|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  இன்று தமிழர்களிடையே "வரலாறு" பற்றிய பிரக்ஞை, ஆர்வம் குறைந்து வருகிறது. ஏன்! வரலாறு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது இந்நிலையில் தமிழக வரலாற்று ஆசிரியர்கள் பலரை நினைவுபடுத்த வேண்டிய காலத்தேவை உண்டு. இத்தகைய ஆசிரியர்களில் ஒருவரே எஸ். கிருட்டிணசாமி அய்யங்கார் (1871-1947). 
 தென்னிந்திய வரலாற்றை உலகறியச் செய்தவர்களுள் இவருக்கு தனியிடம் உண்டு. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் சாக்கோட்டை (சகசிக்கோட்டை) என்னும் ஊரில் 1871.04.15 இல் பிறந்தார். இவரது சிறுவயதிலேயே இவரது தந்தை காலமானதால் சகோதரரின் உதவி பெற்று பெங்களுரில் கல்வியைத் தொடர்ந்தார். கணிதம், இயற்பியல் பாடங்களை விரும்பி கற்றார். இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பெங்களுரில் ஒரு பள்ளியில் பணியாற்றிக் கொண்டே முதுகலைப் பட்டத்தை கணிதப் பாடத்தில் தொடர்ந்தார். இதில் சிறப்பு நிலை அடையமுடியவில்லை. தொழில் நிமித்தம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் பெற்றுச் சென்றார். இதனால் இவர் கணிதப்பாடத்தை விட்டுவிட்டு வரலாற்றில் முதுகலைப்பட்டத்தை 1899ல் பெற்றுக் கொண்டார். இவர் பெற்ற கணித, விஞ்ஞான அறிவு வரலாற்றுத்துறையில் இவர் பெறப்போகும் சாதனைகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்தது.
 
 ஆரம்பத்தில் ஆசிரியர் பணியை ஏற்றுச் செயல்பட்டாலும், தனது அயராத உழைப்பால் பல்வேறு உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டார். இவர் தம் முதுகலை ஆய்வேடான "உடையார்களின் கீழ் மைசூர் வரலாறு" 1900 மே மாதத்தில் 'மெட்ராஸ் ரிவியூவில்' வெளியிடப்பட்டது. இதனால் இவர் கவனிப்பு பெறக்கூடிய ஆய்வாளராக உயர்ந்தார். மேலும் மையக் கல்லூரியில் வரலாற்று விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இவரது புலமைத்தாகமும் முயற்சியும் அதே கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் ஆக உயர்வு பெறும் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.
 
 1914ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் 'இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை' யைத் தொடங்கி எஸ். கிருட்டிணசாமி அய்யங்காரை அதன் முதல் பேராசிரியப் பணியில் அமர்த்தியது. அன்று முதல் பேராசிரியர் வரலாற்றுத் துறையில் புதிய அறுவடைகள், ஆய்வுக் களங்கள் தோன்றக் காரணமாக இருந்தார். அத்துடன் இந்திய வரலாற்று ஆணைக் குழுவின் பணிகளிலும், இந்திய தொல்பொருள் ஆய்வு நிகழ்ச்சிகளிலும் உற்சாகத்துடன் கலந்து சிறப்பித்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி மாநாடுகளிலும் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசித்துள்ளார். இதைவிட இந்திய வரலாற்று இதழின் (Journal of lndian History) பதிப்பாசிரியராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
 
 வரலாற்றில் தனக்கிருந்த ஆர்வத்தை நன்கு வளர்த்து வரலாற்றுத்துறை ஓர் கற்கை நெறிப் பாடமாகவும், ஆராய்ச்சித்துறையாகவும் அதற்கே உரிய முறைமைகளுடன் வெளிப்பட இவர் காரணமாக இருந்துள்ளார். ஆராய்ச்சி நெறிமுறைகள் தமிழ் வரலாற்று உணர்வுடனும், தென்னிந்திய ஆராய்ச்சி முறைகளுடனும் ஊடாட்டம் கொண்டு, புதிய ஆராய்ச்சி முடிவுகள், ஆராய்ச்சிக் களங்கள் பெருகி வளர்ந்து வரவும் அய்யங்கார் காரணமாக இருந்துள்ளார். இவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் யாவும் வரலாற்றாளர்களுடன் இவருக்கு இருந்த தொடர்பு, வரலாறு மீதிருந்த நாட்டம் யாவற்றையும் மெய்ப்பிக்கின்றது.
 
 இங்கே நாம் இன்னொரு செய்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அய்யங்காரின் சிறப்பாளுமை எத்தகையது என்பதும், வரலாற்றில் அவருக்கு உள்ள இடம் என்ன என்பதும் தெளிவாகும். அய்யங்கார் வாழ்ந்த காலம் "இந்திய வரலாறு தோற்றம் பெறாத காலமாகும். பிரிட்டிஷ் வரலாற்றாளர்களின் வரலாறுதான் இந்தியர்களின் வரலாறு என்று நம்பி இருந்த காலம். இத்தருணத்தில் காலனித்துவ ஆதிக்க வரலாற்றில் இருந்து விடுபட்டு, சுதேசிய மக்களின் நாட்டின் வரலாற்றை தேடத்தொடங்க எத்தனிக்கும் வரலாற்றுக்கு அவர் ஆற்றிய பணிகளும் சிறப்பிடம் பெறுகின்றன. அதுமாத்திரம் அல்ல இந்திய வரலாற்று எழுதியல் முறைமைக்கு எடுத்துக்காட்டப்படுவதற்கும் அய்யங்கார் முக்கியமாக இருந்துள்ளார். தங்களுடைய சொந்த நாட்டின் வரலாற்றை ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஒருசில ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். மேலும் இத்துறைசார் ஆய்வுத் துறையில் ஒரு முன்னோடியாகவும் இருந்துள்ளார்.
 
 இவரது சில ஆய்வு முடிவுகள் பின்னைய ஆய்வாளர்களால் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. குறிப்பாக தென்னிந்திய வரலாற்றில் இருண்டகாலம் என்று கருதப்படும் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று தான் இவரும் கணித்திருந்தார். ஆனால் அக்காலம் அப்படி அல்ல என்பதை பின்னைய ஆய்வுகள் தெட்டத் தெளிவாக நீருபித்துள்ளன. மேலும் இவரது சோழர் ஆட்சிமுறை, பல்லவர் வரலாறு, வாகடகர் வரலாறு, விசயநகர வரலாறு போன்ற தென்னிந்திய ஆட்சியாளர்களைப் பற்றிய வரலாறுகளை பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகள் மூலமாகவும் பல்வேறு இதழ்களுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் மூலமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
 
 தென்னிந்திய வரலாறு எழுதும் பணி எஸ். கிருட்டிணசாமி அய்யங்காரால் தொடங்கப்பட்டது. இது பின்னர் பல்வேறு ஆய்வாளர்களால் முழுமைபெற்றது. அதற்கு தடம் அமைத்து கொடுத்த பெருமை இவரையே சாரும். தென்னிந்திய வரலாறு மட்டுமன்றி தென்னிந்தியப் பண்பாடும் இவர்தம் ஆராய்ச்சி மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டது. இந்தியப் பண்பாட்டில் தென்னிந்தியப் பண்பாட்டின் தனித்துவம், சிறப்புத் தன்மைகள் எத்தகையது என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு ஆராய்ச்சி செய்வதற்கு அய்யங்காரின், சிந்தனை ஆய்வு முக்கியமாக மாறியது. இந்துசமயத்திற்கும் இந்துக் கல்வி முறைகளுக்கும் முகமதியர்களால் வடஇந்தியாவில் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் தென்னிந்தியப் பேரரசான விசய நகரப் பேரரசு இந்தியப் பண்பாட்டை கட்டிக்காத்தது. என்று கூறி இந்தியப் பண்பாட்டிற்கு தென்னிந்தியா ஆற்றியுள்ள பெரும் பங்கினை சுட்டிக்காட்டுகிறார்.
 
 மேலும் வரலாறு எழுதியலுக்கு இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு வரலாறு எழுதும் பணியிலும் அக்கறை கொண்டார். இவ்வாறான ஆய்வு நெறிமுறைகள் வளர்வதற்கும் காரணமாக இருந்துள்ளார். "கல்வெட்டுக்களும் தொல்பொருள்களும் எலும்பை மட்டுமே தருகின்றன. எஞ்சியவற்றை இலக்கியங்கள் மூலமாகவே பெற முடியும்" என்பது இவர் தம் கருத்தாகும்.
 
 வரலாறு என்பதை வெறும் புராண மரபுக் கதையாக எடுத்துக் கூறாமல் அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் தர்க்க நோக்கில் எதையும் ஆராய்ந்து பார்த்துக் கூறினார். வரலாறு எழுதுவதற்காக இலக்கியம், கல்வெட்டு, தொல்பொருள் போன்றவற்றை திறம்பட ஆராய்ந்தார். ஒரு செய்திக்கு எந்தெந்த விதங்களில் ஆதாரங்கள் கிடைக்கின்றன என்று தேடிக்கண்டு பிடித்து அதன் நம்பகத் தன்மையை அறிந்த பிறகே அச்செய்தியைத் தம் ஆய்வில் இடம் பெறச் செய்துள்ளார்.
 | 
											
												|  | 
											
											
												| இவர் எழுதிய முக்கிய நூல்கள் என சிலவற்றை கூறலாம். அவற்றுள்: 
 பண்டைய இந்தியாவும் தென்னிந்திய வரலாறும் பண்பாடும்.
 
 இந்நூல் இரு தொகுதிகளில் அமைந்துள்ளது. 1300 ஆம் ஆண்டு வரையிலான இந்திய வரலாறு பற்றியும், இந்தியப் பண்பாடு பற்றியும் கூறுகின்றது. இரண்டாம் தொகுதி முழுவதிலும் தென்னிந்திய வரலாறு பற்றியே கூறப்பட்டுள்ளது.
 
 இந்திய பண்பாட்டில் தென்னிந்தியாவின் பங்கு.
 
 இந்நூல் எஸ். கிருட்டிணசாமி அய்யங்காருக்கு மதிப்புறு முனைவர் பட்டதைப் பெற்றுக் கொடுத்தது. இந்நூலில் இவர் தெரிவித்திருக்கும் செய்திகள் முக்கியத்துவமிக்கவை. அய்யங்காரின் ஆய்வுத் தாடனத்துக்கு இந்நூல் நல்ல எடுத்துக்காட்டு.
 
 எவ்வாறாயிலும் தென்னிந்திய வரலாற்றை உலகறியச் செய்த பெருமை அய்யங்காருக்கு உண்டு. இவர் தம் வரலாற்றுப் புலமை, வரலாற்றில் கொண்டிருந்த ஆர்வம் யாவும் வரலாற்றுத்துறையில் இவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இன்று புதிய ஆய்வுகள் மூலம் இவரது ஆய்வு முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் "தென்னிந்தியா வரலாறு" "தென்னிந்தியப் பண்பாடு" பற்றிய தனித்தன்மை வாய்ந்த ஆராய்ச்சி நெறிமுறைகள் தவிர்க்க முடியாது என்பதை ஆராய்ச்சி உலகம் ஏற்றுக் கொண்டமைக்கு எஸ். கிருட்டிணசாமி அய்யங்காரின் "புலமை" "ஆய்வு" நெறி முறைகள் காரணம் என்றால் மிகையாகாது.
 
 மேலும் வரலாற்று வரைவியலாளர்கள் பின்னர் தோன்றி வளர்வதற்கும் உரிய வழிகாட்டியாகவும இவர் இருந்துள்ளார்.
 
 இவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் வரலாற்று வரைவியலாளர்களுக்குச் சிறந்த கருவூலங்களாகவே இன்றும் உள்ளன.
 
 தெ. மதுசூதனன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |