| தெரியுமா?: கனடியப் பிரதமர் பங்கேற்ற தமிழர் தெருவிழா வாஷிங்டன் டி.சி: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தமிழ்நாடு அறக்கட்டளை 44 வருடங்களாக தமிழக கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவற்றோர், பின்தங்கியோரின் சுகாதார வளர்ச்சிக்கும், பெண்களின் சமூக வளர்ச்சிக்கும் உழைத்து வருகிறது. அமெரிக்காவில் பிறந்து வளரும் மாணவர்களுக்குத் தமிழகத்தோடு இணைப்பை உருவாக்கும் பொருட்டு 2014 முதல் இன்டெர்ன்ஷிப் திட்டத்தை அறக்கட்டளை நடத்தி வருகிறது. இதன்கீழ் முப்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க மாகாணங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் வருடந்தோறும் கோடையில் தமிழகம் சென்று சேவைப் பணியாற்றி வருகின்றனர். 
 இந்த ஆண்டு 31 பேர் இரண்டு குழுக்களாக, ஜூலை 3 முதல் 28ம் தேதிவரை தமிழகம் சென்றனர். சென்னை, நாமக்கல், மதுரை, சங்கரன்கோயில், காரைக்குடி ஆகிய ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், சென்னை மருத்துவ மரபியல் மையத்திலும் இவர்கள் அமர்த்தப்பட்டனர். சென்னை TNF அலுவலகத்தில் அறங்காவலர் திரு. இராஜரத்தினம், செயல் இயக்குனர்கள் திருமதி. வசுமதி மற்றும் திருமதி மன்மததேவி அறிமுக நிகழ்ச்சி நடத்தினர். பின்னர் தமக்கான பள்ளிகளுக்கு இவர்கள் சென்றனர். வகுப்புகளில் அமர்ந்து பாடம் நடத்தும் முறையைக் கண்காணித்த பிறகு, பள்ளியின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு உதவுவது, பாடத்திட்டங்களைத் தாமே தயார் செய்து சொல்லித்தருவது, கணினி வகுப்புகளில் துணை புரிவது, ஆங்கிலம் பயிற்றுவிப்பது போன்ற பல்வேறு செயல்களில் இவர்கள் பங்கேற்றனர்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| "வசதியற்ற மாணவர்களின் வாழ்க்கை நிலையும், அவர்களது கற்கும் ஆர்வமும் என் அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டன" என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த பிரகதி முத்துக்குமார். "தமிழக ஆசிரியர்களின் கண்டிப்பு, வகுப்புப் பிரதிநிதிகள் நியமனம், பாடம் கற்பிக்கும் முறைகள் எனக்குப் புதுமையாகத் தோன்றின" என்கிறார் நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த பிரணவ் சாய்சம்பத். சுஜித் ரமேஷ்குமார் (ஒஹையோ), விஷோக் குணசேகர் (மிச்சிகன்), வேலன் மணிவண்ணன் (மிச்சிகன்), பிரேம்சந்த் (மிச்சிகன்), ஹேமகுமார் (மிச்சிகன்) ஆகியோரும் தமது அனுபவங்கள் நெகிழ்ச்சி தருவதாகக் கூறுகின்றனர். மருத்துவ மரபியல் மையத்தில் இன்டெர்ன்ஷிப் செய்த மிச்சிகனைச் சேர்ந்த ப்ரீத்தி குமரனும், வசந்த் பழனிசாமியும் தங்கள் சொந்த இரத்தத்தை வைத்தே ஆய்வுகள் செய்த அனுபவம் அமெரிக்காவில் கிடைக்காத ஒன்று என்கின்றனர். 
 "அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் இவர்களது வேர் தமிழகமே என்ற புரிதலுக்காகவே TNF இன்டெர்ன்ஷிப் திட்டம் செயல்பட்டு வருகிறது" என்று கூறுகிறார் தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் திரு. சோமலெ சோமசுந்தரம். உங்கள் பிள்ளைகளைத் தமிழக கிராமப்புற மாணவர்களின் கல்விச் சேவையில் நீங்களும் ஈடுபடுத்தலாமே.
 
 தொடர்புக்கு:
 இணையதளம்: www.tnfusa.org
 ஃபேஸ்புக்: fb/TamilNaduFoundationUsa
 மின்னஞ்சல்: tnfinternship@gmail.com
 
 அபிராமி சுவாமிநாதன்,
 முதல்வர், MTS தமிழ்ப்பள்ளி, டிராய், மிச்சிகன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெரியுமா?: கனடியப் பிரதமர் பங்கேற்ற தமிழர் தெருவிழா
 வாஷிங்டன் டி.சி: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |