|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| பாகம்-17a முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.
 
 ★★★★★
 
 கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளி (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகி விட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்!
 
 கதிரவனின் பதில்:  முதலாவதாக உங்கள் ஆரம்பநிலை வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்! பல நிறுவனங்கள் இத்தகைய முதல் வெற்றிக்கே வருவதில்லை. அத்தகைய வெற்றியடைந்த நீங்கள் மேலும் எப்படி வேகமாக வளர்வது என்று யோசிக்க ஆரம்பித்துள்ளீர்கள். மிக நல்லது. சபாஷ்!
 
 சூறாவளி என்பதை நேரடியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதை இங்கே அதிவேக வளர்ச்சி என்று புரிந்துகொள்ள வேண்டும். அதாவது எந்த வணிகச் சந்தைப் பிரிவு அல்லது எந்த விற்பொருள் மிக வேகமாக விற்பனையில் வளர்கிறதோ அதைச் சூறாவளி வேகம் என்று கூறுகிறார்க்ள்.
 
 ஆரம்பநிலை நிறுவனங்கள் வேகமாக வளரப் பல வழிமுறைகள் உள்ளன. சில நிறுவனங்கள், முன்பில்லாத ஒருவிதமான விற்பொருளை உருவாக்குகின்றன. அவை தாங்களே எதையும் சாராமல் வளர்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் இக்கட்டுரையில் அத்தகைய சார்பற்ற வெற்றியை அலசப் போவதில்லை. அதற்குப் பதில், நாம் வேகமாக வளரும் சந்தை அல்லது விற்பொருளைச் சார்ந்து அதன் வளர்ச்சி வேகத்தைப் பயன்படுத்தி தானும் வளர்ந்து வெற்றியடையும் வழிமுறைகளை விவரிப்போம்.
 
 சூறாவளி வளர்ச்சிக்குச் சில உதாரணங்கள்: மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் (Microsoft Windows), ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், கூகிள் நிறுவனத்தின் தேடல் சேவை, அமேஸான் மின்விற்பனை மற்றும் மேகக்கணினி சேவைகள். இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் இந்த உதாரணங்களிலிருந்தே உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
 
 நான் தேர்ந்தெடுத்த சூறாவளி வளர்ச்சி உதாரணங்களுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. அவை மற்ற விற்பொருள்கள் தம்மைச் சார்ந்து விற்கப்பட உதவும் மேடைகள் (platforms). வேகமாக வளரும் எல்லாச் சூறாவளி வணிகச்சந்தை அல்லது விற்பொருட்களும் அம்மாதிரி உதவுவதில்லை. அதனால் இத்தகைய மேடை, சூறாவளிகளை உணர்ந்து அவற்றோடு ஒட்டினாலே நீங்கள் கேள்விப்பட்டது போல் உங்கள் விற்பனையும் வேகமாக வளர இயலும். மேடையற்ற சூறாவளிகள் தாங்கள் தனியே வேகமாக வளருமே தவிர மற்ற விற்பொருட்கள் சார்ந்து வளர உதவுவதில்லை. மேடைகள் மற்ற விற்பொருட்கள் சார்வதற்கான இடைமுகங்கள் பலவற்றை அமைத்து அளிக்கின்றன.
 | 
											
												|  | 
											
											
												| அப்படிப்பட்ட மேடை சுழற்புயலோடு எப்படி ஒட்டுவது, நீங்களும் வேகமாக வளர்வது எப்படி, அதில் வெற்றி கிட்டாமல் போவதற்கான காரணங்கள் என்ன என்பதையெல்லாம் இப்போது விவரிப்போம். 
 சுழற்புயலை ஒட்டி வேகமாக வளர்ந்த சில உதாரணங்களோடு விளக்கத்தை ஆரம்பிப்போம். ஐ.பி.எம். நிறுவனம் தனிக்கணினி (personal computers) வணிகச் சந்தையை பெருமளவில் வளர்த்துச் சூறாவளியாக்கிய போது அத்தகைய பல கணினிகளைச் சேர்த்து வலையாக்கி சேவைக் கணினிச் சேமிப்புச் சேவை (storage service), பதிப்புச் சேவை (print service) போன்றவற்றை அளிக்கும் வாய்ப்புகளை உண்டாக்கியது. அதை வெகுநன்கு பயன்படுத்தி, தனிக்கணினி சூறாவளியோடு ஒட்டிக்கொண்டு பெருமளவில் வளர்ந்தது Novell நிறுவனம். (சில வருடங்களுக்குப் பிறகு மைக்ரோஸாஃட்டின் பெரும் தாக்குதாலால் நோவெல் படுத்துவிட்டது வேறு விஷயம்!)
 
 இன்னொரு உதாரணம் கணினி விளையாட்டுக்களில் ஸிங்கா (Zynga). கணினி விளையாட்டு மென்பொருள் நிறுவங்கள் எல்லாம் தனிநபர் விளையாட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஸிங்கா நிறுவனம் முகநூலின் சமூக முக்கியத்துவத்தை உணர்ந்து, பலர் சேர்ந்து விளையாடும் சேவையை முகநூல் மேடையில் ஆரம்பித்தது. அதனால், முகநூல் சூறாவளி வளர்ச்சியில் சேர்ந்து வேகமாக வளர முடிந்தது.
 
 தனிக்கணினி போன்ற இன்னொரு நல்ல வணிகச் சந்தை உதாரணம் உள்ளது. ஈபே (Ebay) போன்ற நிறுவனங்களின் முயற்சியால் மின்வணிகம் மிகவேகமாக வளர்ந்து ஒரு சூறாவளிச் சந்தையாக வளர்ந்தபோது தனியார் அல்லது சிறுவணிகர்களுக்கு விற்பொருளுக்கான கட்டணம் பெறுவதற்குச் சரியான வசதியில்லாதபோது பேபால் (PayPal) நிறுவனம் உருவாகியது. அது ஈபே நிறுவனத்தின் சூறாவளி வளர்ச்சியோடு ஒட்டிக்கொண்டு தானும் பெருவளர்ச்சி பெற்றது. ஆனால் அத்தோடு நில்லாமல், மின்வணிகம் செய்த சிறு வணிகத்தளங்கள், நன்கொடைச் சேவைகள் எல்லாவற்றுக்கும் அதேபோல் கட்டணம் செலுத்தும் சேவையை எளிதாக்கி மின்வணிகச் சந்தையின் ஒட்டுமொத்த வேகவளர்ச்சியில் தானும் வளர்ந்து, இப்போது வென்மோ, ஸூம் போன்ற இன்னும் பல நிதியளிக்கும் சேவைகளை அளிக்கும் பெருநிறுவனமாக உள்ளது.
 
 இத்தகைய சூறாவளி வளர்ச்சியைச் சார்ந்து வெற்றியடைவதில் அடியேனுக்கும் சற்று அனுபவம் உள்ளது! நான் பங்கேற்ற எக்ஸோடஸ் மற்றும் நெட்ஸ்கேலர் நிறுவனங்களும் மின்வலையின் வளர்ச்சியோடு சார்ந்து அதற்குத் தேவையான சேவைகளையும் விற்பொருட்களையும் உருவாக்கியதால்தான் மின்வலையின் வளர்ச்சியோடு அவையும் வேகமாக வளர்ந்தன.
 
 அடுத்த பகுதியில், சூறாவளி மேடைகளோடு சார்ந்து வளர்வதற்கான நுட்பங்களைப் பற்றி அலசுவோம்.
 
 (தொடரும்)
 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |