|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  முகத்தில் மட்டுமே அல்லாமல் கழுத்து, முதுகுப் பகுதிகளிலும் பரு வரக்கூடும். தோலில் எண்ணெய்ப் பசை அதிகமானாலோ அல்லது மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டாலோ அதனால் தோலில் ஏற்படும் மாற்றமே பருவாக மாறுகிறது. இவற்றில் பல வகைகள் உண்டு. நுண்ணுயிர்க் கிருமிகள் தாக்கி, அதனாலும் பின்விளைவுகள் வரலாம். அவற்றைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். 
 வகைகள்
 வெள்ளைப் பரு – (White head or Comedones) மயிர்க்காலில் அடைப்பு ஏற்பட்டு அதனால் தோல் எழும்பித் தோலின் நிறத்திலே இருக்கும் பரு.
 கருப்புப் பரு – (Black head or Comedones) மயிர்க்காலில் ஏற்படும் அடைப்பினால் தோல் நிறம் மாறிக் கரும் புள்ளியாய் ஏற்படும் பரு.
 கட்டி – (Cystic acne) மயிர்க்காலில் எற்படும் அடைப்புடன் தோலின் எண்ணெயும், ஈரப்பசையும் சேர்ந்து கட்டியாக மாறலாம்.
 நுண்ணுயிர்க் கிருமித் தொற்று - (Infected Acne) நுண்ணுயிர் கிருமித் தொற்றினால் முகப்பரு இளம் சிவப்பாக மாறக்கூடும். தோல் சிவந்து காணப்பட்டாலோ அல்லது சீழ் கோத்துக் கொண்டாலோ அதற்கு நுண்ணுயிர்க் கிருமிக் கொல்லி மாத்திரைகள் உட்கொள்ளத் தேவைப்படலாம்.
 
 பரு ஏற்படக் காரணங்கள்
 - முகத்தில் அதிக எண்ணெய்ப் பசை
 - வளரிளம் பருவம் (adolescence)
 - கர்ப்ப காலம் மற்றும் மாதாந்திர மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்
 - எண்ணெயை அதிகமாக்கும் முகப்பூச்சுகள்
 - மாவுப்பொருள் அதிகம் உணவில் இருப்பது அல்லது இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது
 
 பதின்ம வயதில் ஆரம்பிக்கும் முகப்பருக்கள் நாற்பது வயதுவரை தொடரலாம் சிலருக்குச் சில காலகட்டத்தில் கூடுதலாக இருக்கலாம். சிலருக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திலும் வரலாம். ஆண்களுக்கும் பதின்ம வயதில் அதிகமாக ஏற்படலாம்.
 
 மன அழுத்தம் கூடுதலாக இருந்தால் முகப்பரு உருவாகாத போதும், இருக்கும் முகப்பருக்கள் தீவிரமாகலாம்.
 
 தடுப்பு முறைகள்
 அடிக்கடி நல்ல தண்ணீரில் முகம் கழுவுவது நல்லது.
 எண்ணெய்ப் பசையை அதிகமாக்கும் சோப்புகளை உபயோகிக்கக் கூடாது.
 முகப்பூச்சுகள் அதிகம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 உபயோகித்தாலும் இரவு தூங்கப் போகும்போது முகப்பூச்சை அகற்றிவிட வேண்டும்.
 நல்ல காய்கறிகள் மற்றும் பழங்கள் உண்பது தோலுக்கு நல்லது.
 போதிய தூக்கம் மற்றும் ஓய்வு அவசியம்.
 | 
											
												|  | 
											
											
												| தீர்வு முறைகள் கடைகளில் மருந்துச் சீட்டில்லாமல் பலவகைப் பசைகளும், களிம்புகளும் கிடைக்கும். இவற்றில் குறிப்பாக Benzyl Peroxide இருக்கும் பூச்சுக்களை உபயோகிக்கலாம். இதைத் தவிரச் சில காய்கறிகள் பழங்களில் இருந்து கிடைக்கும் அமிலம் உதவலாம். மருந்துச் சீட்டுக்குக் கிடைக்கும் மருந்துகள் பலவகைப்படும். முக்கியமாக Tretinoin என்ற மருந்து களிம்பாகவும் மாத்திரையாகவும் கிடைக்கும். இதற்குப் பின்விளைவுகள் உண்டு. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் உபயோகிக்கக் கூடாது. இதைத் தவிர நுண்ணுயிர்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் (Metronidazole, Erythromycin) தோலில் பூசும் களிம்பாகவும் மாத்திரையாகவும் வழங்கப்படும்.
 
 இவை தவிர சில கருத்தடை மாத்திரைகளும் கொடுக்கப்படலாம். Androgen என்ற ஹார்மோன் அதிகமாக இருந்தால் முகப்பரு வரலாம். இதற்கு Spironolactone என்ற மருந்தும் வழங்கப்படலாம். ஒரு சில கருத்தடை மாத்திரைகளே முகப்பரு நீக்க உதவும். சில கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களால் முகப்பரு அதிகமாகலாம். இதற்கு முதன்மை மருத்துவர் அல்லது தோல்நிபுணரை அணுகிச் சிகிச்சை பெறவேண்டும்.
 
 மரு. வரலட்சுமி நிரஞ்சன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |