|
செப்டம்பர் 2025: வாசகர் கடிதம் |
   |
- | செப்டம்பர் 2025 |![]() |
|
|
|
ஆகஸ்டு மாத இதழில் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் அதிபர் ட்ரம்ப் அவர்களால் ஏற்பட்டிருக்கும் சிரமங்களை மிகச் சுருக்கமாக எழுதியுள்ளீர்கள். வருங்கால வேதனைகளைச் சமாளிக்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.
தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலை கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் வெ. வேதாசலம் அவர்களின் சாதனைகளைப் பற்றி விவரமாக அற்புதமாகச் சொல்லியுள்ளீர்கள். ஓர் உண்மையான ஆய்வாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் பாண்டிய நாட்டின் வரலாற்றையும், சமண, சைவ சமயங்களிடையே நடந்த நிகழ்வுகளையும், களப்பிரர் காலச் சம்பவங்களையும் படித்துப் பரவசமடைந்தோம். எப்போதும் உண்மை அமைதியாகத்தான் இருக்கும் ஆர்ப்பாட்டம் செய்யாது. அறிவார்ந்த செயல் செய்யும்போது ,உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையுடன் பணியாற்றி, வாழ்நாள் சாதனைக்காக விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் 'தமிழ் விக்கி தூரன்' விருதைப் பெறவிருக்கும் ஆய்வாளர் வெ. வேதாசலம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
செயற்கை நுண்ணறிவில் சாதனை புரிந்த வைஷ்ணவ் ஆனந்த் அவர்களால் அவரின் பெற்றோருக்கும் அவர் படித்த பள்ளிக்கும் கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதி இந்தியர்களுக்கும் உலக அளவில் புகழ் கிடைத்துள்ளது என்றால் மிகையில்லை. மேலும் பலப்பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
நமக்கு வரும் சோதனைகள் நமது ஆன்மாவின் பயணத்தில் ஒரு வழியில் உதவுவதற்குத்தான்; ஒவ்வொரு கடினமான சோதனைக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்ற உண்மையை மருங்கரின் 'கிருஷ்ண பிரேமி' சிறுகதையில் படித்து மகிழ்ந்தேன்.
'விக்ரம்-வேதாளத்தின் கடைசிக் கதை' ஜே. ரகுநாதன் அவர்களின் சிறந்த கற்பனை. பழையதைப் புதிய வடிவில் முடித்திருப்பது மிக அருமை.
எழுத்தாளர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்களைப் பற்றி அரவிந்த் அவர்கள் எழுதிய விவரங்கள் சிறப்பு. உமாசந்திரன் இவரின் மூத்த சகோதரர் என்பது இப்போதுதான் தெரிந்தது. அவரது கதைகளை விரும்பிப் படித்துள்ளேன். பூர்ணம் விஸ்வநாதனின் ஓரிரண்டு படைப்புக்கள் தவிர அனைத்தையும் தவறாமல் விரும்பிப் படித்ததும் அல்லாமல் எல்லா சினிமா, நாடகங்களையும் பார்த்து ரசித்துள்ளேன்.
சின்னக்கதையில் 'அவருக்குச் சொந்தமான பாறை' மனதில் நின்றது. அலமாரியில் 'மலேய நாட்டு கப்பற் பயணம்' உணர்ச்சி பூர்வமான, மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்ப் பயணமாக அமைந்தது. பா.சு. ரமணன் அவர்களின் திருமுருக கிருபானந்த வாரியார் கட்டுரை படிக்கப் படிக்க நிறைய விவரங்கள் ஞாபகத்திற்கு வந்து மகிழ்ச்சி தந்தது. |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|