|
|
 |
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்டம் ஒளிக்கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒருப் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப்பட்டன என்கிறாள். குவான்டம் கணினியின் குழப்பத்தைச் சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைப் பார்க்கலாம் வாருங்கள்!
★★★★★
குவான்டம் கலையலால் (decoherence) மேன்மை போய்ச் சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைவு என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறிய மேரி, கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முன் தினந்தான் திடீரெனத் திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.
ஆராய்ச்சிக் கூடத்தின் வெளியேறும் வாயிலின் அபாய மணி ஒலிக்காமல் உள்நபர்தான் செய்திருக்க வேண்டும் என்று சூர்யா சரியாகக் கணித்து, அதைப்பற்றி மேற்கொண்டு விசாரிப்பதற்காக குழுவினரைச் சந்திக்க வேண்டும் என்று சூர்யா கேட்டுக் கொண்டதால், மேரி முதலாவதாக, பாதுகாப்புத் துறைத் தலைவர் லூயிஸ் ஹெர்ரேவை அறிமுகம் செய்யவும், அவருடைய அறையில் தென்பட்ட தடயங்களால் அவர் விளையாட்டுப் போட்டிகளில் பணயம் வைத்துச் சூதாடுவதாக சூர்யா கணித்தார், லூயிஸிடம், அபாய மணி ஒலிக்காமலிருக்க யாரும் அறியாமல் எப்படிச் செய்யமுடியும் என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்கு லூயிஸ் உடனே பதிலளிக்காமல் சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு திடீரென எதோ உதித்ததுபோல் பதற்றத்துடன் விளக்கினார். "ஓ! அது எப்படின்னு எனக்கு உடனே தெரியலை. ஆனா, எனக்கு ஒண்ணு தோணுது. ஒரு விவரம் உதவக்கூடும்னு நினைக்கறேன்! ஆனா அது சின்ன விஷயம், எவ்வளவு முக்கியம்னு..." என்று தயங்கினார்.
மேரி ஆவலோடு தூண்டினாள், "அது என்ன சொல்லுங்க லூயிஸ்! உதவக்கூடிய எதுவும், சின்ன விவரமாயிருந்தாலும் நம்ம நிலைமைக்கு அது முக்கியந்தான்!"
லூயிஸ் தயக்கத்துடன் தொடர்ந்தார். "மேரி உங்களுக்கும் தெரியும். ஒவ்வொரு நாளும் பிற்பகல் நாலரை மணிக்கு அரைமணி நேரக் கூட்டம் ஒன்று நடக்கிறது..."
மேரி ஆமோதித்தாள். "ஆமாம். அன்னிக்கு என்ன முன்னேற்றம், என்ன பிரச்சனைகள், மறுநாள் முக்கியமா என்ன சாதிக்கணும்னு ஆலோசனை நடக்கும். அதில் நானும் நீங்களும்கூடக் கலந்துக்கறோமே; சொல்லப் போனா முழு மேலாண்மைக் குழுவும் கலந்துக்குது. இன்னும் பல முக்கிய நுட்ப நிபுணர்களும் கலந்துக்கறாங்க. அதுக்கு என்ன?"
லூயிஸ் விளக்கலானார். "அந்த அரைமணி நேரத்துல நிறையப் பேர் ஆராய்ச்சிக் கூடத்தின் உள்ளறையில இருக்காங்க. அப்போ யாராவது எதிர்ப்பக்கம் இருக்கற அபாய மணி இயக்க மின்சாதனத்தின் தட்டுப் பலகை பட்டன்களில் சரியான எண்வரிசையை விரைவாக அழுத்தினால் அதன் ஒலியை மௌனப்படுத்த முடிந்திருக்கும். அதற்குச் சில நொடிகள்தான் ஆகும். ஆனால் அதை இங்கு வேலை செய்யும் யாரும் செய்யக்கூடுமே? அது எப்படி உதவும்னுதான் தயங்கினேன்."
சூர்யா பரபரப்புடன், "இது நிச்சயமாக உதவக்கூடும். அதுபத்தி இன்னொரு முக்கிய விவரம் வேணும். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் கலந்துக்க வேண்டிய எல்லாரும் கலந்துக்கறாங்களா, இல்லை சில நாட்கள் யாராவது கலந்துக்காம இருக்காங்களா?"
மேரி பதிலளித்தாள். "பொதுவா எல்லா நாளும் எல்லாரும் கலந்துக்கறாங்க. ஆனா அப்பப்போ ஏதோ நிர்ப்பந்தத்தாலயோ இல்ல விடுமுறையில் இருந்தாலோ அவங்க துறையின் உபதலைவர் அல்லது வேறு நிபுணரை அனுப்புவாங்க. அது ஏன் முக்கியம்?"
கிரண் முந்திக் கொண்டான். "ஓ! ஓ! நான் சொல்றேன். ஏன்... முக்கியமா!" என்று நையாண்டியாக நீட்டி முழக்கிவிட்டுத் தொடர்ந்தான். "சிலநாள் யாராவது விடுமுறையில் இல்லாம ஆனா நிர்ப்பந்தத்தைக் காரணமா சொல்லி வராம இருந்தா அவங்களை சந்தேகப் பட்டியலில் இருந்து விலக்க முடியாதில்லயா, அதான்! சரியா சூர்யா?"
சூர்யா ஆமோதித்தார். "ரொம்பச் சரி கிரண். அதேதான். அபாய மணி கடைசியா சோதிக்கப்பட்ட பிறகு கடந்த மூணு வாரத்துல எல்லா நாளும் கலந்துகிட்டவங்களை சந்தேகத்திலிருந்து விலக்கலாம்னு நினைக்கிறேன். ஆனா அப்படியில்லாம எதோ நிர்ப்பந்தம்னு காரணம் சொல்லி வராம இருந்திருந்தா, சந்தேகித்தாகணும். மேரி கடந்த மூணு வாரத்துல யார் இந்த விவரத்தின் எந்தப் பக்கம் இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?"
மேரி சற்று யோசித்துவிட்டுச் சோகமாகத் தலையசைத்தாள். "முக்கியமான விஷயம்னாலும் இதுவும் உதவாதுன்னுதான் நினைக்கறேன். ஏன்னா, என் ஞாபகப்படி எல்லோருமே எதாவது ஓரிரு நாள் அந்தக் கூட்டத்துல கலந்துக்காம இருந்திருக்காங்க. அதுனால யாரையும் சந்தேகப் பட்டியலிலிருந்து விலக்க முடியாது!"
சூர்யா அவள் சோகமான விளக்கத்தைக் கலங்காமல் ஏற்றுக்கொண்டார். "அதுனால என்ன பரவாயில்லை. ஒவ்வொரு விவரமும் இந்த ஜிக்ஸா சோதனை விளையாட்டின் ஒரு பகுதிதான். இதையெல்லாம் சேர்த்தாத்தான் இறுதியில முழுப்படத்தையும் முடிக்க முடியும்" என்று கூறிவிட்டு லூயிஸ்மேல் இன்னோர் அதிர்வேட்டு வீசினார். "அது போகட்டும் லூயிஸ், உங்க சொந்த விஷயத்துக்கு வருவோம். இந்த விளையாட்டுப் போட்டி மேல பணயம் வைக்கறீங்களே, அதுல எவ்வளவு லாபம் கிடைக்குது? இல்லன்னா இந்தக் கிரண் இருக்கானே அவன்மாதிரி நஷ்டக் கேஸா, அப்படின்னா எவ்வளவு பணம் போச்சு?"
லூயிஸ் நிலைகுலைந்தார்! முகம் கறுத்து விகாரமானது. அவர் கோபமாக வெடித்தார்! "லாபமோ நஷ்டமோ, நீங்களே குறிப்பிட்டபடி அது என் சொந்த விஷயம். அதைப்பத்தி ஏன் விசாரணை? அதை நீங்க கேட்கவும் கூடாது, நானும் பதில் சொல்ல வேண்டியதில்லை!"
அவர் சீற்றம் சூர்யாவைச் சற்றும் அசைக்கவில்லை. கலங்காமல் பதிலளித்தார். "லாபம்னா பரவாயில்லை லூயிஸ். அதிகமான நஷ்டம்னா இந்தத் திருட்டுக்கு உங்களுக்கும் ஒரு காரணம் இருக்குன்னுதான் அர்த்தம். நீங்கதான் செஞ்சீங்கன்னு சொல்ல வரலை. ஆனா சந்தேகப் பட்டியலில் உங்களுக்கு ஒரு மேலிடம் இருக்குன்னுதான் வச்சுக்கணும். மேலும் அது சொந்த விஷயம்னாலும் அதிகாரிகள் விசாரித்தா பதில் சொல்லித்தான் ஆகணும், அவங்களும் உங்க வங்கிலேந்தும் விளையாட்டுப் பணய நிறுவனங்களிலிருந்தும் இந்த விவரத்தைச் சேகரிச்சு உங்க பதிலைப் பதம் பார்ப்பாங்க. அதுக்குத் தயாரிச்சுக்குங்க!" என்று கூறியவர் மேரியிடம் "சரி அடுத்த மேலாளரைச் சந்திக்கலாம் வாங்க என்று கூறி அறையை விட்டு வெளியேறினார்.
லூயிஸ் அடக்க முடியாத சினத்துடன், ஆனால் ஒன்றும் செய்ய இயலாத வெறியுடன் மேஜைமேல் படாலெனக் கையால் குத்திவிட்டு வலித்த கையை மற்ற கையால் பிடித்துக்கொண்டு தொப்பென நாற்காலியில் விழுந்தார்.
சூர்யா குவான்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேற்கொண்டு துப்பறிகிறார் என்பதையும் இனி வரும் பகுதிகளில் காண்போம்.
(தொடரும்) |
|
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|