|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்துவளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. 
 *****
 
 கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஒரு இன்னொருவருடன் சேர்ந்து ஆரம்பித்தேன். எனக்கு வணிகத்துறையில் திறமையிருந்ததால் நானே தலைமை நிறுவன அதிகாரியாக (CEO) பணிபுரிந்து வந்தேன். நிறுவனம் நன்கு வளர்ந்துவிட்டதால், ஒரு தொழில்முறை (professional) CEOவை அமர்த்தியுள்ளோம். என் நிறுவனர் பங்குகள் முழுவதும் காலம் தேர்ந்தாயிற்று (vested). இந்தச் சூழ்நிலையில் நான் நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்றி நிறுவனத்தை மேலும் வளர்ப்பது நல்லதா? அல்லது கொஞ்சகாலத்தில் நீங்கிவிட்டு புது நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதில் கவனம் செலுத்துவது நல்லதா? எனக்கு இரண்டில் எது சிறந்தது என்று குழப்பமாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?
 
 கதிரவனின் பதில்: சபாஷ், சரியான போட்டி! (வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் வைஜயந்திமாலாவும் பத்மினியும் ஆடும் ஆட்டம் ஞாபகம் வருகிறதா? அப்படியானால் உங்களுக்கும் அடியேனைப் போல் வயதாகிவிட்டது என்று அர்த்தம்!)
 
 முதலாவதாக உங்களுக்கு என் மனமார்ந்த கோடி பாராட்டுகள்! ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக வளர்ப்பது என்பதே மிகக்கடினம். அப்படி வளர்த்தபின், மேலும் வளர வேண்டுமானால், வேறு தலைவர் வேண்டும் என்று உணர்வது இன்னும் அரிது. அப்படி உணர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகி, இப்போது இருப்பதா, செல்வதா எது நல்லது என்று யோசித்துப் பார்ப்பதும் உங்கள் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
 
 ஆனால், இந்தக் கேள்விக்கு இதுதான் சரி, அதுதான் மேன்மை என்பதுபோல் ஒரு கறாரான பதில் அளிக்க இயலவில்லையே அன்பரே. முன்பு ஒரு யுக்தியில், நிறுவனத்தை விற்றுவிடுவதா அல்லது முதல் பங்கு விற்பனை (IPO) அளவு வளர்க்க முயல்வதா என்ற கேள்வியை ஆராய்கையில் அதில் எதைச் செய்வது என்பது பல கோணங்களில் பல அம்சங்களைப் பொறுத்துத்தான் முடிவு செய்யவேண்டும், என்று கண்டோம். இந்தக் கேள்விக்கும் அதே போன்றுதான். பல அம்சங்களைப் பல கோணங்களில் ஆராய்ந்துதான் முடிவெடுக்க இயலும். உம்... இருந்தாலும், எனக்குத் தோன்றிய அளவு, இந்தக் கேள்விக்கு என் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். அவற்றை யோசித்துக் கூட்டிக்கழித்துப் பார்த்தால், நீங்களே நல்ல முடிவுக்கு வரமுடியும் என நம்புகிறேன்.
 
 இந்த விஷயத்தை இந்த மாமாங்கத்தில் முடிக்க வேண்டியிருப்பதால், வெற்றியடையும் ஆரம்பநிலை நிறுவனங்களைப் பற்றி மட்டும் வைத்து மேற்கொண்டு ஆராய்வோம். இதே கேள்விக்கு வெற்றியடையாத நிறுவனங்களைப் பற்றி விவரிப்போமானால் அவற்றின் அம்சங்கள் முடியாத பட்டியலாக நீண்டுவிடும்! சரி, விஷயத்துக்கு வருவோம்!
 
 வெற்றியடைந்த நிறுவனங்களின் வரலாற்றில், தம்முடைய நிறுவனங்களை ஆரம்பநாளிலிருந்து வளர்த்து முதல்பங்கு விற்பனைக்குப் பிறகு தலைமை வகித்து இன்னும் பெரும்வெற்றி நிறுவனங்களாக வளர்த்தவர்கள் பலர் உள்ளனர். சமீபகால உதாரணங்களாக, பில் கேட்ஸ், லேரி எல்லிஸன், கோர்டன் மோர், ஸ்காட் மன்நீலி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நிறுவனர்களில் இவர்கள் ஒருவகை என்றாலும் எல்லோரும் அதுவரை செல்வதில்லை அல்லவா? அதனால்தான் நீங்களும் வேறு தலைவரை அமர்த்தியுள்ளீர்கள்.
 | 
											
												|  | 
											
											
												| சில நிறுவனர்கள் முதல் பங்கு விற்பனைக்குச் சில காலத்துக்குப் பிறகு விலகிக்கொண்டு வேறு புதுத் தலைவரை அமர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ்கூட, முதல்முறை அந்த நிறுவனத்திலிருந்து விலகுமுன், நிறுவனம் இன்னும் வளர வேண்டுமானால், வேறு தலைவர் வேண்டும் என்று இயக்குனர் குழு கருத ஸ்கல்லி என்பவரை தலைவராக அமர்த்தினார். (பிறகு நடந்ததோ வேறு! நிறுவனம் பிழைப்பதற்கே ஜாப்ஸ் மீண்டும் தலைவராக வேண்டியதாயிற்று. ஆனால் அதற்குப் பிறகு ஜாப்ஸ் நிகழ்த்திய சாதனைகள் அவரை ஒரு சரித்திர நாயகனாக்கிவிட்டன.) அதனால், இருப்பதா, செல்வதா என்ற கேள்வி தனி மூலதன நிலையில் (private equity stage) மட்டுமல்லாமல் எந்த நிலையில் வேண்டுமானாலும் எழக்கூடும். 
 சில நிறுவனர்கள், நிறுவனம் ஓரளவு வளர்ந்தபின், பொதுப் பங்குச்சந்தை விற்பனைக்குச் செல்ல வேண்டுமானால் (அல்லது இன்னும் வளர்த்து இன்னும் பெரிய நிறுவனத்துக்கு விற்க) வேறு தலைவரை அமர்த்தவேண்டும் என்ற முடிவுக்குத் தாமே வந்து வேறு தலைவரை அமர்த்திவிட்டு, சில காலத்துக்குப் பிறகு நிறுவனத்திலிருந்து விலகி அடுத்த வெற்றிக்கு அடிக்கால் நாட்டியுள்ளனர். எக்ஸோடஸ் நிறுவனர்களான சந்திரா மற்றும் ஜகதீஷை இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.
 
 அடுத்து, வேறு தலைவரை அமர்த்திவிட்டு, நிறுவனத்திலேயே இருந்து வளர்க்கவும் கூடும். அத்தகையவர்களைப் பற்றி வெளிப்படையாக அதிகம் நாம் கேள்விப்படுவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட பலர் நிறுவனத்திலேயே இருந்துகொண்டு தாமும் அதோடு வளர்ந்து, பெரும்வெற்றி பெற்றதை நான் கண்டிருக்கிறேன். அது அவ்வளவு எளிதல்ல. நிறுவனத்தில் இருந்துகொண்டு புதுத்தலைவரை வெற்றியடைய விடாமல் முழு நிறுவனத்தையும் படுகுழியில் தள்ளியவர்களையும் பார்த்திருக்கிறேன். அதனால், நிறுவனத்தோடு நிலைக்கும் வழியில் செல்லவேண்டுமானால் வெற்றி காண்பதற்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் வரும் பகுதிகளில் பார்ப்போம்.
 
 நீங்கள் உங்கள் நிறுவனம் தனியாக சுதந்திர நிறுவனமாக இருக்கும் நிலையைப் பற்றி இந்த கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஆனால், இதே கேள்வி, உங்கள் நிறுவனம் மற்றொரு பெரிய நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு என்ன செய்வது என்பதற்கும் பொருந்தும். (எனக்கும் இருமுறை அப்படிப்பட்ட கேள்வி எழுந்தது. நெட்ஸ்கேலர் நிறுவனத்தை ஸிட்ரிக்ஸ் வாங்கியபிறகும், ஆன்கீனா நிறுவனத்தை ஜூனிப்பர் வாங்கிய பிறகும் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு சில வருடங்கள் அந்நிறுவனங்களில் பணிபுரிந்து இரண்டும் ஒரு சரிநிலைக்கு அப்பெரும் நிறுவனங்களுக்குள் வளர்ந்த பின்பு நான் விலகிக்கொண்டேன்). இக்கட்டுரையில் இரு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் பொதுவாக பதிலளிக்க உள்ளேன். ஒரு சந்தர்ப்பத்துக்கு மட்டும் பொருந்தும் விவரம் எதாவது தென்பட்டால் அதைப்பற்றி விசேஷக் குறிப்பளிக்கிறேன்.
 
 அடுத்துவரும் பகுதிகளில், நீடிப்பதற்கான காரணங்களையும், விலகுவதற்கான காரணங்களையும் அவற்றின் பிரதிபலன்களையும், இரண்டுக்கும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்பவற்றையும் காண்போம்.
 
 (தொடரும்)
 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |