|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வதுண்டு. அதிலும் மைக்ரெய்ன் (Migraine) என்ற ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோருக்கு இந்தப் பழமொழி மிகமிகப் பொருந்தும். ஒற்றைத் தலைவலி குறிப்பாகப் பெண்களுக்கே அதிகம் வருகிறது. இளவயது முதலே இது ஏற்படலாம். இருபது அல்லது முப்பது வயதுகளில் இது ஆரம்பமாகி விடும். ஒரு சிலருக்குப் பதின்மவயதில் இந்த வலி வரக்கூடும். இந்தத் தலைவலி வருவதற்குக் குடும்ப வரலாறு முக்கியப் பங்கு அளிக்கிறது. ஐம்பது வயதுக்குப் பின்னர் கடுமையான ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அது மைக்ரெய்ன் ஆக இருக்க முடியாது. இவர்கள் மருத்துவரை நாடி வேறு பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். 
 காரணங்கள்
 
 உடலில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள்.ஒருசில உணவுப் பொருட்கள் இதை உண்டாக்கலாம். குறிப்பாக, அதிகக் காஃபி, சாக்லேட், மதுபானங்கள், அதிக உப்புள்ள உணவுகள்.அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக வெளிச்சம், தட்பவெப்ப நிலையில் மாற்றம், ஒரு சில வாசனைப் பொருட்கள் போன்றவை.மாதவிடாய் நேரத்தில் ஒற்றைத் தலைவலி அதிகரிக்கலாம்.
 
 மைக்ரெய்னின் அறிகுறிகள்
 எல்லாத் தலைவலியும் மைக்ரெய்ன் அல்ல. எப்போதோ ஒருமுறை தலை வலிப்பது இயல்பு. அடிக்கடி ஒருபக்கத் தலைவலி வந்து அதனால் முடங்கிக் கிடந்தால் அது மைக்ரெய்ன் ஆக இருக்க வாய்ப்புண்டு. ஒருபக்கம் மட்டும் கடும் தலைவலி, அதிலும் இரத்த நாளங்கள் வெடிப்பது போலத் தோன்றும். இதனுடன் வாந்தி அல்லது தலைசுற்றல் இருக்கலாம். வெளிச்சம் கண்ணைக் கூசலாம். இருட்டில் கண்ணை மூடி அமைதியாய் இருக்கத் தோன்றலாம். கண் பார்வை மங்கலாம். வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
 
 Prodrome/Aura/Attack/Postdrome
 இந்தத் தலைவலி வருவதற்கு முன்னர் ஒரு சில அறிகுறிகள் தோன்றலாம். இதற்கு Prodrome என்று பெயர். இரண்டு நாள் முன்னரே மலச்சிக்கல், வயிற்று உபாதை, மன உளைச்சல், கழுத்து வலி போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
 
 கண்ணுக்குள் ஒளிவட்டங்கள், கண்பார்வை மங்குதல், மரத்துப் போதல், பேச்சு குழறுதல் போன்ற தீவிர அறிகுறிகளுக்கு Aura என்று பெயர். ஒருசிலருக்கு இவை ஏற்படக் கூடும்.
 
 பலருக்கு வலி ஓய்ந்த பின்னர் களைப்பும் சோர்வும் இருக்கலாம். இதற்கு Postdrome என்று பெயர்.
 
 இந்தத் தலைவலிக்கு பரிசோதனை அதிகம் தேவையில்லை. ஆனால் இது வேறுவகைத் தலைவலியாக இருக்கலாம் என்ற ஐயம் இருந்தால் CT scan, MRI போன்ற பரிசோதனைகள் தேவைப்படும்.
 | 
											
												|  | 
											
											
												| சிகிச்சை வலி மாத்திரைகள்: Tylenol, Ibuprofen, Advil போன்ற மாத்திரைகள் பெரும்பாலோருக்கு உதவும். இவை ஒரு மணி நேரத்துக்குள் நிவாரணம் தரும். இதனுடன் காபி அருந்துவது உதவலாம். காபியில் இருக்கும் காஃபீன் கலந்த சில வலி மாத்திரைகள் (Excedrin Migraine) கடைகளில் மருந்துச் சீட்டு இல்லாமல் கிடைக்கும். இவையும் ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் தரும். இவை தவிர சில பிரத்தியேக வலி மாத்திரைகள் உள்ளன. இவற்றுக்கு மருத்துவரின் சீட்டு அவசியம். இவை, Triptan வகையைச் சார்ந்தவை. (Imitrex, Maxaalt, Zomig போன்ற மாத்திரைகள்) இவை ரத்த நாளங்களின் சுருக்கம் விரிவை பாதித்து வலியைப் போக்குகின்றன. இவற்றினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
 தவிர்ப்பு முறைகள்
 மேற்கூறிய உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதனாலும், மன அழுத்தத்தைக் குறைப்பதனாலும் வலி வருவதைத் தவிர்க்கலாம். தலைவலி நாளேட்டைப் பதிவு செய்வதின் மூலம் எந்தெந்த உணவுப் பொருட்கள் தலைவலியைத் தூண்டுகின்றன என்று அறிய முடியும். அதற்குப் பிறகு அவற்றைத் தவிர்ப்பது எளிதாகிவிடும்.
 யோகா மற்றும் தியானம் செய்வது உதவும். தினமும் உடற்பயிற்சி செய்வது தலைவலி வருவதைக் குறைக்கும்.
 
 இவற்றைத் தவிர தினமும் எடுத்துக் கொள்ளும்படியான சில தவிர்ப்பு மாத்திரைகள் உள்ளன. அடிக்கடி தலைவலி வந்து அவதிப்படுவோருக்கு இந்த வகை மாத்திரைகள் தரப்படுகின்றன. இவை உடலில் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் Beta blockers மாத்திரைகள். இவற்றைத் தவிர சில மன அழுத்த மாத்திரைகளும் (Trycyclic antidepressants) உபயோகப்படுத்தப் படலாம். வலிப்பு மாத்திரைகள் (Neurontin, Topamax) சிலவும் சிறப்பும ருத்துவர்களால் வழங்கப்படலாம்.
 
 நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, சில வைட்டமின்கள், குறிப்பாக B2 (Riboflavin) வைட்டமின்கள், Co enzyme Q10 உதவலாம். உடல் மசாஜ் மற்றும் அகுபங்சர் (Acupuncture) முறைகள் தீர்வளிக்கலாம்.
 
 மரு. வரலட்சுமி நிரஞ்சன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |