|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் |    |  
	                                                        | - மதுசூதனன் தெ. ![]() | ![]() நவம்பர் 2008 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  தமிழர் சிந்தனையிலும் தமிழர் பண்பாட்டு அசைவிலும் சினிமா முதன்மை இடத்தைப் பெற்றுவிட்டது. வெகுசன ஊடகங்களும் சினிமாவின் அருட்டுணர்வுக் கும் அதைச்சார்ந்த இயக்கத்துக்கும் உட்பட்டதாகவே மாற்றங்கள் ஏற்படக் காரணமாகி வருகின்றன. குறிப்பாக 1931ல் தமிழில் பேசும்படம் தயாரிக்கத் தொடங்கினர். அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமா பல்வேறு புதிய பரிமாணங்களை விருத்தி செய்து வளர்ச்சியடைந்து வருகின்றது. 
 இத்தகு பண்பாட்டு மாற்றத்தில் தமிழ் சினிமாவின் நிலை பேறாக்கத்தில் கால் பதித்ததுடன் முன்னோடி ஆளுமைகளாகவும் திகழ்ந்தவர்கள் பலர். இவர்களுள் ஒருவரே இயக்குனர் கே. சுப்பிரமணியம். இவரைத் தமிழ்ப்பட உலகின் தந்தை என்றும் வர்ணிப்பர். இந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்டது அல்ல. மாறாக தமிழ்த் திரைப்பட வரலாற்றை நுணுக்கமாக ஆய்வு செய்ய முற்படும்பொழுது கே.சுப்பிரமணியத்தின் பல்பரிமாணம் மேலும் துலங்கும். இவற்றினோடு தமிழ்த்திரைப்படம் எத்தகு புதிய மாறுதல்களுக்கு உள்ளாகி வந்தது என்பதும் தெரியவரும்.
 
 தமிழ்த் திரைப்படத்துறையின் வளர்ச்சிக் கட்டங்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்திக்கொள்ள முடியும்.
 1931இல் தொடங்கி 1950இல் முடிந்தது. இது புராண, இதிகாச, மாயாஜாலக் கதைகள் காலம்.
 1951இல் தொடங்கி 1975இல் முடிகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சிகளைக் கொண்ட நாடகபாணித் தோற்றமுள்ள சமூகக் கதைகள் காலம்.
 1976இல் தொடங்கி 1985வரை தமிழ்த் திரைப்படம் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தது. இந்தக் காலக்கட்டம் எதார்த்தமான மரபு மீறிய கதைகள் காலம்.
 
 
 இவ்வாறு இயக்குநர் முக்தா சீனிவாசன் தனது நூலொன்றில் வகைப்படுத்துவார். அத்துடன் 1985முதல் இன்றுவரை தமிழ்த் திரைப்படம் வன்முறை, பாலுணர்ச்சிக் காலம் என்று நான்காவது கட்டமாக வகைப்படுத்துவார். இருப்பினும் இந்தக் காலகட்டம் மிக நுணுக்கமாக வேறு நிலைகளில் இருந்து வகைப்படுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக 2000 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகியுள்ள மாற்றங்கள் அறிவியல் தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் மிகுந்த காலகட்டமாகவும் புரிந்துகொள்ள வேண்டும்.|  |  | ராஜா சாண்டோ மற்றும் ஆர். பத்மநாபன் ஆகியோர் தான் சுப்பிரமணியம் என்னும் திரைப்பட இயக்குனர் உருவாகக் காரணமாக இருந்துள்ளார்கள். |  |  | 
 எவ்வாறாயினும் நாம் இங்கு அவை பற்றி முழுமையாகப் பேச முடியாது. ஆனால் இந்தத் தொடர் வளர்ச்சிக் கட்டங்களுக்குக் காலாக அமைந்த இயக்குனர் கே.சுப்பிரமணியம் பற்றி மட்டும் இங்கே பேசுவோம்.
 
 தென்னந்தியாவில் தயாரிக்கப்பட்ட மௌனப்படங்கள் 1916-1932வரை கிட்டத்தட்ட 108. இந்தக் காலகட்டம் பேசும்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முற்பட்டது எனலாம். சுப்பிரமணியம் சினிமா உலகில் பிரவேசித்தது மௌனப்படங்களின் இறுதிக் காலத்தில் தான். இவர் அடியெடுத்து வைத்த இரண்டு மூன்று வருடங்களுக்குக்கெல்லாம் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டன.
 
 குறிப்பாக ஆரம்ப காலத்தில் சினிமாவின் வீச்சைப் புரிந்துகொண்டு மாற்றங்களையும் தொழில்நுட்பங்களையும் சரியாக இணைக்கக் கூடியவர்கள் சாதனைகள் நிகழக் காரணமாக இருந்தார்கள். சினிமாவின் நுட்பங்களைப் புரிந்து புதுமை வேட்கையும் கற்பனைத் திறனும் முழுமையாக வெளிப்பட சுதந்திரமாக இயங்கும் கலைமனம்தான் தனது காலத்துப் பொறுப்புகளையும் கடமைகளையும் தெளிவாகவும் உறுதியாகவும் செய்யக்கூடிய தருணங்களை வழங்கும். இதனைத் துணிச்சலுடன் சாத்தியமாக்கியவர் கே.சுப்பிரமணியம். இவரோடு உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இவரை ‘அப்பா' ‘அப்பா' என்றுதான் அழைப்பார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கடைசிவரை இவரை அப்பா என்றுதான் அழைத்து வந்தார். இந்தத் தகுதிக்குப் பொருத்தமாகத் தான் சுப்பிரமணியம் விளங்கியுள்ளார்.
 
 கே.சுப்பிரமணியம் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு வெகு அருகில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் சி.எஸ். கிருஷ்ணசாமி ஐயர் - வெங்கலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 20, 1904 அன்று பிறந்தார். ஏழு வயதாக இருந்த பொழுதே கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்டு சில வருடங்கள் முறையாக இசை கற்றுவந்தார். அத்துடன் நாட்டியத்திலும் இவரது கவனம் சென்றது. இந்த ஆர்வங்களை வளர்த்துக் கொண்டாலும் இசை, நடனம் போன்றவற்றை வரன்முறையாக கற்பதைத் தொடரவில்லை. ஆனால் தனக்குள்ளிருந்த ரசனையை வளர்த்துக் கொண்டே இருந்தார். பள்ளி நாடகங்களிலும் நடித்து வந்தார். இருப்பினும் படிப்பை முறையாகத் தொடர்ந்தார். பட்டப் படிப்பை முடித்து மீண்டும் சட்டக் கல்வி பயின்று வழங்குரைஞர் ஆனார். பல்வேறு அனுபங்கள் மூலம் தனக்குள் அடங்கி இருந்த திறன்களை மேலும் மேலும் வளர்த்து வந்தார்.
 
 பல்வேறு அறிஞர் பெருமக்களுடன் ஊடாடித் தனது ஆளுமையை வளர்த்துக் கொண்டு வந்தார். கலையிலும் இசையிலும் இருந்த நாட்டம் கே. சுப்பிரமணியத்தை வேறொரு பாரிமாணம் மிக்கவராகப் பட்டை தீட்டியது. நாடகக் கலைமீது கொண்டிருந்த நாட்டமும் அவரை உந்தித் தள்ளியது. விளைவு தமிழ்த் திரைப்பட உலகம் கே.சுப்பிரமணியத்துக்கு புதிய அடையாளத்தை வழங்கியது. அவரும் தனது கலைத் தேடலால் புதுத் தன்மைகளை மாற்றங்களை உருவாக்க விழைந்தார்.
 
 சட்டப்படிப்புக்காகச் சென்னையில் இருந்த பொழுது இவரது கலையார்வம் மேலெழத் தொடங்கியது. விடுதியில் தங்கியிருந்த பொழுது நண்பர்களும் இவரது கலைத் தேடலை ஊக்கப்படுத்தினார்கள். இவரும் அப்பொழுது காண்பிக்கப்பட்டு வந்த பல்வேறு மௌனப் படங்களைப் பார்த்து வந்தார். பல்வேறு நுட்பங்கைளத் தன்னளவில் கற்று வந்தார். ஒருவாறு சட்டப் படிப்பையும் சென்னை வாசத்தையும் முடித்துக்கொண்டு பாபநாசம் திரும்பினார். சுப்பிரமணியம்-மீனாட்சி இருவரது இல்லறவாழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. மீனாட்சி இசை நுட்பங்களை அறிந்து தெளிந்து கொண்டவர். இருவரும் ஒருமித்து இனிதே வாழ்ந்து வந்தார்கள்.
 
 அப்பொழுது சினிமாவில் பல்துறைக் கலைஞராக வலம்வந்தவர் ராஜா சாண்டோ. இவர் மும்பையில் அதிக காலம் இருந்து சினிமாவின் நுட்பங்களைக் கற்று வந்தார். இவரது மதிப்பை உணர்ந்த ஆர். பத்மநாபன் என்பவர் மும்பை சென்று ராஜா சாண்டோவை சென்னைக்கு அழைத்து வந்து சில படங்களை இயக்கச் செய்தார். சாண்டோ தமிழாபிமானம் மிக்கவர். மறுப்பேதுமின்றித் தமிழகத்துக்கு வந்தார். 1928 பத்மநாபனுக்காகப் படங்களை இயக்கத் தொடங்கினார்.
 
 ராஜா சாண்டோ ஒரு திறமையான நடிகர், டெக்னீஷியன் அதனால் அவர் படங்களை டைரக்ட் செய்யும் பொழுது, எந்த எந்தப் பாத்திரம் எப்படி எப்படி நடிக்க வேண்டும் எப்படி நடக்கவேண்டும் என்று தானே நடித்துக் காண்பித்து விடுவார். மனதுக்குத் திருப்தி ஏற்படும்வரை ஒத்திகை பார்த்த பின்தான் ஷாட்டை எடுப்பார். இவ்வாறு பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.
 
 நாடகமேதை டி.கே. சண்முகம் எனது நாடக வாழ்க்கை என்ற நூலில் "ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக வட நாட்டிலேயே வசித்து இந்தி, மராத்தி, குஜராத்தி ஆங்கிலம் முதலிய மொழிகளிலேயே பேசிப் பழகிக் கொண்டு இருந்த ராஜாவுக்கு தமிழ்நாட்டில் பழங்கிழவிகள் சொல்லக்கூடிய சாதாரணப் பழமொழிகளும் மறக்காமல் இருந்தது. தமிழ் இலக்கணம், நன்னூல் நிகண்டு முதலியவற்றையெல்லாம் அவர் மனப்பாடம் செய்திருந்தது எங்களுக்கு ஆச்சார்யமாக இருந்தது. நடிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ராஜாவுக்கு இணையான டைரக்டர் இந்திய நாட்டிலேயே இல்லை என்பது வட நாட்டவரும் ஒப்புக்கொண்ட உண்மை. பாரத நாட்டின் ஒப்புயர்வில்லாத நடிகர் பேராசான்” என்று கூறியிருந்தார்.
 
 இத்தகு ஆளுமை பொருந்திய ராஜாவைத் தமிழ்த் திரைப்பட உலகுக்குக் கொண்டு வந்து ஒரு புதிய மடைமாற்றம் ஏற்பட பத்மநாபன் காரணமாக இருந்துள்ளார். ராஜா சாண்டோவின் அருமையை உணர்ந்திருந்தால்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழக முதல்வரானதும் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் திரைப்பட விருதுகளைத் தமிழ் சினிமாவில் சிறந்த சாதனைகள் புரிந்தவர்களுக்கு ராஜா சாண்டோ விருது என்ற பெயரில் ஒரு விருதை ஏற்படுத்தினார். இந்த அளவு சிறப்புக்கள் மிகுந்த ராஜா சாண்டோ மற்றும் ஆர். பத்மநாபன் ஆகியோர் தான் சுப்பிரமணியம் என்னும் திரைப்பட இயக்குனர் உருவாகக் காரணமாக இருந்துள்ளார்கள். சுப்பிரமணியம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த இருவரைத் தனது வழிகாட்டியாக தொழில் கற்றுத் தந்த ஆசான்களாகவே கூறி வந்துள்ளார்.
 
 சமூகக் கருத்துள்ள படங்களுக்கு ராஜா சாண்டோ முக்கியத்துவம் கொடுத்தார். மாறிவரும் சமூக மதிப்பீடுகளுக்கு ஏற்ப முற்போக்குக் கருத்துக்களைப் புகுத்த விரும்பினார். இவர் தன்மானம் மிக்கவராகவும் தமிழபிமானம் மிக்கவராகவும் திகழ்ந்தார். இந்தப் பண்பு கருத்துநிலைத் திரட்சியாக கே.சுப்பிரமணியம் அவர்களிடமும் செல்வாக்குச் செலுத்தியது.
 
 1934களில் சுப்பிரமணியம் வாழ்க்கையில் ஏறுகாலம். இவர் தமிழ் சினிமாவில் புது அத்தியாத்தைக் காட்சிப்படுத்தத் தொடங்கினார். புதிய தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் முடிவில் இருந்த காலம். அழ.ராம. அழகப்பச் செட்டியார் திரைப்படத் துறையைத் தொழிலாக மேற்கொள்ளும் முடிவில் இருந்தார். இதைவிட மானகிரி லேனா என்று அழைக்கப்பட்ட லெட்சுமணன் செட்டியார் நாடக நடிகர்களை ஒப்பந்தம் செய்து அங்குமிங்குமாக ஸ்பெஷல் நாடங்கள் நடாத்திக் கொண்டிருந்தார். இவரே அழகப்பச் செட்டியாரின் படத் தயாரிப்பு எண்ணத்தை ஊக்கப்படுத்தியவர்.
 
 அழகப்பச் செட்டியார் தயாரிக்கும் படத்துக்கு இயக்குனராக யாரைப் போடுவது என்று யோசித்த பொழுது சுப்பிரமணியத்தின் பெயர் நினைவுக்கு வந்தது. உடனே நாகபட்டினத்துக்குத் தகவல் அனுப்பி சுப்பிரமணியத்தை காரைக்குடிக்கு வரச்செய்தார்கள். அந்த நிகழ்ச்சியைப் பற்றி சுப்பிரமணியம் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார்.
 
 அழ.ராம அழகப்பச்செட்டியாரும் இலட்சுமணச் செட்டியாரும் என்னை அழைத்திருந்தார்கள். என் இயக்கத்தில் சொந்தப் படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் அழகப்பச் செட்டியாருக்கு இருந்தது. நானும் அதைப் (தனியாக டைரக்சன் செய்வது) பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
 
 அச்சமயம் காரைக்குடியில் 'பவளக்கொடி' நாடகம் நடந்துகொண்டிருந்தது. நாடகத்தைப் போய்ப் பார்க்கலாம் என்று அழகப்பச் செட்டியாரும் லெட்சுமணச் செட்டியாரும் என்னைக் கூப்பிட்டார்கள். எப்படித்தான் நாடகம் இருக்கிறது பார்க்கலாம் என்று நான் அவர்களோடு போனேன்.
 | 
											
												|  | 
											
											
												| நாடகத்தில் அர்ஜுனனாக ஒரு கட்டழகு வாலிபன் ஒரு நெஞ்சத்தைத் தொடும் இனிய குரலில் பாடியதைக் கேட்டுப் பரவசமானேன். அவரது பாட்டுக்களைக் கேட்கவே தினசரி பெருங்கூட்டம் வருகிறது என்று கேள்விப்பட்டேன். அதே நாடகத்தில் பவளக்கொடியாக நடித்த ஒரு இளம் நடிகை கணீர் கணீர் என வசனம் பேசி நடித்ததும் என் மனதைக் கவர்ந்தது.|  |  | சுப்பிரமணியம் காலத்தின் தேவைக்கேற்பப் புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்கும் வித்தில் முன்னோடியாக இயங்கியுள்ளார். |  |  | 
 நாடகம் பார்த்துவிட்டு வீடு திரும்பியதும். நண்பர்களிடம் அந்த 'பவளக்கொடி' நாடகத்தையே படமாக்கலாம் என்றும் அதில் பாடிநடித்த இளைஞரையும் இளம் நடிகையையும் நடிக்கவைக்கலாம் என்றும் என் அபிப்பிராயத்தைச் சொன்னேன். அவர்கள் என் யோசனையை உடனே ஏற்றுக்கொண்டார்கள். மறுநாள் அந்த இளைஞரையும் நடிகையையும் எங்கள் இல்லத்திறகு அழைத்துவரச் செய்தோம். பரஸ்பரம் அறிமுகம் நடைபெற்றது சினிமாவில் நடிக்க இளைஞரும் ஒப்புக் கொண்டார். நடிகையும் சம்மதித்தார். அந்த இளைஞன்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர். நடிகைதான் எஸ்.டி.சுப்புலட்சுமி.
 
 இந்த இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு 'பவளக்கொடி' எனும் திரைப்படம் சென்னையில் தயாரிக்கப்பட்டது. 1934ல் படம் வெளியானது.
 
 இக்காலங்களில் எவ்வளவோ படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒரு சில படங்கள்தான் பல நடிகர்களை அறிமுகப்படுத்துவதாகவும் பல புதுமைகளை, பல திருப்பங்களை ஏற்படுத்துவதாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட படமாகத்தான் பவளக்கொடியைக் கருதமுடியும். இந்த முறைமை பின்னர் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜாவரை தொடர்வதற்கும் இதுவே காரணம்.
 
 எவ்வாறாயினும் ஆரம்பகாலப் பேசும் படங்கள் யாவும் பேசும்படங்கள் என்று சொல்லப்பட்டாலும் எல்லாமே பாடும் படங்கள்தாம். பவளக்கொடியும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் படத்தில் 55 பாடல்கள் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் 'புதுமை வேட்கை' திரைப்பட மரபில் மெதுமெதுவாக ஆட்சி பெறத் தொடங்கியது. இதற்குத் தொடக்கத் தடத்தை அமைத்துக் கொடுத்தவர் சுப்பிரமணியம். பவளக்கொடியின் வெற்றியைப் பார்த்து வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், பாகவதர், சுப்புலட்சுமி ஆகிய மூவரைக் கொண்டே முருகன் டாக்கீஸ் என்ற கம்பனி படமொன்று தயாரிக்க விரும்பியது. அப்பொழுது பிரபலமாக இருந்த நாடகமான ‘சாரங்கதாரா'வைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தப் பட ஒப்பந்தப்படி தமக்குச் சேர வேண்டிய முழுத் தொகையையும் சுப்பிரமணியம் ஆரம்பத்திலேயே பெற்றுக் கொண்டார். இதுபோல் சுப்புலட்சுமியும் பெற்றுக் கொண்டார். இந்த முழுத்தொகையுடன் இருவரும் சேர்ந்து 'மதராஸ் யுனெடெட் ஆர்ட்டிஸ் கார்ப்பரேஷன்' என்ற கம்பனி யைக் கூட்டாகத் தொடங்கினார்கள். அந்தக் கம்பெனி மூலம் பல படங்களைத் தயாரித்து வெளியிட்டார்கள்.
 
 1936இல் சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் ‘பக்த குசேலா' படம் வெளியானது. இந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்தப் படத்தில் இன்னொரு விசேடம் சுப்புலட்சுமி கிருஷ்ணனாக ஆண்வேடம் தரித்த அதேவேளை 27 குழந்தைகளுக்குத் தாயாகவும் நடித்தார். 19 அல்லது 20 வயதே நிரம்பிய சுப்புலட்சுமி ஆண்வேடமும் பெண்வேடமும் தரித்து நடித்தது அன்று முதல் இன்றுவரை இந்த ஒரு படம்தான். சுப்புலட்சுமியின் நடிப்பை அன்று பலரும் பாராட்டினார்கள். பவளக்கொடியில் அறிமுகமான சுப்புலட்சுமி சுப்பிரமணியத்தின் கருத்தொருமித்த மனைவியாகவும் பின்னர் மாறினார். நிஜவாழ்க்கையிலும் திரைப்பட வாழ்க்கையிலும் முன்மாதிரி தம்பதியினராக இருவரும் வாழ்ந்தார்கள்.
 
 பாலயோகினி, சேவாசதனம், தியாகபூமி போன்ற படங்கள் மூலம் சுப்பிரமணியம் புகழ்பெற்ற இயக்குனராக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். பல்வேறு புதிய கலைஞர்களைத் திரை உலகுக்கு அறிமுகம் செய்தார். சீர்திருத்தக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். உதாரணமாக 1938 வெளிவந்த 'சேவா சதனம்' திரையுலகில் புதிய பாதைக்கு வழிவிட்டது. வரதட்சணை, வயோதிகத் திருமணம் போன்ற கொடுமைகளுக்கு எதிரான கருத்துக்களைப் படம் முன்வைத்தது.
 
 குறிப்பாக, சமூகத்தின் பழமை வாதங்களையும் படுமோசமான மூடநம்பிக்கைகளையும் இப்படத்தில் அம்பலப்படுத்தினார் சுப்ரமணியம். இப்படத்தில் இன்னொரு புதுமுகத்தை அறிமுகம் செய்தார். அவர்தான் கர்நாடக இசைமூலம் அறியப்பட்ட எம்.எஸ். சுப்புலட்சுமி. இப்படத்தில் வயதான பிராமணராக எம்.ஜி. நடேச அய்யர் நடித்தார். இவருக்கு இரண்டாம் தாரமாக எம்.எஸ். நடித்தார். கடைசிக் காட்சியில் கணவன் தனது தவறுகளை உணர்ந்து பழமைவாதத்தின் மீது வெறுப்புக் கொண்டு தான் அணிந்திருந்த பூணூலையே அறுத்து எறிந்த போது தமிழகம் திகைத்துத்தான் போனது.
 
 பழமைவாதிகள் பெருங்கோபம் கொண்டு சுப்பிரமணியம் மீது பாய்ந்தார்கள். தீண்டத்தகாத ஏழை மக்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு பிராமணர் விருந்துபசாரம் செய்யும் காட்சிகூட இப்படத்தில் இடம்பெற்றது. இவற்றின் விளைவாகச் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார் சுப்பிரமணியம்.
 
 இதுபோல் இவரது 'தியாக பூமி' படமும் சிறப்பாகப் பேசப்படுகிறது. 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்று போதிக்கப்பட்டு வந்த பழமைவாதத்தை இப்படத்தில் கிழித்தெறிந்தார். கணவனே ஆனாலும் கயவன் கயவனே என்று ஊரறிய உரக்கக் கூவினார். அதனால்தான் சாவித்திரி ஓடிப்போன கணவன் மீண்டும் திரும்பி வந்ததும் கூட ஏற்க மறுக்கிறாள். தனது சுயத்துவத்தை நிலைநாட்ட முற்படுகிறாள்.
 
 இந்தக் கருத்துநிலை உரையாடல் சுப்பிரமணியம் மூலம் திரைப்படங்களில் நடத்தப்பெற்றது என்பதை நாம் தெளிவாக இனங்காண வேண்டும். சமூக முரண்பாடுகளை, மூடநம்பிக்கைகளை, பழமைவாதங்களை எதிர்த்துக் கலகம் செய்யும் புதிய நடைமுறைப் பண்பாடு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வலுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் சுப்பிரமணியம் காலத்தின் தேவைக்கேற்பப் புதிய சமூக மதிப்பீடுகளை உருவாக்கும் வித்தில் முன்னோடியாக இயங்கியுள்ளார்.
 
 சுப்பிரமணியம் 1959க்குப் பிறகு படத் தயாரிப்புக்களை முற்றாக நிறுத்திக் கொண்டார். 1959இல் தமிழக அரசு 'கலைமாமணி' பட்டம் கொடுக்கும் திட்டத்தை துவங்கியது. அந்த ஆண்டே சுப்பிரமணியம் அவர்களுக்கு ‘கலைமாமணி' பட்டம் வழங்கியது. இந்தப் பட்டத்தை வாங்கிய முதல் தமிழ்ப்பட இயக்குனர் இவராகத்தான் இருப்பார்.
 
 இவர் பிறரது படங்களை இயக்க விரும்பவில்லை, ஏனெனில் அதில் தனக்கு சுதந்திரமும் சுயமரியாதையும் இருக்காது என்பதைத் திடமாக நம்பினார். எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தபொழுதும் இந்த நிலைப்பாட்டில் இருந்து விலகாதவராக இருந்தார். 'நாடோடி மன்னன்' என்னும் படத்தை எம்.ஜி.ஆர். முதல்முதலாக இயக்குவதாக முடிவெடுத்தபோது படப் பிடிப்பில் தம்மோடு இருந்து மேற்பார்வை செய்யுமாறு சுப்பிரமணியம் அவர்களை வேண்டினார். ஆனால் இவரோ எம்.ஜி.ஆரிடம் 'உனக்கு மேற்பார்வை தேவையில்லை உன்பலம் உனக்குத் தெரியவில்லை. நீயே தனித்துச் செய். படம் நன்றாக வரும்' என்று சொன்னதாகவும் அப்படியும் எம்.ஜி.ஆர். விடாமல் சுப்பிரமணியத்தை வற்புறுத்தியதாகவும், எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மறுத்ததாக இருக்கக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் சிலநாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு போய் வந்தார், பிறகு எம்.ஜி.ஆர் சம்மதத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதை நிறுத்திக் கொண்டார் என்றும் சினிமா வட்டத்தில் பேசப்பட்டது.
 
 இதன்மூலம் எம்.ஜி.ஆர் சிறந்த இயக்குனர் என்பதை ஆரம்பத்திலேயே இனங்கண்டிருந்தார். அதைவிடப் பிறரது படங்களை தாம் இயக்குவதில்லை என்ற கொள்கையையும் இறுதிவரை கடைப்பிடித்தார். எம்.ஜி.ஆருக்கும் இவருக்குமான உறவு குடும்ப ரீதியிலும் வலுவாக நீடித்தது. இவர்மீது அளவற்ற மதிப்பை எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்.
 
 சினிமாத் தொழிலின் நன்மையையும் கலைவளர்ச்சியையும் கருதி 1939இல் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்னும் அமைப்பு உருவாக்கத்தில் சுப்பிரமணியத்தின் பங்களிப்பு உண்டு. இதைவிட 'நாதஸ்வர வித்துவான்கள் சங்கம்' என்ற அமைப்பு உருவாகவும் இவரே காரணமாக இருந்துள்ளார். அக்காலங்களில் ஆலயங்களிலிலும் திருமண வைபவங்களிலும் துவக்க விழாக்களிலும் முழங்கியது நாதஸ்வர இசைதான். ஆனால் அந்த நாதஸ்வர வித்துவான்களை அந்தக் காலச் சமுதாயம் சட்டை போட்டு கொள்ளக் கூடாது, நின்றபடியே வாசிக்கவேண்டும், ஓரமாகத்தான் உட்காரவேண்டும் என்றெல்லாம் இழிவாக நடத்தியது. மற்ற இசைக் கலைஞர்களைப் போல தங்களுக்கு கௌரவம் இல்லாமல் இருப்பதை எண்ணிக் கலைஞர்கள் வருந்தினார்கள். இவர்களது இந்தக் குறையைப் போக்கி இவர்களது சுயமரியாதையை நிலைநிறுத்த ஓர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு 13 வருடங்கள் சுப்பிரமணியமே தலைவராக இருந்து இவர்களது முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டார். இதுபோல் தென்னிந்திய திரைப்பட நடிகர்சங்கம் உருவாக இவரும் காரணமாக இருந்துள்ளார். மேலும் இந்திய மக்கள் நாடகக்கழகம் என்ற அமைப்பிலும் துணைத்தலைவராக இருந்து பணிபுரிந்துள்ளார். இவ்வாறு பல்வேறு கலை அமைப்புக்களில் பங்குகொண்டு சமூதாய முன்னேற்றத்திற்கும் கலை மேம்பாட்டுக்கும் அளப்பரிய பணிகளைச் செய்துள்ளார். பன்முக ஆளுமைப் பாங்குடன் செயற்பட்ட ஒரு முன்னோடிப் பெருந்தகையாகவே தமிழ்க் கலையுலகில் இவர் திகழ்ந்துள்ளார்.
 
 1971 ஏப்ரல் 7ஆம் நாள் சுப்பிரமணியம் மறைந்தார். ஆனால் அவர் உருவாக்கி வளர்த்தெடுத்த மரபு இன்றைய தமிழ்த் திரைப்பட உலகில் மீண்டும் புதிதாகப் பொருள்கோடல் செய்யப்பட வேண்டும். இவரது எல்லாப் படங்களும் கட்டமைத்த கதையாடல்-கருத்தாடல், காட்சிப்படுத்தல் யாவும் புதிய நோக்கில் இன்று மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும்.
 
 தெ.மதுசூதனன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |