| இசையரசிக்குப் பல்லாண்டு... கற்பு - தந்தை பெரியார்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக அதிகமான புகழுரைகளையும், அதே அளவிற்கு கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்ட ஒரு நடிகர் உண்டென்றால் அது நமது சிவாலியே சிவாஜி கணேசனாகத் தான் இருக்கும். உலகமே வியந்து போற்றும் அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு, ஒருமுறை கூட தேசிய விருது அளிக்கப்பட்டதில்லை என்பதிலிருந்தே நமது தேர்வுக் குழுவினரின் அணுகுமுறை எத்தகையது என்பது விளங்கும். 
 சிவாஜி இயல்பாக நடிக்காமல், அளவுக்கதிகமாக உணர்ச்சிகளைக் கொட்டுவதாக அவர் மீது குற்றம் சாட்டுபவர்கள் தொன்மையான தமிழ்மொழியின் செறிவு, இலக்கணம், அதன் கவித்துவ அடிப்படை மற்றும் பிரத்தியேகமான உச்சரிப்புத் தேவை குறித்து அறியாதவர்கள் என்பதில் ஐயமில்லை.
 
 பெரும்பான்மையினராக விளங்கும் வடக்கத்திய விமர்சகர்கள், மென்மையான உச்சரிப்பு மற்றும் 'கஜல்' பாணி பாடல்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் என்பதால், சிவாஜியின் சிம்மக்குரலை அவர்களால் செவிமடுக்க இயலவில்லை என்பதே நிஜம். அதற்காக நமது சிங்கம்...கீச்...கீச் என்றா முனக முடியும்?
 
 அவர் மட்டும் வேற்று மாநிலத்தில் பிறந்து வேற்று மொழியில் நடித்திருந்தால், இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற நடிகன் சிவாஜி கணேசன் தான் என்று ஒருமித்த குரலில் எல்லோரும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். சிவாஜியின் துரதிர்ஷ்டம் அவர் ஒரு தமிழனாக, தமிழ் நடிகனாக, தமிழ்நாட்டில் 'நடிப்பைக்' கொட்ட வேண்டியிருந்தது.
 
 கலைக்கு மொழியில்லை என்று வாய் கிழிய கத்துபவர்கள், சிவாஜியின் விஷயத்தில் செவிகளைப் பொத்திக் கொண்டிருந்திருக்கலாம்!.
 
 நேரு ஒருமுறை எகிப்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். கெய்ரோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'வீர பாண்டிய கட்டபொம்மன்' படத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்து ரசித்துப் புல்லரித்துப் போயிருந்த எகிப்து அதிபர் நாஸர், சிவாஜி குறித்து அன்போடு விசாரித்திருக்கிறார். ஐயகோ... என்ன துரதிருஷ்டம், நேரு அவர்களுக்கு சிவாஜி என்றொரு இந்திய நடிகன்! இருப்பது குறித்துத் தெரிந்திருக்கவில்லை.
 
 இதற்குப் பிரயாசித்தம் தேடுவது போல, எகிப்து அதிபரின் இந்திய விஜயத்தின் போது அவரை வரவேற்று உபசரித்து உடன் தங்கியிருக்கும் கவுரவத்தை சிவாஜிக்கு அளித்தார் நேரு.
 
 சிவாஜிக்காக வாதாடி அவரது நடிப்புத் திறமைக்கு இனிதான் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அவசியமில்லை. எனினும், தங்கள் திறமைகள் குறித்து பறைசாற்றிக் கொள்ள இன்றைய கலைஞர்களுக்கு ஏராளமான ஊடகங்கள் மூலமாக வாய்ப்புள்ளதைப் போல், அக்காலத்தில் சிவாஜி போன்ற மகத்தான கலைஞர்களுக்கு இருந்ததில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
 அதற்கெல்லாம் அவருக்கு ஏது நேரம்? விடிவதற்கு முன்பே ஒப்பனையை முடித்துக் கொண்டு, அரங்கத்தில் ஆஜராகி, பளீரிடும் விளக்கொளியில் நள்ளிரவு வரை நனைந்தபடி நடிப்பு வேள்வி நடத்தியவரல்லவா அவர்!
 
 தனது இயல்பான ஞானம், கற்பனை, படைப்பாற்றல் ஆகியவற்றின் உதவியோடு தான் ஏற்ற கதாபாத்திரங்கள் நம் கண்களின் முன்பாக உயிர்ப்போடு உலவ விட்ட உன்னதக் கலைஞரல்லவா அவர்! கன்னத்துத் தசைகள் முதல் காது மடல் வரை ஆயிரம் கதை சொல்லும் வகையில் அசைக்கத் தெரிந்த அவர் முன் நிற்க யாரால் முடியும்?
 
 விமர்சகர்கள் பலரும், சிவாஜியை 'ஸ்டைலான' நடிகனாக ஏற்றுக் கொண்டதேயில்லை. சிவாஜியும் என்றுமே இது குறித்தெல்லாம் அலட்டிக் கொண்டதேயில்லை. சிவாஜிக்கு அவரது வரம்பு நன்கு தெரியும். நடையில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்த அவரது 'ஸ்டைல்' வேறு எந்த நடிகனுக்கும் கால் வராது' என்று அடித்துச் சொல்லலாம்.
 
 'திருவிளையாடல்' - மிடுக்கான நடை. 'சரஸ்வதி சபதம்' - அதீத தன்னம்பிக்கை காட்டும் நடை. 'திருவருட்செல்வரின்' பணிவான நடை. 'நவராத்திரி' கோடீஸ்வரரின் செருக்கான ஆணவ நடை. 'தங்கப்பதக்கத்தின்' தனி நடை என்று சொல்லிக் கொண்டே போகலாம். பாலும் பழமும் படத்தில் 'போனால் போகட்டும் போடா...', 'உயர்ந்த மனிதனில் 'அந்த நாள் ஞாபகம்'... பாடல் காட்சிகளில் அவர் 'வாக்கிங் ஸ்டிக்கை' பிரயோகித்த லாவகம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாதது.
 
 புகைப்பதில் கூட அவர் தனது தனித் தன்மையை நிரூபித்த படங்கள் ஏராளம். 'சாந்தி' திரைப்படத்தில் 'யார் அந்த நிலவு...' பாடலின் ஆக்கத்தின் போது இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கலக்கியிருந்தார்கள். பாடல் ஒலிப்பதிவின் போது எப்போது உடனிருக்கும் சிவாஜி, இந்த குறிப்பிட்ட பாடல் பதிவின் போது கலந்துக் கொள்ளவில்லை. பாடல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட சிவாஜி, படமாக்கத்தின் போது மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளும்படி இயக்குனர் கே. சங்கரை கேட்டுக் கொண்டார். சிவாஜி எப்படி அந்த பாடல் காட்சியில் நடிக்கப் போகிறார் என்று இசைக் கூட்டணி ஆவலோடு காத்திருந்தது.
 
 படம் வெளியாகி, அந்தப் பாடல் காட்சியைப் பார்த்த மூவரணி மூர்ச்சித்தது என்றால் அது மிகையல்ல. பாடல் முழுவதும் ஒரு சிகரெட்டைப் புகைத்தபடி வெகு அலட்சியமாக நடித்து ரசிக இதயங்களைக் கொள்ளை கொண்டார் சிவாஜி. மூவரணியும் தங்கள் தோல்வியைச் சந்தோஷமாக ஒப்புக் கொண்டது.
 
 புதிய பறவை ('பார்த்த ஞாபகம் இல்லையோ..'), பார் மகளே பார், ஞான ஒளி, கவுரவம், பலே பாண்டியா திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளை சிவாஜி வெகு மிடுக்காகக் கையாண்டதை எப்படி மறக்க முடியும்? 'ஆண்டவன் கட்டளையில்' பட்டாணி சாப்பிடும் காட்சி, 'அந்த நாள்' திரைப்படத்தின் விதம் விதமான சிரிப்புகள்! என்று சொல்லிக் கொண்டே போகலாம். தாம் கண்ட காட்சிகளை மனதில் பதிய வைத்து, தனது கற்பகை வளத்தால் அவற்றை மெருகேற்றி, தான் ஏற்ற கதாபாத்திரங்களில் அவற்றை வெகுசிறப்பாக வெளிப்படுத்தும் சிவாஜியின் மேதமை ஈடு இணையற்றது.
 
 ஆலயமணி, பார்த்தால் பசி தீரும், பாகப் பிரிவினை படங்களில் உடல் ஊனமுற்றவராக சிவாஜி வெளிப்படுத்திய நடிப்புத் திறம் நம்ப முடியாதது. பாகப்பிரிவினை படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட சிறிது நாட்களுக்கு சிவாஜியால் தனது இடது கையைக் கீழே இறக்க முடியவில்லை என்று பிரமிப்போடு பேசிக் கொள்வார்கள். சிவாஜியின் ஈடுபாடு அத்தகையதாக இருந்தது.
 | 
											
												|  | 
											
											
												|  இசைக் கருவிகளை மீட்டியபடி நடிப்பதில் சிவாஜியை வெல்ல யாரால் இயலும்? இதற்கெல்லாம் உதாரணங்கள் சொல்ல ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது! எம்.ஜி.ஆர். அளவுக்கு தொழில்நுட்ப ஞானம் சிவாஜியிடம் இல்லை என்பார்கள். ஆனால், தனது அனுபவத்தில் அவற்றையும் ஒரு கை பார்த்தவர் தான் சிவாஜி. 
 நீ.....ளமான வசனங்களை ஒரு முறை பார்த்துவிட்டு, காட்சிப்பதிவின் போது அப்படியே மடை திறந்து வெள்ளமென அவர் பேசுவதை 'வாய்பிளந்து' வியப்பார்களாம் சக கலைஞர்கள். இன்றைய டப்பிங் யுகத்தில், பல மாதங்களுக்கு முன்பாக தான் பேசிய வசனத்தை வரி பிசகாமல் அதே ஏற்ற இறக்கங்களோடு சிவாஜியால் திரும்பவும் பேச முடியும் என்பது ஓர் அதிசயமாகத் தான் தோன்றுகிறது. அவரோடு பணி புரிவதென்பதே சக கலைஞர்களுக்கு, குறிப்பாக இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள் போன்றவர்களுக்கு ஒரு பாக்கியமாகவும் சுகானுபவமாகவும் இருந்தது.
 
 புராண, இதிகாச, வரலாற்றுக் கதாபாத்திரங்களுக்கு சிவாஜியின் நடிப்பு உயிரூட்டியது. கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய பாரதி போன்றவர்களையெல்லாம் நமது கண்முன் உலவவிட்ட சிவாஜியை எப்படி மறக்க முடியும். வேறெந்த நடிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒப்பற்ற சாதனைச் சரித்திரங்கள் அல்லவா அவை?
 
 அவரது திரையுலக வரலாற்றில் பைலட் பிரேம்நாத், ஹிட்லர் உமாநாத், மிருதங்க சக்கரவர்த்தி, லாரி டிரைவர் ராஜாக்கண்ணு போன்ற திருஷ்டிப் பொட்டுகளும் உண்டு. அரசியல் சாக்கடையில் குதிக்காமல், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் சிவாஜி இன்னும் ஏராளமாய்ச் சாதித்திருக்க முடியும். அரசியல் அவரை ஏமாற்றினாலும், மக்களின் இதய சிம்மாசனத்தில் அவருக்கு என்றுமே முதல் மரியாதை தான்.
 
 ஆயிரம் நடிகர்கள் வரலாம்... மறையலாம்; ஆனால், சிம்மக் குரலோன் அவன் ஒருவன் தான். உலகம் உள்ளவரை. உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிவாஜியின் நினைவிருக்கும்.
 
 ******
 
 ராம்.என்.ராமகிருஷ்ணன் Qatar General Petroleum Corpn. நிறுவனத்தில் தலைமை தணிக்கை அதிகாரியாகப் பணியாற்றுகிர். சென்னை ஆன் லைன் 'MIDI MUSIC' (http://www.chennaionline.com/midi) பக்கத்தின் வழியாகத் தனது இனிமையான இசையால் வலைவாசிகளை மகிழ்வித்து வருகிறார்.
 
 ராம்.என்.ராமகிருஷ்ணன்
 | 
											
												| மேலும் படங்களுக்கு | 
											
	|  | 
											
												| More 
 இசையரசிக்குப் பல்லாண்டு...
 கற்பு - தந்தை பெரியார்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |