|
சங்கர நேத்ராலயா (யுஎஸ்ஏ) – அட்லாண்டா பிரிவு |
   |
- இருங்கோவேள் | செப்டம்பர் 2025 |![]() |
|
|
|
 |
100 கிராமங்களை தத்தெடுத்தது சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் பத்மபூஷண் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவை (Mobile Eye Surgical Unit) மானுடர் அனைவர்க்கும் சிறந்த, தரமான கண் பராமரிப்புச் சேவை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கினார்.
பாரதத்தின் கண் மருத்துவத்தின் அடையாளமாகத் திகழ்வது சென்னை சங்கர நேத்ராலயா. தமிழகத்தில் 100 கிராமங்களை தத்தெடுத்து அங்கே இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்களை நடத்துவதற்காக $1.25 மில்லியன் நிதி திரட்டுவதற்காக சங்கர நேத்ராலயா யுஎஸ்ஏ அமைப்பின் அட்லாண்டா பிரிவு ஒரு பிரம்மாண்டமான பல்சுவை நிகழ்ச்சியை அட்லாண்டாவில் ஆகஸ்டு 15, 2025 அன்று நடத்தியது.
அட்லாண்டாவின் கம்மிங்கில் உள்ள வெஸ்ட் ஃபோர்ஸித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இதற்கெனப் பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது.
தொடக்க உரையில், அட்லாண்டா பிரிவின் துணைத்தலைவர் ராஜேஷ் தடிகமல்லா, "அட்லாண்டாவின் இதயம் சமூக சேவைக்கெனத் துடிக்கிறது. இன்றிரவு, நாங்கள் பொழுதுபோக்கிற்காகக் கூடவில்லை. பாரத கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொடுப்பதற்காக ஒன்றுபட்டிருக்கிறோம்" என்று அறிவித்தார்.
"மக்கள் ஒரு குறிக்கோளுடன் ஒன்று சேரும்போது, அதன் தாக்கம் ஆழமாகிறது" என்று பொருளாளர் மூர்த்தி ரேகபள்ளி கூறினார். சங்கர நேத்ராலயா (யுஎஸ்ஏ) தலைவர் பாலா ரெட்டி இந்தூர்தி, "மொபைல் கண் மருத்துவ அறுவை சிகிச்சை என்பது மருத்துவப் பணியைவிடப் பெரியது. இது இரக்கத்தின் இயக்கம். அது பயணிக்கும் ஒவ்வொரு மைலும் மீட்கப்பட்ட பார்வை மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையின் வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று வலியுறுத்தினார்.
திறமிக்க பாடகர்களான சாந்தி மெடிச்செர்லா, சந்தீப் கோவ்தா, உஷா மோச்செர்லா, ஜனார்தன் பன்னேலா, ஸ்ரவந்தி கே.டி., ஷில்பா உப்புலூரி, ஸ்ரீனிவாஸ் துர்கம், ராம் துர்வாசுலா ஆகியோரின் வசீகரமான நிகழ்ச்சிகள் விழாவைக் கோலாகலமாக நடத்திச் சென்றன. கலாச்சாரத் தலைவரான நீலிமா கட்டமனுகு நிகழ்ச்சியைச் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
லாஸ்யா நடனப் பள்ளியின் குரு ஸ்ரீதேவி ரஞ்சித் அவர்களின் மோகினியாட்டம், நாட்டியவேத நடன அகாடமியின் குரு சோபியா சுதீப் கிஷன் அவர்களின் பரத நாட்டியம், கலாக்ஷ்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸின் (KIPA) குரு மிட்டல் படேல் வழங்கிய கதக் மற்றும் குச்சிப்புடி நிகழ்ச்சிகள் பார்வையாளரை மகிழ்வித்தன. நடராஜ நாட்டியாஞ்சலியின் நீலிமா கட்டமனுகு புராணங்களில் வேரூன்றிய படைப்புகளை வழங்கினார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் புராணக் கதை முதல் துடிப்பான நாட்டுப்புறக் கதைகள் வரை அனைத்தையும் தனித்துவமான சுவையோடு மேடைக்குக் கொணர்ந்தன.
இந்த நிகழ்வில் அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதர் ஜெனரல் மாண்புமிகு சி.ஜி.ஐ. ஸ்ரீ ரமேஷ் பாபு லட்சுமணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். உணர்ச்சிபூர்வமான தமது உரையில், ஸ்ரீ ரமேஷ் பாபு லட்சுமணன், கண் பார்வையிழப்பைத் தடுப்பது ஒருவருக்கு மறுவாழ்க்கை தருவதை விடக் குறைவானதல்ல என்று கூறினார்.
SNUSA-வின் முன்னாள் தலைவரும் வாரிய ஆலோசகருமான திருமதி லீலா கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
புரவலர் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவின் மூலம் $1.25 மில்லியனுக்கும் அதிகமான நிதி இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டது. இந்த நிதி சுமார் 100 கிராமங்களைத் தத்தெடுக்கப் பயன்படும். ஒவ்வொரு கிராம முகாமும் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட வறியோருக்குப் பார்வையை மீட்டுத்தர உதவும்.
நிகழ்வின் படங்களைக் காண: www.sankaranethralayausa.org
மேலும் தகவலுக்கு/நன்கொடை அளிக்க வலைமனை: www.sankaranethralayausa.org
கட்டணமில்லாத் தொலைபேசி எண்: (855) 463-8472
வரி விலக்குத் தரும் நன்கொடைகளை அனுப்ப: Sankara Nethralaya USA, 77238 Muncaster Mill Rd, No 522, Derwood, MD 20855 |
|
தகவல் (தமிழில்): ஏ.பி. இருங்கோவேள் |
|
|
|
|
|
|
|