|  | 
											
											
												| 
                                                        
	                                                        | கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது! |    |  
	                                                        | - மனுபாரதி ![]() | ![]() ஜூன் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து, நம் நினைவுப் பொக்கிஷத்தில் இடம் பிடித்துவிடுகிறது. அதுவே மணமற்ற மென்மையற்ற காகிதப் பூவாய் மரத்து நின்றாலும் அதன் தாக்கம் நம்மில் பதிந்துவிடுகிறது. இல்லை, குரூர முள் மிரட்டலுடன் வந்து விரல் குத்தினாலும் அதன் வலி மறையாத வடுவாய்த் தங்கிவிடுகிறது. விரும்பி பத்திரப் படுத்தினாலும், விரும்பாமலே சுமந்தாலும் கவிதை என்ற உணர்வு வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கிவிடுவது உண்மைதான். அவ்வப்பொழுது நம் வாசிப்பில் கவிதைகளையும் சேர்த்துக்கொள்வதற்கான அவசியம் இப்படித்தான் பிறக்கிறது. 
 பல்வேறு காரணங்களுக்காக நம் உறவு களையும், வேர்களையும் விட்டுப் புலம் பெயர்ந்து வேறு இடத்தில் வந்து வாழ்கிறோம். புதிய களத்தில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள், கலாச்சார வேற்றுமைகள், பிரச்சனைகள், பாதிப்புகள், தனிமைப் பொழுதுகள், தேவைப்படும் அனுசரிப்புகள் எல்லாமே நம்மில் பெருத்த மாற்றங்களைக் கோருகின்றன. நாம் பலவிதமான எல்லைகளைக் கடந்து, தோல்களை உதிர்த்து வெளி வரவேண்டி யிருக்கிறது. மாற்றங்களின் அதிகாரத் தோரணைக்கு அடிபணிகிறோம். இவற் றைச் சொல்ல முற்படும் ஒரு புலம்பெயர்ந்த கவிஞனின் படைப்பைக் கொண்டு கவிதைப் புத்தகங்களுக்கான அறிமுகத்தைத் துவக்கிவைப்பது சரியென்று பட்டது. வளைகுடப் பகுதியில் வசிக்கும் கோகுலக் கண்ணனின் 'இரவின் ரகசிய பொழுது' - கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகம் இங்கே.
 
 தனிமையின் அடர்வெப்ப மூச்சுக்காற்றில்
 ஏன் என் மனம் இப்படித் துடிக்கிறது?
 நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
 ('ஏன்' கவிதையிலிருந்து...)
 
 வீட்டில் எல்லாரும் தாய் நாட்டிற்குச் சென்றிருக்க வெறும் சுவர் (அல்லது டி.வி) பார்த்து உங்கள் பொழுது கழிந்திருக்கிறதா? 'கைக்குழந்தை ஏன் அர்த்த ராத்திரியில் அழுகிறது?' என்ற, பாட்டி வைத்திய அனுபவத்தின் இல்லாமையை நீங்களும் உங்கள் புதிய மனைவியும் உணர்ந்த அந்த நடு ஜாமத்தின் மிரட்டல் நினைவிருக்கிறதா? இருபது மைல் கார் ஓட்டிப்போய் நின்ற பால்ய கால நண்பனின் வீட்டு அழைப்பு மணியோசைக்கு வந்த மௌனத்தில் நொந்து போயிருக்கிறீர்களா? எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறவுகளை விட்டு வாழ்பவர்கள், கண்ணுக்குத் தெரியாமல் சிறைப்படுத்தியிருக்கும் தனிமையின் கொடுங்கோன்மையை எப்பொழுதாவது உணரத்தான் வேண்டியிருக்கிறது. கோகுலக்கண்ணனின் பல கவிதைகள் அதீத தனிமையில் பிறந்து நமக்காகவும் சேர்த்து வார்த்தை வடிவம் எடுப்பதைப் பார்க்கலாம்.
 
 இந்த வீட்டின் தனிமை
 உடல்களைப் போர்த்தியிருந்தது வெகுகாலம்
 . . . . . .
 மனிதர்களுக்குப் பின்னாலும்
 உள்ளுக்குள்ளும்
 அது ஓளிந்திருந்தது
 . . . . . .
 மழை நாளொன்றில்
 . . . . . .
 காகிதப் படகுகளில் தன்னிடமிருந்து
 மனிதர்களைப் பிரித்து அனுப்பியது.
 காகிதப் படகு நைந்து போய்
 கடலில் மூழ்கினார்கள்
 வீட்டு மனிதர்கள்.
 இப்போது இந்த வீட்டுக்குள்
 தனிமை
 தனியாகத்தான் இருக்கிறது.
 . . . . . .
 மனித உடல்களைச் சுற்றியிருந்த தனிமைக்கு
 தன்னுடன் மட்டும் இருப்பதன் துயரம் தாங்கவில்லை
 ('தனிமை' கவிதையிலிருந்து...)
 
 இவரது கவிதைகளில் நாம் காணும் காட்சிகள் மிகவும் பரிச்சயமானவைதாம். ஆனால் அவற்றின் அர்த்தங்களைத் தேடி அலையும் அவரது ஆழ்மனம் கவிதையில் புலம்புகிறது.
 
 பக்கத்து டிரையரைத் திறந்து உலர்ந்தவற்றை மடிக்கிறாள்
 | 
											
												|  | 
											
											
												| . . . . . . நடுத்தர வயதுப் பெண்
 மேலிருக்கும் டீவியைப் பார்த்துக்கொண்டே
 . . . . . .
 கார் கதவில் சாவியை நுழைக்கும்போதும்
 கதவின் வழி டிவியில் அவள் பார்வை
 . . . . . .
 டி.வியில் அவள் விட்டுச் சென்ற கண்கள்
 என்னையே பார்க்கின்றன.
 ('சலவைக்கடையில் டி.வி. பார்த்தவள்' கவிதையிலிருந்து...)
 
 அப்போது தொடங்குகிறாள்
 உடைந்த சில்லுகளைப் பொறுக்க
 சிந்திக் கிடக்கும் உணவைத் துடைக்க
 பெருங்காவியத்தின் மௌனத்துடன்
 பெருங்காவியத்தின் துயரத்துடன்.
 ('உணவகத்தில் பெருங்காவியக் கிழவி' கவிதையிலிருந்து...)
 
 இத்தனை அகணட பள்ளத்தை
 இதுவரை பார்த்ததில்லை
 . . . . . .
 இடையற்றுப் பெய்யும் மழைபோல
 பள்ளத்தாக்கில் வீழ்கிறது
 காலம் சேமிக்கும் மௌனம்
 . . . . . .
 ஓயாத வாய்கள் ஓய்கின்றன
 அவரரவர்க்கான அளவை
 மௌனப்பொய்கையிலிருந்து
 அள்ளிக்கொண்டு
 ['மௌனப் பொய்கை (Grand Canyon)' கவிதையிலிருந்து...]
 
 பொழுதுபோக்கிற்கான திரைப்படங்கள் மலிந்தவிட்ட காலம் இது. அதே சமயத்தில் பார்வையாளர்களின் சிந்தனைக்கு உரமிட்டு, வளம்சேர்க்கும் படங்களும் இந்த வளர்ச்சியின் ஒரு பின்விளைவாய் நமக்குக் கிடைத்து விடுகின்றன. அப்படிப்பட்ட சில படங்களின் பாதிப்பில் இவரது சில கவிதைகள் அமைந்திருக்கின்றன. இவை வெறும் 'மறுவிவரிப்'பாக மட்டுமில்லாமல், அதன் உள்ளர்த்தத்தைத் தேடும் ஒரு நீட்சியாய் எழுகின்றன. 'ஆறுதல்', 'Mr. and Mrs. Iyer' போன்ற கவிதைகள் உதாரணங்கள்.
 . . . . . .
 ஒருவேளை
 அவனை நிறுத்தி நீங்கள் கேட்டால்
 அவன் சொல்லக்கூடும்
 உறவைத் தேடி
 உணவைத் தேடி
 போகிறேன் என்று
 ஆனால்
 அவன்
 பியானோவைத் தேடித்தான் போகிறான்'
 ['ஒரு மிகப்பெரிய அழிவிற்குப் பிறகு..
 (The Pianist)' கவிதையிலிருந்து...]
 
 கவிதை சார்புற்ற ஒரு வெளிப்பாடு (subjective expression). அவரவர்களின் புரிதல் வெவ்வேறாக இருக்க சாத்தியங்கள் உண்டு. என்னைக் கவர்ந்த கவிதைகளை இங்கே சொல்ல விரும்புகிறேன். வயதாக ஆக நம் சொற்கள் எல்லாம் போதும் என்று நிறுத்திவிட்டு நம்மில் ஒரு மௌனம் குடியேறுவதை 'உதிரும் சொற்கள்' படம்பிடிக்கிறது. சொற்களின் இழப்பைச் சொற்களே வந்து சொல்லும் முரண் இந்தக் கவிதையில் கவிதை.
 
 ஒவ்வொன்றாய் உதிர்ந்துகொண்டே
 வந்ததைக் கவனிக்காதிருந்துவிட்டேன்.
 . . . . . .
 இனி நான் வார்த்தைகளற்றவன்
 மீதமிருப்பது மௌனம் மட்டுமே
 
 கவனமற்று அதையும் தொலைத்துவிட்டால்
 . . . . . .
 
 ஒவ்வொருவருக்கும், மிகுந்த அன்பும் காதலும் வைத்திருக்கும் அவரவரின் வாழ்க்கைத் துணையோடு பெரும்பான்மையான பொழுதுகள் கழிகின்றன. இந்த உறவு, வயதுகளின் தொடர் ஏற்றத்தில் பலவிதமான தருணங்களைக் கடந்து வளர்கிறது. அதில் 'உன்னுடனான என் பொழுதுகள்' குறிப்பிடும் இந்தத் தருணமும் அடக்கம்.
 
 கனவில்
 . . . . . .
 மனக்கண் முன் உன் உருவம் விரிய
 தொண்டையில் உன் பெயர் சிக்கிக் கொண்டுவிட்டது
 . . . . . .
 நாக்கின் நினைவில்
 உன் பெயர் இல்லை
 . . . . . .
 எத்தனை குற்றவுணர்ச்சியை அது ஏற்படுத்திவிட்டது
 . . . . . .
 இந்த மறதியையும்
 என் அன்பையும்
 எப்படிச் சேர்த்துப் பார்ப்பது
 
 துக்கத்தின் குரலாக, தனிமையில் அலைகக்ழிக்கும் குரலாக இவரது கவிதைகளுக்குள் ஓர் ஆழ்ந்த சோகம் புதைந்திருக்கிறது. இருந்தும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றில் ஓர் அமைதியை எதிர்பார்த்து தவமிருக்கின்றன இவரது கவிதைகள். இவரது முதல் கவிதைத் தொகுப்பின் வாசிப்பில் எனது அனுபவம் இது. உங்களின் அனுபவம் வேறாக இருக்கலாம். முயன்று பாருங்கள்.
 
 நிழல்களின் விரல்களை
 மீட்டி மீட்டி
 அவள் எழுப்பும்
 ஒலி
 அடிவானத்தில்
 மெல்லச் சேர்க்கிறது
 நிகரற்ற ஒளியை.
 ('பியானோ வாசிக்கும் சிறு பெண்' கவிதையிலிருந்து...)
 
 இரவின் ரகசிய பொழுது
 கோகுலக்கண்ணன்
 உயிர்மைப் பதிப்பகம்
 uyirmmai@yahoo.co.in
 
 மனுபாரதி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |