| பெண்மனம் பசி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| சூப்பர் மார்க்கட்டில் கோவிந்து என்னைப் பார்த்ததுமே ஓடிவந்தார். "உங்க மச்சினன் மாதவன்தான் சொன்னான். வர வெள்ளிக்கிழமை உம்ம வீட்டில இலக்கியக் கூட்டமாமே. எத்தினி நாளாச்சு
 ஒரு கவியரங்கம் போட்டு" என்று சொல்லி கண்ணில் வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
 
 நான் மேல்விவரம் கேட்குமுன் "கவலப்படாதேயும். ஜமாய்ச்சுபிடலாம். கவிதை நோட்டு தயாரா இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
 
 
 வீட்டுக்கு வருமுன் இன்னும் நாலு பேர் கட்டாயம் கலந்து கொள்வதாய் செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்பினார்கள். எனக்கு என் மைத்துனன் மாதவன்மேல் கோபம் வந்தது.
 
 என்ன நடக்கிறது இங்கே? என் வீட்டில இலக்கியக் கூட்டமா? என் மனைவிக்கு இது தெரிந்தால் பூகம்பம் வெடிக்காதா? எதற்கும் அவள் காதில் ஒரு வார்த்தை சொல்வது நலம் என்று நினைத்தேன்.
 
 அதற்குள் என் மனைவியே சொன்னாள்,
 
 "வெள்ளிக்கிழமை பத்து பெண்களைக் கூப்பிட்டுருக்கேன், நம்ம வீட்ல விளக்கு பூஜைக்கு."
 
 "சரிம்மா. பெண்கள் மட்டும்தானா. அவங்க ஹஸ்பென்டும் கூட வரலாமா?"
 
 "ஆமா. அவங்களையும் அழச்சிட்டு வரச் சொல்லியிருக்கேன்.
 
 புலவர் பூங்காடனாமே. வில்லிபாரதம் எல்லாம் படிச்சவராமே.
 கதாகாலட்சேபம் கூடச் செய்வாராமே. பெண்கள் பூஜை பண்றச்ச ஆண்கள்
 அவர் பேச்சைக் கேக்கலாமே. மாதுதான் ஐடியா குடுத்தான். சரி அழச்சிட்டு வாடான்னேன். அவன் ஹாஸ்டல்கிட்ட இருக்கிற ஓட்டல்ல தங்கியிருக்காராம்."
 
 
 
 மாதுவைத் தனியாகச் சந்தித்தேன். "என்னடா பாவி. வெள்ளிக்கிழமை சாயங்காலம் என் வீட்ல இலக்கியக் கூட்டம், கவியரங்கம், திறனாய்வுன்னு எல்லாரும் தலைக்குத் தலை
 ஏதோ சொல்றானுக. உங்க அக்காவானா வில்லி பாரதம் விளக்கு பூஜைன்னு ஏதோ
 சொல்றா!"
 
 "அக்கா மத்த பெண்களோட பூஜை பண்ணப் போறா. நமக்கு சுலோகம், பூஜைன்னா அலர்ஜியில்லயா. வாயில சமிஸ்கிருதம் வருமா நமக்கு? தோட்டத்தில ஓரத்தில ஒரு இலக்கியக் கூட்டம் போட்டு
 , ரெண்டு பெக் ஊத்திக்கிட்டா சூப்பரா இருக்கும்னு ஐடியா பண்ணினேன்.  இப்படி நம்ம வீட்ல ஒரு
 டிரிங்க் பார்ட்டி கொடுத்து எத்தனை நாளாச்சு... நெஞ்சில கை வச்சு சொல்லுங்க."
 
 அவன் சொன்னதிலும் ஒரு நியாயம் இருந்தது.
 
 
 
 பரிசோதனைக்குப் போன எனக்கு பியர் உடம்புக்குக் கெடுதல்னு டாக்டர் சொல்லப்போக என் மனைவி ரூட் பியர்கூட வாங்குவதில்லை.
 காஃப் சிரப்கூட கிடைப்பதில்லை. ஸ்காட்சா? மூச்... ஸ்காட்ச் டேப் கூட வாங்குவதில்லை.
 
 மாதுவின் திட்டம் என்னைக் கவர்ந்ததில் வியப்பில்லை. "அருமையான சிங்கிள் மால்ட் வெச்சிருக்கான் காஸ்ட்கோல. ரெண்டு பாட்டில வாங்கி வெச்சிருக்கன். ரெண்டு பெக் போட்டீங்கன்னா அசந்துடுவீங்க."
 
 
 
 ஆசை யாரை விட்டது? "ஏதோ உங்க அக்கா என்னை வையாம பாத்துக்க" என்றேன்.
 
 "
 
 அக்காவை நான் பாத்துக்கறேன். எதுக்கும் நீங்க ரெண்டு பாட்டு வில்லிபாரதம்
 படிச்சு வையுங்க. அக்கா பூங்காடன் என்ன சொன்னார்னு கேட்டா சொல்ல வசதியாயிருக்குமில்ல".
 
 "
 
 யாருடா இந்தக் காடன்?
 "
 
 
 
 "தமிழ்நாட்டில பெரிய்ய புலவராம். அமைச்சருக்கு வேண்டப்பட்ட ஆளு. அவரு பெண்ணு வாஷிங்டன்ல இருக்காம். பார்க்க வந்திருக்காரு. மூணு மாசம் அமெரிக்கால
 இருப்பாராம். காளிமுத்து வைத்தியர்
 போல டூர் ப்ளான் போட்டு ஊர் ஊரா சுத்தராரு. தமிழ்ச் சங்கக் கூட்டம் முடிஞ்சவுடனே நம்ம வீட்டுக்கு வாங்கன்னேன். சரின்னாரு.
 
 உங்க சார்புல நானே எல்லோருக்கும் அழைப்பு கொடுத்துட்டேன். நீங்க இதுல
 ஒரு கழிநெடிலடி விருத்தம் பாடினா நன்னா இருக்கும்."
 
 
 
 வயித்தைக் கலக்கியது நிஜமாகவே. .
 
 
 
 
 வெள்ளிக்கிழமையும் வந்தது.
 
 என் வீட்டுத் தோட்டத்துக் கோடியில் ஒரு மேசை, சுற்றிலும் எட்டு நாற்காலிகள், மேசைமேலே ஒரு சொம்பில் தண்ணீர், அருகில் டம்ளர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
 
 நான், சீனிவாசன், சர்மா, கோவிந்து, ராமனாதன், பிரகாஷ், ஸ்ரீதர், புலவர் பூங்காடன் பொன்னுச்சாமியோடு அமர்ந்திருந்தோம்.
 
 ஆரம்பிக்கலாமா என்றார் சீனிவாசன். பூங்காடன் பொன்னுச்சாமி உயரே பார்த்தவாறு ஒரு கவிதை சொன்னார்.
 
 மலர்செண்டு ஒன்றைக் கண்டு
 மலரில் மதுவிருக்கு மெண்டு
 மலர்நாடி வந்தது வண்டு;
 
 மதுவில்லா மலரால் நொந்து
 மனமது மிகமிக வெந்து
 மெளனமாய்ப் பாடியது சிந்து
 
 "பலே, பலே! அய்யா சரிய்யா சிம்பாலிக்கா சொல்லிட்டாரு நமக்கு இப்ப மது வேணும்னு" என்று பிரகாஷ் சொல்ல அனைவரும் கைதட்டினார்கள்.
 
 "மாது எங்க? அவன் வந்தாதானே கூட்டம் தொடங்கலாம்" என்றான் ஸ்ரீதர். அவன் சொன்ன சமயம் என் மைத்துனன் மாது வீட்டின் பக்கவாட்டுக் கேட்டைத் திறந்து கையில் ஒரு பை, திருட்டுப் பார்வையுடன் சுற்றும் முற்றும் பார்த்தவாறு வந்தான். பையிலிருந்து மேசைமேல் ஒரு லிடெர் விஸ்கி
 பாட்டலை வைத்ததும் எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.
 
 "இது பத்துமா எல்லாருக்கும்" என்றார் பொன்னுச்சாமி சந்தேகப் பார்வையுடன். மாது இன்னொரு பாட்டிலை எடுத்து வைத்தான். "வெவரமான புள்ளதான்" என்று பாராட்டினார். பிலாஸ்டிக் பையிருந்து ஐஸ் துண்டுகளை தட்டில் போட்டான். இன்னொரு பையிலிருந்து பக்கோடாவை பேப்பர் தட்டில் பரப்பிவிட்டு, "ஐஸ் இன்னும் கொஞ்சம் கூடுதலா வாங்கியிருக்கணும். மறந்துட்டேன்" என்றான்.
 
 "வீட்டுக்குள்ள போயி ஃப்ரிட்ஜுல ஐசு இருந்தா எடுத்து வரவா?" என்று கேட்டேன்.
 
 "அய்யோ வாணாம். உள்ள பூஜை நடக்குது. ஹால், கிச்சன் எல்லாம் பெண்கள் கூட்டமா உட்கார்ந்து பூஜை பண்ணிட்டுருக்காங்க. இப்ப நீங்க போய் அண்டா, குண்டா, ஐசுன்னு கேட்டா, அக்கா எதுக்கு ஏன்னு கேட்டே உங்களைக் கொன்னுடுவா" என்று எச்சரித்தான்.
 
 லேசாகத் திறந்திருந்த கண்ணாடிக் கதவூடே "அயிகிரி நந்தினி" என்று பெண்கள் கோரசாக பாடும் சப்தம் மெல்லக் கசிந்தது.
 
 மாது பவ்யமாக விஸ்கியை எடுத்து சிறிதளவு எல்லா கோப்பைகளிலும் ஊற்றி, "சோடாவா தண்ணியா எது வேணும். ஐசு இந்தக் கிண்ணத்தில இருக்கு" என்றான். எல்லோரும் தேவையானதை ஊற்றிக்கொள்ள பூங்காடன் தன் டம்ளரைப் பொத்திக் கொண்டார்.
 
 "அருமையான வெளிநாட்டு சரக்கு. இதில போயி தண்ணி, சோடா, ஐசுன்னு போட்டுக் கேவலப்படுத்தலாமா? எனக்கு விஸ்கியே இன்னும் ஊத்துங்க" என்று கேட்டு டம்ளரை நிரப்பிக் கொண்டார். நான் "சியர்ஸ்" என்று சொல்ல மற்றவர்கள் கோப்பைகளைத் தொட்டு ஆமோதிக்குமுன், தன் டம்ளரைத் தூக்கி ஒரே வாயில் விஸ்கியை விழுங்கினார் பூங்காடன்.
 
 "அல்கஹாலைக் கையில வெச்சிட்டுருந்தா ஆவியாய்டும்னு விஞ்ஞானம் சொல்லுதில்ல?" என்று கேட்டுச் சிரித்தார்.
 | 
											
												|  | 
											
											
												| ரெண்டு ரவுண்டு போனதும், "கவிதை படிக்கலாமா?" என்றான் கோவிந்து. தான் எழுதித் திரும்பிய கவிதைகளை அழகாக பைண்ட் செய்துகொண்டு வந்திருந்தான். கவிதைத் தலைப்பின் கீழ் பிரபல வார, மாத இதழ்களின் பெயர் இருந்தது. அட இவ்வளவு பத்திரிக்கைகளில வந்திருக்கா என்று வியந்தார் பூங்காடன். அவன் அனுப்பி பிரசுரமாகாமல் திருப்பிய இதழின் பெயரை எழுதியிருப்பதை சொல்லுவதா வேண்டாமா என்று குழம்பினேன். அவனைப் படிக்க விட்டால் அந்த நானூத்தி சொச்சம் கவிதைகளையும் படிக்கும்வரை ஓயமாட்டான். அதுபோல ஒருமுறை அவன் படித்து எனக்கு ரத்த அழுத்தம் அதிகமான அனுபவம் உண்டு. 
 "கோவிந்து, அத்தனையும் படிக்க வேண்டாம் மாதிரிக்கு ஒரு கவிதை படி, போதும்" என்று தற்காப்பாகச் சொன்னேன்.
 
 "இவரு இருக்கட்டும். தம்பி கவிஞர் மாது படிக்கட்டும் மொதல்ல. இளைஞர்களுக்கு வாய்ப்பு தரதுதான் மூத்த கவிஞர்களுக்கு அழகு. தம்பி அந்த பாட்டிலை இப்படி நவுத்து’" என்று சொல்லித் தன் கோப்பையை நிரப்பிக் கொண்டார்.
 
 என்னது "கவிஞர்" மாதுவா? வயிறு எரிந்தது எனக்கு.
 
 நாலுவரி எழுத வராது இவனுக்கு. தமிழ்ல பெயில் மார்க்கு. ஏதோ தர்மத்தில பாஸ் போட்டுவிட்டார்கள். மாது கவிஞர்னா நான் ஒட்டக்கூத்தர்.
 
 மாது முகத்தில் ஆயிரம் வாட் பிரகாசம் வந்தது. காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு கையைத் தூக்கி உயரே மேகத்தைப் பார்த்து கவிதை சொன்னான். .
 
 காப்பி குடித்தேன் சர்க்கரை இல்லை
 காப்பி குடித்தேன் சர்க்கரை இல்லை
 சாப்பிட்ட சாம்பார் சாதத்தில் உப்பில்லை
 சாப்பிட்ட சாம்பார் சாதத்தில் உப்பில்லை
 சேமியா பாயசத்தில் முந்தரி இல்லை
 சேமியா பாயசத்தில் முந்தரி இல்லை
 சிறிதும் எனக்குக் கவலையே இல்லை
 சிறிதும் எனக்குக் கவலையே இல்லை
 
 அவன் கவிதையை விட என்னவோ உலக மகா வாக்கியம் சொல்லிவிட்டாப் போலவும் அது எங்கே புரியாம போயிடுமோ என்பது போல் ஒவ்வொரு வாக்கியத்தையும் அவன் இரண்டு முறை சொன்னதில் வந்த கோபத்தில் என் ரத்த அழுத்தம் எக்கச்சக்கமாய் எகிறியது.
 
 "பலே, பேஷ்" என்ற சர்மாவை முறைத்தேன். "பக்கோடாவைச் சொன்னேன். சூப்பரா இருக்கு" என்று சொல்லி ஒரு பக்கோடாத் துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்.
 
 மாதுவின் கவிதைக்கு மெலிதான கைதட்டல் எழுந்தது.
 
 "கவிதை முடியல இன்னும் இருக்கு" என்று மாது மறுபடியும் ஏதோ சொல்ல முயன்றான்.
 
 பூங்காடன் "போதும் தம்பி நிறுத்துங்க.  சும்மா சொல்லப்படாது. பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம். எங்கியோ போயிட்டீங்க" என்றார்.
 
 என் மனைவி வந்து "சாப்பாடு தயாரா இருக்கு. எல்லாரும் சாப்பிட வரலாம்" என்று தூரத்திலிருந்து அழைப்பு விடுத்தாள்.
 
 "வரம்மா. முதல் பெண்கள் எல்லாம் சாப்பிடுங்க. இத்தோ வந்துட்டம்" என்றவுடன் என் மனைவி உள்ளே போனாள்.
 
 பூங்காடன் எங்களைப் பார்த்து "சாப்பாடா. இப்பவே நாம சாப்பிட்டிட்டுதானே இருக்கம்" என்று சொல்லிச் சிரித்தார்.
 
 எழுந்து ஒரே வாயில் விஸ்கியை பாட்டிலோடு ஊற்றிக் கோண்டார். காலி பாட்டிலை புல்தரையில் வீசினார். மாது ஓடிப்போய் அதைப் பொறுக்கி மேசையின் கீழ் ஒளித்தான்.
 
 பூங்காடன் எழுந்து மெதுவே தள்ளாடி நடந்தார். அவர் என்ன செய்கிறார் என்று புரியவில்லை.
 
 துளசிமாடம் வரை போனவர் திரும்பி சற்றுச் சாய்ந்து மாடத்தில் கை ஊன்றிக் கொண்டார்.
 
 "ழிப்ப மாது தம்பி ஷொல்லிச்சு ஒரு கவிழை. நான் சற்றும் எதிர்பாழ்க்கலே. சின்னப் பசங்க காழல், கன்னி, முத்தம்னு தத்துபித்துனு எழுதுங்க. இந்தத் தம்பி கர்மயோகம், சரணாகதி ரெண்டையும் அழகாக் கலந்து எளிமையா முக்கி எழுத்திடுச்சு நாலே வர்ழியில!"
 
 "எப்படிச் சொல்றீங்க" என்று வினவினார் ராமநாதன்.
 
 "நாங்கூட இதுபோல முன்னே விழுப்புழம் கவியழங்குல" என்று குழறிய கோவிந்துவை யாரும் சட்டை செய்யவில்லை.
 
 மாதுவின் கவிதைக்கு வந்த பாராட்டு எனக்கு எரிச்சலூட்டியது. "அப்படி அவன் என்ன சார் சொல்லிட்டான். உங்களுக்கு பேத்தலா படலே?" என்று கேட்க நினைத்தேன்.
 
 ஸ்ரீதர் கண்மூடி இருந்தான்.
 
 பிரகாஷ் "என்ன திடீர்னு நிசப்தமா ஆயிடுத்து. காதே கேக்கல" என்றான்.
 
 சர்மாவும் சீனிவாசனும் மெதுவாக எழுந்து உள்ளே போய்விட்டார்கள்.
 
 பூங்காடன் தொடர்ந்தார். "தம்பி ஷொன்ன கவிழ என்ன ஷொல்லுது தெர்யுமா? சக்கரை இல்ல, உப்பு இல்ல, முந்தரி இல்ல சர்த்தான். கெடக்கிட்டம். அது இல்ல இது இல்லனு கவலப்படாதடா முட்டாள் மனிசா. மரியாதயா நீ உன் கர்மாவைச் செய்டா. கவலயைக் கடவுள்கிட்ட விடுடா. நீ யாருடா சுண்டைக்காய் கவலைப்பட. என்ன புரியுதாடா. சொல்லிட்டே இருக்கேன். ஆமா இல்லைனு பதிலே சொல்லாம மண்ணுமாதிரி நிக்காதடா" என்று சொல்லி அந்த மாடத்தை உலுக்கி உதைக்க, அது இரண்டாய் உடைந்து துளசி கீழே விழுந்தது.
 
 பூங்காடனும் குபுக்கென்று வாந்தியெடுத்தவாறே கீழே சாய்ந்தார்.
 
 நாங்கள் திகைத்து நின்றபோது மாது அருகில் சென்று அவரை ஆராய்ந்தான்.
 
 "ஆளுக்கு கிக் ஏறிடிச்சு. இனிம நாளைக் காலைலதான் கண் முழிப்பாரு. ஒரு கை கொடுங்க. என் கார்ல ஏத்திடுங்க. அவரை வீட்ல விட்டுட்டு வந்திடறேன் என்றான். வீட்டுக்குள்ள போகாம சைடு கேட் வழியா தூக்கிட்டு போயிடலாம். அக்கா பாத்தா கத்துவாங்க" என்றவுடன் நான் அவனுக்குப் பாய்ந்துபோய் உதவினேன்.
 
 எல்லோரும் சாப்பிட வீட்டுக்கு உள்ளே போனோம்.
 
 "சாப்பிடறதுக்கு முன்னால அம்பாள் படத்துக்கு நமஸ்காரம் பண்றதுன்னா பண்ணிங்கோ" என்றாள் என் மனைவி,
 
 நாங்கள் பேருக்குக் கும்பிட ஸ்ரீதர் நமஸ்காரம் பண்ணப் போய் மப்பில் எழுந்திருக்கவே இல்லை.
 
 "ஸ்ரீதர் எழுந்திருடா" என்று நான் கத்த, என் மனைவி "பாருங்கோ எவ்வளவு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்றார், என்ன பக்தி, என்ன பக்தி" என்று என் மனைவி வியந்தாள்.
 
 "அவர் வீட்ல நமஸ்காரமே பண்ணினதில்ல. எல்லாம் இன்னிக்கு பண்ணின நம்ம பூஜை பலம்தான்" என்று சந்தோஷப்பட்டாள் ஸ்ரீதரின் மனைவி.
 
 வில்லிபாரதம் சொன்ன பூங்காடன் எங்கே என்று என் மனைவி கேட்க, அவருக்கு ஓட்டல் சாப்பாட்டில் வயித்துகோளாறு வந்து மாதுவுடன் சீக்கிரம் போய்விட்டதாய்ச் சொன்னேன்.
 
 ஒருவழியாய் எல்லோரும் சாப்பிட்டுப் போன பிறகு மாது வந்து சாப்பிட்டான்.
 
 "பூங்காடன் என் கவிதையோட கடைசி வரியைச் சொல்லி முடிக்கவிடலை. அதான் என் கவிதையோட பஞ்ச் லைன்" என்று குறைப்பட்டுக் கொண்டான்.
 
 இவன் கவிதைக்கு பஞ்ச் லைன் வேற ஒரு கேடா? இருந்தாலும் வெட்டி ஆர்வத்தால் தூண்டப்பட்டு "என்னடா அது கடைசி வரி?" என்றேன்.
 
 அவன் தோட்டத்தில் சொன்ன கவிதை வரிகளை மீண்டும் ஒருமுறை சொன்னதைச் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
 
 கடைசிவரி என்னன்னா, "ஆனால் என் கோப்பையில் ஐஸ் இல்லாததை மட்டும் என்னால் தாங்க முடியாது ஆனால் என் கோப்பையில் ஐஸ் இல்லாததை மட்டும் என்னால் தாங்க முடியாது" என்று முடித்தான்.
 
 எனக்குத் தலை அதிர்ந்தது. அவனை அனுப்பிவிட்டு, போய்ப் படுத்துக் கொள்ளலாம் என்று மாடிப்படி ஏறினேன். மூன்று படி தாண்டியிருப்பேன். வாயிற்கதவு தட்டப்பட்டது.
 
 என் மனைவி கதவைத் திறக்க மாது தலையை உள்ளே நீட்டி, "சொல்ல மறந்திட்டேன். அக்கா, காலையில பூங்காடன் கொல்லையில் வாந்தி எடுத்த இடத்தக் கழுவி விட்டிடுங்க. இல்லாட்டி நாறிடும். உங்க துளசி மாடத்தை ஒடச்சிட்டாங்கனு கவலப்படாதீங்க. உங்களுக்கு நான் புதிசா ஒண்ணு, வாங்கிட்டு வரேன். கீழ கிளாஸ் பாட்டில் ஒடஞ்சி கிடக்கலாம். ஜாக்கிரதை, கால்ல குத்திடப்போவுது. வர்ரேன். அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லி நகர்ந்தான்.
 
 இடி, மின்னல், புயல் பின்னணி இசைகளைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். என் மனைவி திடுக்கிட்டுக் கோபத்துடன் கையில் டார்ச் லைட் எடுத்துப்போய் கொல்லையில் டிரிங்க் பார்ட்டி நடந்த இடத்தைப் பார்வையிட்டு வந்து கத்திய கத்தலையும் விழுந்த அர்ச்சனையையும் இங்கே நான் சொல்ல விரும்பவில்லை.
 
 இலக்கியக் கூட்டங்கள் எங்கள் வீட்டில் அன்றே அப்பொழுதே அறவே நிறுத்தப்பட்ட துயரச் செய்தியையும், மறுநாள் என் மனைவி கொல்லையில் கிடந்த கோவிந்துவின் கவிதைப் புத்தகத்தைக் கண்டுபிடித்து சுக்குநூறாய்க் கிழித்து குப்பையில் வீசிய மகிழ்ச்சியான செய்தியையும் மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 எல்லே சுவாமிநாதன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பெண்மனம்
 பசி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |