|  | 
											
											
												| 
                                                        
	                                                        | நூலக இயக்கத்தின் முன்னோடி டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் |    |  
	                                                        | - மதுசூதனன் தெ. ![]() | ![]() ஜூன் 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நூலகவியலில் பட்டக் கல்வி தரும் நூலகவியல் பயிற்சிப் பள்ளிகளுக்கு வித்திட்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன் (1892-1972). இவர் இந்தியாவில் நூலக இயக்கம் எழுச்சிபெறக் காரணமாக இருந்தவர். அதற்கான உறுதியான அடித்தளம் அமைத்தவர். கீழைத்தேச சிந்தனை மரபுகளையும் கலாசாரங்களையும் உள்வாங்கி நூலகவியல் சிந்தனைக்கான ஆய்வு, அறிவு மூலங்கள் மற்றும் கோட்பாடுகள் உருவாக்கியவர். 
 இவர் சீர்காழியில் 12.8.1892 இல் பிறந்தவர். பெற்றோர்கள் இவருக்கு 15-வது வயதிலேயே திருமணம் நடத்திவைத்தனர். தமது 17-வது வயதில் உயர்நிலைப் படிப்பை முடித்து 24-வது வயதில் எம்.ஏ.பட்டமும், 25-வது வயதில் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி பட்டமும் பெற்றார். தொடர்ந்து அரசினர் கலைக்கல்லூரியில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1924-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் நூலகராகப் பணி துவக்கினார்.
 
 ரங்கநாதன் நூலகராகப் பொறுப்பேற்ற பின் இரண்டு ஆண்டுகள் லண்டனிலுள்ள பல்கலைக்கழகக் கல்லூரியில் நூலகவியல் பயிற்சியும், பட்டமும் பெற்றார். நூலகவியலில் பொதிந்துள்ள அறிவு, திறன், ஆய்வு யாவற்றையும் முறைப்படி கற்று தன்னளவில் சுயாதீனமான சிந்தனையாளராகவும் வளர்வதற்கான முழுத் தகுதியை வளர்த்து கொண்டார். 'கோலன் பகுப்பு முறையை' உருவாக்கத் தொடங்கினார்.
 
 தமிழ் நாட்டில் நூலக இயக்கம் வளர வேண்டுமென்றால் பயிற்சி பெற்ற நூலகர்களை உருவாக்கத் தகுந்த பள்ளிகள், பாடத்திட்டம் அதற்கான பயிற்சி நூல்கள் ஆகியவை தேவை என்பதை உணர்ந்து அவற்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நூலகவியல் எனும் கற்கை நெறிக்கான அடிப்படை மூலகங்கள், தத்துவங்கள் பற்றிய திட்டப் பாங்கான சிந்தனையிலும் நடைமுறையிலும் ஈடுபட்டார்.
 
 இதைவிட தமிழ் நாட்டில் நூலக உணர்வு வளர செல்வாக்குப் பெற்றவர்களின் ஆதரவும் அரவணைப்பும் தேவை என்பதை உணர்ந்து அதற்காகத் திட்டமிட்டு உழைத்தார். காங்கிரஸ் மாநாட்டையொட்டி நடந்த அனைந்திந்திய பொதுநூலக மாநாட்டுக்குச் சென்னையின் அமைப்புச் செயலாளர் பொறுப்பேற்றுச் சிறப்புறச் செயற்பட்டார். பின்னர் சென்னையிலுள்ள கல்வியாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் துணையோடு ஜனவரி 03, 1928-இல் சென்னை நூலகச் சங்கத்தைத் தொடங்கினார். அதன் முதல் செயலாளராகப் பொறுப்பேற்றுத் தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
 
 சென்னை பல்கலைக்கழக நூலகக் கட்டடப் பணியைத் தொடங்கி உலக நாடுகளிலுள்ள சிறந்த நூலகக் கட்டங்களுக்கு இணையாக அதைக் கட்டிமுடிக்க அயராது பாடுபட்டார். நூலகம் அமைந்துள்ள கட்டடம் அதற்கேயுரிய வளங்களை, அமைவிடத்தை, பொறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும். அவை தொடர்பான வரன்முறையான சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இருக்கும். இதனை உணர்ந்து தனது நேரடி மேற்பார்வையில் கட்டடத்தை முடித்தார். பன்னாட்டு நூலகக் கட்டடங்களின் அழகியலையும் உள்வாங்கிக் கொண்டு அமைவுபெறும் நோக்கிலேயே செயற்பட்டார். அங்குள்ள கதவுகளும் ஜன்னல்களும் மேசை நாற்காலிகளும் வண்ணக் கண்ணாடிகளும் அவரது உழைப்பின் மேன்மையை உணர்த்தும்.
 
 நூலகப் பயன்பாடு நகர்ப்புறம் சார்ந்த கல்வி கற்ற மக்களுக்கு மட்டும் உரித்துடையதல்ல. மாறாக கிராமப்புற சாதாரண எழுத வாசிக்கத் தெரிந்த மக்களுக்கும் நூலகப் பயன்பாடு வேண்டும் என்ற கருத்துடையவராகவும் இருந்து செயற்பட்டார்.  தானே மாட்டுவண்டியில் நூல்களை அடுக்கி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாகச் சென்றார். நூல்கள் படிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி கருத்துரைகள் வழங்கினார். பல்கலைக்கழகம் தொடங்கி கிராமப் புறங்கள் வரை நூலகப் பயன்பாடு ஓர் இயக்கமாக மலர்ச்சிபெறக் காரணமாக இருந்தார். ஒரு நாட்டில் பிரஜைகள் தமது நாட்டில் தமக்கு இருக்கும் உரிமைகளை அனுபவிப்பதுடன் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளையும் சுமப்பவர்களாக இருக்கவேண்டும், உண்மையான பிரஜைகளாக இருக்க வேண்டுமானால்.
 
 மக்களைப் பாதிக்கும் விடயங்களை பற்றிய சரியான தகவல்களை தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்; அந்தத் தகவல்களைக் கொண்டு பொதுவாக நன்மை கொடுக்கக்கூடிய கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைகளையும் கலந்துரையாடித் தெளிபவர்களாக இருக்க வேண்டும்; பொதுவில் கலந்துரையாடித் தெளிந்த கொள்கைத் திட்டங்களையும் நடைமுறைகளையும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.
 
 மேற்கூறிய தகுதிகளையும் திறன்களையும் கொண்ட உண்மையான பிரஜைகளை உருவாக்குவதற்கென்றே 'நூலக இயக்கம்' மானுட வளர்ச்சியில் கண்டடைந்த நடைமுறையாகும். இன்று சமூக அபிவிருத்தி, மானிட அபிவிருத்தி பற்றிய சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நூலக இயக்கம், வாசகர் வட்டங்கள் முதன்மையாக இருப்பதை நமது இதுகாறுமான பன்னாட்டு அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. இன்றைக்கு 60 வருடங்களுக்க முன்னரே நூலக இயக்கம், வாசிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்ந்து செயற்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக ரங்கநாதன் விளங்கினார் என்பது வரலாறு காட்டும் பாடம்.
 | 
											
												|  | 
											
											
												| ரங்கநாதனின் பணிகளும் சிந்தனைகளும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்திந்திய அளவில் பரவத் தொடங்கிற்று. நூலக இயக்கம் வேகம் கொள்ளத் தொடங்கியது. இதன் விளைவாக 1930-இல் வாரணாசியில் நடந்த ஆசியக் கல்வி மாநாட்டில் மாதிரி நூல்கள் எழுதி வெளியிட்டார். அந்த வகையில் 'ஐந்து நூலக விதிகள்' எனும் நூல் வெளிவந்தது. 
 1942-இல் இந்திய நூலகச் சங்கத்திற்கான இரண்டாவது நூலகச் சட்டத்தின் வரைவை அமைத்துக் கொடுத்தார். 1944-இல் இந்திய நூலகச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 9 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். சென்னைப் பல்கலைக் கழக நூலகராகப் பணியாற்றிக்கொண்டு அதை ஒரு பயிலரங்கமாகவும் பட்டறையாகவும் பயன்படுத்தி பல நூல்களையும் வெளியிட்டார். மேலும் நூலக மேம்பாட்டுக்குப் பல சிறப்பான திட்டங்களையும் தீட்டிச் செயற்பட்டார். பல்கலைக் கழக செனட் மண்டபத்தில் பல கூட்டங்களை நடத்தி நூலக மேம்பாட்டுக்கான திட்டங்களை முன்வைத்தார். நூலகமேம்பாடு குறித்த சிந்தனையின் முக்கியத்துவம் படிப்படியாக முனைப்படைவதற்கு உரிய தளத்தை உருவாக்கினார்.
 
 1948-இல் இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நூலகத்துறையில் அன்று அகில இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு இருந்தது. இந்தப் பெருமை ரங்கநாதனுக்கே உரித்தானது.
 
 சென்னைப் பல்கலைக்கழக நூலகர் பதவியிலிருந்து தானே விருப்பு ஓய்வு பெற்ற பின், 1945-இல் காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும் நூலகவியல் பேராசிரியராகவும் பொறுப்பேற்றார். அதன் பின்னர் ரங்கநாதனின் பணியும் புகழும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் பரவத் தொடங்கின. நூலக இயக்கம் சமூக, மானிட அபிவிருத்தியில் முதன்மையான பங்கு வகிக்கக் கூடியது என்பதை எல்லோரும் உணர்வதற்குரிய பின்புலத்தை வலுவாக வழங்கும் ஆளுமை, அறிவு ரங்கநாதனுக்கு இருந்தது. இதனை இந்தியா கண்டுகொண்டது. உலக அளவிலும் இவரது சேவையைப் பெற்றுக்கொள்ள அவாவும் போக்கு அதிகரித்தது. பல வெளிநாட்டு நூலக மேம்பாட்டுக் குழுக்களில் பங்குகொண்டார்.
 
 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 1956-இல் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து 'சாரதா ரங்கநாதன் அறக்கட்டளை'யை நிறுவி அதன் மூலம் நூலகவியல் துறையை முழு வீச்சில் செயற்பட அடித்தளம் அமைத்தார். இந்தச் செயல் அன்று உலகம் முழுவதும் பாராட்டப் பெற்றது. நூலகவியல் துறை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சிந்தனையால் மட்டுமல்லாது செயலாலும் நிரூபித்து வந்தார்.
 
 1957-ல் இந்திய அரசு இவருக்கு 'பத்மஸ்ரீ' பட்டம் அளித்துச் சிறப்புச்செய்தது. பல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கின. 1962-இல் பெங்களூரில் 'டாக்குமென்டேசன் ரிசர்ச் டிரெயினிங் சென்டர்' எனும் அமைப்பைத்  தொடங்கி அதன் கெளரவப் போராசிரியர் பொறுப்பை ஏற்று, தரமான நூலகர்கள் உருவாக வழிவகுத்தார். 1965-இல் இந்திய அரசு இவருக்கு 'தேசிய நூலகவியல் ஆய்வுப் பேராசிரியர்' பதவியை அளித்துப் பெருமைப்படுத்தியது. தொடர்ந்து 'நூலகவியல்' பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். அவர் பெங்களூரில் செப்டம்பர் 27, 1972 அன்று நிரந்தரமாகவே ஓய்வு கொண்டார். 80 ஆண்டுகால உலக வாழ்க்கையில் 50 ஆண்டுகள் நூலக மேம்பாட்டுக்காகவே உழைத்து வந்த டாக்டர் என்.ஆர். ரங்கநாதன் 'நூலகத் தந்தை' என்று அழைக்கப் பெறுகிறார்.
 
 நூலக அறிவியல் துறையின் நூலகப் பகுப்பாக்கம் என்பது நூலகத்தில் உள்ள ஆவணங்களுக்குப் பொருத்தமான அமைவிடத்தைக் கண்டுபிடித்தல் என்ற செயற்பாட்டுடன் தொடர்புறும் ஒன்றாகும். இதை மேற்கொள்ள அறிவுப் பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கும் பொருட்துறைகள் பற்றிய அறிவு முக்கியமானது. இவற்றை மிக விரிவாகச் சிந்தித்த டாக்டர் ரங்கநாதன் அறிவியில் அணுகுமுறை கொண்டு நூலகர் செயல்படுவதற்கான அடித்தளத்தை வழங்கிச் சென்றுள்ளார்.
 
 'ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பாக ஒரு தனிமனிதன் மேற்கொள்ளும் சிறப்பு ஆய்விற்கும் அவனது அறிவுத்திறம் வாய்ந்த ஆற்றலுக்குமிடையே பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றுபட்டு வந்து விழுகின்ற, செறிவானதும் விரிவுள்ளதுமான கருத்துக்கள் அல்லது கருத்துருவங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட உருவமைப்பு பொருட்துறையாகும்' என்பார் ரங்கநாதன். மேலும் அவர் பொருட்துறையை சாதாரண பொருட்துறை, கூட்டுப் பொருட்துறை, கலப்புப்பொருட்துறை என்று மூன்றாக வகைப்படுத்துவார்.
 
 இன்று விரிவு பெற்றுவரும் அறிவுப் பிரபஞ்சத்தில் நூலகப் பயன்பாட்டின் ஆரோக்கியமான திசைப்படுத்தலுக்கான தெளிவான பார்வையையும் கருத்து நிலையையும் முன் வைத்தவர் ரங்கநாதன். நூலகவியல் ஒரு அறிவுத் துறையாக மேலும் வளர்த்தெடுக்கப்படுவதற்கான சிந்தனை மற்றும் ஆய்வுக் கருவிகளை ரங்கநாதன் தந்து சென்றுள்ளது நூலகத்துறைக்கு மட்டுமல்ல, அறிவுலகுக்கும் அவர் தந்த மிகப்பெரும் கொடையாகும்.
 
 தெ.மதுசூதனன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |