|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  அன்புள்ள சிநேகிதியே, 
 (வாசகர்களுக்கு: இது கடிதம் இல்லை, தொலைபேசி வழிவந்த கதறல். சிறிது வித்தியாசமானது. தனிப்பட்ட முறையில் சோகமானது)
 
 "ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே; அப்பாவை இழந்துவிட்டுத் துடிக்கிறேனே. அறைஅறையாகப் போய் அவர் இருக்கிறாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைகிறேனே. எனக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறாய் என்று என் அம்மா டெலிபோனில் கதறினாள்.
 
 அன்புள்ள (அம்மா) சிநேகிதியே,
 
 டெலிபோனில் நீ கதறியது இன்னும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது. நானும் சில சமயம் வெடித்துக் கதறியும், பல சமயம் ஊமை அழுகையிலும் எனக்கே auto counseling செய்துகொண்டும்தான் இருக்கிறேன். "என் அப்பாவை எனக்குத் திருப்பிக் கொடு" என்று சின்னக் குழந்தை போல பூஜை அறையில் ரகசியமாகவும் அழுதபடி வேண்டியிருக்கிறேன்.
 
 "ஆயிரம் பிறைகள் கண்டவர்; எல்லாப் பொறுப்புகளையும் முடித்து விட்டார். கஷ்டப்படாமல் போனார். உற்றாரும், உறவினரும் ஒன்று சேர்ந்து ராஜமரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர். இன்னும் நம்மைவிட வயதில் குறைந்தவர்களுக்கு எல்லாம் இந்த இழப்பு நேருகிறது. நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். மனதைத் தேற்றிக்கொள்" என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால், இதெல்லாம் logical components of a loss. ஆகவே, அழுது முடித்துவிடு, அம்மா நினைவலைகளைத் தடுக்காதே. நாம் எந்த வேலை செய்தாலும் மனதின் பின்திரையில் அலை ஓடிக்கொண்டேதான் இருக்கும், வேறு வழியில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடும்போது, இழப்பின் பாரம் குறையும். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. Every one goes through that phase. உனக்குக் கணவர் என்றால் எனக்குத் தந்தை, இல்லையா? நான் இந்த வேதனையைக் கட்டுப்படுத்த என்னென்ன செய்தேன், செய்கிறேன் என்று சொல்கிறேன். நீயும் அப்படிச் செய்து பார். உன் மனதின் வலியை அகற்ற முடியாவிட்டாலும், குறைக்க முடியும் என்று நம்புகிறேன்.
 
 * என் அழுகையை நான் கட்டுப்படுத்தவில்லை. அவர் நினைவுகள் என்னைச் சதா ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவருடைய நல்ல குணங்களை--பச்சாதாபம் அதிகம்; பொறாமை என்றுமே கிடையாது; யாரையும் தன் தொழிலில் ஏமாற்றியது இல்லை; தன்னை வஞ்சித்தவர்களிடமும் பரிவு காட்டியவர்--நினைவுகூர்ந்து பார்த்துக் கொள்வேன் அப்போது இழப்பின் வலி சற்றுக் குறைகிறது.
 
 * முடிந்த மட்டும் தனியாக இருப்பதில்லை. நண்பர்கள், விருந்துகள், மாநாடுகள் என்று மக்கள் நிறைந்த இடத்தில் இருந்தால் தனிப்பட்ட வலி பின்னுக்குச் சென்றுவிடுகிறது.
 
 * ஏதேனும் தொழில்முறைக் கடமைகள் இருந்து சோம்பேறித்தனம் தட்டினால் அப்பாவை நினைத்துக் கொள்வேன். வாலிபச் சுறுசுறுப்புடன், கடைசி நிமிடம்வரை தொழிற்சாலைக்குப் போய்க்கொண்டு, இறப்பைப் பற்றிய நினைவு இல்லாமல், பயமும் இல்லாமல் இருந்தவர்; எதிர்கால நம்பிக்கைகளுடன் வாழ்ந்தவர். எனக்கும் சுறுசுறுப்பாக ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பு ஏற்படும்.
 
 * என் இழப்பை நினைத்து வருந்த, எனக்கும் ஆறுதல் சொல்ல, என் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள நிறைய நண்பர்கள் இருந்தார்கள். There is no substitute for human comfort. உனக்கும் அது நிறைய இருக்கிறது.
 
 * நிறையச் சண்டைகள், வாக்குவாதங்கள் இத்தனை வருட தாம்பத்தியத்தில் உனக்கு இருக்கத்தான் செய்யும். அதை நினைத்தும் குற்ற உணர்ச்சிகள் எதுவும் வேண்டாம்.
 
 * சில சமயம் என்னுடைய நினைவுகளையே, நான் வேறொரு மனுஷியாக நினைத்து, உற்று கவனிப்பேன். ஆராய்வேன். அப்போதும் வேதனை சிறிது குறையும்.
 
 * ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் வயிற்றில் ஏற்படும் பந்து போன்ற உணர்ச்சி பஞ்சு போலக் குறையும்.
 | 
											
												|  | 
											
											
												| மொத்தத்தில், இதெல்லாம் ஒரு முயற்சிதான். இழப்பின்போது தர்க்கம் வேலை செய்யாது. உணர்ச்சிதான் மேலோங்கி இருக்கும். அவரவர் வலி அவரவருக்குத்தான் தெரியும். எப்போது குறையும், மறையும் என்று தெரியாது. ஆன்மீகமும், சமூகசேவையும் கொஞ்சம் உதவும். 
 அப்பா பரப்பிரம்மத்துடன் கலந்து விட்டார். அவரது நினைவுகள்தாம் நமக்குச் சொந்தம். நம் நினைவு இருக்கும் மட்டும் அவற்றை யாரும் பறிக்க முடியாது. இந்த இழப்பின் நேரம், காரணம் என்றெல்லாம் பார்க்கும்போது, நாம் நிறையக் கொடுத்து வைத்திருக்கிறோம்.
 
 சீக்கிரம் சந்திக்க முயற்சி செய்கிறேன்.
 உன் மகள்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |