|  | 
											
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| அன்புள்ள சிநேகிதியே, (இது வாசகர் கடிதம் அல்ல. நட்புக்கு உதாரணமாகவும், தாய்மைக்கு உதாரணமாகவும், தன்னலமற்ற சேவைக்கு உதாரணமாகவும் எனக்கு இருந்த திருமதி சாவித்திரி வைத்திக்கு இந்தப் பகுதி சமர்ப்பணம்.)
 
 'விஷ்ராந்தி' என்கிற முதியோர் இல்லம் பாலவாக்கத்தில் (கிழக்குக் கடற்கரை சாலை) சென்னைக்கு அருகில் இருக்கிறது. ஆதரவற்ற முதியோர்களை அரவணைத்து ஏற்றுக்கொண்ட இல்லம். சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் ஒரு மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்து வாடகை வீட்டில் அமர்த்தி, ஏவி.எம். குடும்பத்தினர் நிலம் கொடுக்க, 'மண்டே சாரிடி கிளப்' அங்கத்தினர்கள் (அதுவும் சாவித்திரி வைத்தி அவர்கள் ஏற்படுத்திய சங்கம்தான்) நன்கொடையால் தளிர்த்து, இப்போது 170 முதியோர்களை ஆதரித்து வரும் விஷ்ராந்தி - சாவித்திரியின் உயிர்மூச்சு.
 
 எனக்கு அவர் அறிமுகமானபோது அவருடைய அந்த எளிமை, அந்தப் புன்சிரிப்பு, அந்த மரியாதை, எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் அந்த சுபாவம் என எல்லாமே என்னை ஈர்த்தன. என் தாயின் வயது அவருக்கு. ஆனால் என்னை 'வாருங்கள்' என்று மரியாதையாகத்தான் கூப்பிடுவார். நான் அவரை என்னுடைய சமூகத்தாயாக ஏற்றுக்கொண்டேன். எங்களுக்குள் அப்படி ஒரு பந்தம் இருந்தது. நிறைய விஷயங்களை என்னுடன் கலந்து ஆலோசிப்பார். எதை எழுதுவது, எதை விடுவது என்பதே எனக்குத் தெரியவில்லை. என் வீட்டில் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பிஎச்.டி. முடிக்கும் சமயத்தில் அவர் வீட்டிலேயே இரண்டு மாதம் தங்கியிருக்கிறேன். அவ்வளவு எளிமையான இடம். அவருக்குக் குழந்தைகள் இல்லை. மாமாவும் அவரும் மட்டும்தான். ஒரு சன்ன மர டைனிங் டேபிள், இரண்டு சேர், ஓர் உடைந்த ஸ்டுல் இருந்தது. 'சௌஜன்யா' என்கிற ஆலோசனைக் கூட்டம் எப்போதும் அந்த வீட்டில்தான் நான் நடத்தியிருக்கிறேன். 15-20 உறுப்பினர்கள் கூடுவோம். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு டீயும் பிஸ்கட்டும் அவ்வளவுதான். ஆனால், என்ன இன்பம்! எப்படிப்பட்ட ஆத்மார்த்தமான உறவுகள்! அருமையான நாட்கள்.
 
 
  
 முதியோரின் உடல்நிலையையும், மனநிலையையும் அவரைப்போல அந்தக் காலகட்டத்தில் புரிந்து வைத்திருப்பவர்கள் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அந்த இல்லத்தில் ஒரு மூதாட்டி மரணம் அடைந்துவிட்டார். பிள்ளை வீட்டுக்கு செய்தி அனுப்பினால் அவர்கள் வர மறுத்துவிட்டார்கள். சாவித்திரி முடிவெடுத்தார், இந்த மூதாட்டிக்கு, பிள்ளைக்குப் பிள்ளையாக நான் கொள்ளியிடுகிறேன் என்று. அதற்குப் பிறகு நூற்றுக்கணக்கில் முதியோர்களைக் கரையேற்றியிருக்கிறார். பொங்கல் இல்லை, தீபாவளி இல்லை. முடியாது என்று சொன்ன நாட்களே இல்லை.
 
 நான் அவரைத் தமிழ்நாட்டின் மதர் தெரசாவாகப் பார்த்தேன். பெரிய காந்தீயக் குடும்பத்தில், செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தவர். தந்தை வக்கீலாக இருந்தாலும் பொருள் சேர்த்து வைக்கவில்லை. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உடனே ஏதோ வேலை செய்ய ஆரம்பித்தார். வெகு நாட்கள் கழித்து எம்.ஏ. படித்து முடித்தார் என்று நினைக்கிறேன். அவருக்கு 'பத்மஸ்ரீ' கிடைக்கவில்லை என்பது என் குறை. ஆனால், அவருடைய சேவை அதற்கெல்லாம் அப்பாற்பட்டது.
 
 ஆறு வருட காலம் நினைவிழந்து இருந்து, 90 வயது முடிந்த நிலையில் தன் இறுதி மூச்சை விட்டு, பிரிந்தார். She is a legend. She is a role model. She is an icon of sacrifice and selfless service. ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும்போதெல்லாம் பாலவாக்கத்திற்குச் சென்று அவரைப் போய் பார்த்துவிட்டு வருவேன். கண்கள் மூடிய மோன நிலையில் படுத்துக் கொண்டேதான் இருப்பார். ஆனால், எனக்கு என் தாயைப் பார்த்துவிட்டு வரும் திருப்தி. விஷ்ராந்தியைச் சேர்ந்தவர்கள், இந்த கோவிட் சமயத்திலும் அழகாக அவரை வழியனுப்பி வைத்தார்கள் என்று அறிந்தேன்.
 
 அவர் போய்விட்டாலும், அருமையானதோர் உறவின் நினைவலைகள் இன்னும் ஆழமாக என் உள்ளத்தில் மோதுகின்றன. குட்பை சாவித்திரி.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |