|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  நோய்கள் இருக்கும்வரை புதிய மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கவேண்டி வரும். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. Type 1 சின்னக் குழந்தைகளுக்கும், சில வயதானவர்களுக்கும் ஏற்படும். இவர்களுக்குக் கண்டிப்பாக இன்சுலின் ஊசி தேவைப்படும். Type 2 பெரும்பாலும் வயதானவர்களுக்கு உடல் எடை கூடுவதினால் தாக்கும் வகை. இதற்கு மருந்துகள் பல உண்டு. இவற்றை ஒரு கண்ணோட்டம் விடலாம். 
 Metformin - மெட்ஃபார்மின்: இதை Glucophage என்றும் சொல்வார்கள். இது உடல் எடை குறைவதற்கும், உடலில் இருக்கும் இன்சுலின், செல்களுக்குச் செல்வதற்கும் உதவுகிறது. இது பல வருடங்களாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னமும் முதல்தரமாக உபயோகிக்கப்படுகிறது. சிலருக்கு இது வயிற்றுப் போக்கை உண்டாக்கலாம்.
 
 Glipizide, Amaryl: இந்த வகை Sulphonylurea என்று சொல்லப்படும். வெவ்வேறு பெயர்களில் இந்த மருந்து கிடைக்கிறது. இவை உடலில் இன்சுலின் சுரக்கவைக்கும். இந்த வகை மருந்துகள் பல வருடங்களாக உபயோகத்தில் உள்ளன. இவை ரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்துவிடும் அபாயம் உள்ளது. இந்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர் உண்ணத் தாமதமானால் சர்க்கரை குறைந்து ‘Hypoglycemia’ ஏற்படலாம். இந்தவகை மருந்துகள் உடல் எடையைக் கூட்டலாம்.
 
 புதிய மருந்துகள்
 Januvia/Tradjenta/Onglyza: இவை DPP 4 Inhibitor வகை. இந்த மருந்துகள் உடலின் இன்சுலினை அதிகநேரம் செயல்பட வைக்கும். இவற்றால் உடல் எடை குறையவோ கூடவோ செய்யாது. பின்விளைவுகள் குறைவு. ஆனால் சில வேளைகளில் இன்சூரன்ஸ் இந்த மருந்துக்கு விலை கூடுதலாக வைக்கலாம்.
 
 Jardiance/Invokana/Farxiga: இவை சிறுநீரகம் வழியே சர்க்கரையை வெளியேற்ற உதவும். இவை புதிய கண்டுபிடிப்புகள். உடல் எடை குறைக்கவும் உதவுகின்றன. பின்விளைவாக சிறுநீரக நுண்ணுயிர்த் தாக்கம், Urinary tract infection அல்லது Yeast இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்.
 
 Byetta/Bydureon: இவை ஊசி மருந்துகள். இதில் Byetta தினமும் இரண்டு வேளையும், Bydureon வாரத்தில் ஒருமுறையும் எடுத்துக் கொண்டால் போதும். இவை GLP 1 agonist என்ற வகையைச் சார்ந்தவை. இவை உடலின் எடை குறைக்கவும் உதவும்.
 | 
											
												|  | 
											
											
												| Victoza: இதுவும் ஊசி மருந்து. தினமும் ஒருவேளை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையின் அளவைக் குறைப்பதோடு, உடல் எடையும் குறையும். இதனால் குமட்டல் அல்லது வாந்தி ஏற்படலாம். ஆனால் உடல் எடை நன்கு குறைந்தால் நீரிழிவு குணமாகும் வாய்ப்பு உண்டு என்பதால் இது தற்போது மிகவும் பிரபலம். 
 இன்சுலின்: இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, உடனே செயல்படும் வகை. இரண்டாவது, நீண்டநேரம் செயல்படும் வகை. பல புதிய இன்சுலின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒருசில நோயாளிகளுக்கு இன்சுலின் தேவைப்படும். இன்சுலின் அதிகமாகத் தேவைப்படும்போது வேறு சில மருந்துகளும் உபயோகப்படுத்தப் படலாம். இன்சுலின் அளவு கூடும்போது உடல் எடை கூடும் வாய்ப்பு உண்டு.
 
 உங்களுக்கு எந்த மருந்து சரியானது என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். சிலருக்கு முதன்மை மருத்துவரே இவற்றைக் கொடுக்கலாம். இன்னும் பலருக்கு Endocrinologist என்ற சிறப்பு மருத்துவரை நாடவேண்டி வரலாம்.
 
 நீரிழிவு ஏற்படாமல் தவிர்ப்பது நல்லது. மருந்தை உணவாக்காமல், உணவை மருந்தாக்குவது சிறப்பு. மாவுச்சத்துள்ள உணவுகளைக் குறைத்து, புரதம் அதிகமுள்ள உணவுகளை உண்பது உகந்தது. உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வதும் நீரிழிவு வராமலிருக்க உதவும். அப்படியே வந்துவிட்டாலும் Type 2 ஆக இருந்தால் அதை மாற்றமுடியும். உடல் எடை குறைப்பதை முக்கியக் குறிக்கோளாக கொண்டு, பழக்கவழக்கங்களை மாற்றி அமைப்பதின் மூலம் இந்த நோயை விரட்டமுடியும்.
 
 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக, வெறும்வயிற்றில் சர்க்கரை, hemoglobin A1c அளவு ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்வதன் மூலம் நீரிழிவின் தீவிரத்தைக் கண்காணிக்க முடியும்.
 
 வருமுன் காப்பது நல்லது. ஆனால் வந்துவிட்டால் கட்டுக்குள் வைப்பது நல்லது. இந்த வீடியோவில் நீரிழிவு நோயை எப்படிச் சரியான உணவுப் பழக்கத்தால் விரட்டி அடிக்கலாம் என்பதை மருத்துவர் வாயிலாக அறியலாம்:
 
 
 
 மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
 கனெக்டிகட்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |