|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| வீரப்பன் சுடப்பட்டது மட்டும்தான் பரபரப்புச் செய்தி என்றில்லை. மருத்துவ உலகில சில செய்திகள் மிகப் பரபரப்பானவைதாம். அவற்றில் இரண்டை இப்போது பார்ப்போம். 
 வயாக்ஸ் (Vioxx) மருந்தை மெர்க் நிறுவனம் திரும்பப் பெற்றது
 
 வயாக்ஸ் என்ற மருந்து மெர்க் மருந்து நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். 1999 ஆம் ஆண்டு மே மாதம் உணவு மற்றும் மருந்து மேலாண்மை (Food and Drug Administration - FDA)  நிறுவனத்தால் மருந்து ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எண்பது மில்லியன் அமெரிக்க மக்கள் இந்த மருந்தை உபயோகிக்க ஆரம்பித்தனர். ருமடாய்டு ஆர்த்தரைடிஸ் (Rheumatoid Arthritis) என்ற மூட்டு வலிக்கும், மற்ற வகையான மூட்டு வலிகளுக்கும், வலி நிவாரண மருந்தாகப் பரவலாக உபயோகிக்கப்பட்டு வந்த வேளையில் இந்த மருந்து நிறுவனத்தாரால் திரும்பப் பெறப்படுவது மருத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.
 
 ஆரம்பக்கட்ட பரிசோதனைகளிலேயே இந்த மருந்து இருதய நோயை அதிகமாக்கும் தன்மை உடையதற்கான அறிகுறிகள் இருந்தன. ஆயினும் இதற்கு FDA ஒப்புதல் அளித்தது. பிற்பாடு எழுந்த கேள்விகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மெர்க் நிறுவனத்தாரும் FDAயும் திருப்தியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 30-ஆம் நாளன்று, இந்த மருந்தால் மாரடைப்பு நோயும், பக்கவாத நோயும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாக மெர்க் நிறுவனம் அறிவித்து வயாக்ஸ் மருந்து திரும்பப் பெறுவது மருத்துவ உலகில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
 
 இதனால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மனத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளன.
 
 மருத்துவரின் கண்ணோட்டம்
 
 1. தங்கள் நோயாளிகளில் வயாக்ஸ் மருந்தை உட்கொள்பவர்களைக் கண்டுபிடித்து அதற்கான மாற்று மருந்துக் குறிப்பை அளிப்பதற்கான நடைமுறையைக் கையாள வேண்டும்
 
 2. FDA நிறுவனத்தின் அறிக்கைகளை எப்படி கணிப்பது என்பதும், புதிய கண்டுபிடிப்புகளை எந்த அளவுக்கு ஆதரிப்பது என்பதும் புரியாத புதிராய் இருக்கின்றன.
 
 3. இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மருந்தை உண்ட நோயாளிகளை இருதய நோய்க்கும், பக்கவாத நோய்க்கும் பரிசோதிப்பது எப்படி?
 
 நோயாளிகளின் கண்ணோட்டம்
 
 1. இந்த வயாக்ஸ் மருந்தை உண்டவர்கள் உடனடியாக அதை நிறுத்தி, மருத்துவரை அணுக வேண்டும்.
 
 2. இந்தக் காலக்கட்டத்தில் இருதய நோயோ, பக்கவாத நோயோ ஏற்பட்டிருந்தால் அதை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
 
 3. வருங்காலத்தில் புதிய மருந்துகள் உட்கொள்ளும் கட்டாயம் வரும் நிலையில் அந்த மருந்தைப் பற்றிய உண்மைச் செய்திகளை கேட்டு அறிந்து கொள்ளுல் அவசியம்.
 
 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றிருக்கையில் மருந்தே நோயைக் கொண்டு வருமெனில் அதைத் தவிர்க்கும் வழியைத் தேடுவது உசிதம்.
 | 
											
												|  | 
											
											
												| இன்புளுயன்ஸா - ·புளு (Influenza- Flu) தடுப்பு ஊசிப் பற்றாக்குறை 
 நாடு தழுவிய தடுப்பு ஊசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள கைரான் நிறுவனம் பிரிட்டனில் இருக்கும் தனது அலுவலகத்தில் ஃபுளு தடுப்பு ஊசி தயாரிக்கும் முறையில் கலப்படம் நிகழ்ந்திருப்பதால் இந்த வருட ஃபுளு தடுப்பு ஊசியை நிறுத்தி வைத்துள்ளது. ஆக 54 மில்லியன் தடுப்பு ஊசிகளே இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கும். இதனால் மருத்துவர்கள் தகுந்த ஆலோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகே தடுப்பு ஊசியை வழங்குவர்.
 
 ஃபுளு தடுப்பு ஊசி யாருக்கு கொடுக்கப்பட வேண்டும்?
 
 (published on www.nejm.org on Oct18 2004)
 
 1. ஆறு மாதம் முதல் 23 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள்
 
 2. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
 
 3. 2-64 வயதினரில் நோய்வாய்பட்டவர்கள் (இருதய, நுரையீரல் மற்றும் நீரிழிவு நோய் உடையவர்கள்)
 
 4. இந்த ஃபுளு காலகட்டத்தில் கர்ப்பிணியாக உள்ளவர்கள்
 
 5. செவிலியர் விடுதியில் வசிப்பவர்கள்
 
 6. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உலகில் வேலை செய்வோர்.
 
 7. பிறந்து ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தை வசிக்கும் வீட்டில் இருப்பவர்களும் இந்த ஊசியை பெற்றுக் கொள்வதினால் குழந்தைக்கு பாதுகாப்பு ஏற்படுகிறது.
 
 இந்தப் பற்றாக்குறையினால் இந்த ஆண்டு ·புளு பரவ வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே உபயோகித்தால் ஃபுளு பரவுவதைக் குறைக்க முடியும். மேற்கூறிய நபர்களுக்கு ஃபுளு தாக்குவதால் நோயின் தீவிரம் அதிகமாவதற்கும், நோயினால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் கூடுவதற்கும், மரணம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. நோய்பரவும் வாய்ப்பைக் குறைப்பதற்காகவே மருத்துவ உலகில் பணிபுரிவோருக்கு இந்தத் தடுப்பு ஊசி வழங்கப்படுகிறது.
 
 வருடா வருடம் இந்த வைரஸ் தனது தன்மையை மாற்றிக் கொள்ளும் திறன் வாய்ந்தது. அதனால் கடந்த வருடத்தன்மையை வைத்தே அடுத்த வருடத் தடுப்பு ஊசி தயாரிக்கப் படுகிறது. ஆக நோய்த் தடுப்புமுறையைப் புரிந்து கொண்டு, நோயின் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அடிக்கடி வரும் ஜலதோஷம் போல் தோன்றினாலும் அதிகமான அளவு உடல் வலியும் நகரமுடியாத அளவு வேதனையும் இந்த நோயிற்கான முக்கிய அற்¢குறிகள். மேலும் விவரங்களை அடுத்த இதழில் காணலாம்.
 
 மரு. வரலட்சுமி ரஞ்சன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |