|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம் வாருங்கள்! 
 *****
 
 கேள்வி (தொடர்ச்சி): நான் ஒரு நிறுவனத்தை ஓர் இணைநிறுவனருடன் சேர்ந்து ஆரம்பித்தேன். எனக்கு வணிகத் துறையில் திறமையிருந்ததால் நானே தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணிபுரிந்து வந்தேன். நிறுவனம் நன்கு வளர்ந்து விட்டதால், ஒரு தொழில்முறை (professional) CEOவை அமர்த்தியுள்ளோம். என் நிறுவனர் பங்குகள் முழுவதும் காலம் தேர்ந்தாயிற்று (vested). இந்தச் சூழ்நிலையில் நான் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி நிறுவனத்தை மேலும் வளர்ப்பது நல்லதா? அல்லது கொஞ்சகாலத்தில் நீங்கி, வேறு புதுநிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்துவது நல்லதா? இரண்டில் எது மேன்மையானது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?
 
 கதிரவனின் பதில்: சென்ற பகுதிகளில், இருப்பதா, செல்வதா என்பதை முடிவுசெய்வது எளிதல்ல என்றும், இரண்டு முடிவுக்கும் தகுந்த காரணங்கள் உண்டு; எது சரியான வழி என்பது அவரவர் நிலைமையையும் பலதரப்பட்ட அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என்றும் கண்டோம். மேலும் விலகுவதற்கும் தொடர்வதற்குமான பல காரணங்களையும் நாசூக்காக விலகும் வழிமுறைகளையும் கண்டோம்.
 
 இப்பகுதியில், விலகாமல் தங்கிப் பணிபுரிவதற்கான நடத்தை நெறிகளை ஆராய்வோம். (முன்பு குறிப்பிட்டபடி, நிறுவனம் மற்றொரு பெரிய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதன் அங்கமாக இருப்பினும் இக்காரணங்கள் ஒத்துவரும். பொதுவாக நிறுவனம் என்று குறிப்பிடுவதை, பெருநிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்).
 
 தொடர்ந்து பணிபுரிவதற்கான நடைமுறைகள் தொடர்வதற்கான காரணங்களைப் பொறுத்தது. அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோம்:
 
 தங்களின் சேவை நிறுவனத்துக்கு இன்னும் தேவை
 தொடரக் காரணம் இதுவானால், முழுமனதுடன் சேவை செய்யவேண்டும். ஆனால் தலைக்கனம் பிடித்து உங்களுக்கு நான் தேவை, எனவே நான் சொன்னதுதான் சட்டம், நான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன் என்ற கர்வத்துடன் திரியக்கூடாது. அது நல்லவிதத்தில் முடியாது. சாதாரணமாக, பவ்யத்துடன் உங்கள் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டு, மற்றவர்கள் நற்பணி புரிய உதவவேண்டும். ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் முன் தலைவராக இருந்திருப்பின், மற்றவர்கள் உங்களுடன் பழகும்விதம் மிக மாற்றமடைந்திருப்பதை உணர்வீர்கள். ஏனென்றால் புதுத்தலைவருக்கே அதிக மதிப்பளிப்பார்கள். உங்கள் கருத்துக்களுக்கு முன்பைவிட அதிக மாற்று அபிப்பிராயங்கள் தெரிவிப்பார்கள். அதனால் கோபமோ, வெறுப்போ அடையாமல், அது சகஜமானது என்பதை மனமார உணர்ந்து பழகி, அமைதியாக விவாதித்து, பொதுமுடிவோடு ஒத்துப்போக வேண்டும். வேண்டுமானால், தனிப்படையாக புதுத்தலைவரிடம் உங்கள் கருத்துக்களை இன்னும் விவரமாகவும் அழுத்தமாகவும் தெரிவிக்கலாம்.
 
 புதுத்தலைவருடன் சேர்ந்து பணியாற்றுவதில் உங்கள் ஆர்வம்
 இதில் ஆச்சரியப்படத்தக்க வழிமுறை ஒன்றும் இல்லை. முழுமனத்துடனேயே புதுத்தலைவரை வரவேற்றிருப்பதால் அவரிடம் ஒரு சீடனாக பணிந்து நடக்கவேண்டும். ஒருவேளை அவரது முடிவுகளோ வழிமுறைகளோ நீங்கள் எடுத்தவற்றுக்கு முரணாக இருக்கலாம். அவற்றைப்பற்றி முன்பு கூறியதுபோல் தனிப்பட அவரிடம் உரையாடலாமே ஒழிய, "நான் வேறு செய்திருப்பேன்" என்று கலந்துரையாடலிலோ, வேறெவரிடமும் தனியாகவோ பேசக்கூடாது. அவ்வாறு ஏதாவது பேசினால், புதுத்தலைவரின் காதுகளை வெகு சீக்கிரம் எட்டி மனக்கசப்பையே வளர்க்கும்.
 | 
											
												|  | 
											
											
												| பங்குகள் இன்னும் முழுவதும் சேராத (not fully vested) காரணத்தால், வருமானத் தேவையால் தொடர்ந்து பணிபுரிதல் இந்த இரண்டு காரணங்களுக்கும் ஒரே வழிமுறைதான். முதலில் உங்கள் பணி நிறுவனத்துக்கு நல்ல பலனளிப்பதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். சும்மா சம்பாதிக்கிறார் என்னும் பேச்சுக்கு ஆளாகாதீர்கள். அதுதவிர மேற்கூறியபடி புதுத்தலைவருடன் கருத்து வேறுபாடு இருந்தால் தனிப்படத் தெரிவியுங்கள். இதற்கு ஒரே ஒரு முக்கிய விதிவிலக்குத்தான் உள்ளது. அது இயக்குனர் குழுமம் (board of directors) மட்டுமே. புதுத்தலைவர் உண்மையிலேயே நிறுவனத்தைப் படுகுழிக்கு இழுத்துச் செல்கிறார் என்று நீங்கள் எண்ணினால், நிறுவனத்தில் உள்ள மற்ற ஊழியர்களிடம் கலகம் செய்யாமல், நீங்கள் உண்மையாக மிகவும் மதிக்கும் இயக்குனர் ஒருவரை அணுகி, மற்றவர்களிடம் பரப்பாமல், மனம்விட்டு பேசிப் பார்க்கலாம். அவரும் உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொண்டால், அவரிடம் அடுத்த நடவடிக்கைகளை விட்டுவிட வேண்டும். அவராகச் சில குறிப்பிட்ட உதவிகளைக் கேட்டால் மட்டுமே உதவவேண்டும். இந்த நடவடிக்கை நிறுவனத்துக்கு மிக அபாயகரமானது. நிறுவனம் பிளவுபட்டு அழியவும் கூடும். அதனால் மிக ஜாக்கிரதையாக கணித்துச் செயலாற்ற வேண்டும். ஆனால், செய்யவே கூடாது என்பதில்லை -- புதுத்தலைவரை மாற்றியாக வேண்டும் என்னும் இத்தகைய நிலைமைகள் உருவாகத்தான் செய்கின்றன. நடவடிக்கை எடுக்குமுன் உங்கள் உள்மனத்தை நன்கு விசாரியுங்கள் - இது உண்மைத் தேவையா, அல்லது உங்கள் பதவியாசை அல்லது மனத்தாங்கலினாலா?
 
 வருங்கால நிறுவன ஆரம்பத்துக்கு அடி போடுதல்
 நிறுவனத்தில் தொடர இதுவே காரணமானால், மிக ஜாக்கிரதையாக நிறுவனத்துக்கு பங்கம் வராமலும், முன்பு சொன்னதுபோல் "சும்மா சம்பாதிக்கிறார்" அல்லது "அடுத்த நிறுவன வேலையிலேயே கவனமாக இருக்கிறார்" என்னும் பழி வராமலும் நடந்துகொள்ள வேண்டும்.
 
 அடுத்த நிறுவன யோசனையைப் பற்றி நிறுவனத்தில் உள்ள எவரிடமும் மூச்சுக்கூட விடாமலிருப்பது நல்லது. அப்படி எதாவது புரளி கிளம்பிவிட்டால், உங்களுடன் முன்பு நிறுவனத்தின் ஆரம்பநாட்களில் சேர்ந்தவர்கள் அடுத்த நிறுவனத்தின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நிறுவனமும் அல்லல்படும், உங்கள் பெயரும் கெடும்.
 
 நிறுவனத்திலிருந்து விலகிய பின்பும் மேற்கொண்ட அறிவுரைகளை மனத்தில் நிறுத்தி நடந்துகொள்வது நல்லது. மேலும் நிறுவனத்திலிருந்து உங்களுக்கு நெருங்கிய பலரை வெளிக்கொணர முயல்வது நல்லதல்ல. உங்கள் நடவடிக்கைகளைத் தெரிந்து அவர்களாக வெளியேற முன்வந்தாலும் மிக நிதானமாக இன்றியமையாத சிலரை மட்டுமே தேர்ந்தெடுப்பது நல்லது. சுமுகமாக, புதுத் தலைவருக்கும், குழுமத்துக்கும், இம்மாதிரி சிலர் விலக விரும்புகிறார்கள், அவர்களை நான் ஊக்குவிக்கவில்லை என்று தெரிவிப்பது நல்லது.
 
 இத்தோடு, தொடர்வதா, விலகுவதா என்ற கேள்விக்கான பதில் நிறைவுற்றது. அடுத்த பகுதியில் வேறொரு ஆரம்பநிலை யுக்தியைஆராய்வோம்.
 
 (தொடரும்)
 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |