Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
அலங்காரப் பதுமைகள்
- எஸ். செல்லம்மாள்|செப்டம்பர் 2025|
Share:
"கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் 5 மணிக்கே வந்துடும்மா, கோயம்புத்தூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்துடுவதா சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே வந்தாத்தான், முகம் கழுவி, ரெடியாகச் சரியா இருக்கும். மறந்துடாதே." அம்மா விடிந்ததிலிருந்து நாற்பதாவது முறையாகச் சொல்லி விட்டாள்.

மணி 8.15. இப்போது புறப்பட்டால்தான் பஸ்ஸைப் பிடித்து, மதுரை டவுன்ஹாலில் இருக்கும் 'வர்ஷிணி டெக்ஸ்டைல்ஸ்'க்கு 9 மணிக்குப் போய்ச் சேர முடியும். 10 நிமிடத்தில் ஆடை மாற்றிக்கொன்டு, சிறிது முக அலங்காரம் செய்துகொண்டு, கடை வாசலில் தோழி கவிதாவுடன் அலங்கார பொம்மையென மதியம் 3 மணிவரை நிற்க வேண்டும். இடையில் 30 நிமிட உணவு வேளை. 3 மணியிலிருந்து 7 மணிவரை கடையிலுள்ள சில அலுவலக வேலைகளைப் பார்த்தால் அதற்குத் தனியாக ஒரு தொகை சம்பளமாகக் கிடைக்கும். அதையும் முடித்து விட்டுத்தான் கீதாவும் கவிதாவும் 7 மணிக்கு வீட்டிற்குப் புறப்படுவார்கள்.

கீதாவின் தந்தை உடல் நலமில்லாத காரணத்தால் விருப்ப ஓய்வு பெற்று 2 ஆண்டுகளாகி விட்டது. தனியார் கம்பெனி வேலை. பென்ஷன் கிடையாது. மொத்தமாகக் கொடுத்த கொஞ்சப் பணமும் வீடு வாங்கும்போது பெற்ற கடனுக்கு சரியாகப் போய்விட்டது. ஏதோ அம்மா சுப்புலட்சுமி மிகவும் சிக்கனமாக இருந்து, கொஞ்ச கொஞ்சமாகப் பணம் சேர்த்து, கீதாவுக்கு சில தங்க நகைகள் வாங்கியிருந்தாள். ஒரு 10 பவுன் தேரும்.

கீதாவின் தம்பி கணேஷ் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படிக்கிறான். படிப்பில் எப்போதும் முதல் ரேங்க். எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் எடுப்பான். 'அக்கா, அக்கா' என்று கீதாவிடம் மிகவும் பிரியமாக இருப்பான். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், ஏதாவது ஒரு நல்ல வேலைக்குப் போய், குடும்பத்துக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். முக்கியமாக அக்கா வேலைக்குப் போவதோ, அந்தக் கடையில் அலங்கார பொம்மையாக நிற்பதோ கணேஷுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

கீதாவும், கவிதாவும் பள்ளிப் பருவத்திலிருந்தே உயிர்த் தோழிகள். வர்ஷிணி டெக்ஸ்டைல்ஸில் முதலில் கவிதாதான் வேலைக்குச் சேர்ந்தாள். அன்றாடச் செலவுக்கே கீதா குடும்பம் மிகவும் சிரமப்படுவதைப் பார்த்து, கவிதாவின் அறிமுகத்தில் கீதா இந்தக் கடையில் 2 ஆண்டுக்கு முன்பு சேர்ந்தாள்.

மதுரையிலேயே வர்ஷிணி டெக்ஸ்டைல்தான் மிகப்பெரிய துணிக்கடை. இந்தக் கடையில் ஏதேனும் ஆடை கிடைக்கவில்லை என்றால், மதுரையில் எத்தனை கடைகளுக்குச் சென்றாலும் வாடிக்கையாளர்கள் விரும்பியது கிடைக்காது. கடை முழுவதும் குளிர்சாதன வசதி. வேலை பார்க்கும் அனைவருக்கும் காலை, மாலை வடை அல்லது பிஸ்கட்டுடன் தேநீர் அல்லது காஃபி உண்டு. மதியம் உணவு விரும்புபவர்களுக்கு மட்டுமே உண்டு. சிலர் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு வருவார்கள். கீதாவும், கவிதாவும் மதிய உணவு எடுத்து வருவார்கள். இருவரும் ஏதாவது பேசிக்கொண்டே உணவு அருந்துவார்கள்.

அலங்காரப் பொம்மைகளாக நிற்பதும், வருகிறவர்களை ஒரு சிறிய புன்னகையுடன் வரவேற்பதும் கீதா, கவிதா இருவருக்குமே கொஞ்ச நாள் வேடிக்கையாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மனதில் சில சங்கடங்கள் தோன்ற ஆரம்பித்தன. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கால் வலிக்க ஆரம்பித்தது. தலைவலியோ, வயிற்று வலியோ எது இருந்தாலும் நீண்ட நேரம் நிற்பதும், செயற்கையான புன்னகையுடன் வரவேற்பதும் சிரமமாக இருந்தது. ஆனால் இதை யாரிடமும் சொல்ல முடியாது.

கடை மேலாளர் கனகசபைக்கு 55 வயதிருக்கும். நெற்றி நிறையத் திருநீறு; அப்போதுதான் குளித்தது போல ஒரு தோற்றம். எல்லோரிடமும் அன்பாக இருப்பார். ஆனால் வேலை வாங்குவதில் சிறிது கடுமையாக நடந்து கொள்வார். கடை தொடங்கிய நாளிலிருந்தே கனகசபை மேலாளராக இருந்து வருகிறார். கடையின் பங்குதாரர்கள் நால்வருக்குமே இவர்மேல் அதீத நம்பிக்கை. அந்த நால்வரும் எப்போது கடைக்கு வந்தாலும், வாடிக்கையாளர் போல வந்து செல்வார்களே தவிர, எந்த ஒரு விஷயத்திலும் தலையிட மாட்டார்கள்.

கடையில் வேலை பார்க்கும் ஆணோ பெண்ணோ, அவர்கள் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் அங்கு கனகசபை இருப்பார். ஒரு நல்ல தொகையைச் சன்மானமாகக் கொடுத்துவிட்டு, உணவருந்தி விட்டுத்தான் வருவார். அந்தச் செயலால் ஊழியர்கள் மத்தியில் கனகசபைக்கு மட்டுமல்ல, கடையின் உரிமையாளர்களுக்கும் மிகவும் நல்ல பெயர்.

கவிதாவைவிட கீதா மிகவும் அழகு; கவிதாவே சில சமயங்களில், 'கீதா, உன்னை மட்டும் கடவுள் இவ்வளவு அழகாகப் படைத்திருக்கிறாரே, அதை நினைத்தால் என்னைப் போன்ற பெண்களுக்கு அந்தக் கடவுள் மேலேயே சில சமயம் கோபம் வருகிறது' என்பாள்.

கவிதா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இலக்கியங்களில் கூறும் சாமுத்ரிகா லட்சணம் கீதாவிடம் முழுமையாக இருந்தது. கீதாவின் உடலமைப்பு கோவில்களில் பார்க்கும் செப்புச் சிலையைப் போல் இருந்தது; இந்த அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்பவன் நிச்சயம் தவம் செய்தவனாகவும், கடவுளின் அருள் பெற்றவனாகவும் இருப்பான் என்று எல்லோரும் நினைப்பதுண்டு.

பெண்களுக்குத் தொல்லை தரும் அந்த மூன்று நாட்களில், அலங்கார பொம்மையென நிற்க முடியாமல் தான் படும் வேதனையை, கீதா கவிதாவிடம் கூறுவாள். அப்போதெல்லாம் கவிதா, "கீதா, நீ போய் அரைமணி நேரம் ஓய்வெடுத்துக் கொள். கனகசபை சார் வந்தால் நான் ஏதாவது சொல்லிச் சமாளித்துக் கொள்கிறேன்" என்று சொல்வாள். அதே பிரச்னை கவிதாவுக்கு வரும்போது, அந்த வார்த்தைகளைக் கவிதாவிடம் கீதா சொல்வாள். இருவரும் உடன்பிறவா சகோதரிகள்.

கடையில் மதியம் உணவு வேளைக்குப் பிறகு மாலை 4 மணிவரை வாடிக்கையாளர்கள் வரவு குறைவாக இருக்கும். பொதுவாக மற்றக் கடைகள் போலல்லாமல் அந்த நேரத்தில் ஊழியர்கள் சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கனகசபை சொல்லியிருக்கிறார். கீதாவும் கவிதாவும் பார்சல் டெலிவரி கொடுக்கும் இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அதன்பின் 7 மணிவரை அலுவலகத்தில் வேலைகளைச் செய்துவிட்டு, இருவரும் புறப்பட்டு, இரவு 8 மணிக்குள் வீட்டுக்குச் சென்று சேர்ந்து விடுவார்கள்.

கவிதாவுக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு வயதில் பெண் குழந்தை உண்டு. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துப் பழக்கியிருந்ததால், அந்த நேரங்களில் கடைக்கு வர மிகவும் சிரமப்பட்டாள். பிரசவத்துக்கு இரண்டு மாத விடுமுறைதான் கொடுப்பார்கள். கவிதாவின் வேதனையைச் சொல்லி முடியாது. கணவரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்ததால், வீட்டில் குழந்தையை விட்டு வரவும் முடியாது. கவிதாவுக்குப் பெற்றோரோ மாமியாரோ இல்லை. மாமனார் தனியாக கிராமத்தில் இருக்கிறார்.

கடைக்கு அருகில் குழந்தையைப் பார்க்கும் ஒரு இலவச அமைப்பு இருந்தது. குழந்தையை அங்கு விட்டுச் செல்பவர்கள் நன்கொடையாகக் கொடுக்கும் பணத்தை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.

மேலாளர் கனகசபையிடம் அனுமதி பெற்று, இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஒருமுறை சென்று, கவிதா குழந்தையின் பசியாற்றி வருவாள். மதியம் மூன்று மணிக்குக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று விடுவாள். பெண்களுடைய சிரமங்கள் பெண்களுக்குத்தானே தெரியும் என்று கீதாவும், கவிதாவும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள்.

கீதா கடையில் சேர்ந்து சில நாட்கள் இருக்கும். ஒருநாள் இரண்டு கல்லூரி இளைஞர்கள் வந்தார்கள்; கீதாவைப் பார்த்துக் குறும்புடன், "ஏன் மேடம், பெண்களின் உள்ளாடைகள் வாங்க வேண்டும்; எந்த மாடியில் இருக்கிறது?" என்று கேட்டார்கள். "அளவு தெரியவில்லை" என்று அவர்களில் ஒருவன் சொல்ல, கீதாவுக்கு மிகக் கூச்சமாக இருந்தது, என்ன சொல்வது என்று தெரியாமல், கவிதாவைப் பார்க்க, உடனே கவிதா அவர்களிடம், "ஏன் தம்பிகளா, உண்மையிலேயே உள்ளாடை உங்க அக்கா அல்லது தங்கைக்குத்தானே வாங்கப் போகிறீர்கள்? அளவுதானே வேண்டும், என்னை அக்காவாகவும், இவளைத் தங்கையாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். பிரச்னை தீர்ந்ததா?" என்று கேட்க, வந்திருந்த இளைஞர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. முகம் சிவக்க அங்கிருந்து சென்றார்கள்.

கவிதா "கீதா, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தயங்கவே கூடாது; நாம் தைரியமாக அவர்களின் முகத்தைப் பார்த்துப் பேசவேண்டும்; அவர்கள் வந்த வழியே போய்விடுவார்கள். கீதா, நீ மற்றவர்களைவிட மிக அழகாக இருப்பதால், இந்த மாதிரி இளைஞர்கள் உன்னிடம் பேச வருவதும், அசடு வழிவதும் ஒன்றும் அதிசயமில்லை" என்றாள். பதிலாக கீதாவிடமிருந்து ஒரு புன்னகை மட்டும்.

"கவிதா, இன்று வீட்டிலிருந்து புறப்படும் போதே, அம்மா என்னிடம் மாலை 5 மணிக்குள் வரச்சொல்லி யிருக்கிறாள்" என்றாள் கீதா.

"உன்னைப் பெண் பார்க்க, யாரோ ஒரு மாப்பிள்ளை வருகிறார், சரிதானே?" என்று கவிதா கேட்டாள்.

"ஆமாம் கவிதா, உண்மைதான். இன்று வருவது அஞ்சாவது பிள்ளை வீட்டார். இதற்கு முன்பு வந்தவர்கள், 'பெண் பிடித்திருக்கிறது. ஆனால் இன்னும் நிறைய நகை வேண்டும். வரதட்சணை லட்சங்களில் வேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள்."

"கவிதா, இன்று என் வீட்டுக்கு நீ வரவேண்டும். என்னைப் பெண் பார்க்க வருவதால், என்னுடன் நீ இருந்தால் எனக்கு தைரியமாவும், உற்சாகமாவும் இருக்கும்" என்றாள்.

கவிதா உடனே சம்மதித்தாள். கணவருக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள். கவிதா குழந்தையை எடுத்துக் கொண்டதும், இருவரும் சரியாக 4 மணிக்கு ஆட்டோவில் புறப்பட்டார்கள்.

கவிதாவைப் பார்த்த்தும் கீதாவின் அம்மா "வா கவிதா, நீ இங்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன. கீதாவைப் பெண்பார்க்க வருவதால், நீ கூட இருந்து அலங்காரம் பண்ண உதவி செய்யம்மா. உன் குழந்தையை நான் பாத்துக்கிறேன்" என்றாள்.

சரியாக 5.45 மணிக்கு கீதா தயாராகி விட்டாள். இயற்கையிலேயே கீதா நல்ல அழகு; இன்று கவிதாவின் கை வண்ணம், கீதா அழகுப் பதுமையாக ஜொலித்தாள். கீதாவைப் பார்த்ததும், சுப்புலட்சுமிக்கு ஒரே பெருமை, கணவரிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.

வீட்டிலிருந்த பழங்காலக் கடிகாரத்தில் மணி 6 அடிக்கவும், வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

ஜன்னல் வழியாக கீதாவும் கவிதாவும் பார்த்தார்கள். அழகான, சராசரி உயரமுள்ள ஒரு வாலிபன் புன்னகை தவழும் முகத்தோடு காரிலிருந்து இறங்கி வந்தான். கூடவே ஆண்களும், பெண்களுமாகச் சிலர்.

தற்செயலாக வாலிபனின் கண்கள் ஜன்னலில் தெரிந்த கீதாவைப் பார்க்க, கீதா அவனைப் பார்க்க, யார் முதலில் பார்த்தது என்று யாராலுமே சொல்லமுடியாது.

இந்தக் காட்சியைப் பார்த்த கவிதா, "அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்" என்றாள். அதை கீதா கவனிக்கவே இல்லை.

எல்லோரும் வீட்டின் உள்ளே வந்து அமர்ந்தார்கள். ஒரு ஜமுக்காளம் விரித்து அதில் கீதாவை அமர வைத்தார்கள். கவிதா அருகில் அமர்ந்தாள். பிள்ளை வீட்டார் சோஃபாவில் அமர்ந்ததும், பெண் வீட்டார் சார்பில் கவிதா வந்தவர்களுக்கு பஜ்ஜி, சொஜ்ஜி, ஃபில்டர் காஃபி கொடுத்தாள். கார்த்திக் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எல்.ஐ.சி.யில் கிளார்க் வேலையில் சேர்ந்திருந்தான்.

"என்ன கார்த்திக்? ஒண்ணுமே சாப்பிடலை. கீதாவைப் பிடிச்சிருக்கா? என்னம்மா, கீதா எங்க பையனைப் பிடிச்சிருக்கா? இரண்டு பேரும் பதில் சொன்ன பிறகுதான் நாங்கள் மற்றது பேசவேண்டும்" என்று கார்த்திக்கின் அம்மா கேட்டுவிட்டு, தன் கணவனைப் பார்த்தாள். மனைவி சொன்னதை ஆமோதிப்பது போல அவர் புன்னகைத்தார்.

"என்ன கார்த்திக் சார், என் தோழி கீதாவைப் பிடிச்சிருக்கா? பிடிச்சிருக்குன்னு நீங்க சொன்னாதான், கீதாவுடன் தனிமையில் பேச நாங்கள் அனுமதிப்போம்" என்றாள் கவிதா.

உடனே கார்த்திக், "கீதாவுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு தெரியலையே. தனிமையில் பேச நான் தயார். எல்லோரும் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டான்.

கீதாவிடமிருந்து வந்த புன்னகையே அவளுடைய சம்மதத்தைத் தெரிவித்தது.

கார்த்திக்கும், கீதாவும் பத்து நிமிடங்கள் பக்கத்திலிருந்த அறையில் ஏதோ பேசிக் கொண்டிருததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கார்த்திக்கும் கீதாவும் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தார்களே தவிர ஒன்றுமே பேசவில்லை.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை என்று ஒரு கவிஞர் சொன்னது போல அவர்களுக்கே வியப்பாக இருந்தது. இன்றுதான் முதன்முறையாகச் சந்திக்கிறோம் என்ற எண்ணமே இருவருக்கும் எழவில்லை.

கார்த்திக், கீதா இருவரும் வெளியே வந்து அமர்ந்தார்கள்.

கீதாவின் தந்தை, "நாங்கள் எங்கள் பெண்ணுக்கு 10 பவுன் நகை போடுகிறோம்: என்றார்.

கார்த்திக்கின் தந்தை "நாங்களும் கீதாவுக்கு 10 பவுன் நகை தருகிறோம்" என்றார்!

கீதாவின் அம்மா, "வரதட்சணையாகப் பணம் 25,000, மாப்பிள்ளைக்கு ரூபாய் 10000க்கு பட்டு வேட்டி, பட்டுச் சட்டை எல்லாம் எடுக்கக் கொடுக்கிறோம்" என்றாள்.

கார்த்திக்கின் அம்மா "நாங்களும் ரொக்கம் 25,000, பெண்ணுக்குப் பட்டுப் புடவை, பட்டுச் சட்டை வாங்க 10,000 கொடுக்கிறோம்" என்றாள்!

எல்லோருக்கும் வியப்புத் தாளவில்லை.

பிள்ளையின் அப்பா அம்மா தபால் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள். ஓய்வு பெற்ற பின்னும், அப்பா தபால்துறை ஊழியர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். எப்போதுமே சமூகச் சிந்தனை கொண்டவர். அம்மாவும் அதுபோன்ற கருத்துக்களை ஆதரிப்பவள். இருவரும் இப்படிப் பேசியது ஒன்றும் வியப்பல்ல.

கீதாவின் பெற்றோர் திகைத்து நிற்க, கார்த்திக் தனது பெற்றோரைப் பெருமையுடன் பார்த்தான். கீதாவுக்கு நல்ல, பொருத்தமான கணவர் மட்டுமல்ல, சமூக அக்கறையுள்ள மாமனார், மாமியார் கிடைத்தது கண்டு, கவிதாவின் கண்களில் பெருமிதம் தெரிந்தது. கீதாவின் பெற்றோர் இருவரும் பூஜையறையில் இருந்த தெய்வங்களைப் பார்த்துக் கை கூப்பினார்கள். அக்கா இனிமேல் கடையில் அலங்காரப் பதுமையாக நிற்க வேண்டியதில்லை என்று நினைத்து, தம்பி கணேஷின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது.

கீதா நல்ல அழகுடன், நல்ல குணங்களும் கொண்டவளாக இருந்தாள். கார்த்திக் மிகவும் அதிர்ஷ்டசாலி. அழகும், குணமும் உடைய கார்த்திக் கணவனாக அமைவதற்கு கீதாவும் அதிர்ஷ்டசாலிதான்.

தினமும் கீதா இல்லாமல் அலங்காரப் பதுமையாகத் தான்மட்டும் நிற்க வேண்டியதிருக்கும் என்று எண்ணுகையில் கவிதாவின் மனதில் ஒரு ஓரத்தில் சிறிய வருத்தம் இருந்தது. எனினும் தோழி கீதாவிற்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்தது என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

மணப்பெண் அலங்காரப் பதுமையென இருக்கிறாள் என்று பலர் பேசிக்கொண்டது கவிதாவின் காதில் விழுந்தது. விழி ஓரத்தில் திரண்ட கண்ணீர்த் துளிகளைக் கவிதா யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டாள். அது ஆனந்தக் கண்ணீர் அல்லவா?
எஸ். செல்லம்மாள்,
கோயம்புத்தூர்
Share: 




© Copyright 2020 Tamilonline