Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
தாம்பத்தியம்
- K.S. கோபாலகிருஷ்ணன்|ஜனவரி 2026|
Share:
"ராகவன் இன்றைக்கு வருகிறானாமே, எத்தனை மணிக்கு?" என்று பக்கத்து வீட்டு கணபதி குருக்கள் கேட்டார்.

"மாலை 5 மணிக்கு வருகிறான். அமெரிக்காவிலிருந்து மதியம் 1 மணிக்கு விமானம் சென்னை வருகிறது. அங்கிருந்து டாக்ஸி பிடித்து நம்ம வீட்டிற்கு வர மாலை 5 மணியாகும் என்று நேற்று ஃபோனில் சொன்னான்" என்றார் சுந்தரேசன். அருகில் சந்தோஷப் புன்னகையுடன் அவர் மனைவி பத்மா நின்றிருந்தாள்.

கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது ஸ்ரீகண்டபுரம் கிராமம். காவிரி ஆறு பாயும் இடம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கும். குளங்கள், வயல்வெளிகள், மா மரங்கள், தென்னை மரங்கள் என்று ஸ்ரீகண்டபுரம் ஊரே செழிப்பாக இருக்கும். அந்த ஊரில் ஓர் அழகான சிவன் கோயில் உண்டு. கோயில் அக்ரகாரம் நீண்டு வலப்பக்கம் சிறிது வளைந்திருக்கும். நல்ல அகலமான வீதி. இரண்டு பக்கமும் சுமார் நாற்பது வீடுகள் இருக்கும். கோயிலின் வலப்புறம் தேர் நிற்குமிடம். கோபுரம் 45 அடி உயரம். உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நீளமாகவும் அகலமாகவும் இருக்கும்.

அக்ரகாரத்தில் குடியிருக்கும் சுந்தரேசன் பத்மா தம்பதியருக்கு ஒரே பிள்ளை ராகவன். கும்பகோணம் சென்று பள்ளியில் படிக்கும் போதும் சரி, சென்னையில் ஐ. ஐ. டியில் படிக்கும் போதும் சரி எப்போதும் படிப்பில் முதலாவது ராங்க். சென்னை மைலாப்பூரிலிருந்து வரும் ஜானகிதான் கல்லூரியில் இரண்டாவது ராங்க். இருவரும் முதலாம் ஆண்டு முதல் ஒன்றாகவே படித்து வந்தார்கள். சில சமயம் ஜானகி முதல் ராங்கும் ராகவன் இரண்டாவது ராங்கும் வருவதுமுண்டு. இந்தப் போட்டியில் மற்ற மாணவர் களுக்கு இடமில்லை.

ராகவன் ஜானகி இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததாலும் அடிக்கடிச் சந்தித்து பாட விஷயங்கள் பற்றி விவாதம் செய்து வந்ததாலும் அவர்கள் இருவரும் அறியாமலேயே ஒருவர் மனதில் மற்றவர் இடம் பிடித்துக் கொண்டார்கள். அறிவுசார்ந்த நட்பு என்பது ஒரு கட்டத்தில் உணர்வுபூர்வக் காதலாக மாறிவிட்டதை இருவரும் புரிந்து கொண்டார்கள். படிப்பு நல்ல முறையில் முடிந்து இருவருக்கும் நல்ல பிடித்தமான வேலைகள் கிடைத்த பின்புதான் திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதில் இருவரும் தீர்மானமாக இருந்தார்கள். இருவருக்கும் 'கேம்பஸ்' இன்டர்வியூவில் சென்னையிலேயே வேலை கிடைத்தது.

ராகவன், ஜானகி இருவரும் தங்கள் விருப்பத்தைத் தத்தம் வீட்டில் சொல்ல, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஒரு சுபயோக சுப தினத்தில் திருமணம் இனிதே நடந்தது. ஒரு 'ப்ராஜக்ட்' என்று ராகவன் அமெரிக்கா போனான். அந்த மூன்று மாதமும் ஜானகி வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதி வாங்கி, ஸ்ரீகண்டபுரம் கிராமத்திலேயே தங்கியிருந்தாள். மூன்று மாதத்துக்குப் பின் ராகவன் இன்று வருகிறான்.

கணபதி குருக்கள் மனசுக்குள்ளே 'ராகவன் வரட்டும். இந்த ஜானகி என்னைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்துவதில்லை. ஒரு நாளாவது நின்னு நிதானமாக என்னிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை. ஆனால் சிவன் கோயிலில் பூஜை செய்யும் பரசுராமனிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அப்படியென்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? பரசுராமனுக்குச் சின்ன வயது. கோயிலில் கூட்டம் இல்லாத நேரத்தில் ரொம்ப நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருப்பதை நானே எத்தனை தடவை பார்த்திருகிறேன். இந்த சமாச்சாரம் பற்றி ராகவனிடம் சொல்லாமல் விடப் போவதில்லை. இந்த ஜானகியை அழவைக்க வேண்டும். அல்லது ராகவன் அவளை வீட்டைவிட்டே அனுப்ப வேண்டும். வரட்டும் ராகவன், பார்த்துக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டார்.

ஒருமுறை ராகவனின் அம்மா பத்மா, கணவரிடம், "என்னங்க? நான் ஒரு விஷயம் சொல்றேன், பொறுமையாக் கேளுங்க. நான் குறை சொல்றேன்னு நினைக்காதீங்க. நடந்ததை, கண்ணால் பார்த்ததை அப்படியே சொல்றேன். நம்ம மருமகள் ஜானகியோட உறவுக்காரன்னு போன மாதம் இங்கே வந்து ரெண்டு நாள் தங்கியிருந்தானே, பெயர்கூட சேகர்னு ஞாபகம். ஜானகி அவன்கூட சிரிப்பென்ன, பேச்சென்ன, விருந்து உபச்சாரம் என்னன்னு அசத்தினாளே. அப்படி என்னங்க புருஷன் ஊர்ல இல்லாத சமயம் ஒரு பெண் இப்படியா அந்நிய மனுஷன்டே நடந்துப்பா? பார்க்கவே சகிக்கலே. உங்ககிட்டேயும் ஜாடை மாடையா சொன்னேன். நீங்க காது கொடுத்தே கேட்கலை" என்று சொன்னாள்.

சுந்தரேசன், "பத்மா, நம்ம வாழ்ந்த காலம் வேறே, இந்தக் காலம் வேறே. இன்றெல்லாம் பெண்கள் நிறையப் படிக்கிறார்கள். உன்னுடைய பெற்றோர் சொன்னதால் நீ பெரிய மனிஷியானதும் படிப்பை நிறுத்திட்டே, இப்பல்லாம் அப்படியில்லை. பெண்கள் கல்லூரிக்குப் போறாங்க, ஆண்களுக்குச் சமமாகவோ, அதற்கு மேலேயோ நிறையப் படிக்கிறாங்க. நம்ம மருமகள் ஜானகி, ராகவன் கூடயே சென்னையிலே படிச்சிருக்கா. பட்டணத்து நாகரீகம், கல்லூரியில் படிச்ச மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களிடம் பேசிப் பழகியிருப்பா என்பதை நான் எத்தனை முறை சொன்னாலும் நீ சொன்னதையே சொல்லிண்டு இருக்கே," என்று சொன்னார்.

சுந்தரேசன் என்ன சொன்னாலும் பத்மா மனம் சமாதானம் அடையவில்லை. ராகவன் வந்த பின்பு அவனிடம் இதுபற்றி நிச்சயம் பேசவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

ஜானகியைப் பற்றி கணபதி குருக்கள் மனதில் நினைப்பதை ஓரளவு ஊகித்திருந்த சுந்தரேசன், அவரது தவறான புரிதலையும், மனைவி பத்மா ஜானகிபற்றி சொன்னதையும், ஒருமுறை பேசும்போது ராகவன் காதில் போட்டு வைத்தார்.

அன்று மாலை ராகவன் டாக்ஸியில் வந்து இறங்கியதைப் பக்கத்து வீட்டு கணபதி குருக்கள் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ராகவன் புன்னகை செய்துகொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். அப்பா, அம்மா இருவரையும் நமஸ்கரித்துவிட்டு ஜானகியைப் பார்த்து ஒரு புன்முறுவலுடன் தோளில் தட்டிக் கொடுத்தான். இரவு உணவருந்தி முடிந்தவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சுந்தரேசன், "ராகவா, நீண்டதூரம் பிரயாணம் பண்ணியதால் களைப்பாயிருக்கும். தூங்கப் போ" என்றார்.

மறுநாள் காலை 'வாக்கிங்' செல்லும்போது ராகவன் கணபதி குருக்களிடம் "மாமா, இன்று மாலை காஃபி சாப்பிட எங்க வீட்டுக்கு வந்துடுங்கோ" என்றான். அவரும் சரியென்று தலையசைத்தார்.

மாலை ஜானகி பாலில் செய்த இனிப்பும் பஜ்ஜியும் நல்ல ஃபில்டர் காஃபியும் தயாராக வைத்திருந்தாள். கணபதி குருக்கள் வந்த பின்பு எல்லோரும் டிஃபன் சாப்பிட்டு முடித்தனர். ராகவன், "என்ன மாமா, டிஃபன் எப்படியிருந்தது?" என்று கேட்டான். "ஜானகியின் கைமணம் இந்த அக்ரகாரம் முழுவதும் மணக்குமே" என்றார்.

ராகவன், "மாமா, ஜானகி அடிக்கடி சிவன் கோயிலுக்குச் சென்று வருவதைப் பார்த்திருப்பீர்கள்; அங்கு பூஜை செய்யும் பரசுராமனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்திருப்பீர்கள். பரசுராமன் டிகிரிவரை படித்திருக்கிறான். ரொம்ப நாளா வேலை தேடிக் கொண்டிருக்கிறான். எப்போதும் தேர்வில் பாஸாகி விடுவான். ஆனால் இன்டர்வியூவில் தேர்வாக மாட்டான். காரணம் அவனுக்குத் திக்கு வாய். அவனுக்குத் தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருந்தது. நம்ம ஜானகி பரசுராமனிடம் சகஜமாகப் பேசி, சிரித்துப் பழகி அவன் மனதில் நம்பிக்கை ஏற்படுத்தியதால், சென்ற வாரம் சென்னையில் ஒரு இன்டர்வியூவில் தேர்வாகி வேலையில் சேர்ந்து விட்டான். மாமா, நீங்க நடக்கும்போது சில சமயங்களில் தடுமாறுவதை ஜானகி கவனித்திருக்கிறாள். உங்களுக்காக அமேசானில் ஒரு கைத்தடி, ஒரு ஸ்வெட்டர் இரண்டும் ஆர்டர் செய்தாள். இரண்டும் இன்று வந்திருக்கின்றன" என்றான். அவற்றை ஜானகி கொண்டுவந்து நமஸ்காரம் செய்துவிட்டுத் தர, கண்களில் நீர்மல்க கணபதி குருக்கள் பெற்றுக் கொண்டார்.

ராகவன் அப்பாவிடம், "அப்பா உங்களுக்கு ஒரு புது லேப்டாப் வாங்கியிருக்கேன். பழைய லேப்டாப் ரொம்ப ஸ்லோவா இருக்கு, மாமா மிகவும் சிரமப்படுகிறார் என்று ஜானகி சொன்னாள்" என்றான். சுந்தரேசன் ஜானகியைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டார்.

ராகவன் "அம்மா, ஜானகி உன்னிடம்தான் இந்த மூன்று மாத காலத்தில் சுவையாகச் சமைக்க நன்கு கற்றுக் கொண்டதாக என்னிடம் ஃபோனில் அடிக்கடி கூறுவாள். அவள் உறவினர் சேகரும் ஜானகியும் சின்ன வயதிலிருந்தே அண்ணன் தங்கையாகப் பழகிக் கிண்டலும் கேலியுமாகப் பேசி வளர்ந்திருக்கிறார்கள். ஜானகி செய்யும் சமையல் சுவைபற்றி அவன் ஊரிலுள்ள எல்லோரிடமும் சொல்லியிருக்கிறான். உன்னிடம் சமையல் கற்றுக் கொண்டதற்காக ஜானகி உனக்கு இரண்டு தங்க வளையல் வாங்கி வைத்திருக்கிறாள்" என்று சொல்லிவிட்டு ஜானகியைப் பார்க்கிறான். உடனே ஜானகி தன் மாமியாரை நமஸ்காரம் செய்து, தங்க வளையல்களைக் கொடுக்கிறாள். இப்படியொரு தங்கமான மருமகள் தனக்குக் கிடைத்திருக்கிறாளே என்று கணவரைப் பெருமையுடன் பார்க்கிறாள்.

ராகவன் எல்லோரையும் பார்த்து, "நானும் ஜானகியும் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே ஒருவர் மனதை மற்றொருவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறோம். எந்த ஒரு சூழ்நிலையிலும் யார் என்ன சொன்னாலும் எங்களுக்குள் மனஸ்தாபம் ஒரு போதும் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்து வருகிறோம். அதனால்தான் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை இனிதாக இருக்கிறது. தாம்பத்தியம் என்பது புனிதமானது; மிக உயர்வானது. தாம்பத்தியம் நமக்குச் சந்ததியை அளிக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சந்தேகம் என்று ஒருமுறை வந்துவிட்டால் அதன்பின் தாம்பத்திய வாழ்க்கை நரகம்தான். இருவரும் ஒருவர்மேல் மற்றவர் காட்டும் அன்பும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனநிலையும் இருந்தால் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கையும் அந்தக் குடும்பச் சூழ் நிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று சொல்வார்கள்; அதுபோல ராமரின் மனைவி சீதையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று ஏனோ நாமெல்லாம் சொல்வதில்லை. என் மனைவி ஜானகியும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று உறுதியாக இன்று நான் எல்லோருடைய முன்னிலையிலும் சொல்கிறேன்" என்று சொன்ன தன் கணவன் ராகவனைப் பெருமையுடன் ஜானகி பார்த்தாள்.
K.S. கோபாலகிருஷ்ணன்,
கோயம்பத்தூர், இந்தியா
Share: 




© Copyright 2020 Tamilonline