|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம். 
 வாருங்கள், ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம்!
 
 ★★★★★
 
 கேள்வி: நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரிக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பம், இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும்?
 | 
											
												|  | 
											
											
												| கதிரவனின் பதில் (தொடர்கிறது): சென்ற பகுதிகளில், பெருநிறுவனங்களில் வேலை நிலையானது என்று எண்ணி அதனால் மட்டும் ஆரம்பநிலை நிறுவனத்தில் சேராமலிருப்பது சரியாகாது என்றும் எக்காரணங்களால் பெரும் நிறுவன வேலையை இழக்க நேரக்கூடும் என்பவற்றைப் பட்டியலிட்டோம். அவற்றில் முதல் காரணமாக வருவாய் அல்லது லாபக் குறைவைப் பற்றி விவரித்தோம். (தற்போதைய கரோனா Covid-19 வைரஸ் தருணத்தில் இது தலைவிரித்தாடக் கூடும் என்பது சோகமான ஒரு நிலை. வாசகர்கள் இதில் பாதிக்கப்படாமல் இருக்க எனது ஆழ்ந்த மனமார்ந்த பிரார்த்தனைகள்). 
 இப்போது மற்றொரு காரணத்தைக் காண்போம்.
 பெருநிறுவனங்கள் பொதுவாகப் பல வணிகக் குழுக்களாகப் (business units) பிரிந்திருக்கும். அத்தகைய வணிகக் குழுக்களில் பல ரகங்கள் உண்டு. சில பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட, பொதுவாக வரவில்லாத செலவுப் பிரிவுகளாகவும் (cost centers), மற்றவற்றை விற்பொருட்களை விற்றுச் சம்பாதிக்கும் வணிகரீதிக் குழுக்களாகவும் வைத்திருப்பார்கள். மற்ற சில நிறுவனங்கள், தொடர்புள்ள விற்பொருட்கள் சிலவற்றைச் கோர்த்து, அதனடிப்படையில் வணிகக் குழுக்களை அமைத்து, விற்பனையை மட்டும் தனியாக வைத்திருப்பார்கள். சில நிறுவனங்களோ தன்னடங்கிய பிரிவுகள் (divisions) என்ற முறையில் விற்பொருள், வணிகம், விற்பனை எல்லாமே ஒவ்வொரு பிரிவிலும் வைத்திருப்பார்கள். ஜெனரல் எலக்ட்ரிக் இதற்கு ஒரு உதாரணம். சமீபமாக, ஆல்ஃபபெட் என்னும் நிறுவனம் ஒவ்வொரு பிரிவையும், தனித்தனி நிறுவனமாகவே நடத்துகிறது! (கூகிள் அதன் ஓர் உறுப்பு நிறுவனம்)
 
 சில தருணங்களில், நிறுவனத்தின் நிதிநிலை சரியாக இல்லாவிட்டாலோ, அல்லது, நிறுவனம் மிகவும் பரந்து விரிவடைந்து விட்டதால், ஒரு சில வணிகத் துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் இன்னும் நல்லபடி நடத்தி வரவையும் லாபத்தையும் பெருக்கலாம் என்று முடிவுசெய்து சில வணிகப் பிரிவுகளை விற்றுவிடக் கூடும். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அதைத்தான் செய்தது. IBM நிறுவனம் சிறு கணினிக் குழுவை லெனோவோ நிறுவனத்துக்கு விற்றது.
 
 பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தையும் வணிகக் குழுக்களாகப் பிரித்திருந்தால் அவ்வாறு ஒரு குழுவை மட்டும் விற்பது எளிதாகிறது. இல்லாவிட்டால் விற்பது கடினமாகும். விற்கவே முடியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பொதுவாக மிகக்கடினம்.
 
 அத்தகைய நிலையிலோ, அல்லது இன்னும் பல காரணங்களாலோ ஒரு பெருநிறுவனத்தையே கூட ஒட்டு மொத்தமாக மற்றொரு பெருநிறுவனத்துக்கு விற்று விடுகிறார்கள். அதை ஒரு மாபெரும் வணிகக் குழுவை விற்பதாகக்கூட எண்ணிக் கொள்ளலாம். சில சமயம், இரு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவு இருப்பதால் வாங்கல் விற்றல் என்று சொல்லாமல், அதை இணைதல் (merger) என்று அழைக்கிறார்கள்.
 
 அவ்வாறு ஒரு வணிகப் பிரிவை அல்லது நிறுவனத்தை வாங்கியோ அல்லது இணைத்தோ உருவாக்கப்படும் புதிய நிறுவனம் சில காரணங்களால் சிலரை வேலைநீக்க வாய்ப்புண்டு. உதாரணமாக, நிறுவனத்தையே வாங்கினால், வாங்கும் நிறுவனம் நிதித்துறை, வணிகமாக்கல் துறை போன்ற தொழில்நுட்பத்தைச் சாராத பொதுத்துறைகளில், தனக்கு ஏற்கனவே இருக்கும் குழுக்களே போதும் என்று முடிவுசெய்து, வாங்கிய நிறுவனத்தின் இந்தக் குழுக்களை ஒட்டு மொத்தமாக வேலைநீக்கக் கூடும். அல்லது, இரண்டு குழுக்களிலும் உள்ள மிகப் பிரமாதமான ஊழியர்களை மட்டும் தக்க வைத்துக்கொண்டு இரு தரப்பிலிருந்தும் மீதி ஊழியர்களை வேலைநீக்கக் கூடும்.
 
 வேலை நீக்கத்துக்கு அடுத்த காரணம் திட்ட ரத்து (project cancelation). பெருநிறுவனங்கள் மற்ற சிறிய நிறுவனங்களை இவ்வாறு வாங்குவது சர்வ சாதாரணம். பெருநிறுவன இணைவும் சில வணிகத் துறைகளில் சாதாரணமாகிவிட்டது (உதாரணமாக யுனைட்டட், அமெரிக்கன் போன்ற விமான சேவை நிறுவனங்கள்). ஆனால் நிறுவனங்கள் தங்கள் ஒரு பாகத்தை மட்டும் விற்பது எப்போதாவதுதான் நடக்கிறது. ஆனால், விற்பதற்கு பதிலாக இழுத்து மூடிவிடுவது சர்வ சாதாரணம். அது ஒரு முழு வணிகக் குழுவாகவும் (business unit) இருக்கலாம். அல்லது ஒரே ஒரு சிறு திட்டப்பணிக் குழுவாகவும் (project team) இருக்கலாம்.
 
 இருவிதமான மூடலிலும் ஒரு பொது அம்சம் என்னவெனில், வேலைநீக்கம் செய்ய அவை அதிக வாய்ப்பளிக்கின்றன. அந்தக் குழு இனித் தேவையில்லை என்று முடிவு செய்ததும் முதலில் நிறுவனத்தில் வேறு குழுவில் சேர்ந்துகொள்ள முடியுமா என்று தேடுவதற்கு சில காலம் (பொதுவாக சில வாரங்கள்) அவகாசம் அளிப்பார்கள். அதற்குள் வேறு குழுவில் சேர முடியாவிட்டால் அடுத்த கட்டம் வேலை நீக்கந்தான்! ஆனால் சில தருணங்களில் குழுவை ஒட்டு மொத்தமாக உடனே விலக்க முடிவுசெய்து (பொதுவாக நிதிப் பிரச்சனையால் அப்படி), வேறு குழு தேடும் அவகாசமே தராமல் உடனே வேலைநீக்கம் செய்வதும் உண்டு.
 
 அடுத்த பகுதியில், பெருநிறுவனங்களில் வேலை இழப்பதற்கான மற்ற காரணங்களையும், உங்கள் கேள்வியின் விடைக்கான பிற அம்சங்களைப் பற்றியும் அலசுவோம்.
 
 (தொடரும்)
 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |