|  | 
											
											
												| 
                                                        
	                                                        | 2010-இல் எந்தத் துறைகளுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கலாம்? (பாகம் - 1) |    |  
	                                                        | - கதிரவன் எழில்மன்னன் ![]() | ![]() ஜனவரி 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  ஒலி வடிவத்தில் கேட்க
 - Audio Readings by Saraswathi Thiagarajan
 
   
 தற்போது பொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளது. இப்போது எந்தத் துறைகளைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதைப்பற்றி இந்தப் பக்கங்களில் காண்போம்.
 
 பிழைப்பது, தழைப்பது எல்லாம் சரி, இப்போது ஆரம்பிப்பது பற்றி பேசலாமே? நான் இப்போது எதாவது தொழில்நுட்ப நிறுவனம் ஆரம்பிக்கலாமா என்று பார்க்கிறேன். எந்தத் துறைக்கு மூலதனம் கிடைக்க வாய்ப்புள்ளது?
 
 இந்தக் கேள்விக்கு பதிலளிக்குமுன் ஒரு அத்தியாவசியமான எச்சரிக்கை:
 
 
 அனுபவமற்ற சில ஆரம்பநிலை விற்பன்னர்கள், துறுதுறுப்புத் தாங்க முடியாமல், சூடான துறையொன்றில் நிறுவனம் ஆரம்பித்துவிட வேண்டும் என்று இந்தக் கேள்வியைப் பலமுறை என்னிடம் எழுப்பியுள்ளார்கள். அதைப் பற்றித்தான் எச்சரிக்கை.|  |  | மென்பொருள் துறையிலேயே ஊறிய ஒருவர் கதிர் மின்சக்தித் துறையில் தற்போது அதிக வாய்ப்பும் மூலதனமும் கிடைக்கிறதே என்று அதில் குதித்தால் வெற்றி காண்பது அரிது |  |  | 
 எதாவது தொழில்நுட்பத் துறையில் நிறுவனம் ஆரம்பித்து விடலாமா, எது மிக சூடான துறை, எதில் மூலதனம் கிடைக்கும் என்று மட்டும் பார்க்காமல், எந்தத் துறையில் ஆரம்பித்தால் உங்கள் திறன்களை வைத்து உழைத்து வெற்றி பெற முடியும் என்று பாருங்கள். உதாரணமாக, மென்பொருள் துறையிலேயே ஊறிய ஒருவர் கதிர் மின்சக்தித் (photovoltaic solar) துறையில் தற்போது அதிக வாய்ப்பும் மூலதனமும் கிடைக்கிறதே என்று அதில் அவசரமாகக் குதித்தால் வெற்றி காண்பது அரிது. ஆனால், அவரே வலைமேகக் கணினித் (cloud computing) துறையில் நிறுவனம் ஆரம்பித்து, புது நுட்பங்களை வணிக ரீதிக்குக் கொணரும் முயற்சியில் இறங்கினால் வெற்றி வாய்ப்பு அதிகம்.
 
 ஒரு பெரிய கும்பல் ஒரு திசையில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதானால் மட்டும் ஆட்டு மந்தைபோல் சேர்ந்து ஓடாதீர்கள். அவர்களில் பலர் மலை உச்சியிலிருந்து முழு வேகத்தில் விழக்கூடும். அல்லது, உங்களுக்கு புதுத்துறையில் அனுபவமும் திறனும் இல்லாததால் ஆரம்பித்தாலும், அரைவேக்காடான அல்லது பல குறைகளுடைய நுட்பத்தை உருவாக்கி விட்டு, மேலும் முன்னேற முடியாமல் ததிங்கணத்தோம் போடும் நிலை உருவாகலாம்.
 
 என்னடா இது எதில் நல்ல வாய்ப்பு உள்ளது என்று துடியாகக் கேட்டால் ஒரு குடம் நிறையக் குளிர்நீரை வீசி நடுங்க வைக்கிறாரே என்று நீங்கள் அங்கலாய்ப்பது கேட்கிறது! அந்த எச்சரிக்கையோடு, வாய்ப்புக்களை அலசுவோம் வாருங்கள்!
 
 எந்தத் துறைகளில் பெரிய வாய்ப்புக்கள் உள்ளன, மூலதன நிறுவனத்தார் எங்கு கவனம் செலுத்துகிறார்கள், எம்மாதிரியான நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளன, எவை எதனால் தோல்வியடைந்தன என்று புரிந்து கொள்வது நல்லதுதான். அந்த ஞானத்துடன் வெற்றி வாய்ப்புள்ள பல துறைகளில் எந்தத் துறை உங்கள் திறனுக்கும், உதவுவோர் குழாத்துக்கும் (personal network) சரியாகப் பொருந்தி, உங்கள் வெற்றிக்கு நல்ல அடிப்படையாக அமையும் என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து அந்தத் துறையில் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும்.
 | 
											
												|  | 
											
											
												| அடுத்த பொதுக் கருத்து: ஆரம்பநிலை மூலதன நிறுவனங்கள் 2008-இன் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, தற்போதுதான் சற்று தலையைத் தூக்கிச் சுற்று வட்டாரத்தில் என்ன வாய்ப்புக்கள் உள்ளன என்று ஆராய ஆரம்பித்துள்ளனர். ஆனால், நிதித் துறைக்கே சில அடிப்படைப் பிரச்சனைகள் உள்ளன. லாபம் கணிசமாகப் பெறக்கூடிய மூலதன வாய்ப்புக்கள் ஒரு சிலவே. ஆனால் மூலதன நிறுவனங்களோ, டாட்காம் கொப்புள காலத்தின் பரபரப்பில் ஆரம்பிக்கப்பட்டுப் பெருகிவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை அடுத்த சுற்று நிதிகூடத் திரட்ட முடியாமல் பெரும் கஷ்டத்தில் உள்ளன. அவற்றில் பல தற்போதைய நிதிக் காலகட்டம் (fund duration) முடிந்தவுடன் காணாமல் போய்விடக் கூடும். சில மூலதன நிறுவனங்கள் தாங்களாகவே கலைத்து விட்டனர். உதாரணத்துக்கு க்ராஸ் பாயின்ட் மற்றும் ஸெவின் ரோஸன் நிதி நிறுவனங்களைக் குறிப்பிடலாம். இந்நிலைமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அதை பற்றிப் பிறகு எப்போதாவது விவரிக்கிறேன். இந்தக் கட்டுரையில், நிதி நிறுவனங்களின் இந்நிலைமையால் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு என்றுதான் பார்க்க வேண்டும்.|  |  | மூலதனமிடக் கூடிய நிறுவனங்கள் குறைந்து வருகின்றன. அவ்வாறு மூலதனமிடும் நிறுவனங்களின் நிதி அளவும் குறைந்துள்ளது. |  |  | 
 முக்கியமான பாதிப்பு என்னவென்றால், மூலதனமிடக் கூடிய நிறுவனங்கள் குறைந்து வருகின்றன. அவ்வாறு மூலதனமிடும் நிறுவனங்களின் நிதி அளவும் குறைந்துள்ளது. அதனால், மூலதன நிறுவனங்கள், பெரும் லாபமளிக்கக் கூடிய துறைகளிலும், அத்துறைகளில் கூட, பெரும் பலனளிக்கக் கூடிய மூலதன வாய்ப்புக்கள் - அதாவது மிக நல்ல விதைக்கருத்து கொண்ட, பிரமாதமான குழு ஆரம்பித்துள்ள நிறுவனங்களைத் தேடுகின்றன. அதனால் உங்கள் ஆரம்பநிலை நிறுவனம் அத்தகைய பண்புள்ளதா என்று எண்ணிப் பாருங்கள். இல்லையெனில் எவ்வாறு அந்நிலைக்கு முதலில் கொண்டு சென்று பிறகு நிதி நிறுவனங்களிடமிருந்து மூலதனம் பெறும் முயற்சியில் இறங்குவது நல்லது.
 
 எச்சரிக்கைகள் போதும், வாய்ப்புக்களைப் பற்றி கூறுகிறேன் வாருங்கள் என்று சொல்லி விட்டு, இன்னும் யோசித்துப் பாருங்கள் என்ற பாட்டையே பாடுகிறாரே என்று முணுமுணுக்கிறீர்களா? சரி, இத்துடன் நிச்சயமாகப் போதும். அடுத்து வாய்ப்புக்களைப் பற்றியே பார்ப்போம்.
 
 இன்னமும் பரபரப்பான பல வாய்ப்புக்கள் வந்தபடிதான் உள்ளன. வரும் பகுதிகளில் அவற்றைக் காணலாம்.
 
 (தொடரும்)
 
 கதிரவன் எழில்மன்னன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |