|
|
|
 |
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றை தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப கடும்பொருட்கள் திருடப்பட்டன என்றாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை மேலே பார்ப்போம் வாருங்கள்!
★★★★★
குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சில முறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைகிறது என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக அளவு வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினாள் மேரி. கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரென திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாக விளக்கினாள்.
சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரிக்கையில் க்யூபிட் துறையின் மேலாளரான ஹென்றி லாவ் என்பவரை விசாரித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் க்யூபிட் நுட்பத்தின் தனிச் சிறப்பு மற்ற நிறுவனங்களால் முடியாதது எவ்வாறு உங்களால் உருவாக்க முடிந்தது என்று சூர்யா கேட்கவே ஹென்றி பெருமிதத்துடன் விளக்கலானார்.
"நல்ல கேள்வி. முதலாவதாக எங்கள் க்யூபிட்டின் தனிச் சிறப்பு என்ன என்பதைக் கூறுகிறேன். பிறகு அதை எங்களால் மட்டும் எப்படி உருவாக்க முடிந்தது என்பதை விளக்குகிறேன். பொதுவாக க்யூபிட்களுக்குக் கலையல் என்னும் பிரச்சனை உள்ளது."
கிரண் இடைமறித்து, "அதைப்பற்றி ஏற்கனவே மேரி விளக்கினார். குவான்ட்டம் மேல்பதிப்புக் கலைந்து அந்தக் க்யூபிட் பயன்படாமல் போய்விட அதிக வாய்ப்புள்ளதால் குவான்ட்டம் பலன் கிடைக்காமல் போய்விடுகிறது அல்லவா!"
ஹென்றி தலையாட்டி ஆமோதித்தார். "அதேதான். அந்தக் கலையல் வாய்ப்பை வெகுவாகக் குறைப்பதுதான் எங்கள் நுட்பம்."
இப்போது ஷாலினி இடைமறித்தாள். "ஓ! இதைப் பற்றியும் மேரி மேலாகக் குறிப்பிட்டார். இரும்புடன் க்ரோமியம் சேர்த்தால் துருப்பிடுக்காத எஃகு உருவாகுவது போல் எதோ அபூர்வ பூமி தனிமத்தைக் கலப்பதால் உங்கள் க்யூபிட் கலையல் வாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது என்று கூறினார். ஆனால் அதைப் பற்றி வெகுவாக விவரிக்கவில்லை. மேற்கொண்டு விளக்குங்கள்!"
ஹென்றி முறுவலித்தார். "அட, மேரி நிறையவே சொல்லிட்டாங்க போலிருக்கே! சரி, அதைப் பற்றிய இன்னும் சில அம்சங்களை விவரிக்கறேன். பொதுவாக க்யூபிட்களை சாதாரண கணினி பிட்கள் போன்ற ஸிலிக்கான் நுட்பத்தைச் சற்றே மாற்றித்தான் தயாரிக்கிறார்கள். அதனால்தான் குவான்ட்டம் மேல்பதிப்பு சற்று பலவீனமாகவே உள்ளது. அதன் மதிப்பை அளக்க அல்லது வாய்ப்பளவை மாற்றும் முயற்சிகளைப் பயன்பாட்டு மென்பொருட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது மேல்பதிப்பு கலையும் வாய்ப்பு அதிகரிக்கிறது."
சூர்யா வினாவினார். "நானும் ஸிலிக்கான் வில்லை உற்பத்தித் துறையில் சில காலம் பணிபுரிந்திருக்கிறேன். அதனால் சாதாரணக் கணினி பிட்களைப் பற்றி எனக்கு நல்ல பரிச்சயந்தான். ஆனால் க்யூபிட்களின் தயாரிப்பில் கலையல் வாய்ப்பைக் குறைக்க அபூர்வ பூமித் தனிமங்களைப் பயன்படுத்துவதை எவ்வாறு கண்டறிந்தீர்கள், ஏன் மற்ற நிறுவனங்களால் அது இயலவில்லை என்பதுதான் புரியவில்லை."
ஹென்றி பெருமிதப் புன்னகையுடன் தொடர்ந்து விளக்கினார். "அதுதான் எங்க ரகசியம். ஆனால் மற்ற நிறுவனங்களால் மொத்தமாக இயலவே இல்லை என்று கூறிவிட முடியாது, மேல்பதிப்புக் கலையல் வாய்ப்பை எந்த அளவுக்குக் குறைக்க முடிகிறது என்பதுதான் எங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்பு. அபூர்வபூமி தனிமத்தைச் சேர்த்தால் கலையல் வாய்ப்புக் குறையும் என்பதை பெர்க்கலி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து அதைப்பற்றிய கட்டுரையைத் தொழில்துறை கருத்தரங்கத்தில் வெளியிட்டனர். அதிலிருந்து, பல நிறுவனங்கள் அந்த முயற்சியில் இறங்கின. ஆனால் கலையல் வாய்ப்பு வெகுவாகக் குறையவில்லை. அப்போதுதான் எனக்கு திடீரென ஒரு யோசனை பளிச்சிட்டது. மற்ற நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் அபூர்வபூமிகளை ஒவ்வொன்றாகக் கலந்துதான் முயற்சித்தனர். ஆனால் நான் ரகசியமாக மேரியிடம் என் யோசனையைப் பற்றிக் கலந்தாலோசித்தேன்."
சூர்யா குறுக்கிட்டார். "ஓ, மேரி மற்றும் நீங்கள் கூறியதிலிருந்து எனக்கு ஓரளவு புரிந்து விட்டது. ஒரே ஒரு அபூர்வ பூமி தனிமத்தை மட்டும் சேர்த்தால் போதாது, ஒரு அபூர்வ பூமி கலவையைச் சேர்த்தால் என்ன பலன் கிட்டும் என்ற ஆராய்ச்சியை ஆரம்பித்தீர்களா?!"
ஹென்றி ஆரவாரித்து சிலாகித்தார். "எக்ஸாக்ட்லி! பிரமாதம் சூர்யா. சரியாப் பிடிச்சிட்டீங்களே! ஆனா அது அடிப்படை யோசனைதானே ஒழிய அதற்குப் பலன் கிட்டுவதற்குப் பல வருட கடின ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. முதல் சில கலவை முயற்சிகள் படுதோல்வி அடைந்தன. சில கலவைகள் கலையல் வாய்ப்பை அவ்வளவாகக் குறைக்கவில்லை. சில இன்னும் அதிகரிக்கவே செய்தன! ஆனால் நான் தளராமல் பல அபூர்வ பூமிக் கலவைகளை ஆராய்ந்தேன். வெகுகாலக் கடும்முயற்சிக்குப் பிறகு, தனிமங்களில் இயல்பியல் அம்சங்களைப் பற்றி அலசினேன். அதன் பயனாக, மூன்று தனிமங்களை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்தால் கலையல் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது என்பதை பரிசோதனை ரீதியாக நிரூபித்தேன். அதைத்தான் எங்கள் க்யூபிட்களில் பயன்படுத்துகிறோம். இந்த நுட்பத்தை நாங்கள் இன்னும் வெளியிடவில்லை. ரகசியமாக பேடன்ட் பெற முயலுகிறோம். அதற்காக விண்ணப்பம் விடுத்தாயிற்று. அந்த பேடன்ட் கிடைத்த பிறகே அதைப் பற்றி வெளியில் மூச்சுவிட இயலும்!"
சூர்யா கேட்டார், "ஆனால் உங்கள் க்யூபிட்டுகளை வேறு நிறுவனங்கள் திருடி, அவர்களாலும் தயாரிக்க இயலும் அல்லவா?"
ஹென்றி சற்றே தயங்கி விட்டு மெல்லத் தலையாட்டி ஆமோதித்தார். "முடியும் என்று தான் நினைக்கிறேன். அவற்றைத் தயாரிப்பதற்கு மிக நுண்ணிய நுட்பங்கள் உள்ள செயல்முறை தேவை. க்யூபிட்டில் உள்ள பொருட்களின் கூறுகளையும் தனிமங்களையும் விஞ்ஞான ஆராய்ச்சியால் கண்டுபிடிக்கலாம். பலமுறை முயன்று பார்த்தால் செயல்முறையையும் கண்டறியக் கூடும். ஆனால் வெற்றி அடைய வெகுகாலம் ஆகக்கூடும்."
சூர்யா ஒரு அதிர்வேட்டு வீசினார்! "ஆனால் உங்கள் உதவி இருந்தால் மிகக் குறுகிய காலத்திலேயே திருடிய நிறுவனம் வெற்றியடையலாம் அல்லவா? உங்களுக்கும் ஸ்ட்ராடிவேரியஸ் வயலின் வாங்க உதவியாக இருக்கும்!"
ஹென்றி பொங்கி வந்த கோப ஆவேசத்தால் முகமெல்லாம் சிவந்து, உச்சக் குரலில் வெடித்தார். "ஹேய் ஹேய் என்ன சொல்றீங்க நீங்க! நானே திருட உதவி, செயல்முறை கற்பித்தேன்னு சொல்றீங்களா? ஜாக்கிரதை! இப்பவே வெளிய போயிடுங்க. இல்லன்னா என்னை அடக்கிக்க முடியாது. எதாவது அசம்பாவிதமா செஞ்சிடுவேன்!"
மேரி அவரை ஆசுவாசப் படுத்தினாள். "நானே இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறேன் ஹென்றி, சாந்தமடையுங்கள்!" என்று கூறிவிட்டு நம் துப்பறியும் மூவரையும் அவசரமாக ஹென்றியின் அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றாள்!
சூர்யா குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதை இனிவரும் பகுதிகளில் காண்போம்!
(தொடரும்) |
|
|
| கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|
|
|