| 
                                            
												|  |  
												|  |  
	|  |  
												|  தமிழ் புத்திலக்கியப் பரப்பில் வளம் சேர்த்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் ஆர். வெங்கடேஷ். அறிவும், அனுபவமும், படைப்பூக்கமும் பெற்றுள்ள இவர் கணிதத்தில் இளங்கலைப்பட்டமும், மக்கள் தொடர்பு மற்றும் இதழியிலில் முதுகலைப்பட்டயமும் பெற்றவர். எழுத்தாளர், இதழாளர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். 
 கணையாழி இதழில் வெளியான 'பரீட்சை' என்னும் சிறுகதை மூலம் எழுத்துலகில் வெங்கடேஷ் அறிமுகமான போது கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியர். தொடர்ந்து அவ்விதழில் கதை, கட்டுரை என எழுதத் தொடங்க, அது இவருக்கு இதழியலின் பல தளங்களையும் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பயிற்சிக் களமாக அமைந்தது. "நான் எடிட்டிங் என்று ஏதாவது கற்றுக்கொண்டேன் என்றால், அது கி.க.விடம்தான். பத்திரிகை சுதந்திரம் என்றால் என்ன என்பதையும் அவரிடம் உணர்ந்துகொண்டேன்" என்று கூறும் வெங்கடேஷ்,  தொடர்ந்து தினமணி கதிரின் வெள்ளிமணி, சுபமங்களா, புதிய பார்வை போன்ற இலக்கிய இதழ்களிலும் பேட்டிகள், சிறுகதைகள் ஆகியவற்றை எழுத ஆரம்பித்தார். ஆனாலும் பரவலாக இவரது இலக்கிய ஆளுமையும் பன்முகத் தன்மையும் வெளிப்படக் காரணமாக இருந்தது கல்கி இதழ்தான். அதில் பணிபுரிந்தபோது பல சிறுகதைகளை, குறுந்தொடர்களை, பேட்டிக் கட்டுரைகளை எழுதினார். துளசி, ராஜன், ஞானம், பரத் என்ற புனைபெயர்களில் எழுதிக் குவித்தார். குறிப்பாக இவரும், எழுத்தாளர் பா.ராகவனும் இணைந்து செய்த திரைப்பட விமர்சனம் பரவலான கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, சென்னை பிலிம் சொஸைட்டி நடத்திய சலனம் என்ற மாத இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றியதுடன், உலக சினிமாவைப் பற்றியும் எழுதி வந்தார்.
 
 
 1992ல் ஓரியன்ட் லாங்மன் பதிப்பகத்தில் பதிப்பாசிரியராகச் சேர்ந்தார். 120க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளிக் கொணர்ந்தார். ஒரு கைதேர்ந்த பதிப்பாசிரியராகத் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டது அங்குதான். முதல் நூலாக, 1995ல் 'துளசி' என்ற புனைபெயரில் இவர் எழுதிய கவிதைத் தொகுப்பான 'வேறு முகம்' வெளியானது. 1998ல் 'பெருங்கூட்டத்தில் ஒருவன்' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாகிப் பரந்த வாசக கவனத்தைப் பெற்றது.|  |  | தமிழ் உட்படப் பல மொழிகளிலும் அந்தத் தளத்துக்கான உள்ளடகத்தை உருவாக்குவதில் வெங்கடேஷ் பெரும்பங்கு வகித்தார்.இலக்கியம், இசை, சினிமா, அரசியல், சமூகம் என்று அனைத்தும் கொண்ட சிறந்த தமிழ் இணைய இதழாக சிஃபி தமிழை உருவாக்கினார். |  |  | 
 அந்தக் காலகட்டத்தில் பரவத் தொடங்கிய இணையத்தில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட வெங்கடேஷ், அதிலும் தனி முத்திரை பதித்தார். 2000மாவது ஆண்டில் பிரபல சிஃபி நிறுவனத்தில் சேனல் மானேஜர் பொறுப்பு கிடைத்தது. அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் உட்படப் பல மொழிகளிலும் அந்தத் தளத்துக்கான உள்ளடகத்தை உருவாக்குவதில் வெங்கடேஷ் பெரும்பங்கு வகித்தார். இலக்கியம், இசை, சினிமா, அரசியல், சமூகம் என்று அனைத்தும் கொண்ட சிறந்த தமிழ் இணைய இதழாக சிஃபி தமிழை உருவாக்கினார். ஒலி, காணொளி நேர்காணலுக்கான அடிப்படைகளிலும், உருவாக்கங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தினார். "நான் பிசினஸ் மேனேஜராக என்னை அடையாளம்காண உதவியது சிஃபிதான். ஒரு பிசினஸ் ஓனராக, நிறுவனத்தை உருவாக்குதல், அதைத் திறம்பட நடத்துதல், லாபகரமாக வளர்த்தல் எல்லாம் என் பலங்கள் என்பதை நானே புரிந்துகொண்டது அங்கேதான்" என்று கூறும் வெங்கடேஷ், பின்னர் முழுமையாக இணையம் சார்ந்தே எழுதத் தொடங்கினார்.
 
 ஆரம்பத்தில் அகத்தியர், தமிழ் உலகம் போன்ற இணையக் குழுக்களில் எழுதி வந்தவர், பின்னர் இரா. முருகன், என்.சொக்கன், லாஸ் ஏஞ்சலஸ் ராம் ஆகியோருடன் இணைந்து 'ராயர் காபி கிளப்' என்ற இணைய மடற்குழுவின் மட்டுறுத்தனராக இருந்து நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்த படைப்புகளை எழுதியதுடன், பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்த்தார். பல இளைஞர்களை, மென்பொருள் பணியாளர்களை இலக்கியத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்ததில் ரா.கா.கி.க்கு முக்கியப் பங்குண்டு. இவற்றுடன் 'நேசமுடன்' என்ற தலைப்பில் மின்மடல் இதழ் ஒன்றையும் நடத்தினார். அதனால் 'நேசமுடன் வெங்கடேஷ்' என்பதே இணையத்தைப் பொறுத்தவரை இவரது புதுப்பெயரானது. நாட்டு நடப்பு, அரசியல், சினிமா, எழுத்து, எழுத்தாளர்கள், தனிமனிதப் பிரச்னைகள் எனப் பலவற்றைப் பற்றி காத்திரமான கட்டுரைகள் நேசமுடன் மின்மடலில் வெளியாகின. பின்னர் அவை தொகுக்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது.
 |  
												|  |  
												| அதன் பின்னர் விகடன் குழுமத்தில் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வெங்கடேஷ், அதன் பதிப்பகத் துறை, என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் மொழிபெயர்ப்புத் துறை, டாட் காம் துறை, மொபைல் VAS துறை என அனைத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் மிக முக்கியப் பங்கு வகித்தார். விகடனின் பதிப்பகத் துறைக்கு ஒரு நோக்கமும் பாதையும் அமைத்துக் கொடுத்ததுடன், அதை நின்று செயலாற்ற ஒரு குழுவையும் உருவாக்கினார். நல்ல பல நூல்கள் உருவாவதற்கு உறுதுணையாக இருந்ததார். பல புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். விகடன் டாட் காமை நவீனப்படுத்தியதுடன் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளப் பாதை அமைத்துக் கொடுத்தார். குறிப்பாக இவரது நிர்வாகப் பொறுப்பில் டாக்டர் சுதா சேஷய்யன், மதுரபாரதி, ஹரிகிருஷ்ணன் எனப் பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரிட்டானிகா தமிழ் தகவல் களஞ்சியம் தமிழ் அறிவுத்துறையில் மிக முக்கியமானதொரு சாதனையாகும்.|  |  | இவரது நிர்வாகப் பொறுப்பில் டாக்டர் சுதா சேஷய்யன், மதுரபாரதி, ஹரிகிருஷ்ணன் எனப் பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய பிரிட்டானிகா தமிழ் தகவல் களஞ்சியம் தமிழ் அறிவுத்துறையில் மிக முக்கியமானதொரு சாதனையாகும். |  |  | 
 பொருளாதாரத்திலும், பங்கு வர்த்தகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட வெங்கடேஷ், நாணயம் விகடனில் அதுபற்றித் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். பங்கு வர்த்தகம் பற்றிய பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். பங்கு வர்த்தகம் பற்றி இவர் எழுதி, கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'மியூச்சுவல் ஃபண்ட்' நூல் மிக முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று வருணிக்கப்பட்ட 'காப்ரியல் கார்சியா மார்குவேஸ்' பற்றி இவர் எழுதிய நூலும் மிக முக்கியமானதாகும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து இவர் எழுதிய 'டிஜிட்டல் உலகம்' ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களை ஈர்த்த ஒன்று.
 
 'கரைந்தவர்கள்', 'முதல் மழை' இரண்டும் சிறுகதைத் தொகுப்புகள். தமிழ் வார இதழ்ச் சூழலையும், அதில் சிக்கிக்கொள்ளும் எழுத்துத் தாகமெடுத்த அப்பாவிப் பத்திரிகையாளர்களின் நிலையையும் சித்திரிக்கும் இவரது 'இருவர்' நாவல் குறிப்பிடத் தகுந்தது. இது தவிர 'நப்பின்னை' என்ற புனைபெயரில் இவர் எழுதிய 'பெண்களின் அந்தரங்கம்' பெண் சமூகவியல் பற்றிப் பேசும் நூலாகும். தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான ஆதவனின் சிறுகதைகளைப் பதிப்பாசிரியராக இருந்து, கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிக் கொணர்ந்திருக்கிறார். 'பெற்றோருக்கான விதிகள்' என்ற மொழிபெயர்ப்பு நூல் அச்சில் இருக்கிறது.
 
 லில்லி தேவசிகாமணி பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு, கலைமகள் அமரர் ராமரத்தினம் குறுநாவல் போட்டிப் பரிசு உட்பட பல்வேறு பரிசுகள் பெற்றிருக்கும் ஆர். வெங்கடேஷ், மத்திய அரசின் கலாசாரத் துறையிலிருந்து இளநிலை நிதிக்கொடை பெற்றவர். மனைவி, இரு மகள்களோடு சென்னையில் வசித்து வரும் இவருக்கு வயது 39. தற்போது பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் சக்தி பப்ளிஷிங் ஹவுஸில் நிர்வாகத் தலைவராகப் (publishing head) பணியாற்றி வருகிறார். இவரது தந்தை எம்.கே. ராதாகிருஷ்ணனும் ஓர் எழுத்தாளர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
 
 நடுத்தர வர்க்கதினரின் பிரச்சனைகளை, அவலங்களை, ஆசைகளை, அபிலாஷைகளைத் தனது எளிமையான எழுத்தின் மூலம் காட்சிப்படுத்தும் ஆர். வெங்கடேஷ், தனது கருத்துக்களை venkateshr.wordpress.com என்ற வலைப்பதிவில் எழுதியும் வருகிறார்.
 
 அரவிந்த் சுவாமிநாதன்
 |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  
												|  |  |