|  | 
											
											
												| 
                                                        
	                                                        | பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (1891 - 1956) |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2002 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. அவர் 65 ஆண்டுகள் வாழ்ந்தார். அவற்றில் 45 ஆண்டுகள் தமிழியல் ஆய்வில் கலந்தன. இந்த ஆண்டுகளில் தமிழியல் ஆய்வுப் புலம் இவரால் ஆழ அகலித்துச் செல்லும் பண்பு கொண்டதாக இருந்தது. 
 பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (1891-1956) இலக்கிய ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, நூற்பதிப்பு அகராதித் தொகுப்பு (இலக்கிய இயல், மொழியியல், சுவடியியல், அகராதியியல்) என்ற நான்கு துறைகளிலும் உழைத்தவர். இவ் உழைப்பு தமிழியல் ஆய்வுக்குப் புதிய திசைவழிகளையும் புதிய பரிமாணங்களையும் புது வளங்களையும் கொண்டு சேர்த்தது. அத்துடன் உலகு தழுவிய தமிழியல் ஆய்வாளர் களுக்கு ஆதர்சமான வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.
 
 பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலுத்திலுமாக எழுதிய கட்டுரைகள் சுமார் 250. பதிப்பித்த நூல்கள் 40, தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) 7 தொகுதிகள் (இணைப்புத் தொகுதி உட்பட), ஆங்கிலத்தில் ஒரு இலக்கிய வரலாற்று நூல் History of Tamil Language and Literature சிறுகதைத் தொகுப்பு ஒன்று, அவரது தமிழ்க் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட பின்னர் பல நூற் தொகுதிகளாக (ஏழு) வெளிவந்துள்ளன.
 
 இன்று இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டில் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு வரலாற்றை வளர்ச்சியை மீள்நோக்கில் பார்த்து மதிப்பிட உள்ளது.
 
 தமிழியல் ஆராய்ச்சியில் அறிவியல் நிலை நின்ற ஆராய்ச்சி அணுகுமுறையைத் கையாண்டு அறிவியல் அணுகுமுறைக்கு அடித்தளம் அமைத்துச் சென்றவர் பேராசிரியர் வையாபுரி பிள்ளை. இவரது பன்முக அருமைத் திறன்கள் தமிழியலில் புதுப்பரிமாணங்களை வழங்கிச் சென்றுள்ளன.
 
 ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இவர் தமிழ்த் துரோகியாகவே நோக்கப்பட்டார். இதற்கு அக்காலகட்ட சமூக அரசியற் கருத்தியல் பின்புலம் காரணமாக இருந்தது. அக்கால கட்ட அரசியல் கருத்தியல் போக்குகளுக்கு மாறான கருத்துநிலைப் பாடுகளை வையாபுரிப்பிள்ளை கொண்டிருந் தார்.
 
 இவரது காலத்தில் தமிழினம் பற்றிய பிரக்ஞையில் அதன் தனித்துவத்திலும் இந்தியப் பாரம்பரியத்தில் தமிழ்க் குழுமத்தின் ஆக்கத் துவம் பற்றிய பிரக்ஞையிலும் தனி முக்கியத் துவமுடைய அபிவிருத்திகள் ஏற்பட்டன. முப்பதுகளின் பின்னர் ஜஸ்டிஸ் கட்சி கவிழுகின்றது, சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவு இயக்கம் பலத்துடன் வளர்கிறது. பின்னர் 1949 ல் தி.மு.க. தோற்றம். இது தமிழ் மக்களது சமூக அரசியல் பிரக்ஞையில் சிறப்பாகப் பண்பாட்டு மரபு நிதியம் பற்றிய விஷயங்களில் ஒரு முக்கிய திருப்புமுனையாக முந்திய காலகட்டத்திலிருந்து விடுபட்டு பிறவழிப்படுவதாக அமைவதைக் காணலாம்.
 
 இன்னொருபுறம் வரலாற்று ஆய்வுகளில் குவிமுனைப்புடன் ஈடுபடுவதற்கு நிறுவன நிலைப்பட்ட தொழிற்பாடுகள் முனைப்புறத் தொடங்கின. தமிழர் வரலாறு பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்த ஆய்வுகளை அடுத்து தமிழிலும் நியமமான வரலாற்று ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. தி.வை. சதாசிவ பண்டாரத்தார் இச் செல் நெறியினை தொடங்கி வைத்தவர்.
 
 இப் பின்னணியில் நிறுவன நிலைப்பட்ட ஆராய்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் முப்பதுகளில் ஆற்றிய பணி முக்கியமானதாகும். இக்காலகட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இருவர் முக்கியமானவர்கள். வரலாற்றுத் துறையில் நீலகண்ட சாஸ்திரி. இலக்கியத் துறையில் வையாபுரிப்பிள்ளை.
 
 இந்தப் பின்புலத்தில் இலக்கிய ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் செழுமையுடன் வளர்ச்சி யுறுவதற்கு வையாபுரிப்பிள்ளையின் பணி அவரது ஆய்வு முறைமை யாவற்றையும் விரிவாக நோக்க வேண்டியுள்ளது.
 
 வையாபுரிப்பிள்ளை பல்வேறு அவதூறுகளுக்கு உட்படுத்தப்பட்டவர். குறிப்பாக அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் தமிழின் நன்மை கருதாத துரோகி என்று பட்டவர்த்தனமாகத் தாக்கப் பட்டவர். தமிழ் நூல்கள் பல சமஸ்கிருதச் செல்வாக்குக்கு உட்பட்டவையெனக் கூறியதும், தமிழ்நூல்களின் காலங்களைப் பின் தள்ளி யதுமே அவர் இழைத்த குற்றங்களாகும்.
 
 ஆனால் இன்று வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு, உலகு தழுவியதாக உள்ளது. அவரது பங்களிப்பு அதற்குரிய தகுதிப்பாட்டுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவரது ஆய்வு அணுகுமுறை இன்னும் பல்கிப் பெருகி வளர்ந்து புதிய ஆய்வியல் அணுகுமுறைகள் வழி தமிழியல் ஆய்வு அகலிக்கப்பட்டுள்ளது.
 | 
											
												|  | 
											
											
												| தமிழ் இலக்கியத்தையும் அதன் நூல்களையும் ஆராய்வதற்கான இறுக்கமுள்ள கட்டுத்தளர்வற்ற ஓர் ஆய்வு முறையை வளர்த்தெடுத்தவராவார். ஐயந்திரிபற ஒரு கூற்றைக் கூறுவதற்கு உதவும் சான்றையே ஆதாரமாகக் கொள்ளும், பட்டறிவு அளவைக் கொண்ட ஆராய்ச்சி முறைமை வழி நின்று அவரால் கூறப்பட்டவை. இன உணர்வு டன் தொழிற்பட்ட புலமையாளரின் மனங்களைப் புண்படுத்துபனவாக, அதிருப்தியளிப்பனவாக அமைந்தன. ஆனால் அவர் கையாண்ட ஆய்வு முறைமைக்குத் தக்க பதில் இவர்களிடத்தில் இருக்கவில்¨லை. அத்தகைய உண்மைகளை அவர் கூறியதனால் தமிழ்த்துரோகி எனத் தாக்கப்பட்டார். 
 ஆரிய-திராவிட வாதம், வடமொழி -இந்தி எதிர்ப்பு, சாதி சமயப் பிணக்குகள் நிலவிய சூழலில் வாழ்ந்தார். இதன் தாக்கம் இவரது எழுத்துகளில் நிழலிட்டது. இவர் மறைமலை அடிகளின் மாணவர். எனினும் பிற்காலத்தில் தொடங்கிய 'தனித் தமிழ் இயக்கம்' தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததன்று எனத் துணிந்து கூறினார்.
 
 பேரா. சுந்தரம்பிள்ளையின் புலமையைப் பாராட்டியவர். அதே நேரம் அவரது திராவிட வாதம் அறிவியல் வழியிலான மொழிநூல் உணர்ச்சிக்குப் புறம்பானது எனக் கூறினார். அத்துடன் இந்தியாவின் பொதுமொழியாக இந்தி வருவது தமிழ் வளர்ச்சிக்குத் தீமை பயக்குமெனில் அதை எதிர்ப்பதில் தவறில்லை என்றும், இது விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டுமெனவும் எழுதியுள்ளார். வடமொழியின் புலமையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அதே நேரம் வடமொழிக்கும் -தமிழுக்கும் உள்ள உறவையும் ஆராய்ந்தார்.
 
 தமிழின் இந்தியத்துவத்தை அறிய முனைந்தார். திராவிட தேசியத்துக்கு எதிராக இந்தியத் தேசியத்தையும், தமிழ்வாதத்துக்கு எதிராக வடமொழிவாதத்தையும் இவர் சார்ந்திருந்தார்.
 
 இந்திய சமுதாய வரலாற்றில் வடமொழி முதன்மையிடம் பெற்றிருந்தது என்பது வரலாற்றுண்மை. ஆனால் இதை இவர் சற்று அளவுக்கு மீறி அழுத்தம் கொடுத்துப் பார்த்துள்ளார். அதே நேரம் இந்திய அரங்கில் தாய்மொழிகளே கோலோச்ச வேண்டும் என்பதில் உறுதியாகவும் இருந்தார். ஆங்கிலம் துணைமொழியாகத் தான் இருக்க வேண்டும் என்றார்.
 
 ஆக இவரது தமிழுணர்வு அறிவுபூர்வமானது. இதில் குறை காண்பது நியாயமன்று. எவ்வாறா யினும் தமிழியல் ஆய்வுக்கு வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு என்ன என்பதை அவர் காலத்து சமூக அரசியல் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்தே பார்க்கப்பட வேண்டும். இவரது எழுத்துகளை ஒட்டுமொத்தமாகப் படித்தே மதிப்பிட வேண்டும்.
 
 தமிழில் இதுவரையில்லாத ஆய்வியல் அணுகுமுறையைத் தமிழியல் ஆய்வுக்கு வழங்கியுள்ளார். அறிவியல் அணுகுமுறையைத் தமிழியல் ஆய்வுக்கு அளித்த பெருமையும் இவரையே சாரும். இவரது ஆய்வு முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஆய்வுமுறையில் குறை காண முடியாது.இவரது கருத்துகளை மறுத்தவர்கள் இவ்வகையான அணுகுமுறையைப் பின்பற்றாமல் உணர்ச்சி பூர்வமாக அறியப்பட்டு பிரச்சினையை அணுகித் தூற்றி வந்தனர். இப் போக்கு 50-60 கள் வரை தொடர்ந்தது. 1970 தொடக்கம் இவரது ஆய்வு நெறியில் கவனம் ஏற்படத் தொடங்கின.
 
 தமிழ் இலக்கிய ஆய்வில் வரலாற்று அணுகு முறையையும் ஒப்பியல் அணுகுமுறையை யும் வலியுறுத்தி, அதற்கமைய தனது ஆய்வை நிகழ்த்தியவர். அத்துடன் இலக்கியம்-மொழி-சமுதாயம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று உறவு டையன என்ற முற்போக்கு சிந்தனையுடன் ஆய்வு நிகழ்த்தியவர்.
 
 இத்தகைய முற்போக்குச் சிந்தனையே பின்னர் மார்க்சிய அணுகுமுறை இலக்கிய ஆய்வில்-தமிழியலில் வரைமுறையாக மேற்கிளம்பு வதற்குத் தக்க தளத்தைக் காரணமாக அமைத்துக் கொடுத்தது எனலாம்.
 
 எவ்வாறாயினும் வையாபுரிப்பிள்ளை குறித்து மீள்நோக்கு ரீதியில் மறு வாசிப்புச் செய்ய வேண்டிய காலத்தில் உள்ளோம். வெறுமனே குறை சொல்லித் தீர்ப்பதோ அல்லது வெறுமனே துதிபாடுவதோ புலமைச் செயல்பாடாகாது. எம்மிடையே உள்ள தமிழியல் ஆர்வம் காரணமாக வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு முறைமையினை இன்று விளக்கிக் கொள்வது ஒரு புலமைத் தேவையாகின்றது.
 
 மேலும் வையாபுரியைப் புரிந்து கொள்வதற்கும் அவரது ஆராய்ச்சிப் போக்கை உய்த்துணர் வதற்கும் கீழ்வரும் அவரது சொற்றொடர் சாத்தியமான சில வாயில்களைத் திறந்து விடும்.
 
 ''எனது நட்பு பிராமணர், அல்லாதார் என்ற சாதி வேறுபாடுகளைக் கடந்தது. வடமொழி தமிழ் என்ற மொழி வேறுபாடுகளைக் கருதாது. பண்டிதர்கள், ஆங்கிலம் கற்ற தமிழர்கள் என்ற வரம்புகளை மதியாதது. சைவம், வைணவம் முதலிய மத வேறுபாடுகளைக் கனவிலும் நினையாதது. சங்ககாலத் தமிழ், இடைக்காலத் தமிழ், தற்காலத் தமிழ் என்பவற்றில் ஏதேனும் ஒன்றில் அபிமானம் வைத்து அதனையே கற்பது என்ற நியதியைக் கொள்ளாதது. அறிவு வளர்ச்சியும் தமிழணர்வுப் பெருக்கமும் உண்மை நாட்டமும் நடுநிலையுமே என்னை ஊக்கி வந்தன'' . (தமிழின மறுமலர்ச்சி பக் 429)
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |