ராதா கல்யாண உற்சவம் 'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் 'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா நிருத்யாஞ்சலி தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகம் மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம் ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
|
 |
| வாசிங்டன் வட்டாரத்தில் திருக்குறள் கருத்தரங்கம் |
   |
- | ஜூலை 2006 |![]() |
|
|
|
|
கடந்த ஜூன் மாதம் 18 - ஆம் நாளன்று வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தை சார்ந்த தமிழ் இலக்கிய ஆய்வு கூட்டம், வள்ளுவர் கூறும் ஆளுமை என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கத்தை வெகு சிறப்பாக நடத்தியது. தமிழ் இலக்கிய ஆய்வு கூட்டம் என்ற அமைப்பின் அடிப்படையில் கடந்த மூன்றாண்டு காலமாகத் திருக்குறளை முறையாகப் படித்து வரும் வாசிங்டன் வட்டாரத் திருக்குறள் ஆர்வலர்கள், திருக்குறளில் அரசியல் என்று கருதப்படும் அதிகாரங்கள் 39 முதல் 63 வரை படித்து முடித்தவுடன் அதில் கூறப்படும் கருத்துக்களைக் கலந்துரையாடி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார்கள்.
செல்வன் அகிலன் மெய்யப்பன் மற்றும் கோவர்த்தன் அருணகிரி ஆகிய இருவருடைய தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கம் தொடங்கியது. இந்தக் கருத்தரங்கிற்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரும் திருக்குறள் ஆரய்ச்சியாளருமான பேராசிரியர் தி. முருகரத்தனம் தலைமை தாங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் வள்ளுவரின் அரசியல் தத்துவங்களுக்கும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் காணப்படும் அரசியல் கருத்துக்களுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி, வள்ளுவரின் கருத்துக்கள் அறத்தின் அடிப்படையில் அமைந்தவை என்று கூறினார்.
கருத்தரங்கத்தில் திரு. வே. பேரம்பலம் அவர்களின் A Path to Purposeful Living என்ற நூலை, முனைவர். முத்துவேல் செல்லையா வெளியிட்டார். இந்த நூல், திரு. பேரம்பலம் அவர்கள் திருக்குறளுக்கு வெகு அழகாக ஆங்கிலத்தில் எழுதிய விளக்கவுரை. சென்ற ஆண்டு வாசிங்டன் வட்டாரத்தில் நடைபெற்ற பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றைத் தொகுத்து, திரு. முருகரத்தனம் அவர்கள் இயற்றிய நூலை, முனைவர் திருமதி மீனாட்சி செல்லையா பாராட்டிப் பேசி வெளியிட்டார். அதன் பின்னர், முனைவர் இர. பிரபாகரன், திரு. நாஞ்சில் பீட்டர், முனைவர் அரசு செல்லையா, திரு. நித்திலசெல்வன், திரு. கரு மலர் செல்வன் ஆகியோர் அதிகாரங்கள் 39 முதல் 63 உள்ள குறள்களில் கூறப்பட்டிருக்கும் அரசனது இயல்புகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ச்சி செய்து அவர்களின் கருத்துக்களை அவையோருடன் பகிர்ந்து கொண்டார்கள். |
|
|
இறுதியாக, திருக்குறளில் மரண தண்டனைக்கு ஆதரவு உண்டு - ஆதரவு இல்லை என்ற தலைப்பில் ஒரு சுவையான பட்டிமன்றம் நடைபெற்றது. திருக்குறளில், செங்கோன்மை என்ற அதிகாரத்தில் பின்வரும் குறள் உள்ளது.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதோனாடு நேர் (குறள் - 550)
இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு இந்தக் குறளை மையமாக வைத்து அமைக்கப் பட்டது. இதில், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. எம்.பி. சிவா அவர்களும் முனைவர் ஜெயந்தி சங்கரபாண்டி அவர்களும் திருக்குறளில் மரண தண்டனைக்கு ஆதரவு இல்லை என்றும் திரு. நாஞ்சில் பீட்டர் அவர்களும், திருமதி. சிவா செல்வகுமார் அவர்களும் ஆதரவு உண்டு என்றும் வாதாடினார்கள். பட்டி மன்றத்திற்கு நடுவராக இருந்த முனைவர் தி. முருகரத்தனம், இந்த பட்டி மன்றத்திற்கு அடிப்படையான குறளுக்குப் பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள், அரசன் கொடியவர்களுக்குக் கொலை தண்டனை கொடுப்பது பசும்பயிர் விளையும் வயலில் களை எடுப்பது போல் என்று பொருள் கொண்டாலும், திருவள்ளுவர் வலியுறுத்தும் இன்னாசெய்யாமை, கொல்லாமை போன்ற கருத்துக்களைப் ஆராய்ந்து பார்த்தால், திருக்குறளில் மரண தண்டனைக்கு ஆதரவு இல்லை என்று தன் முடிவைக் கூறினார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் திருமதி கல்பனா மெய்யப்பன் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவு பெற்றது.
கருத்தரங்கத்திற்கு வந்தவர்கள் நிகழ்ச்சியைப் பெரிதும் பாராட்டி ஆவலோடு ரசித்துக் கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த கருத்தரங்கத்தில் சொற்பொழிவாற்றியவர்கள் பயன்படுத்திய PowerPoint Presentations விரைவில் www.Thirukkural2005.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். |
|
 |
More
ராதா கல்யாண உற்சவம் 'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் 'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா நிருத்யாஞ்சலி தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகம் மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம் ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
|
 |
|
|
|
|
|
|
|
|