|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தென்றல் பேசுகிறது... |    |  
	                                                        | - ![]() | ![]() நவம்பர் 2009 ![]() |   ![]() | ![]() (2 Comments) |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  அக்டோபர் 27ஆம் தேதியன்று டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸை PCAPA (People's Committee Against Police Atrocities) என்னும் மாவோயிஸ்டு சார்ந்த அமைப்பைச் சேர்ந்த 500 பேர் மேற்கு மிட்நாபூர் அருகே ஒரு காட்டில் நிறுத்தினர். ரயிலில் இருந்தவர்களைப் பெட்டி படுக்கையோடு கீழே இறக்கி விட்டிருக்கின்றனர். அவர்களுடைய கோரிக்கை, ஒரு மாவோயிஸ்டுத் தலைவரை விடுதலை செய்ய வேண்டுமென்பது. மாநில, மத்திய அரசுகள் மசியவில்லை. போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகு 11 மணி நேரம் தாமதமாக ராஜதானி எக்ஸ்பிரஸ் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மாவோயிச வன்முறை அதிகரித்து வருகிறது. நினைத்தால் வேலை நிறுத்தம், புதிய தொழிற்சாலைகள் தொடங்க எதிர்ப்பு என்று எல்லா வகையிலும் வளர்ச்சிப் பாதைக்கு எதிரானதாகவே அந்த மாநிலம் இருந்து வந்துள்ளது. இந்தியாவின் பல இடங்களும் இப்போது நாக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள் என்று பல்வேறு வன்முறை தழுவும் எதிர்ப்பியக்கங்களின் பண்ணையாக மாறிவருகிறது. அருந்ததி ராய் போன்ற பேரறிவாளிகள் இத்தகைய இயக்கங்களின்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பது தவறு என்ற கோணத்தில் பேசிவருவது கவலை தருவதாக இருக்கிறது நினைத்தால் ரயிலை நிறுத்துவது, போலீஸ் நிலையங்களைத் தாக்கிக் கூண்டோடு போலீசாரை அழிப்பது போன்ற வன்செயல்கள் அதிகரித்து வரும் இந்த நிலையில் இந்த இயக்கங்கள் ஏதோ ஏழைகளின் இயக்கம் என்று பார்க்க முடிவதில்லை. அது உண்மையானால் அவற்றிடம் ஏராளமான நவீன ஆயுதங்கள் வந்து குவிவதும், அவற்றைக் கையாள்வதில் பயிற்சி பெறுவதும் சாத்தியமே இல்லை. சீனாவின் உலகாளும் பேராசையைப் பற்றி நாம் தொடர்ந்து இங்கே எழுதி வந்திருக்கிறோம். தனது புதிய பணபலத்தால் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்க்கிறது என்பதே நமது கருத்து. அரசு ஏவிவிடும் வன்முறையும் தவறுதான் என்ற போதும், அது சட்டத்துக்கு அஞ்சி வாழும் குடிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும் பட்சத்தில் ஏற்கத் தக்கதே. 
 *****
 
 அருணாசலப் பிரதேசத்துக்கு நமது பிரதமர் சென்றதைச் சீனா கண்டனம் செய்துள்ளது. அது சர்ச்சைக்குரிய இடமாம். அங்கே தலாய் லாமாவை அனுமதிக்கவும் கூடாதாம். சீனாவின் எத்துவாளித்தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்ல, சீனாவுக்குச் செல்லும் காஷ்மீரிகளுக்கு விசாவை அவர்களது இந்தியப் பாஸ்போர்ட்டில் தராமல் தனித்தாளில் தருகிறதாம் அந்த நாடு. சமரசப் பேச்சு, இருதரப்பு விவாதம் என்று மிக நாகரீகமான வார்த்தைகளால் தனது தொடைநடுங்கித் தனத்தை அலங்காரமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்திய நடுவண் அரசு. பேச்சுவார்த்தை, சமாதானம் என்று சீனாவின் பசப்பை முழுவதுமாக நம்பித்தான் மோசம் போனார் நேரு. அதே தவறை இன்றைய காங்கிரஸ் அரசும் செய்யக்கூடாது.
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| பன்றிக் காய்ச்சல் அவசர நிலையை அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. ஒரு மில்லியன் பேர்களுக்கு மேலே ஸ்வைன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.    பேருக்கு மேல் இதனால் இறந்து போயினர். ஆனால் இதற்கான தடுப்பு மருந்து போதிய அளவில் கைவசமில்லை. சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து போடுவதை விரும்புவதில்லை என்று வேறு செய்திகள். தடுப்புக்கான வழிகளைப் பார்த்தால் அவ்வளவு கடினமானதாகத் தெரியவில்லை (பார்க்க:  தென்றல், செப்டம்பர் 2009 ). சுகாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் அமெரிக்காவில் இவ்வளவு வேகமாகப் பரவும் என்றால் ஏழை நாடுகளைப் பற்றி எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. ஒபாமா அரசுக்கு இதுவும் ஒரு சவால்தான். 
 *****
 
 இப்போது பத்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் மிகவும் குண்டாகிப் போய் ஒருவருக்கொருவர் வேறுபட்டுத் தெரியாதபடி இருக்கிறார்கள். தமக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை அளவுக்கதிகமாகப் பெருத்துப் போனவர்கள் முதலில் உணரவேண்டும். அதல்லாமல், பிறர் வித்தியாசமாக ஏறிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்து, தம்மைப் போன்றவர்கள் தமது தவறான வழியில் தொடர்வதற்கு Club Bounce, Butterfly Lounge என்று கிளப்புகளைத் தொடங்கிக் கொள்வதில் நல்லது எதுவும் விளையாது. இந்த இதழ்  மருத்துவக் கட்டுரை  இளைப்பதற்கான வணிகரீதி உணவுத் திட்டங்களை அலசுகிறது. சிலம்பம், வர்மக்கலை போன்ற பழம்பெரும் இந்திய வீரவிளையாட்டுக் கலைகளை உலக அளவில் புத்துயிர் கொடுத்து வருகிறார் மாஸ்டர் ஜோதி கண்ணன். அவரது  நேர்காணல்  மிகச் சுவையானது. தென்றலின் 9ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இந்த இதழ் பலவகைகளிலும் நிறைவான இதழும் கூட. படித்துப் பாருங்கள். கருத்துக் கூறுங்கள்.
 
 
  நவம்பர் 2009
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |