|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  வணக்கம். 
 சென்ற இதழின் போது, இராக் பிரச்னையை அதிபர் எவ்வாறு கையாளப்போகிறார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அரசியல் ரீதியான தீர்வைக் காண வேண்டும் என்று இராக் ஆய்வுக் குழு அறிஞர்கள் பரிந்துரை கூறியிருந்தனர். படையினர் எண்ணிக்கையை அதிகரிப்பதே இதில் வெற்றிக்கு வழி என்று அதிபர் புஷ் கருதுவது தெளிவாகி இருக்கிறது. அந்த நாடு பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் இந்தச் சமயத்தில் நமது அதிபர் 'வெற்றி, தோல்வி, கொலைகாரர்கள்' போன்ற சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதை நம்மால் ஏற்கமுடியவில்லை.
 
 இப்படிப் பேசக் காரணம் இராக் நிலைமை குறித்த பக்குவம் இல்லாமையா அல்லது புரிதல் இல்லாமையா?. எனது அமெரிக்க நண்பர் ஒருவர், 'பெரும்பாலான அமெரிக்கர்களின் கண்களில் மண்ணைத் தூவ இந்தச் சொற்கள் தேவைப்படுகின்றன' என்கிறார். நாம் அறிந்திருப்பதைவிட அதிபர் புஷ் இராக்கைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார் என்று நம்புவோம். நமக்கும் இராக்குக்கும் எது நல்லதோ அதையே அவர் செய்கிறார் என்றும் நம்புவோம்.
 
 இந்த இதழ் வெளிவரும் சமயத்தில், தென்றலின் புதிய வலைதளமான www.tamilonline.com/thendral என்பதை நீங்கள் காணமுடியும். நீங்கள் பதிவு செய்துகொண்டால், அங்கே தென்றலை ஒரு மின்புத்தகமாகப் படிக்கலாம். தென்றல், சமுதாயம், அகராதி, கடைவீதி, நூல்கள், சேவைகள் என்று இன்னும் விரிவுபடுத்தவும் திட்டங்களும் இருக்கிறது.
 
 வலையகத்தில் தமிழ் அகராதிகளைத் தேட முயன்றபோது, 1860-ல் வெளியான திரு. பெர்சிவலின் புத்தகங்களை books.google.com-இல் கண்டேன். percival tamil என்ற சொற்களை இட்டுத் தேடினால், அகராதியும், சுமார் 6000 தமிழ்ப் பழமொழிகளுக்கு மேல் உள்ள ஒரு புத்தகமும் உங்களுக்குக் கிடைக்கலாம். அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை குறித்த பல தகவல்களை இந்தப் பழமொழிப் புத்தகத்தின் முன்னுரை நமக்குத் தருகிறது. Asian Educational Service நிறுவனத்தின் சென்னைக் கிளையை உடனே அழைத்து, இந்தப் புத்தகங்களை இணையத்தில் இட அனுமதித்ததற்கு நன்றி கூறினேன். இன்னும் ஏராளமான புத்தகங்கள் இருக்கலாம், நாம் அறியாமலே. இப்புத்தகங்களைப் போன்ற பழைய புத்தகங்களை இனி நாம் வலைதளத்தில் நிறைய எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.
 | 
											
												|  | 
											
											
												| கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் கவிஞர் மு. மேத்தா ஆகியோரின் நேர்காணல்கள் இந்த இதழில் வெளியாகின்றன. சாஹித்ய அகாடமி விருது பெற்ற மேத்தா அவர்களின் உடனுக்குடன் கவிதைப் பொழிவைப் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய சிந்தனைகளையும் எண்ணங்களையும் தென்றலில் பதிவு செய்ததில் பெருமை கொள்கிறோம். 
 வெகுசில இந்தியர்களே உலகச் சாம்பியன்களாக ஆனதுண்டு. அவர்களில் கிராண்ட்மாஸ்டர் ஆனந்தின் சாதனை முதன்மையானது. அவரது எளிமை பிரமிக்க வைக்கிறது. உலகச் சாம்பியன் ஒருவரை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்ற ரகசியத்தை அவரது பெற்றோர் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர்.
 
 மதுரபாரதி அவர்களைத் தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தத் தேவையில்லை. மீண்டும் அவர் தென்றலின் ஆசிரியராக வரச் சம்மதித்து இருக்கிறார். ஆனந்த விகடனின் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் (தமிழ்ப் பதிப்பு, 3 தொகுதிகள்) இணைப் பதிப்பாசிரியர் பொறுப்பை முடித்தபின் அடுத்த இதழில் அவர் தென்றலில் இணைவார். மார்ச் 2007 இதழிலிருந்து அவருக்கு என்னோடு சேர்ந்து நீங்களும் நல்வரவு சொல்லுங்கள்.
 
 சி.கே. வெங்கட்ராமன்
 பதிப்பாளர் - தென்றல்.
 பிப்ரவரி 2007
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |