|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  தமிழ்ச் சூழலில் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளராக நன்கு அறிமுகமானவர் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட கந்தர்வன். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். கட்சிக்காரர், தொழிற்சங்கவாதி, அரசு ஊழியர் எனப் பல முகங்கள் கொண்டவர். 
 ஆனால் கந்தர்வன் என்ற படைப்பாளி தனித்தன்மை மிக்க படைப்பாளியாகவே இருந்துள்ளார். எழுபதுகளில் இருந்து தமிழ்ச் சூழலில் நன்கு அறியப்படும் எழுத்தாளராக வளர்ந்தார். சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களிலும நிதானமாக இயங்கினார். ஒவ்வொரு இயக்கத்திலும் கந்தர்வனின் தனிச்சிறப்பு, அனுபவம், கருத்துநிலை, அரசியல் யாவும் தெளிவாகவும் உறுதியாகவும் வெளிப்படும்.
 
 இயக்கம் சார்ந்து இயங்கியவர் எனினும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டவரல்லர். அனைவருடனும் தோழமையுடனும் பழகக் கூடியவர். இதனால் கருத்துநிலை மாறுபாடுகளுக்கு அப்பாலும் கந்தர்வன் என்ற படைப்பாளி, தனிநபர் அனைவராலும் நேசிக்கப்படக் கூடியவராகவும் இருந்தார்.
 
 முற்போக்கு எழுத்தாளர் இயக்க மேடைகளில் கந்தர்வன் பேச்சு, சிந்தனை எப்போதும் தனித்தன்மையுடன் வெளிப்படும். இந்தப் பண்பு அவரது இலக்கிய அனுபவப் படைப்பு மனநிலையிலும் தொழிற்பட்டது. கல்விப்புலங்களிலும் வெகுஜனத் தளத்திலும் கந்தர்வன் சிறந்த கவிஞராக அறியப்பட்டவர். அவரது கவியரங்கக் கவிதைகளில் சமூக உணர்வு, மனித நேயம், சொல்லாட்சி, கிராமியத் தன்மை, நகர-கிராம முரண் என விரிவு கொண்டவை.
 | 
											
												|  | 
											
											
												| கவிஞராக அவர் அடையாளப்படுத்தப்பட்டாலும் எழுத்துலகில் அவருடைய எழுத்தாளுமை சிறுகதைகளில் தான் ஆழமாகப் பளிச்சிட்டது. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் கந்தர்வனுக்கும் முக்கிய இடமுண்டு. முற்போக்கு எழுத்தாளர்களில் பெரும்பாலோர் கதைகளில் வடிவச்செழுமை, அழகியல் பண்பு இருக்காது என்ற குற்றச்சாட்டு, விமர்சனம் உண்டு. இதற்கு மாறாக இயங்கும் ஒரு சில முற்போக்கு எழுத்தாளர்களுள் கந்தர்வனும் ஒருவர். முற்போக்குக் கருத்துநிலை சார்ந்து வெளிப்படும் எழுத்துநடைக்கு, கதை சொல்லும் மரபுக்குச் செழுமையான வளம் சேர்ப்பவர் கந்தர்வன். 
 'பூவுக்குக் கீழே', 'சாசனம்', 'ஒவ்வொரு கல்லாய்', 'கொம்பன்', 'அப்பாவும் அம்மாவும்', ஆகிய சிறுகதைத் தொகுதிகள் கந்தர்வன் என்ற படைப்பாளியின் ஆளுமையை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியவை. மாறிவரும் சமூக அசைவியகத்தின் வேகம் மனித மனங்களில் ஏற்படுத்தக் கூடிய வாழ்வியல் மதிப்பீடுகள், கிராமிய மனம், நகர மனம் ஏற்படுத்தும் மனநெருக்கடிகள் என நவீனக் கதையாடலின் புதிய அனுபவக் களங்களாக அவை விரிவு கண்டுள்ளன. கந்தர்வனின் வாசிப்பு அனுபவம் விரிவானது. புதிய உணர்திறன் முறைமை அவரது கதை சொல்லும் பாணியில் அழுத்தம் பெறுகிறது எனலாம். வளர்ந்து வரும் கலை இலக்கிய உரையாடல் போக்குகளை ஆழ்ந்து உணர்ந்து கொள்ள முற்படுபவர். நவீன கலை இலக்கியப் பிரக்ஞை, தேடல் யாவும் கந்தர்வனின் படைப்பாளுமையை வழி நடத்துகிறது. இதனாலேயே, கந்தர்வன் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை மரபில் புதிய தடம் பதிக்கிறது.
 
 தொ.மு.சி. ரகுநாதன், கே. முத்தையா, சின்னப்பாரதி, மேலாண்மை பொன்னுச்சாமி எனத் தொடரும் மரபில் கந்தர்வன், பூமணி போன்றோர் தனித்து அடையாளப்படக் கூடியவர்கள். அந்த அளவிற்குப் படைப்பு நேர்த்தி, கருத்துநிலைத் தெளிவு இவர்களிடம் உண்டு. கந்தர்வன் 2004 ஏப்ரல் மாதத்தில் மறைந்து விட்டார். ஆனால் அவரது படைப்புக்கள், மனிதர்களுடன் கொண்ட உறவுகள் யாவும் அவரை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
 
 மதுசூதனன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |