|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தென்றல் - வாசகர்கள் - சில எண்ணங்கள் |    |  
	                                                        | - அசோகன் பி. ![]() | ![]() ஜனவரி 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| சில எண்ணங்கள் - நமக்குள் ரசனைகளும், மனப்பாங்கும் வேறுபடுகின்றன. தென்றலை எடுத்தவுடன் முதலில் ராசிபலனைப் படிப்பவர்கள் இருக்கிறார்கள்; அந்தப் பகுதியைப் பற்றி மிகவும் எதிர்மறையான கருத்துடையவர்களும் இருக்கிறார்கள். தமிழுக்காகவே படிப்பவர்கள் உண்டு; ஏன் இப்படி 'செந்தமிழில்' எழுதுகிறீர்கள் என்று குறை சொல்பவர்களும் உண்டு. ஆன்மீகத்தை நாடுவோரும், அதைச் சாடுவோரும் தென்றல் வாசகர்களுக்குள் அடக்கம். 
 தென்றல் எல்லாருக்கும் எல்லாமாகவும் இருக்க முயல்வதில்லை; அது முடியாததும் கூட. தமிழ்மொழி மற்றும் வட அமெரிக்கா என்ற இரண்டு வட்டங்களுக்குப் பொதுவான நடப்புக்களையும், கோணங்களையும் தனது முதல் வட்டமாகக் கொண்டிருக்கும் இதழாகவே தென்றல் நடந்து வருகிறது. "தமிழர்கள் பொழுதுபோக்குக்காகத்தான் படிப்பார்கள்" என்ற கருத்தில் உடன்பாடில்லை. குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள் மொழி, கலாசாரம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதே எங்கள் கருத்து.
 
 வாசகர்கள் பலவிதம் என்றாலும் எழுதும் வாசகர்களிடையே நான் சில பொது நோக்குகளைப் பார்க்கிறேன்: அநேகமாக எல்லோரும் - இலவசம், தொண்டு என்று புகழ்கிறார்கள். இலவசம் என்பது ஒருவிதமான வினியோகமுறைதான். தென்றலில் விளம்பரம் செய்யும் தொழில்/வியாபார நிறுவனங்கள் வாசகர்களுக்குப் பதிலாக தென்றலின் விலையைத் தருவதாகக் கொள்ளலாம். முன்பே பலமுறை சொன்னதுபோல், வாசகர்கள் இவர்களை ஆதரிக்க வேண்டுகிறோம்; ஏதேனும் குறைகள் இருக்குமானால் தயவு செய்து தென்றலுடன் தொடர்பு கொள்ளவும்.
 
 அடிக்கடி (சிலரால்) சொல்லப்படும் ஒரு கருத்து தென்றலின் அரசியல் பக்கங்கள் பற்றி - அழகாக சிலர், தென்றலில் அரசியல் 'வாடை' கலக்கக் கூடாது என்று சொல்நயம் பொருந்த எழுதியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை ஒப்ப இயலவில்லை. "We get the type of leaders we deserve". அரசியலை 'மோசமானது', 'சாக்கடை' என்று விமர்சித்து விட்டு தள்ளி நிற்பது, ஒரு குடிமகன் என்ற முறையில் நமது கடமையிலிருந்து தவறுவதற்கு சமம். அது இந்திய/தமிழக அரசியலாக இருந்தாலும் சரி; அமெரிக்க/உலக நிலைப்பாடுகளாக இருந்தாலும் சரி. அரசியலில் பங்கெடுத்து தேர்தலில் நிற்க வேண்டியதில்லை. ஆனால், அரசு மற்றும் அரசியலாளர்களின் போக்கு பற்றி அறிதலும், அதைப் பற்றி யோசித்து நமது கருத்துக்களை தெரியப் படுத்துவதும் அத்தியாவசியமானவை.
 
 இந்த அரசியல் பக்கங்கள் பற்றி இன்னொரு கருத்தும் சிலரால் (சற்றுக் கோபத்துடனே!) தெரிவிக்கப்படுகிறது. 'நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்' என்று. வேடிக்கை என்னவெனில், தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளின் ஆதரவாளர்களும், தென்றல் இன்னொரு கட்சியை ஆதரிக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்!! தென்றல் எந்த ஒரு கட்சியையும் சார்ந்ததல்ல என்று சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
 
 இந்தப் பக்கத்தை எழுதி முடித்த சில மணி நேரங்களுக்குப் பின் தோன்றிய எண்ணம். இன்றுவரை, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை பல பிரமுகர்கள் சந்தித்திருக்கிறார்கள்; அவர்களது விழாக்களில் பங்கேற்றிருக்கிறார்கள். பலநேரம் இத்தகைய நிகழ்வுகள், இந்தியத் 'தலைவர்கள்' புலம் பெயர்ந்தோரை இந்தியாவிற்கு 'நீங்கள் ஆற்ற வேண்டிய உதவி...' பற்றிக் கூறுவதற்கே உதவுகின்றன என்பது என் எண்ணம் - தவறாக இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம் ஒரு சாதாரண அரசு பதவி வகிப்பவரல்ல. பதவிக்குப் பெருமை சேர்த்தவர் என்ற வார்த்தை அவருக்கு முற்றிலும் பொருந்தும். அவர் சமீபத்தில் நடந்த விழாவில் பங்கேற்றதும், அவர் சொல்லியதும் சேர்ந்து அமெரிக்காவிலுள்ள தமிழர்களுக்கு, ஏன் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய செயல்வேகத்தையும் அவர்களது முயற்சிகளுக்கு அதிக முனைப்பையும் தரும் என்பது உறுதி.
 
 தென்றல் வாசகர்களின் சார்பிலும் என் சார்பிலும், தென்றலின் ஆசிரியர் குழுவுக்கு மதுரபாரதி அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரைப் பற்றிய விபரங்கள் உள்ளே.
 
 அமெரிக்க சுதந்திர தினத்துக்குக் காலம் தாழ்ந்த வாழ்த்துக்கள் மற்றும் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களுடன்...
 
 மீண்டும் சந்திப்போம்,
 பி.அசோகன்
 ஆகஸ்டு 2003
 
 ******
 | 
											
												|  | 
											
											
												| வருக, மதுரபாரதி! 
 கவிஞர் மதுரபாரதி தென்றல் ஆசிரியர் குழுவில் இந்த மாதம் இணைகிறார்.
 
 மதுரபாரதி, அமெரிக்க வாசகர்களுக்கு, குறிப்பாக சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி வாழ் தமிழர்களுக்கு, நன்றாகத் தெரிந்தவர். பொங்கல் 2002 தமிழ் மன்ற முத்தமிழ் விழாவில், பாரதியின் "பாஞ்சாலி சபதம்" குறுங்காப்பியத்தைக் கவிதை நாடகமாக அரங்கேற்ற வேண்டும் என்று நான் விரும்பிய போது, கட்டாயம் செய்வோம் என்று உறுதியளித்தார். ஹ¥ஸ்டன் பாரதி கலைமன்ற இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர், ஒரே வாரத்தில், பாரதியின் கவிதை நாடகத்தைச் சாறு பிழிந்து, சுவையும் சூடும் குறையாமல் ஒரு மணி நேர மேடை நாடகமாக வடிவமைத்துக் கொடுத்தார். கவிதை வரிகளை வசனமாகப் பேசுவதற்கும், பொருளுணர்ந்து உணர்வோடு சொல்வதற்கும் மட்டுமின்றி, நடிகர்களுக்குக் குரல்வளம், மற்றும் நடிப்புப் பயிற்சியும் கொடுத்தார். நாடகத்தின் இணை இயக்குநராகச் செயல் புரிந்தார். கலி·போர்னியா தமிழ்ச் சங்கத்தில் "கம்பனைக் காண்போம்" என்ற தொடரில் இவர் நடத்திய கம்ப ராமாயண வகுப்பு பலரை ஈர்த்தது. தொடர்ந்து மேடைப் பேச்சாளர்களுக்குப் "பேச்சிலே பெருவளம்" என்ற ஒரு நாள் செயற்பட்டறை நடத்தினார். தென்றல் இதழிலும் தொகுப்பாளராகத் தொண்டாற்றினார். ஸ்டான்·போர்டு பல்கலைக்கழக வானொலியின் " மோஸ்ட்லி தமிழ்" ஒலிபரப்பில் சிறப்பு நிகழ்ச்சி வழங்கினார்.
 
 மதுரபாரதி தென்றலின் தோழமை நிறுவனமான சென்னை ஆன்லைன்.காம் அமைப்பின் முதன்மைக் கருப்பொருள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமையுள்ள இவர் கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நூற்றாண்டு விழா இசைப்பாடல் போட்டியில் முதல் பரிசு வென்றவர். 1989ல் பிரிட்டிஷ் கவுன்சில் நடத்திய முதல் அனைத்திந்திய ஆங்கிலக் கவிதைப் போட்டியிலும் பரிசு பெற்றவர். சென்னையில் பாரதி இயக்கம் என்ற சமுதாய இலக்கிய அமைப்பை நடத்தி வந்தார். இவருடைய கதை, கவிதை ஆகியவை கல்கி, கணையாழி, அமுதசுரபி ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.  மரபுக்கவிதை, குறிப்பாக வெண்பா புனையும் ஆற்றல் உள்ள இவர் சென்னை மாநகரக் காட்சிகளை வெண்பாவில் வடித்திருப்பதை மன்றமையம் (www.forumhub.com) என்ற வலைமன்றத்தில் அவ்வப்போது காணலாம்.
 
 நண்பர் மதுரபாரதியைத் தென்றலுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவரது வருகையால், தென்றல் மேன்மேலும் பொலிவுறும் என்பதில் ஐயமில்லை.
 
 மணி மு. மணிவண்ணன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |