|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம். 
 ★★★★★
 
 கேள்வி: நான் சமீபத்தில் ஒரு நிறுவனத்தை ஒரு சக நிறுவனரோடு ஆரம்பித்துள்ளேன். ஓரிரு தேவதை மூலதனத்தாரிடமிருந்தும் சிறிய அளவு மூலதனம் பெற்று இதை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் விதை நிலை மூலதனத்தாரிடம் சென்று முயல்கையில் “இந்த யோசனை பெருவளர்ச்சியைச் சமாளிக்குமா” (will it scale?) என்று பலர் கேட்கிறார்கள். இவ்வளவு புதிய நிறுவனம் இப்போதே பெருவளர்ச்சியைப் பற்றி யோசித்து நடைமுறைப்படுத்த வேண்டுமா? இல்லை என்றால் எவ்வாறு மூலதனத்தாருக்கு நம்பிக்கையளிப்பது? விளக்குங்களேன்! (தொடர்ச்சி)
 கதிரவனின் பதில்: பெருவளர்ச்சி கண்டபின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆரம்பநிலையிலேயே அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், நிறுவனம் மூலதனம் பெறவேண்டுமானால் அதைப்பற்றி யோசித்தே தீரவேண்டும் என்று சென்ற பகுதியில் கண்டோம். மேலும், பெருவளர்ச்சி என்றால், நிறுவனத்தின் விற்பொருள் அல்லது சேவை பெருமளவில் விற்கப்படும் நிலை என்றும் மூலதனத்தாரின் கவலை அப்போதாவது உங்கள் நிறுவனம் லாபகரமாக நடைபெற இயலுமா என்பது என்றும் கண்டோம்.
 
 அதாவது விற்பொருளின் அடிப்படை அலகின் (basic unit) விற்பனை விலை, அதன் உற்பத்திச் செலவு மற்றும் வணீகரீதியான செலவு குறையுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.
 
 மேலும், அடிப்படை அளவின் செலவு என்பது, நிலைத்த செலவு, மற்றும் வேறுபடும் செலவு என்னும் இரண்டு வகைச் செலவுகளின் மொத்தம் என்றும், ஒரே ஒரு பொருளை உற்பத்தி செய்தாலும் மாறாதது நிலைத்த செலவு என்றும், தொழிற்சாலை, தகவல் மையம், குறைபட்ச மேகக்கணினி போன்று அதன் உதாரணங்களைப் பற்றியும் கண்டோம். உற்பத்தி செய்யும் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அடிப்படை அளவின் நிலைத்த செலவின் விகிதம் குறைந்து வருகிறது. அதனால், பெருவளர்ச்சி நிலையில் அடிப்படை அளவின் நிலைத்த செலவு ஆரம்பநிலையை விடக் குறைவுதான்.
 
 ஆனால் தொழிற்சாலைக்குத் தேவையான வாகனங்கள், கணினிகள் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலைத்த செலவு மிக அதிகம் என்பதால் பெருவளர்ச்சி நிலையிலும் கூட நிலைத்த செலவின் விகிதம் மொத்த அடிப்படைச் செலவின் கணிசமான விகிதமாகத்தான் இருக்கும். மென்பொருட்களுக்கும், மேகக் கணினியிலிருந்து அளிக்கப் படும் மென்பொருள் சேவைகளுக்கும் நிலைத்த செலவு விகிதம் பெருவளர்ச்சியின் போது வெகுவாகக் குறைகிறது. தற்போது ஆரம்பிக்கப்படும் நுட்ப நிறுவனங்கள் (tech ventures) பொதுவாக மென்பொருள் சேவை நிறுவனங்களாக உள்ளதால், நாம் அந்த வகையை மேற்கொண்டு ஆராய்வோம். அதாவது பெருவளர்ச்சியின் போது நிலைத்த செலவு அடிப்படை அளவில் குறைந்த விகிதம் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அத்தகைய நிறுவனங்கள் பெருவளர்ச்சி நிலையில் லாபகரமாவதற்கு வேறுபடும் செலவு மிக முக்கியத்துவம் படைத்தது என்று உணரலாம். இப்போது வேறுபடும் செலவுகளைப் பற்றி மேற்கொண்டு விவரிப்போம்.
 
 விற்பொருள் அல்லது சேவையின் அடிப்படை அளவு ஒவ்வொன்று தயாரிக்க அல்லது அளிப்பதற்கு, நிலைத்த செலவுக்கு மேற்கொண்டு எவ்வளவு செலவாகிறது என்பதுதான் வேறுபடும் செலவு. வாகனங்கள் போன்ற பெரிய பொருட்களுக்கு ஒரே ஒரு அடிப்படை அளவுக்கான வேறுபடும் செலவைக் கணிக்கலாம். ஆனால், சில முறை ஒரே ஒரு அடிப்படை அளவுக்குக் குறிப்பாக அதைக் கணிக்க இயலாது. உதாரணமாக மின்வில்லைகளை எடுத்துக் கொள்வோம். ஒரே ஒரு மின்வில்லையை மட்டும் இண்ட்டெல், என்வீடியா போன்ற நிறுவனங்கள் தயாரிப்பதில்லை. பலப் பல மின்வில்லைகளை ஒரே தகட்டில் தயாரிப்பார்கள். அதுமட்டுமல்ல, பலத் தகடுகளை (wafers) ஒரே முறையில் தயாரிப்புச் சாதனத்துக்குள் வைத்துத் தயாரிப்பார்கள். அதனால், அந்த எல்லத் தகடுகளிலிருந்தும் கிடைக்கும் பயன்படுத்தப் படக்கூடிய மின்வில்லைகளின் எண்ணிக்கையால் (yield) அந்த ஒரே முறையில் தகடுகளைத் தயாரிக்க ஆன மொத்தச் செலவை வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு மின்வில்லையின் வேறுபாட்டுச் செலவு.
 
 அப்படிப்பட்ட மொத்தச் செலவைக் கணிப்பதும் அவ்வளவு எளிதல்ல! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் எக்ஸொடஸ் நிறுவனத்தில் பணியாற்றிய போது தலைமை நிதித்துறை மேலாளர் (Chief Financial Officer, CFO) பொறியியல் தலைவர்களை ஒருங்கழைத்து ஒரு மெகாபிட் மின்வலை அலையகலத்துக்கு எவ்வளவு செலவு என்று கேட்பார். முதலில் எளிதாகச் சில நிலைத்த செலவுகளை பட்டியிலிட முடிந்தது. ஆனால் ஒவ்வொரு மெகாபிட் அலையகலத்துக்கும் எவ்வளவு வேறுபாட்டுச் செலவு என்ற கேள்வி எழுந்ததும் அவ்வளவுதான், நாங்கள் தலையைச் சொறிந்துகொள்ள வேண்டியதாயிற்று! ஏனெனில் அதில் பலப்பல அம்சங்களை யோசிக்க வேண்டியிருந்தது. உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் ஒரே மின்பிணைப்பில் நூறு மெகபிட்கள் வரை அனுப்ப முடியும். ஆனால் அதற்குமேல் அனுப்பினால் இரண்டு மின்பிணைப்புச் செலவுகளாகக் கணிக்க வேண்டும். அவ்வாறு பல வாடிக்கையாளர்கள் எவ்வளவு பிணைப்புகள் வைத்திருக்கக் கூடும் அதற்கான பிணைப்புச் சாதன முகங்கள் (switch ports) எத்தனை தேவை, மொத்த பிணைப்பு முகங்களுக்கு எவ்வளவு பிணைப்புச் சாதனங்கள் தேவை, அவற்றை இயக்க எத்தனை மின்வலை பொறியியலாளர்கள் தேவை - இவைபோன்ற பல வேறுபடும் அம்சங்களைக் கணிக்க வேண்டியதாயிற்று! இறுதியாக அந்த நிதி மேலாளருக்குத் திருப்திகரமான கணிப்பு கிடைப்பதற்குள் அப்பப்பா, நாங்கள் திணறியே போய்விட்டோம்!
 
 அதேபோல் மேகக் கணினியில் இயங்கும் மென்பொருள் சேவைகளுக்கும் அடிப்படை அளவின் வேறுபாட்டுச் செலவைக் கணிப்பதென்பது எளிதல்ல. ஏனெனில், சில செலவுகள் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே உரியதாகும். அவற்றை வேறுபாட்டுச் செலவுகளாக எளிதாக எடுத்துக் கொண்டுவிடலாம். ஆனால், பல செலவுகள் எல்லா வாடிக்கையாளர்களும் பகிர்ந்து கொள்ளும்படி இருக்கும்.
 
 உதாரணமாக வாடிக்கையாளர்களின் சேவை விண்ணப்பங்கள் (service requests) முதலில் நேர்கொள்ளும் மென்பொருள் பகுதிகளை ஒவ்வொன்றுக்கு இத்தனை வாடிக்கையாளர்கள் என்று வகுத்து வேறுபாட்டுச் செலவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பயன் படுத்தும் தகவல்தளம் (database) அவ்வளவு எளிதாக வகுத்து விட இயலாது. ஏனெனில், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதில் எவ்வளவு கணிப்பை பயன் படுத்துகிறார்கள், எவ்வளவு தகவல் சேமிப்பைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து, வெவ்வேறு வாடிக்கையாளருக்கான செலவு வேறுபடும்.
 
 இவ்வாறு பலவாறாக வேறுபடும் செலவுகளை எப்படிக் கணிப்பது, மேலும் எவ்வாறு அவற்றைக் கட்டுப்படுத்தி, பெருவளர்ச்சி நிலையில் லாபகரமடைவது என்பதையெல்லாம் பற்றி அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.
 
 (தொடரும்)
 | 
											
												|  | 
											
											
												| கதிரவன் எழில்மன்னன் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |