|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| அன்புள்ள சிநேகிதியே 
 வயதான பெற்றோர்களை எப்படிச் சமாளிப்பது என்று ஏதேனும் புத்தகம் போடுங்களேன், ப்ளீஸ். அதற்கு முன்பு அவசரமாக சில ஆலோசனைகள் தேவை, I am literally living in hell. என் அண்ணா குடும்பத்துடன் என்னுடைய பெற்றோர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. "என்னை அமெரிக்காவுக்கு அழைத்துக் கொண்டு போய்விடு. இல்லாவிட்டால் நாங்கள் ஏதாவது 'முதியோர் இல்லத்தில்' சேர்ந்து விடுவோம். எங்கள் விலாசம் கூடக் கொடுக்கமாட்டோம். அங்கேயிருந்தே போய் விடுவோம்" என்றெல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் செய்து ஒருமாதிரி இங்கே வந்து விட்டார்கள். எனக்காக, என் எதிர்காலத்துக்காக நிறைய அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று என் வசதிக்கும் மீறி பெரிய வீட்டை வாங்கி (With In-law apartment) என்னுடன் தங்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
 
 இங்கே ஒன்று சொல்லியாக வேண்டும். என்னுடையது காதல் திருமணம். இரண்டு குடும்பங்களிடம் பயங்கர எதிர்ப்பு இருந்தது. இரண்டு குடும்பங்களுமே 4-5 வருடங்கள் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருந்தன. என் மனைவி மிக நியாயமானவள். அந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, அவள் சொல்லை நான் மதிப்பவன். எங்களுக்குள் எந்தக் கருத்து மோதல் இருந்தாலும் நியாயம் பேசி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொள்வோம். என் மனைவி, குழந்தைகளால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், எங்களுக்குத் திருமணமான புதிதில் என் பெற்றோர்கள் அவளைப் பற்றிப் பேசி, அவளை நடத்திய விதம் அவளுக்கு இன்னும் ஆறாத காயமாக இருக்கிறது. அதேபோல அவளுடைய குடும்பம் என்னைப் பற்றிப் பேசியதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவளுடைய அண்ணனின் காதல் திருமணத்துக்கு ஒத்துப் போனவர்கள், அவள் என்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் கேட்டபோது, என் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசினார்கள் என்று அவர்கள் உறவையும் அறுத்துவிட்டாள். இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
 
 என் பெற்றோரை நிரந்தரமாக வைத்துக் கொள்வது பற்றி விவாதம் செய்தபோது, இருவருமே சேர்ந்து முடிவுக்கு வந்தோம். ஒரே வீட்டில் நிரந்தரமாக இருப்பது சரிப்பட்டு வராது - உணவு, பழக்கவழக்கங்கள், privacy என்று, இந்த ஏற்பாடு செய்தோம். எல்லா கண்டிஷனும் சொல்லித்தான் அழைத்து வந்தோம். முதல் மூன்று மாதம் சரியாக இருந்தார்கள். அப்புறம் கொஞ்சம், கொஞ்சமாக கம்ப்ளெயிண்ட். எல்லாம் சில்லறை விஷயம்தான். ஆனால், வேலை முடிந்து களைப்பாக அவர்கள் இடத்துக்குப் போனால் ஏதேனும் ஒரு குறைதான். நான் வரும் நாளைக் கண்டு கொள்ளமாட்டார்கள். வராத நாளை எண்ணிக்கொண்டு இருப்பார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு போன இடங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆசைப்பட்ட இடங்களுக்கு நாங்கள் கூட்டிச் செல்வதில்லை என்று குறைப்படுவார்கள். என்னுடைய கடமையிலிருந்து நான் தவறிப் போன குற்ற உணர்ச்சியை வளர்க்கும் படியாகவேதான் பேசுகிறார்கள். நானும் சகித்துக் கொண்டுதான் இருந்தேன்.
 
 ஆனால் அதற்கும் ஒரு 'breaking point' சமீபத்தில் வந்துவிட்டது. என்னுடைய மாமனார், மாமியார் எங்களுடன் ஒருமாதம் வந்து தங்கினார்கள். அவர்கள் பிள்ளை வீட்டுக்கு வந்து 6 மாதம் தங்கியதில் இந்த டிரிப். எங்கள் வீட்டிற்கு வருவது மூன்றாவது முறை. முதல் இரண்டு முறை என் குழந்தைகளுக்கு baby sitting. வெளியில் அதிகம் அழைத்துப் போக முடியவில்லை. இந்தத் தடவை இரண்டு நாள் லீவ் போட்டு எங்கேயோ அழைத்துக் கொண்டு போய்விட்டேன். போன இடமும் அவர்களுடைய உறவினர் வீடு. அதனால் அப்பா, அம்மாவை அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. என் நண்பர்களை வைத்து அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ஒரு வாரக் கடைசியில் போய்விட்டு வந்தோம். இத்தனைக்கும் அடிக்கடி போன் செய்துகொண்டுதான் இருந்தோம்.
 
 அவ்வளவுதான், வந்தது வினை. ஒரு மாதமாக அவர்களுக்குள் இறுக்கி வைத்திருந்த அத்தனை கோபத்தையும் இவர்கள் ஊருக்கு கிளம்பிய பிறகு என்னிடம் கொட்டித் தீர்த்து விட்டார்கள். எனக்கு பெண்டாட்டி தாசன், மாமியார் தாசன் என்று அடைமொழி, வசைமொழி. எனக்கும் தாங்க முடியவில்லை. அவர்களை குத்திக் குதறி விட்டேன். இப்போது 10 நாளாக என் அம்மா ஒரே அழுகை. இரண்டு பேரும் சூட்கேஸ் பேக் செய்து விட்டார்கள். 'உடனே எங்களுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்' என்று ஒரு வாரமாக ஸ்ட்ரைக். மளிகைச் சாமான் லிஸ்ட் கொடுப்பதில்லை. நான் போனால் என்னிடம் பேசுவதில்லை. என் மனைவியை தினம் அனுப்பி status report கேட்டுக் கொள்கிறேன். அவளிடம் என்னைப் பற்றிச் சொன்னதையே திருப்பிச் சொல்லி புகார்.
 
 இப்போது அவளுக்கும் பொறுமை போய்விட்டது. "நீங்களே ஏற்படுத்திக் கொண்ட பிரச்சினை. You solve it yourself" என்று ultimatum கொடுத்துவிட்டாள். அவர்களைத் திருப்பி அனுப்பினால் என் அண்ணா அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களும் அங்கே போவதாக இல்லை. முதலில் 30 மணி நேரம் எப்படிப் பயணம் செய்யப் போகிறார்கள் என்பதே கவலையாக இருக்கிறது. இரண்டு பிள்ளைகளைப் பெற்ற அவர்களை முதியோர் இல்லத்தில் விடவா நான் வழி செய்யமுடியும்? இந்த தடவை ரொம்ப ரோஷத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். நான் அம்பயர் ஆக இருப்பேன். இப்போது என்னையே இழுத்து விட்டார்கள். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. என்னதான் வழி? எனக்கு ஆபீசிலும் stress. Very frustrating. என்னதான் கடமையைச் செய்தாலும் இந்தப் பெரியவர்கள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
 
 இப்படிக்கு
 ................
 | 
											
												|  | 
											
											
												| அன்புள்ள சிநேகிதரே 
 எனக்கு இப்போதைக்குத் தெரிந்த ஒரே வழி 'சரணாகதி தத்துவம்.' இது எவ்வளவு அருமையான strategy. நம் பெரியவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று நான் பிரமித்துப் போகிறேன். ஒருவருடைய மனது எவ்வளவு வக்கிர சிந்தனைகளைத் தேக்கிக் கொண்டிருந்தாலும், தன்னுடைய காலில் ஒருவர் விழும்போது, அந்த ஒரு நொடி அந்த மனம் வாழ்த்தத்தான் செய்கிறது. அந்த ஒரு நொடியில் மனம் வெறுப்பை மறக்கிறது. பொறாமையை விலக்குகிறது. சிறிய வயதில் இந்தப் பெரிய உண்மை எனக்கு விளங்கவில்லை. இந்தப் பெரிய வயதில் இந்தச் சிறிய செய்கைக்கு அதிகம் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
 
 உங்கள் மனைவியும் உடன்பட்டால் நீங்கள் இருவருமே காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதில் தவறில்லை. 'காலால் உதைத்து விட்டு காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதால் என்ன பிரயோசனம்?' என்றெல்லாம் வார்த்தைகள் வரும். அதற்குத் தயாராகுங்கள். பெற்றவர்களிடம் என்ன ஈகோ? பெற்றவர்கள் - அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களோ அப்படித்தான் இருப்பார்கள். கோபக்கார அப்பா, நறுக்கென்று பேசும் அம்மா, கேலியாகப் பேசும் அப்பா, ஜாலியாகப் பேசும் அம்மா, எதிர்பார்ப்புகளை இங்கிதமாகத் தெரிவிக்கும் அப்பா, எதிர்ப்புகளை அதிரடியாகத் தெரிவிக்கும் அம்மா என்று எத்தனையோ விதம். சிறுவயதில் அவர்களைப் பொறுத்துக் கொள்கிறோம். இப்போது பொருமித் தள்ளுகிறோம். காரணம், நாம் உறவுகளைப் பார்க்கும் விதம்தான். நாம் பெற்றோர்களை கடமையாகவும், நம் குழந்தைகளை உடைமையாகவும் நினைத்துக் கொள்கிறோம். எப்போது ஒரு உறவை கடமையாகக் கருதுகிறோமோ, அப்போது அது நமக்கு சுமையாகத் தெரிகிறது. உடைமையாக நினைக்கும்போது அதை எப்படியாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சிதான் முன் நிற்கும். நாம் நம்மை எவ்வளவு அதற்காக வருத்திக் கொண்டாலும் அது சுமையாகத் தெரிவதில்லை.
 
 பெரியவர்களுக்கு நம் அரவணைப்பு தேவையாக இருக்கிறது. நம் அன்பு தேவையாக இருக்கிறது. இடவசதி, வைத்திய வசதி, பொருளாதார வசதி செய்து கொடுப்பதால் நம் கடமைதான் நிறைவேறும். ஆனால் சுமை குறையாது. பையனுக்கு soccer game, பெண்ணுக்கு கராத்தே அல்லது சங்கீத வகுப்பு என்று நேரம் ஒதுக்கும்போது, பெரியவர்களின் ஆசைகளைத் தள்ளுபடி செய்து விடுகிறோம். இன்று 'ஸ்ரீராமநவமி' கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும்; இந்த படம் அப்பாவுக்குப் பிடிக்கும். அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று நேரம் ஒதுக்குகிறோமா என்று தெரியவில்லை. இதுபோல் அழகாகச் செய்யும் சில குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். வாரத்தில் ஒருநாள் அவர்களோடு சாப்பிட வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஒரு பழைய தமிழ் சினிமா ஒன்றாகப் பார்க்க வேண்டும் என்று அந்த மகன் ஒரு அட்டவணை போட்டு வைத்திருக்கிறார்.
 
 உங்கள் மனைவி நியாய முறையில் எந்தப் பிரச்சனையையும் அணுகுவார் என்பதால் இந்தக் கருத்துக்களை எழுதுகிறேன். அவர் உங்களுடன் ஒத்துழைக்காவிட்டால், கொஞ்சம் சிரமம்தான். நீங்கள் எவ்வளவு மன்னிப்புக் கேட்டாலும் பிடி கொடுக்காமல் உங்கள் பெற்றோர்கள் இருந்தால், ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்யலாம். அவர்கள் எங்கு தங்க விரும்புகிறார்களோ அதற்கு நீங்களே வழி செய்து காட்டுங்கள். யாரிடமும் குறை கண்டு பிடிப்பவர்கள் எங்குமே நிலையாகத் தங்க மாட்டார்கள். உங்களிடமே திரும்ப வருவார்கள். அதற்கும் தயாராக இருங்கள். எவ்வளவு சொன்னாலும், கெஞ்சினாலும் கேட்காமல் வழி தவறிச் செல்லும் குழந்தைகள் நம்மிடம் திரும்பி வரும்போது அரவணைத்துத் தானே கொள்கிறோம். அப்பா, அம்மா, அப்பா அம்மா தானே. They are not our liabilities. They are also assests like our children.
 
 வாழ்த்துக்கள்
 டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
 கனெக்டிகட்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |