|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| 'இயக்கமும் நானே, இயங்குபவனும் நானே' என்ற இறைவன் பல இயக்குநீர்ச் சுரப்பிகளை இயற்கையிலேயே உருவாக்கி இருக்கிறான். அதில் முக்கியமானது 'தைராய்டு' (thyroid) எனப்படும் சுரப்பியாகும். நம் கழுத்துப் பகுதியில் ஒளிந்திருக்கும் இந்தச் சுரப்பி நல்ல உடல் நிலையில் இருப்போருக்கு வெளியே தெரியாது. ஏதேனும் காரணத்தால் இந்தச் சுரப்பி வீங்குமேயனால் அப்போது வெளிப்படும். இந்த வீக்கத்திற்கு காய்டர் (goiter) என்ற பெயர் வழங்கப்படும். இதன் தமிழ்ப்பெயரான 'பொன்னுக்கு வீங்கி' கொஞ்சம் வேடிக்கையானதுதான். நாம் உட்கொள்ளும் உப்பில் இருக்கும் அயோடினின் அளவைப் பொறுத்து இந்த வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனாலேயே தற்காலத்தில் தயார் செய்யப்படும் உப்பில் தேவையான அளவு அயோடின் கலக்கப்படுகிறது. 
 இந்தச் சுரப்பியின் இயக்குநீர் 'தைராக்ஸின்' (thyroxine) எனப்படும். இந்த தைராக்ஸின் மூலமாகவே நாம் சுறுசுறுப்புடன் எல்லா வேலைகளையும் செய்யமுடிகிறது. இது குறைவதினால் ஹைபோதைராய்டிஸம் (Hypothyroidism) என்ற நோயும் அதிகமாவதினால் ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism) என்ற நோயும் ஏற்படலாம்.
 
 ஹைபோதைராய்டிஸம் (Hypothyroidism) நோயின் அறிகுறிகள்
 
 1. உடல் சோர்வு
 2. அதிகத் தூக்கம்
 3. உடல் எடை கூடுதல்
 4. மலச்சிக்கல்
 5. குளிர் தாங்கும் திறன் பாதிக்கப்படுதல்
 6. மாத உதிரப்போக்கு ஏறுமாறாய் இருத்தல்
 7. கர்ப்பம் தரியாமை
 8. மனச் சோர்வு (depression)
 9. தலைமயிர் உதிர்தல்
 10. தோல் வறட்சி
 11. முற்றிய நிலையில் கோமா (coma) ஏற்படுதல்.
 
 ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism) நோயின் அறிகுறிகள்
 
 1. தூக்கமின்மை
 2. மார்பு படபடப்பு
 3. உடல் எடை குறைதல்
 4. ஓயாத மன உளைச்சல் (anxiety)
 5. பேதியாதல்
 6. உடல் நடுங்குதல்
 7. வெப்ப நிலை தாங்கும் திறன் பாதிக்கப்படுதல்
 8. வியர்வை பெருகுதல்
 9. முற்றிய நிலையில் மனக்குழப்பம், ஜூரம் போன்ற அறிகுறிகளுடன் 'thyroid storm' என்ற நிலமை ஏற்படுதல்.
 | 
											
												|  | 
											
											
												| இந்த இருதரப்பட்ட நோய் உடையவருக்கும் TSH என்ற இரத்தப் பரிசோதனை மூலம் நோய் உள்ளதா இல்லையா என்று அறிந்து கொள்ள முடியும். ஹைபோதைராய்டிஸம் உள்ளவர்களுக்கு TSH அளவு அதிகமாகவும், ஹைபர்தைராய்டிஸம் உள்ளவர்களுக்கு TSH அளவு குறைவாகவும் இருக்கும். ஹைபர்தைராய்டிஸம் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு தைராய்டு scan செய்ய வேண்டியிருக்கலாம். 
 கர்ப்பிணிப் பெண்களை இந்த நோய் தாக்கினால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மருந்து உட்கொள்வது நல்லதில்லை என்ற பொதுவான கருத்தினால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்காது போனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆகவே மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
 
 புதியதாய்க் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு 'post partum thyroiditis' என்ற வகையில் இந்தச் சுரப்பி தாக்கப்படலாம். இது தவிர வைரஸ் கிருமிகளாலும் தாக்கப்படலாம். அல்லது பரம்பரையாகவும் வருவதுண்டு.
 
 ஹைபோதைராய்டிஸம் உள்ளவர்களுக்கு Synthyroid அல்லது Levothyroid என்ற மருந்துகள் வழங்கப்படும்.
 
 ஹைபர்தைராய்டிஸம் உள்ளவர்களுக்குப் படபடப்பைக் குறைக்க beta blocker என்ற மருந்தும், PTU அல்லது methimazole என்ற தைராக்ஸின் குறைக்கும் மருந்தும் வழங்கப்படும். இந்த நிலையை ரேடியோதெரபி மூலமாகவோ, அறுவை சிகிச்சை மூலமாகவோ குணப்படுததலாம். அப்படிச் செய்வதினால் நிரந்தர ஹைபோதைராய்டிஸம் ஏற்பட வாய்ப்புண்டு.
 
 இயக்குநீர் அளவை வைத்து மருந்துகளின் அளவு நிர்ணயிக்கப்படும். ஆகவே இந்த நோய் தாக்கியோர் 2-3 மாதங்களுக்கு ஒரு முறை TSH, T4 என்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். நோயின் அறிகுறிகள் பழக்கமானதாலோ, அல்லது குறைந்தது போல் காணப்பட்டதாலோ மருந்துகளை நிறுத்துவது ஆபத்தானது. மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடப்பதால் இந்த நோய் உள்ளவர்கள் நலமாக வாழமுடியும்.
 
 மரு. வரலட்சுமி நிரஞ்சன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |