Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
எல்லே முனி!
- ஸ்ரீனி வெங்கட்|செப்டம்பர் 2026|
Share:
"சிவகாமி, உன் சாப்பாட்டு டப்பாவை எங்கம்மா வெச்ச?" அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது.

"டிஷ்வாஷர்ல பாரும்மா", என்று நெற்றிக்கு சிறிய ஸ்டிக்கர் பொட்டு வைத்துக்கொண்டே படுக்கை அறையிலிருந்து பதில் அளித்தேன். சில நொடிகளுக்குப் பிறகு, "பஸ்ஸுக்கு டயம் ஆச்சும்மா", என்று குரல் கொடுத்து விட்டு, அவசரமாக ஆபீஸ் பேட்ஜை கைப்பையில் திணித்துக்கொண்டே முன் அறைக்கு வந்தேன்.

அம்மாவும் அதே சமயம் சமயலறையிலிருந்து என் மதிய உணவு டப்பாவுடன் வெளிய வர, அதை வாங்கிக்கொள்ள அவசரமாகத் தாவிப் போனதில் தரையில் கார்ப்பெட் தடுக்க, ஒரு வினாடி தடுமாறி நிலை சரியாவதற்குள் அம்மா பதட்டத்துடன் "பார்த்து பார்த்து, என்ன அவசரம்?" என்றாள். "ஒரு நிமிஷம் அந்த சோபாவில் உட்கார்ந்து விட்டுப் போ, நான் டப்பாவை உன் கைப்பையில் வைக்கிறேன்" என்றாள். மறுசொல் பேசாமல் சோபாவில் அமர்ந்தேன். மறுசொல் பேசினாலும் பயனில்லை. இந்த மாதிரி பழங்கால நம்பிக்கைகளில் அவள் மனதை மாற்றமுடியாது என்பது நான் எப்பொழுதோ கற்றறிந்த பாடம்.

சாப்பாட்டு மேசையில் என் கைப்பைக்குள் அம்மா டப்பாவை வைத்தபடியே "என்ன, உன் கைப்பையில் இடமே இல்லையே, கொஞ்சம் பெருசா வாங்கிக்கக் கூடாதா? இன்னிக்கி வேற இப்படி தடுக்கியிருக்கு இல்ல. நம்ம எல்லை முனிசாமி முடிச்சு ஒண்ணு உள்ள வைக்கிறேன்" என்றபடியே அருகில் இருந்த அலமாரியின் பூசைத் தட்டிலிருந்து ஒரு மஞ்சள் தடவிய துணி முடிச்சை என் கைப்பையில் வைக்கப் போனாள். "ஐயோ அம்மா, எதுக்கு இப்போ இதெல்லாம், ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு? அந்த எல்லை முனி யாரு? கிராமத்தில கருகருன்னு பெரிய்ய்ய மீசை வெச்சிண்டு, கைல அரிவாள், முட்டை கண்ணோட, இருப்பாரே அவர்தானே?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

"சிவகாம சுந்தரி!" என் முழுப்பெயரைக் கூப்பிட்டாலே அம்மா கோபமாக இருக்கிறாள் என்று தெரியும். "சாமிய அப்படியல்லாம் பழிச்சீன்னா பளார்ன்னு மூஞ்சிலயே அறை விழும்" என்று பொய்யும், நிஜமும் கலந்த கோபத்துடன் சொன்னபடி, கைப்பையை மூடி என் கையில் கொடுத்தாள். "சரிம்மா, சாயங்காலம் வந்து நம் சண்டையைத் தொடரலாம், சான் பிரான்சிஸ்கோல பஸ் எல்லாம் உன் கிராமம் மாதிரி கிடையாது, நேரத்துக்கு வந்துடும்" என்று கைப்பையை வாங்கிக்கொண்டேன். செருப்பை அணியும்போது அம்மா "சாயங்காலம் சீக்கிரம் வந்துடுடீ, உங்க ஊர்ல வேற இப்போல்லாம் குளிர் காலத்தில அஞ்சு மணிக்கெல்லாம் இருட்டிடுது" என்றாள். "அதெல்லாம் ஒரு பயமும் இல்லைம்மா, நான் தான் தினமும் சாயங்காலம் நம்ம காம்ப்ளெக்ஸ்ல இருக்கற ராஜேஷ் மேத்தாவுடன் ஒரே பஸ்லதானே வரேன்" என்று கைகாட்டி விடையளித்துக் கொண்டே படி இறங்கும்போது மெல்லிய புன்னகையுடன் கையசைக்கும் அவள் முகம் என் மனதில் உறைய, ஓட்டமும் நடையுமாய் அருகிலேயே இருந்த பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றேன்.

ரொம்ப நாளைக்குப் பிறகு, இப்போதுதான் அம்மா முகத்தில் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்க முடிகிறது. வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் 10 நிமிடப் பயணத்தின் போது அம்மாவைப்பற்றி நினைத்து பார்த்தேன். கிராமத்திலேயே வளர்ந்தவள் அவள். அப்பா துபாயில் வேலை பார்த்ததால், திருமணமாகிப் பல வருடம் ஒரே பெண்ணான என்னை கிராமத்து வீட்டிலேயே தாத்தா பாட்டியுடன் வளர்த்தாள். இன்னும் ஒரு வருடம்தான் என்று பலமுறை கூறி, இழுத்துக்கொண்டே போனது துபாய் வேலை. விடுமுறையில் வரும்போது மட்டும்தான் அப்பாவைப் பார்க்க முடிந்தது. பாட்டி, தாத்தா ஒருவர் பின் ஒருவராக என் பள்ளி நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு மறைந்தனர். அம்மாவின் உலகமே நானும் அந்த கிராமமும்தான்.

அப்பா பணி ஓய்வுபெற்று கிராமத்துக்கு வரும்போது நான் கல்லூரியில் படிக்கச் சென்னைக்குக் கிளம்பி விட்டேன். படித்து முடித்த உடனேயே சென்னையிலேயே வேலை கிடைத்து, இரண்டொரு வருடங்களில் விசா வாங்கி அமெரிக்கா வரும் வாய்ப்பு வந்ததால், அப்பா எனக்குச் கண்ணிமைக்கும் நேரம்தான் பரிச்சயம் ஆனார். எதிர்பாராமல் மாரடைப்பில் சில மாதங்களுக்கு முன் அவரும் காலமானார். சடங்குகள் முடிந்தவுடன், வாழ்க்கையில் முதல் முறையாக, தனித்து விடப்பட்ட அம்மாவை ஒரு மாற்றத்துக்காக நான் இருந்த சான் பிரான்சிஸ்கோவுக்கே ஆறு மாத விசாவில் கூட்டிவந்து விட்டேன்.

அம்மா மனம் வருந்தாமல், சிவி என்று என் பெயரைக்கூட வேலை பார்க்கும் அமெரிக்கர்களின் நாக்குக்கு எளிதாக இருப்பதற்காக மாற்றியதும், நெற்றிப் பொட்டைச் சிறியதாக்கியதும் தவிர, கிராமத்தில் வளர்ந்த சிவகாமியாகவே முடிந்தவரைக்கும் அம்மாவின் கண்களுக்குத் தோற்றமளித்து வருகிறேன். பள்ளி வாழ்க்கை முடிந்து கிராமத்தில் இருந்து கல்லூரிக்குச் சென்ற பின், 8 வருடங்கள் ஒரு அதிவேகத் திரைப்படம் போல ஓடிவிட்டது.

அன்றைய தினம் வேலையும், அந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியைப் போலவே விரைந்தது. மூன்றே வாரங்களில் வரப்போகும் ஒரு முக்கியமான காலக்கெடுவினால், வேலையில் பல சந்திப்புகள், விவாதங்கள், மாறுதல்கள். அம்மாவுக்குத் தொலைபேசியில் மதியம் சாப்பாட்டு வேளையில் கூப்பிட்டு, "என்ன பூசையெல்லாம் முடித்தாயா? சாப்பிட்டாயா? கொஞ்சம் மதியம் ஓய்வு எடுத்துக்கொள்" என்று இரண்டு வார்த்தை பேசுவதைத் தவிர, காலில் சக்கரம் கட்டினாற்போல வேலை மும்முரம். அம்மா ஏதோ "சொல்ல மறந்துட்டேன், அந்த சாமி முடிச்சு கைப்பைக்குள் வைக்கும்போது, இடம் இல்லாததால் உன் சென்ட் ஸ்பிரேய சாப்பாட்டு மேசையிலேயே வெச்சுட்டேன். சாயங்காலம் எடுத்துக்கோ" என்று சொன்னபோது கூட "எதைச் சொல்றா? என் பையில் சென்ட் ஸ்பிரே கிடையாதே" என்று நினைத்தேன். ஆனால் கைப்பையைச் சரி பார்க்க நினைவில்லை, நேரமில்லை.

மாலை ஆறரை மணிவாக்கில் வேலை ஓரளவு முடிந்து, சக பணியாளர்கள் வீட்டுக்குக் கிளம்பும்போதுதான், "என்ன, இந்த ராஜேஷ் மேத்தாவை இன்னும் காணுமே?" என்று தோன்றியது. அவனும் என் அலுவுலக கட்டிடத்திலேயே மேல்தளத்தில் வேலை பார்ப்பதால், ஆறு மணிக்கெல்லாம் தினமும் என் தளத்திற்கு வந்து வீடு செல்ல அழைப்பான். அவனுக்கு மனைவி, குழந்தை இருப்பதால் நேரத்துக்கு அவன் கிளம்பி விடுவான். நானும் அவன் துணையுடன் தினமும் பேருந்தில் போவேன். அவனைத் தொலைபேசியில் கூப்பிடலாம் என்று எடுத்தபோதுதான் அவன் ஐந்து மணிக்கே அனுப்பிய டெக்ஸ்ட் செய்தியை பார்த்தேன். "சிவி, என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவசரமாகக் கிளம்புகிறேன். உன் மேசைக்கு வந்து பார்த்தேன். நீ முக்கியமான சந்திப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். அதனால் சொல்லிக்கொள்ள முடியவில்லை. சாரி" என்று அனுப்பியிருந்தான். அவன் மனைவியின் உடல்நிலையை விசாரித்து பதில் அனுப்பிவிட்டு, கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

அலுவலகக் கட்டடத்தில் இருந்து கிளம்பித் தெருமுனை திரும்பியதும் பேருந்து நிறுத்தம். ஜனவரி மாத சான் பிரான்சிஸ்கோ குளிரிலும், இருட்டிலும் வேகமாக நடந்து பேருந்து வர இரண்டு நிமிடம் இருக்கும்போதே சென்றடைந்தேன். எப்பொழுதும் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள், இன்று பார்த்து ஒருவரையும் காணவில்லை. வழக்கத்தைவிடக் கொஞ்சம் தாமதமாகப் போனதால் இருக்கலாம். பகல் நேரத்திலேயே கொஞ்சம் நடமாட்டம் குறைந்த தெருதான் அது. இன்று ஈ, காக்கை இல்லை. எப்போதும் சரியான நேரத்திற்கு வரும் பேருந்து, ஐந்து நிமிடமாகியும் வராதபோது சில சந்தேகங்கள். "ஒருவேளை நான் வரும் முன்னேயே போய்விட்டதோ? வண்டி ரிப்பேர் ஆயிருக்குமோ? அடுத்த வண்டி 20 நிமிடத்திலா, 30 நிமிடத்திலா?". யோசிக்கும் நேரம் என் பின்னே இருந்த மரங்களடர்ந்த பூங்காவின் அருகில் ஒரு சலனம். உயரமான, வாட்டசாட்டமான ஒருவன் நான் இருக்கும் இடம் நோக்கி இருபதடி தொலைவில் வந்து கொண்டிருந்தான். பார்ப்பதற்கு, சான் பிரான்சிஸ்கோவின் மனநிலை சரியில்லாத, போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் ஒருவன்போல இருந்தான். யாரும் அருகில் இல்லாததால் கொஞ்சம் பயம் வந்தாலும், கைப்பையை ஆதாரமாக இறுகப் பிடித்துக்கொண்டு அவன்மேல் ஒரு கண்ணும், பேருந்து வரும் பாதையில் ஒரு கண்ணும் வைத்திருந்தேன்.

முதலில் கொஞ்சம் தள்ளிநின்ற அவன், அக்கம் பக்கம் ஒரு நோட்டம் விட்டுவிட்டு, இளக்காரமான புன்னகையுடன் என்னை நெருங்கினான். உடனே நான் யோசிக்காமல் அருகில் நிறுத்தியிருந்த காரைச் சுற்றி பயத்துடன் விரைந்து சென்றேன். அவன் காரின் மறுபுறம் வழியே என்னை இன்னமும் விரைந்து நெருங்கினான். அமெரிக்காவில் மட்டுமல்ல, சென்னையிலோ, கிராமத்திலோ கூட இப்படி ஒரு சூழ்நிலையில் நான் இருந்ததே இல்லை. அவன் பின்னே இருந்த இருண்ட பூங்கா வேறு என் பயத்தை அதிகமாக்கியது. என்னைவிட அவன் உடலின் அளவிலும் திடத்திலும் மிக வலியவன். என்னை அந்தப் பூங்காவிற்கு அவன் இழுத்துச் சென்றால்? நினைக்கவே உடம்பு நடுங்கியது.

இப்போது அவன் நான்கடி தொலைவில் இருந்தான். எதாவது செய்தாக வேண்டும் என்று, இடதுதோளில் தொங்கிய கைப்பையைத் திறந்து கிடைத்த பெரிய பொருளாகிய என் சாப்பாட்டு டப்பாவை எடுத்து அவன் மேல் வீசினேன். அது அவன்மேல் புல் மாதிரி தெறித்து விழுந்தது. அவன் பலமாகச் சிரித்து "ஓ, எனக்கு வலிக்குது" எனக் கேலியாக சிரித்தான். "வா, நாம் சந்தோஷமாக இருக்கலாம்" என்று கூப்பிட்டான். அப்போதுதான் என் பையில் பெப்பர் ஸ்பிரே இருந்தது நினைவுக்கு வந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற சுபாவம் கொண்டவள் நான். ஒருமுறை சென்னையில் ஒரு கடையில் அதைப் பார்த்தவுடன், இருக்கட்டுமே என்று வாங்கிப் போட்டேன். இப்போது கை நீட்டும் தூரத்தில் இருந்த அவன்மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே இடது கையால் கைப்பையில் துழாவி அந்த ஸ்பிரேயை சட்டென்று எடுத்தால் கையில் வந்தது அம்மா வைத்த அந்த எல்லை முனி கோவில் துணி முடிச்சு!

அப்போதுதான் அம்மா மதியம் சொன்னது உறைத்தது! அவள் வெளியே எடுத்து வைத்தது சென்ட் ஸ்பிரே அல்ல, பெப்பர் ஸ்பிரே! இந்த ஆபத்தான நேரத்திலும் அம்மாவின்மேல் ஒரு நொடி கோபம் வந்தது. ஆனால், அந்தச் சிந்தனைக்கு இடமளிக்காமல், என்னைத் தாக்க வந்தவன், என் வலது கையைப் பிடிக்க, என் இடது கையில் இறுகப் பற்றிக்கொண்டிருந்த துணி முடிச்சால் அவனை பலவீனமாக அடிக்க முயன்றேன். அதனால் ஒரு பயனுமில்லை எனப் புரிந்தது. அவன் என்னை வலுவுடன் இழுக்கவும் தொடங்கினான்.

அப்போது பளீர் என்று, தெரு முனையிலுருந்து கோடி சூரியர்களின் பிரகாசத்துடன் ஒரு வெளிச்சம். நான் என் இடது கையில் இருந்த துணி முடிச்சால் கண்ணைக் கூசாமல் இருக்க மறைத்தேன். என் எதிரி என் கையை விட்டுவிட்டு இரு கைகளால் வெளிச்சத்தை மறைத்துக் கொண்டான். பெருத்த இன்ஜின் சத்தத்துடன் முகப்பு விளக்குகள் எரிய ஒரு பேருந்து பேய் வேகத்தில் வந்து ஓரிரு வினாடிகளில் என்முன் வந்து நின்றது. ஓட்டுநர் கதவைத் திறந்தார். வெலவெலத்து போயிருந்த நான், யோசிக்க அவகாசம் எடுக்காமல், அபார வெளிச்சத்தால் இருட்டிய கண்களுடன், தலைகுனிந்தபடி, படுவிரைவாக பேருந்தில் ஏறி, அமர்ந்தேன். நான் அமர்ந்த உடனேயே, வண்டிக் கதவை மூடிவிட்டு ஓட்டுநர், வண்டியைக் கிளப்பிவிட்டார்.

இன்னமும் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது எனக்கு. ஆபத்தில் இருந்து தப்பி விட்டோம் என்று மூளையில் உரைத்த உடன், ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தால், மறுபடியும் சுளீர் என்றது! என்னதிது? பேருந்தினுள் விளக்கே இல்லை, என்னைத் தவிர ஒரு பயணிகூட இல்லை என்று ஓட்டுனரைப் பார்த்தால்... இன்னமும் தூக்கி வாரிப் போட்டது. நான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவர் முகத்தின் வலது பக்கம்தான் தெரிந்தது. அந்த இருட்டில், அவரது பூதாகாரமான உடல் பரிமாணமும், நீண்ட கரிய முடியும், கரிய உடல்வாகும், தாடி போல் தெரிந்த சவரம் செய்யாத முகத்தின் வலப்புறமும்... அரண்டிருந்த என் மனதில் இன்னமும் திகிலை அதிகமாக்கியது. என்னடா, பாம்பிடமிருந்து தப்பி ஓடிப் புலியிடம் சிக்கிக்கொண்டோமா என்று தோன்றியது. போதாக்குறைக்கு, வண்டி ஒரு நிறுத்தத்தில்கூட நிற்கவில்லை, மனோவேகம், வாயு வேகமாகமாக தலை தெறிக்க ஓட்டினார். திகைத்துப் போய் வெளியே பார்த்தேன், அதற்குள் என் வீடிருக்கும் தெரு வந்துவிட்டது!

வண்டி என் காம்ப்லெக்ஸ் வாசலில்தான் நின்றது, ஓட்டுநர் கதவைத் திறந்தார். இரண்டே எட்டில் ஓடிச் சென்று, மடமடவென்று இறங்கினேன். இறங்கிய பின்தான் பதட்டத்தில் டிக்கெட் வாங்கவில்லையே என்று தோன்றியது! சரி நன்றி சொல்லிவிட்டு, பணமும் கொடுத்துவிடலாம் என்று ஓட்டுனரை நோக்கி திரும்பினால்... பகீர் என்று தூக்கி வாரி போட்டது! ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ... அத்தனை உயரமும் திடமும் உள்ள ஒரு மனிதரே உலகில் இருக்க முடியாது! கருகருவென்று மேனி, பெரிய வட்ட வடிவில் சிகப்பு நெற்றிப்பொட்டு, அதற்கு இணையான நிறத்தில் கனல் போன்ற பெரிய கண்கள், முகத்தையே மறைப்பது போன்ற சுருண்ட மிகப்பெரிய மீசை... யோசிப்பதற்குள் ஒரு முறைப்பான பார்வையுடன், கதவை மூடிவிட்டு, அவர் வண்டியைக் கிளப்பிவிட்டார். இவர், இவர், இவர்... சேச்சே, இருக்காது.

மீண்டும் பேய் வேகத்தில் சீறிப் பாய்ந்தது சான் பிரான்சிஸ்கோ நகராட்சி (முனிசிபல்) பேருந்து. நான் ஸ்தம்பித்து நின்றிருக்க, அகன்று செல்லும் அந்தப் பேருந்தின் பக்கவாட்டில் பிரம்மாண்டமாக எழுதப்பட்டிருந்த M U N I என்ற நாலே எழுத்துகள், என் முகத்தில் பளார் என அறைந்தது போல் அந்த இருட்டிலும் ஒளிர்ந்தன. அடுத்த நொடியில் வண்டி இருளுக்குள் மறைந்தது!

(சான் பிரான்சிஸ்கோ நகரப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்துக்கு MUNI எனப் பெயர்!)
ஸ்ரீனி வெங்கட்,
ஃபோஸ்டர் சிடி, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline