் கொண்டு காலம் தள்ளாமல், தனக்காகத் தானே முயன்று வெற்றி காண வேண்டும் என்ற உணர்வு உந்தக் கூடும். சிலருக்கு நிறுவனத்தை வளர்த்து விற்றோ, பங்குச் சந்தைக்குக் கொண்டு சென்றோ, வெற்றி கண்டு நிதிப்பலன் பெறவேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடும். இத்தகைய சில காரணங்களின் கலவையாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், உந்துகின்ற காரணம் எது என்ற தெளிவும், அதில் அசையாத உறுதியும் இருக்க வேண்டும்.

இதில் என்ன பெரிய கேள்வி இருக்கிறது என்று நீங்கள் அலட்சியப் படுத்தக் கூடும். ஆனால், இது ஒரு முக்கியமான விஷயம். ஏனெனில், பெரும் நிறுவனத்தில் நல்ல நிலையில் இருக்கும்போது அதை விட்டுவிட்டு, ஆபத்தான ஆரம்பநிலை நிறுவனத்தில் தத்தளிக்கும் போது, ஏன் இதைச் செய்கிறோம் என்ற தெளிவு இல்லாவிட்டால் பெருத்த சிக்கலாகிவிடும்!

ஏனெனில், ஆரம்பநிலை நிறுவனங்களில் நெருக்கடிகள் நேர்வது சர்வ சாதாரணம்! பெரும் நிறுவனங்களில் எடுத்துக்கொண்ட வேலைகளில், நிதானமாக, பொதுவாக நேர்கோடாகச் சென்று ஓரளவாவது சாதிக்க முடியும். பெரும் நிறுவன அரசியல் நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் மேலதிகாரிகளின் உதவியோடு அவற்றை நிவர்த்திக்க முடியும்.

ஆனால் ஆரம்பநிலை நிறுவனத்தில் அப்படியல்ல. பல விதமான நெருக்கடிகள் தினசரி எழக்கூடும். பொறியியல் நுட்பம், வணிகச் சந்தை அல்லது வாடிக்கையாளர் என்று பற்பல திசைகளில் ஒரே நேரத்தில் பல நெருக்கடிகள் தலைதூக்கக் கூடும்!

அத்தகைய தருணத்தில், துருவ நட்சத்திரமாக இருந்து , திடமாக நெருக்கடிகளைச் சந்தித்து, நிவர்த்தித்து, மேற்கொண்டு பயணிக்க வழிகாட்டக் கூடியது, ஏன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளேன் என்ற உங்கள் தெள்ளத் தெளிவான உள்ளுணர்வுதான்!

அத்தகைய தெளிவு இல்லாவிட்டால் "சே! எதற்கு இப்படி ஒரு இக்கட்டான முயற்சி? விட்டுத் தள்ளிவிட்டு அக்கடான்னு முன்மாதிரி பெரும் நிறுவன வேலைக்கே திரும்பப் போய்விடலாம்" என்று விரக்தி அடையக்கூடும்.

ஆனால் ஏன் நிறுவனத்தை ஆரம்பித்தேன் என்பதில் தெளிவும் உறுதியும் இருப்பின், எத்தகைய கடினமான நெருக்கடி முளைத்தாலும் விரக்தியில் விழமாட்டீர்கள். சளைக்காமல் சந்தித்து, சாதிக்க முடியும்!

முதல் நிபந்தனையின் இறுதித் துணை அம்சத்தை அடுத்த பகுதியில் விவரிப்போம்.

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline