|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தமிழ்நாடு அறக்கட்டளை: 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' திட்டம் |    |  
	                                                        | - கோம்ஸ் கணபதி ![]() | ![]() பிப்ரவரி 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் எண்ணற்ற சேவைப் பணிகளை இடையறாமல் செய்துவரும் தமிழ்நாடு அறக்கட்டளை (TamilNadu Foundation) தனது 35வது ஆண்டு விழாவினை, பென்சில்வேனியாவிலுள்ள பிலடெல்ஃபியாவில், நினைவு தின விடுமுறை நாட்களில் (Memorial Day) 2010 மே மாதம் 29-31 தேதிகளில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாட இருக்கிறது. வழமைபோல எல்லாத் தரப்பினருக்கும் ஏற்ற பல்வேறு நிகழ்ச்சிகளோடு இதனை அமைப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர். இவற்றுக்கு மகுடமிட்டாற்போல சுகி. சிவம், டாக்டர் சுதா சேஷய்யன், அப்துல் ஹமீது, உமையாள் முத்து, அப்துல் காதர் போன்ற பிரபலங்களோடு தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் இதில் கலந்து கொள்கிறார். 
 கல்வி அமைச்சர் கலந்து கொள்கிறார் என்றால் அதற்குக் காரணமும் உண்டு.
 
 தமிழகத்தில் மட்டுமே, 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அரை மில்லியன் பேர் (506,285) மேலே படிப்பைத் தொடராமல் நின்று போய்விடுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இதனைத் தடுத்து நிறுத்தும் விதமாகத் தமிழ்நாடு அறக்கட்டளை, பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தத் திட்டமொன்றை வகுத்துள்ளது. மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள 6 தொலைதூரக் கிராமங்களில் களஞ்சியம் என்னும் உள்ளூர் தன்னார்வ அமைப்போடு சேர்ந்து நடத்திய முன்னோட்டத் திட்ட அமலாக்கம் நல்ல வெற்றி கண்டுள்ளது.
 
 இதனைத் தமிழக அரசுடன் இணைந்து மாநில அளவில் எடுத்துச் செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கையொப்பமிட இருக்கிறார்.
 
 
 ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள் அப்பள்ளிகளிலிருந்து விலகுவதைத் தவிர்ப்பது முக்கியத்துவம் பெற்றதில் இருவருக்குப் பெரிய பங்கு உண்டு. அவர்களைப் பற்றிப் பார்ப்போம்:|  |  | தமிழகத்தில் மட்டுமே 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 506,285 பேர் மேலே படிப்பைத் தொடராமல் நின்று போய்விடுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. |  |  | 
 முனைவர். சோம.லெ. சோமசுந்தரம்
 
 அறக்கட்டளையின் 35வது ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் சோம.லெ. சோமசுந்தரம்.
 
 பாரத விடுதலைப் போர் காலத்தில் உப்புச் சத்தியாக்கிரகம் நடந்த இடம் வேதாரண்யம். அந்த வேதாரண்யத்தில் நடந்து வருவது ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான குருகுலம் ஒன்று. அங்கே அவர்கள் உண்டு, உறங்கி, உடுத்தி, படித்து என்று எல்லாவற்றையும் செய்தது முப்பதுக்கு நாற்பது என்ற ஒரே அறைக்குள்.
 
 அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து எட்டாம் வகுப்புக் கூட எட்டாத இலக்குவன் சோமசுந்தரம் இவற்றை அறிய வந்தபோது அவனது இளமனம் பெரும் துயருற்றது. 50 ஆண்டுகளுக்கு முன்னரே 'அமெரிக்காவைப் பார்' என்று பயண நூல் எழுதிய பிரபல எழுத்தாளர் சோமலெ அவர்களின் பேரனும் சோமலெ சோமசுந்தரத்தின் மகன்தான் இவர். தான் படித்த டெலவர்-வில்மிங்டன் டவர் ஹில்ஸ் பள்ளியிலேயே 'ஈகைத்திறன் வார'த்தில் (Gift of Giving week) வேதாரண்யம் குருகுலத்தில் உறையும்  பெண் குழந்தைகளின் நிலையை இலக்குவன் எடுத்துரைத்தபோது, கேட்டவர் அத்தனை பேரும் உடைந்து போயினர். அந்த இடத்திலேயே 12 வயதேயான நமது இலக்குவன் திரட்டிய நிதி 5271 டாலர். டவர் ஹில்ஸ் பள்ளி அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் வழங்கிய காசோலை இன்று வேதாரண்யம் குருகுலக் குழந்தைகளுக்கு - உண்டி, உறைவிடம் என்றில்லாது புதிய பெரிய வகுப்பறைகள் என மலைக்கத் தக்க மாற்றங்களை வழங்கியுள்ளது.
 
 இலக்குவன் சோமசுந்தரமும் அவரது சகோதரி லட்சுமியும் (17) வட அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில், 2008ல் தமிழ்நாடு அறக்கட்டளையின் 34வது ஆண்டு நிறைவு விழாவில், தாங்கள் இருவரும் சீர்காழி அன்பாலயத்துக்கு நேரில் சென்று மனநலம் குன்றிய குழந்தைகளோடு உரையாடிய அனுபவங்களைச் சொன்னபோது, அன்று அந்த அரங்கமே உறைந்து போனது; விளைவு, கிட்டத்தட்ட $40,000 நிதி வழங்கப் பாதை வகுத்தது.
 | 
											
												|  | 
											
											
												| டாக்டர். ராம் மோகன் 
 தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ராம் மோகன் MD. ஒஹையோவில் உள்ள வாரென் நகரத்தில் மருத்துவராகப் பணி புரிகிறார்.
 
 
 2010ல் 2010 என்பது இவருக்குத் தாரக மந்திரம். அதாவது இந்த ஆண்டு அறக்கட்டளை ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 2010ஆக உயர்த்த வேண்டும் என்பது. காலையில் காகத்துக்கும் இரவில் ராப்பிச்சைக்காரருக்கும் உணவு வழங்காமல் உண்பதில்லை என்ற இவரது தாயாரின் பரிவு இவரிடமும் உள்ளது.|  |  | 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்னும் அகல் விளக்கால் கிராமங்களில் கல்வியின்மை என்னும் இருளை நீக்கியே தீருவேன் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் ராம் மோகன். |  |  | 
 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்னும் அகல் விளக்கால் கிராமங்களில் கல்வியின்மை என்னும் இருளை நீக்கியே தீருவேன் என்பதில் இவர் மிகத் தீவிரமாக இருக்கிறார்.
 
 *****
 
 அறக்கட்டளையின் இந்த அரிய பணியில் முக்கியப் பங்காற்றி வருபவர் டாக்டர் பழனிசாமி MD. அவரைப் பற்றியும், பிற நிகழ்வுகள் குறித்தும் வரும் இதழ்களில் காண்போம்.
 
 தகவல் உதவி: கோம்ஸ் கணபதி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |