| தகவல் - ஊழல்வாதிகளை உண்மை பேசவைத்தால்... Dialog
 கீதாபென்னட் பக்கம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | பேசும் படங்கள் மூன்று வகை |    |  
	                                                        | - கல்கி ![]() | ![]() ஜனவரி 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| நமது பேசும் படங்களைச் சாதாரணமாக மூன்றுவிதமாய்ப் பிரிப்பதுண்டு - ஆடும் படங்கள், பாடும் படங்கள், ஓயாமல் பேசும் படங்கள் என்று இந்த வேடிக்கைப் பிரிவினையைத் தவிர, வேறு மூன்று வகையாகவும் பேசும் படங்களைப் பிரிக்கலாம். 
 1. களிப்பூட்டும்  படங்கள்
 
 நாடோடி வாழ்க்கையில் ஈடுபட்டு அலுப்படைந் திருக்கும் மக்களுக்குச் சிறிது நேரம் வாழ்க்கைத் தொல்லைகளை மறந்து உல்லாசமாகப் பொழுது போக்குவதற்குச் சாதனமான படங்கள் அவசியம் தேவைதான். ரஸமான கதைப்போக்கு மனோகரமான காட்சிகள், ஆடல் பாடல்கள், சிக்கலான சந்தர்ப் பங்கள், அவற்றிலிருந்து விடுதலையடையும் கட்டங் கள் ஆகியவை இந்த வகைப்பட்ட பேசும் படங்களில் அதிகமாக இருத்தல் இயல்பு.
 
 ஆனால் 'களிப்பூட்டுதல்' என்ற பெயரால் மக்களின் மனதை மாசுபடுத்தும் ஆபாசக் காட்சிகள் உள்ள படங்கள் வெளியாவது நாட்டுக்கு எல்லாவகையிலும் கேடு சூழக்கூடியது. களிப்பூட்டும் படங்கள் குற்றமற்ற உயர்ந்த முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.
 
 இந்த ரகத்தில் தமிழ்நாட்டில் சமீப காலத்தில் வெளியாகியிருக்கும் படங்களுக்கு 'சந்திரலேகா', 'அபூர்வ சகோதரர்கள்', 'வாழ்க்கை ஆகியவை சிறந்த உதாரணங்கள் ஆகும். இவை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் எடுக்கப்பட்டு வட நாட்டிலும் வெற்றியடைந்தன. இது குறித்து நாம் மகிழ்ச்சியும் பெருமையும் அடையலாம்.
 
 ஆனால் ஸினிமாவைப் போன்ற அபார சக்தியுள்ள சாதனத்தைக் களிப்பூட்டும் கருவியாக மட்டும் உபயோகப்படுத்துவதில் நாம் பூரண திருப்தி அடைய முடியுமா? அடைய முடியாது. அடையவுங் கூடாது.
 
 2. கருத்துள்ள படங்கள்
 
 சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படக் கூடிய கருத்துள்ள ஸினிமாப் படங்களும் அவசியம் தேவை. இவற்றைப் ''பிரசார நோக்கங் கொண்ட படங்கள்'' என்று சொல்லுவதற்கு நாம் தயங்க வேண்டிய தில்லை. ருஷியா தேசத்தில் வெளியாகும் எல்லாப் படங்களும் பிரசார நோக்கங் கொண்டவையே. அமெரிக்காவில் வெளியாகும் படங்களில் பாதிக்கு மேல் பிரசார நோக்கங் கொண்டவைதான். அவரவர்களுடைய தேசமும் அந்தந்த தேசத்தின் மக்களும் முன்னேறி உயரும் முறையில் பிரசாரக் கருத்துள்ள படங்களை அந்தந்தத் தேசங்களில் எடுக்கிறார்கள். அதற்காக அவர்கள் வெட்கப் படுவதில்லை. சில படங்கள் அப்பட்டமான பிரசார மாயிருக்கின்றன. வேறு சில படங்கள் நாஸ¤க்கான உயர்ந்த முறையில் பிரசாரம் செய்கின்றன.
 
 ருஷியாவையும் அமெரிக்காவையும் நோக்கும் போது நம் பாரதநாடு எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது. நம் நாட்டுக்குப் பிரசார நோக்கமுள்ள படங்கள் அவசியம் வேண்டும். ஆனால் பிரசாரம் என்ற பெயரால் ஷியத்தைக் கக்கித் துவேஷத்தை வளர்க்கும் படங்கள் வெளியாகக் கூடாது.
 
 கருத்துள்ள படங்களில் கலந்த பிரசாரம் தேசத் துக்கும் சமூகத்துக்கும் நன்மை தருவதாயிருக்க வேண்டும். நாடு உயர்வதற்கும் மக்கள் உயர்வதற்கும் சாதனமாக இருக்க வேண்டும். உழைப்பை உயர்த்தி, ஊக்கத்தை மனந்தளராத உள்ள வலிமையை ஊட்டி, சமூக நீதியை நிலைநாட்டும் உயர்ந்த கருத்துக்கள் அடங்கிய படங்கள் இந்தியாவின் இப்போதைய நிலையில் இன்றியமையாதவை. இந்த நோக்கத்தை ஓரளவு நிறைவேற்றிய தமிழ்ப் படங்களுக்கு சமீபத்தில் வெளிவந்தவற்றுள் ''நல்ல தம்பி'', ''ஏழைபடும் பாடு'' இவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.
 
 இம்மாதிரி படங்கள் இன்னும் ஏராளமாக வெளிவர வேண்டும்; அவை மற்ற அம்சங்களில் வெற்றிகரமான படங்களாகவும் அமைய வேண்டும்.
 
 ஆனால் இது மட்டும் போதுமா? போதாது!
 
 3. தரம் உயர்ந்த படங்கள்
 
 வெளிநாடுகளிலே திரையிட்டு நமது புகழை வளர்க்கக்கூடிய சில உயர்தரப் படங்களாவது ஒவ்வொரு வருஷத்திலும் வெளியாக வேண்டும்.
 
 இதைக்கேளுங்கள், சென்ற சில மாதங்களில் இந்தியா தேசத்துக்கு வெளிநாடுகளிலிருந்து கலாச்சாரக் கோஷ்டிகள் பல வந்தன. இங்கிலாந்து, அமெரிக்கா, ருஷியா, இத்தாலி, பிரான்ஸ், செக்கோஸ்லோவேகியா முதலிய பல நாடுகளிலி ருந்தும் சிறந்த கலைஞர்கள் பலர் வந்தார்கள். அவர்கள் நம்முடைய சிற்பக் கலையின் அற்புதங் களைப் பார்த்து வியந்து பாராட்டினார்கள். நமது சங்கீதத்தைக் கேட்டு உவந்து புகழ்ந்தார்கள். நமது பரத நாட்டியக் கலையைக் கண்டும் கேட்டும் பரவசமடைந்தார்கள். ''உங்கள் சிற்பத்துக்கும் சங்கீதத்துக்கும் பரதநாட்டியத்துக்கும் உலகில் இணையில்லை?'' என்று சொன்னவர்களும் உண்டு. ஏன்? நம் நாடகங்களைப் பார்த்துக்கூட வெளி நாட்டவர்களில் சிலர் தங்கள் சந்தோஷத்தை வெளியிட்டார்கள்.
 
 ஆனால் அப்படி வந்திருந்த கலாச்சாரக் கோஷ்டி யில் யாராவது ''உங்கள் சினிமாவைப் பார்த்தேன், நன்றாயிருந்தது'' என்று சொன்னதாக இதுவரையில் நாம் கேள்விப்படவில்லை.
 
 இதற்காக அவர்களை நாம் நொந்து கொள்வதில் பயனில்லை. ஏனெனில் வெளிநாட்டார் கண்டு வியக்கக்கூடிய உயர்தரமான படங்களை இன்னும் நாம் வெளியிடவில்லை.
 | 
											
												|  | 
											
											
												| இத்தகைய உயர்தரப் படங்களுக்கு வெளிநாட்டுப படங்களைத்தான் நாம் உதாரணம் சொல்ல வேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் பல பரிசுகள் பெற்ற ''Best years of Our Lives" என்ற படத்தையும், ருஷியாவில் வெளியான ''The Story of a Real Man" என்னும் படத்தையும்  உதாரணமாகச் சொல்லலாம். 
 இத்தகைய தரம் உயர்ந்த படங்கள் - வெளி உலகத்தில் நம் நாட்டையும் நம் சமூகத்தையும் நம் சினிமாக்கலையையும் உயர்த்திப் புகழ் அளிக்கக் கூடிய படங்கள் - இந்திய மக்களின் வாழ்க்கையில்  உள்ள இன்ப துன்பங்களைச் சித்திரிக்க வேண்டும். இந்தியாவின் உயரிய பாரமார்த்திக இலட்சியங் களை நல்ல முறையில் வெளியிட வேண்டும்.
 
 பிரபல அமெரிக்க டைரக்டரான பிராங்க் கோப்ரா என்பவர் சென்னையில் நடந்த சர்வதேச பிலிம் விழாவில் கூறியதென்ன?
 
 ''உங்களுடைய படங்களில் உலகம் முக்கியமாக எதிர்பாரப்பது உங்களுடைய பாரமார்த்திகப் பெருமையைத்தான்!'' என்றார்.
 
 நம்மிடம் சிறுமைகள் எவ்வளவோ இருக்கத்தான் இருக்கின்றன. அவற்றை நமக்குள் எடுத்துக்காட்டிப் பரிமாறிக் கொண்டால் போதுமல்லவா? குறைகளை எடுத்துக்காட்டி இந்தியாவுக்கு விரோதமான பிரசாரம் செய்ய அன்னியர்கள்  பலர் இருக்கிறார்கள். நாமும் எதற்காக அந்த நீசத் தொழிலைச் செய்ய வேண்டும்?
 
 நம்முடைய சினிமா முதலாளிகள் ''இந்திய சர்க்கார் படத்தொழிலுக்கு உதவி செய்வதில்லை?'' என்று, ஓயாமல் குறை கூறுகிறார்கள். பிறநாட்டார் வந்திருக்கும் சபைகளிலேயும் தமாஷா வரியைப்பற்றி முறையிடுகிறார்கள்.
 
 எத்தனையோ அரும்பாடுபட்டு அடைந்த சுதந்திரத் தைப்  பாதுகாத்துத் தேசத்தை முன்னேற்ற முயன்று வரும் தேசத்தலைவர்களுக்கு நம் சினிமா முதலாளிகள் செய்ய வேண்டிய உதவியும் இருக் கிறது. தேசத்துக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது.
 
 இந்திய சினிமா முதலாளிகள் தனிப்பட்ட முறை யிலாவது, பலர் ஒன்று சேர்ந்தாவது, இந்திய தேசத்தை உலகத்தின் முன்னிலையில் உயர்த்தக் கூடிய சில படங்களை ஆண்டுதோறும் தயாரித்து வெளியிட வேண்டும்.
 
 அப்போது இந்திய சர்காரிடம் படத்தொழிலுக்கு உதவிகோரவும், சலுகைகள் கேட்கவும் நம் சினிமா முதலாளிகள் உரிமை பெறுவார்கள். அந்த நிலைமையில் பொதுமக்களும் அவர்களுக்கு வேண்டிய ஆதரவு அளிப்பார்கள்.
 
 கல்கி 06.04.1952.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தகவல் - ஊழல்வாதிகளை உண்மை பேசவைத்தால்...
 Dialog
 கீதாபென்னட் பக்கம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |