|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  அன்புள்ள சிநேகிதியே 
 நான் என் கணவர் இருவரும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படிப்பால் முன்னுக்கு வந்து, அமெரிக்கக் கனவில் இங்கே வந்து வசதிகளைப் பெருக்கிக் கொண்டோம். இரண்டு குடும்பங்களுக்கும் நிறைய உதவி செய்தோம். எங்களுக்கு 3 குழந்தைகள். அவர்களையும் நன்றாக வளர்த்தோம். எங்களுக்கென்று எந்தச் சேமிப்பும் இல்லாமல் குழந்தைகளின் கல்விக்காக (எல்லோரும் தனியார் கல்லூரி) செலவு செய்தோம்.
 
 சமீபத்தில் என் கணவர் வேலையை இழந்தார். என்னுடைய முதல் மகள், இரண்டாவது மகள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டனர். மூன்றாமவள் முதல் வருடத்தில் இருக்கிறாள். என் கணவரின் வேலை இழப்பு ஒரு பேரிடி என்றால், அமெரிக்க மண்ணில் வளர்ந்த எங்கள் குழந்தைகளின் மனோபாவம் இன்னும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
 
 55 வயதுக்கு மேல் ஆகிவிட்ட என் கணவருக்கு மறுபடியும் அதேபோல வேலை கிடைக்குமா என்பது சந்தேகம். வீட்டு அடமானம் (mortgage) கணிசமாகக் கட்ட வேண்டிய நிலை. பெண்ணின் தொடர்ந்த கல்லூரிப் படிப்பு, மாதந்தோறும் எதிர் பார்க்கும் என்னுடைய, அவருடைய பெற்றோர்கள்.
 
 கல்லூரி முடித்துவிட்டு இப்போது வேலை பார்க்கும் பையனும், வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்ணும் ஏதேனும் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். அப்பாவிற்கு வேலை போனதைப் பற்றி உதட்டளவில் அனுதாபத்தைத் தெரிவித்து விட்டுத் தங்கள் வழியில் சென்று விட்டனர். 'அவர்களிடம் எந்த உதவியும் கேட்காதே' என்றுதான் சொன்னார் என் கணவர். எனக்குத்தான் முடியவில்லை. 3 மாதம் பொறுத்துப் பார்த்துவிட்டு வெட்கத்தை விட்டு அவர்களிடம் கேட்கவே கேட்டேன். அவமானம்தான் மிஞ்சியது. 'ஏன் சேர்த்து வைக்கத் தெரியாமல், பொறுப்பில்லாமல் நடந்து கொண்டீர்கள்? எதற்குப் பெரிய வீட்டை வாங்கினீர்கள்? இந்தியாவில் உள்ளவர்களுக்குச் சுய கௌரவம் கிடையாதா? எவ்வளவு நாள்தான் உங்களைச் சார்ந்து இருப்பார்கள்?' என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள். மிகவும் நொந்து போய் விட்டேன். இவர்களுடைய எதிர்காலத்துக் காகத்தான் உற்றார், சுற்றம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் குளிரிலும், பனியிலும் காரை ஓட்டிக் கொண்டு எத்தனையோ பிரச்சினை களைச் சமாளித்து இங்கே வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய சம்பளத்தை வைத்துக் கொண்டு எதிர் காலத்தை இங்கே இருந்து சந்திக்க முடியுமா என்று தோன்றுகிறது. "2, 3 வருடம் கழித்து இந்தியாவிற்குத் திரும்பி போய்விடலாம். கவலைப்படாதே'" என்கிறார் இவர். இதுதானா உண்மையில் முடிவு? பிள்ளை, பெண் எல்லோர் பேரிலும் ஒரு பற்றறுந்த நிலை வந்துவிட்டது. வளர்ப்பில் எங்கோ தவறு செய்து விட்டோமோ? ஏன் இவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள் இவர்கள்?
 
 இப்படிக்கு
 ........................
 | 
											
												|  | 
											
											
												| அன்புள்ள 
 அருமையாக இந்தியக் கலாசாரப்படி உங்கள் வாழ்க்கையைச் செலுத்தியிருக்கிறீர்கள். வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. பெரிய தவறாகச் செய்வதற்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய கணிப்பு என்னவென்றால் இந்த வேதனை வரக் காரணம் பிள்ளைகள் மேல் எதிர்பார்ப்பு களை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களோ (could you have taken the children for granted?) என்பதுதான்.
 
 சிறுவயது முதலே நம்முடைய கலாசாரத்தில் கடமையும், கட்டுப்பாடும் நம் மேல் திணிக்கப்படுகின்றன. அந்தச் சூழ்நிலையில் வளரும் போது நம்முடைய அடிப்படை விழுமியங்களாக (core values) அதையே எடுத்துக் கொண்டு, நம்மைச் சார்ந்த குடும்பத்தினருக்கு உதவி செய்வதை நம்முடைய கடமையாக எடுத்துக் கொண்டு இயன்றதைச் செய்கிறோம். (இல்லாவிட்டால் குற்ற உணர்ச்சி வந்து விடுகிறது)
 
 ஆனால் இங்கே தன்னம்பிக்கையையும், சுயசிந்தனையையும் ஊக்குவிக்கும் கலாசாரத்தில் நம் குழந்தைகளை வளர்க்கிறோம். அப்போது சுயநலம் சிறிது தலைதூக்கித் தான் நிற்கிறது. அதைச் சிறுவயதிலே நாம் இனம் கண்டு கொள்வ தில்லை. நம் குழந்தைகள் எல்லாவற்றிலும் மிளிர வேண்டும் என்று பணம் செலவழித்து அத்தனை கலைகள், வித்தைகளை கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் இது என்னு டையது என்று அழுத்தமாக ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு அந்தப் போக்கை மாற்று வதற்கு (அவ்வப்போது கண்டிக்கிறோம் என்பதைத் தவிர) பெரிதாக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை என்பது என்னுடைய ஆதங்கம். பொதுவாகச் சொல்கிறேன், எல்லோரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை.
 
 இரண்டாவது எதிர்பார்ப்புகள். இந்த ஊர்ப் பண்பாட்டில் ஊறிய குழந்தைகள் ''பெற்றோர்கள் தங்களால் முடிந்ததைத் நமக்குச் செய்ய வேண்டும். எந்த எதிர் பார்ப்பும் கூடாது. நாங்கள் திருமணம் செய்து கொண்டு எங்கள் குழந்தைகளுக்குச் செய்வதுதான் எங்கள் கடமை" என்று நினைக்கிறார்கள். நாம் வளர்ந்த சூழல் வழியில் நாம் சில எதிர்பார்ப்புக்களை வளர்த்துதான் வைத்திருக்கிறோம். அவர் களுடைய சூழல் வழியில் பார்த்தால், அவர்களுடைய நிகழ்கால ஆசைகளும் எதிர்காலத் திட்டங்களையும் பற்றித்தான் சிந்தனை. இது சரி அல்லது தவறு என்று சொல்ல எனக்கு அருகதையில்லை.
 
 உங்கள் குழந்தைகள் உங்கள் மேல் பாசம் வைத்திருப்பவர்கள் தான். ஆனால், அந்தப் பாசத்தை ஒரு சின்னத் தியாகம் மூலம் வெளிக்காட்ட அவர்களுக்குப் பக்குவம் தேவைப்படுகிறது. அவர்களிடம் பற்றின்மையை வளர்த்துக் கொள்ளாமல் இதை ஒரு படிப்பினையாக எண்ணிப் பாருங்கள். அது உங்களுக்கு ஒரு வேகத்தைக் கொடுக்கும். தன்னம்பிக்கையும், பிறரைச் சார்ந்து இருக்காத தன்மையையும் இன்னும் பெருக்கும். Your self esteem will improve. Be proud you are a giver - wheather money or love to your family members or children. வேதனையே வராது.
 
 வாழ்த்துக்கள்
 சித்ரா வைத்தீஸ்வரன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |