அன்று இரவு சர்மா தூங்கவில்லை. மொட்டை மாடியின் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டு வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருத்தார். "சாமு பிழைக்க மாட்டான்" என்று ஜோஸியர் சொன்ன வார்த்தைகள் அவர் காதில் நாராசமாக இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த அவ வாக்குக்கு முத்திரை வைத்து, ‘ததாஸ்து’ சொல்வதுபோல் பூஜையறையில் அகஸ்மாத்தாக அவர் கண்ணில் பட்டு நெஞ்சைக் குலைத்த பகவத்கீதையின் வரிகள் வேறு அவர்முன் நர்த்தனமாடின. வேதத்தையெல்லாம் கரைத்துக் குடித்து, சிருஷ்டியின் ரகசியத்தையே கண்டுகொண்டு விட்டாற் போல் இத்தனை நாட்கள் இறுமாந்திருந்த அவர், இன்று நெருங்கிவரும் மகனின் மரணம் என்ற விசுவரூபத்துக்கு முன் கூனிக்குறுகி அற்பமான ஒரு துளியாக நின்று கொண்டிருந்தார். தெருநாயின் ஓலம், நீல வானத்தைக் கிழித்தாற்போல் உதிரும் தீப்பொறி, உத்தரத்தில் தொங்கும் பல்லியின் யதார்த்த வாசகம், இவை ஒவ்வொன்றும் அவர் உடலில் தனி உதறலை ஏற்படுத்தின. கொஞ்சம் அழுகை, கொஞ்சம் பிரார்த்தனை. கொஞ்சம் விரக்தி என்று விவேகத்தைத் தவிர மற்ற எல்லாம் சேர்ந்த கலப்படமாக அவர் உருகிக் கொண்டிருந்தார்.
திடீரென்று அவருக்கு என்ன தோன்றிற்றோ! மளமளவென்று முகம், கை கால்களைச் சுத்தம் செய்துகொண்டு, திருநீறு அணிந்து, கிழக்கே பார்த்துத் தரையில் உட்கார்ந்து கொண்டார். மனத்துக்குள்ளேயே ருத்ர ஜபம் ஆரம்பமாயிற்று. மூடியிருந்த கண்களுக்குள் அடர்ந்த இருட்டின் அடர்த்தியில் ஓரொரு சமயம் ஒளிக்கீற்றுகள் பளிச்சிட்டுக் கிளை பிரிந்து ஓடுவது போன்ற தோற்றம் ஏற்படும். அப்பொழுதெல்லாம் அவர் உடல் சிலிர்த்துக் கொள்ளும். வெள்ளி முளைத்து, புள்ளினங்கள் கூவி இரவென்னும் இறப்பில் உலகம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு எழும்போது கூட, சர்மாவின் நிஷ்டை கலையவில்லை. சுட்டெரிக்கும் எட்டு மணி வெய்யிலும் அவரைச் சுடவில்லை, நாட்டுப்பெண் அகல்யா மாடிக்கு வந்து பார்த்துவிட்டு, அவர் தபஸைக் கலைக்க விரும்பாமல் பிள்ளை பாலுவை வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, சாதத்தை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனதும் அவருக்குத் தெரியாது.
★★★★★
ஜோஸியர் அப்படி அப்பட்டமாகத் தனக்குத் தோன்றியதைச் சொன்னதற்குக் காரணமே சர்மாதான். சர்மாவின் பிள்ளைதான் சாமு என்று தெரிந்திருந்தால் சொல்லியிருப்பாரோ மாட்டாரோ! "தெரிந்தவர் ஜாதகம்" என்று சர்மா பொய் சொன்னதன்பேரில் ஜோஸியர் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது. அதைக் கேட்ட சர்மா அதிர்ந்து, வெலவெலத்துப் போகையில், ஜோஸியர் திடுக்கிட்டுக் கவலையுடன் என்னவென்று வினவ, விசும்பலுக்கிடையில் சாமு தன் மகன்தான் என்று சர்மா ஒப்புக்கொள்ள, பிறகு ஜோஸியர் ஜாதகத்தை மீண்டும் மேலும் கீழும் பார்த்து, தலையைச் சொறிந்து கொண்டே, "சனியின் வக்ர பார்வையை நான் கவனிக்கவில்லையே! உம் பிள்ளைக்கு ஒரு குறையும் வராது. கவலைப்படாதேயும்" என்று தேற்றியும், சர்மா உடல் குலுங்க அழுதுகொண்டே வெளியேறினார். நாளை மறுதினம் ஆபரேஷனை வைத்துக்கொள்வதா வேண்டாமா என்ற பெரும் போராட்டம் அவர் நெஞ்சைக் குடைய நேராகப் பூஜையறைக்குச் சென்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, விசித்து விசித்து அழுகையில் எதிரே தரையில் பிரிந்து கிடந்த கீதையின் வரிகள் பளிச்சென்று கண்ணில் பட்டன: "காண்டீபா! நீ போரிட மறுத்து இங்கிருந்து ஓடி விட்டால்கூட, கௌரவ அழிவு என்னால் முன்னமேயே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. நான் அவர்களை முன்பே கொன்று விட்டேன். இறந்துவிட்ட அவர்களைத்தான் நீ மீண்டும் கொல்லப் போகிறாய்!"
வாயில் உத்தரீயத்தைப் புதைத்துக்கொண்டு சத்தம் வராமல் குலுங்கித் தீர்த்தார் சர்மா. கண்ணீரின் மங்கலில் எதிரேயிருந்த கிருஷ்ண விக்கிரகம் ஊஞ்சலாடுவது போன்ற பிரமை எற்பட்டது.
"கிருஷ்ணா! ஒரேயடியா என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடா! சாமு செத்துப் போயிடுவானா? என் புள்ளை பொழைக்க மாட்டானா? உன் வாக்குக்கு வேற என்னடா அர்த்தம்; கிருஷ்ணா? ஜோஸியன் சொல்லைவிட உன் வாக்கு ரொம்பக் கொடூரமாய் இருக்கேடா! என்னாலே தாங்க முடியாதுடா, தாங்கவே முடியாதுடாப்பா!"
மானசீகமாகக் குலுங்கிக் கொண்டிருந்தார் சர்மா. உடல் குலுங்கலும், கண்ணீரும் தவிர, சத்தம் வெளிவரவேயில்லை. வாய்விட்டுக் கதறி ரகளை பண்ணக் கூடிய வயதா?
உள்ளுக்குள்ளேயே மறுகி மறுகி வெம்ப வேண்டிய வயசு. ஸ்தானம், பொறுப்பு எல்லாம்.
பூஜையறை ஸ்தம்பித்து, சலனமற்ற சோக அவலத்தில் மூழ்கியிருந்தது.
★★★★★
மகா நைவேத்தியத்தை எடுத்துக் கொண்டு அகல்யா வரும் அரவம் கேட்டதும், கண்களைத் துடைத்து மூடி, தியானம் செய்வதுபோல் பாவனை செய்தார் சர்மா. அவருடைய பொய்ம்மை நிலை அவரையே குத்திக் குடைந்தது.
எவ்வளவு நாட்கள் இதை மூடி மறைக்க முடியும்? எனக்குத் தெரிந்தது அவளுக்குத் தெரிய வேண்டியது நியாயமில்லையா? என் பிள்ளையைப் பற்றி முன்னாடியே தெரிஞ்சுக்கறதுக்கு என் மனசு அடிச்சுண்ட மாதிரி, கணவனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவள் இதயம் துடிக்காதா? நாளை மறுதினம் சாமுவுக்கு ஆபரேஷன் ஆகி, பிறகு அவனுக்குப் பிரக்ஞை திரும்பியோ, அல்லது திரும்பாமலோ யார் கண்டார்கள். எப்படியோ மூச்சுத் திணறி அவன் சாகும்போது. ‘அம்மா குழந்தே! உன் புருஷன் செத்துப் போயிடுவான்னு எனக்கு அன்னிக்கே தெரியும்மா’ன்னு பீத்திக்கறதுதான் முறையா? அழுகையோ. கூக்குரலோ, யாராயிருந்தாலும் அனுபவிக்கிறதை அனுபவிச்சுத்தானே ஆகணும்? இன்னிக்கு இல்லைன்னா நாளைக்கு. எனக்குப் புத்திர சோகம். அவளுக்கு....? கிருஷ்ணா!’
சர்மா ஒரு கணம் யோசித்தார். ஜோஸியம் ஏன் பிசகாக இருக்கக் கூடாது? திறந்து கிடந்து கண்களில் பட்ட பகவத்கீதையின் வரிகள் எனக்குத்தான் என்று நான் ஏன் கற்பனை செய்து கொள்ள வேண்டும்?
இந்த க்ஷணத்தில் உயிருடன் இருக்கும் என் பிள்ளை இறந்து விட்டாற்போல் நினைத்துக்கொண்டு எதற்காக அழ வேண்டும்? ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து, என் பிள்ளை பிழைத்து நீண்ட காலம் ஜீவித்திருக்கும் பாக்கியம் ஏற்பட்டால்...? நாளை மறுநாள் நடக்கப் போகிற விஷயம் எனக்கு இன்றே தெரிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, என்னை நானே வருத்திக் கொள்வானேன்? நாளையை ஊடுருவிப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையே, வெறியே - ஓர் அகம்பாவம்தானே? இந்த ஊடுருவலில் நம்பிக்கை வைத்தால் ஆண்டவனிடத்திலிருக்கும் நம்பிக்கை தளர்ந்து விட்டது என்றுதானே அர்த்தம்? நம்மிடமிருந்து மூடி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரகசியத்தையெல்லாம் தெரிந்து கொண்டுவிட்டதாக நினைத்துக் கொண்டு, கொசுவுக்குப் பிளவை புறப்பட்டாற்போல் தாங்க முடியாமல் தவிப்பானேன்?
இப்படிக் கேள்விக்கு மேல் கேள்வியாகப் போட்டுக் கொண்டு தம்மைத் தாமே உலுப்பிக்கொண்டிருந்தார் சர்மா. நைவேத்தியத்தை வைத்துவிட்டு நின்றுகொண்டிருக்கும் அகல்யாவின் ஞாபகம் வந்தது.
அவசர அவசரமாக இரண்டு அட்சதையையும், புஷ்பத்தையும் அள்ளிப் போட்டுவிட்டு ஒரு நமஸ்காரத்தையும், பண்ணிவிட்டு எழுந்தார். இலேசாக ஜூரம் அடிப்பது போன்ற ஒரு வேகமும் நடுக்கமும் உடலைக் கவ்வின. நடுங்கும் கால்களைப் பூமியில் பரவ வைப்பதே பெரும் பாடாயிருந்தது. முகமெல்லாம் முத்து முத்தாக வியர்த்து, கைகால்கள் ஜில்லிட்டன. நாட்டுப்பெண்ணை நேருக்கு நேர் பார்க்கவே அச்சமாக இருந்தது.
சர்மா அறையிலிருந்து வெளியேற வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டாள் மருமகள். அவளைக் கடக்கும்போது ஒரு விநாடி அப்படியே நின்றார் சர்மா. பிறகு சுவரைப் பார்த்தபடியே, "ஆஸ்பத்திரிக்கு யாரும்மா போயிருந்தா?" என்று கேட்டார்.
"நான்தான்...."
"ஏதாவது சொன்னானா?!"
"முடிஞ்சா உங்களை வரச் சொன்னார்."
"இதோ கிளம்பிட்டேனம்மா" என்று கிளம்பிய சர்மா, ஒரு கணம் நிதானித்துவிட்டு மீண்டும் பூஜை அலமாரிக்குத் திரும்பினார். கீழே இருந்த நிர்மால்ய புஷ்பங்களை எடுத்து நடுங்கும் கரங்களுடன் அகல்யாவிடம் கொடுத்தார். அதை அவள் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு, குனிந்த தலை நிமிராமல் தலையில் சூடிக்கொள்கையில், சர்மாவுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சமாளிக்க முடியாமல் திணறினார். சத்தம் வராமல் உடல் குலுங்கிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அகல்யா, கிழவர் படும் வேதனையைக் காணச் சகியாமல், "பெரியவாளான நீங்களே இப்படி வருத்தப்பட்டா, சிறிசுகள் நாங்கள் என்ன செய்வோம்?" என்றாள்
சர்மா திரும்பினார். முகமெல்லாம் வீங்கி, கண்கள் குழம்பிச் சிவந்து, தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. "என்னாலே தாங்க முடியல்லேம்மா" என்று கத்திவிட்டு, அப்படியே உட்கார்ந்து குழந்தைபோல் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டார்.
"இப்போ என்ன நடந்துடுத்து? எதுக்காக இப்படி அலட்டிக் கொள்றேள்? பகவான் கிருபையினாலே எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும்" என்று அகல்யா சொல்லும் போதே அவள் குரல் தழுதழுத்து வார்த்தைகள் பிசிறிட்டு, கண்கள் குளம் கட்டின.
திடீரென்று என்ன நினைத்துக் கொண்டாளோ! "நமஸ்காரம் பண்றேன். உங்க வாயாலே. எனக்கு ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்று கணீரென்று கூறினாள்: சர்மா வாயடைத்துப் போய், தீர்க்கமாக அகல்யாவின் முகத்தைப் பார்த்தார்.
ஆடாமல், அசையாமல் அவளை ஒரு கணம் பார்த்தார். பிலுபிலுவெனக் கேசச் சுருள்கள் விளையாடும் அகலமான நெற்றியின் நடுவே வட்டத் தீப்பிழம்பாயிருந்த குங்குமப் பொட்டு அவரைச் சுட்டெரித்தது. அத் தீப்பிழம்பின் நடுவே தேரோட்டியின் கைச்சவுக்கின் சொடுக்கில் துள்ளிப் பாயும் குதிரைகளின் பளபளப்பு, குளம்புகளின் உதைப்பில் எழுந்த புழுதிப் படலம், அப்படலத்தைக் கிழித்துக் கொண்டு சரம் சரமாய்ப் பாயும் அம்புகள், ‘ஐயோ, ஐயோ’ என்ற மரண ஓலம், ‘கண்ணா, நான் மாட்டேன், நான் இதற்கு ஒப்ப மாட்டேன்’ என்ற அர்ஜுனனின் கேவல், "முட்டாளே, கொல்பவன் நான், கொல்லப்படுவதும் நான், நீ ஓய்ந்து விட்டால் உலகமே ஓய்ந்து விடும் என்றா எண்ணுகிறாய்?" என்ற கண்ணனின், ஞானோபதேசம்...
சர்மா சிலையாக நின்று கொண்டிருந்தார். அகல்யாவின் சிரம் தாழ்ந்தது. உடல் வளைந்து தரையைத் தொட்டது.
"மஹராஜியா, தீர்க்க சுமங்கலியா இரும்மா!"
உதடுகளின் அசைவில் வார்த்தைகள் பொருளற்ற காற்றாய் வெளிவந்தன. விடுவிடென்று வெளியேறினார் சர்மா. கீதையின் திறந்த பக்கம் படபடவென்று அடித்துக் கொண்டது.
★★★★★
தாதுப் பொருள்களினாலான சர்மாவின் உடலை, விரக்தி என்ற வேகம் ஆஸ்பத்திரிக்கு அடித்துச் சென்றது.
"அப்பாவா...?"
"ஆமாண்டா சாமு!"
"வரமுடியுமோ என்னமோன்னு நெனச்சேன்."
"குழந்தை சொன்னா. வந்துட்டேன்."
"அகல்யாவைச் சொல்றேளா? ஹும்... எவ்வளவு நாளைக்குக் குழந்தையா இருக்க முடியும்?"
"அதோ, அந்தக் கட்டிலைப் பாருங்கோ. நாளைக்கு அந்தக் குழந்தைக்கும் 'ஹார்ட்' ஆபரேஷன். அதுமாட்டுக்கும் போறவா வரவாளையெல்லாம் வம்புக்கிழுத்துண்டிருக்கு. அதையே என்னாலே செய்ய முடியறதோ?"
சர்மா மேஜையிலிருந்த சாத்துக்குடியையே பார்த்துக் கொண்டிருந்தார். சாமு பேசிக்கொண்டே போனான்.
"குழந்தையா இருக்கிறது கஷ்டமில்லை. குழந்தையா ஆறதுதான் கஷ்டம். கஷ்டமென்ன, முடியாதுன்னே வெச்சுக்கலாம். அது நேத்தியைப் பத்தி, இன்னியைப் பத்திக் கவலைப்படறதோ என்னவோ, நிச்சயமா நாளையைப் பத்திக் கவலைப்படறதேயில்லே. ‘எல்லாம் பகவான் செயல்’ங்கற ஞானத்திலேயே அது நாளையைப் பத்தி நிச்சிந்தையா இருக்கு? அதுதானே இல்லை. பகவானைப் பத்தியே அது நினைக்கிறதில்லே. அதனாலேயே அதுக்கு ஞானம் வந்துடறதோ என்னமோ! நாமதான் நாளைப் பொழுதுக்கு, பகவான் நமக்கு என்ன வச்சிருக்காரோன்னு இன்னிக்கிருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் நாசமாயடிச்சுண்டிருக்கோம். நமக்கு பகவான்கிட்ட பக்தியா இருக்கு? பயம்னா இருக்கு!"
சாமு அடுக்கிக் கொண்டே போனான். எதை நினைத்துக் கொண்டு பேசினானோ, சர்மாவுக்கு எல்லாமே தமக்காகத்தான் கூறுவது போலிருந்தது. அவன் வார்த்தைகளின் பொருளை ஜீரணிக்க முடியாமல் தவித்தார்.
என்னால் வெல்ல முடியாததை என் மகன் வென்றுவிட்டானா? சாவுக்கு ஸ்வாகதம் கூறிக் காத்திருக்கும் யோகியாய் விட்டானா சாமு? "அழிவதும் நான், அழிப்பதும் நான்" என்ற காலத்தை வென்ற நிர்ணயத்துடன் ஒன்றிவிட்டானா என் பிள்ளை? சாமு! என் கண்ணே! நீ இறக்கப் போவது உனக்குத் தெரிந்து விட்டதாடா?
வெளிறியிருந்த சாமுவின் முகத்திலும் ஓர் அசாத்தியக் களை அரும்பியிருந்தது. எதையோவென்று விட்டாற் போன்ற பெருமிதத்தின் ரேகை படர்ந்து முகம் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது.
"என்னப்பா, மௌனத்தில் மூழ்கிவிட்டீர்கள்? என்னைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா?" என்றான் சாமு. அவன் குரலில் ஏளனம் கலந்திருப்பதாகத் தோன்றியது, சர்மாவுக்கு.
இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல். "நமக்குக் கவலைப்படறதுக்கு என்னடா அதிகாரமிருக்கு? ‘மாகேலரா விசாரமு’ங்கற தியாகப் பிரும்மத்தின் பாட்டு உனக்கு மறந்து போச்சா? நல்லவா யாரையும் பகவான் கைவிட மாட்டார்..." என்றார்.
"அப்படிச் சொல்லுங்கோ! அந்த ஒரு நம்பிக்கை, நிச்சயமா திடமா போலியில்லாம இருந்ததுன்னா, நமக்கு என்னிக்குமே கவலை கிடையாது. ஆனா, ஆத்துலே ஒரு கால், சேத்துலே ஒரு கால் இங்கறமாதிரி பாதி பகவான், பாதி நான் என்று நினைக்கிற போதுதான் எல்லா அவஸ்தையும் வரது... அது போகட்டும், ராத்திரி அவ வரும்போது நல்ல ரஸமா, கொத்தமல்லியைக் கிள்ளிப் போட்டுக் கொண்டுவரச் சொல்லுங்கோ."
"ஏண்டா, நாளைக்கு ஆபரேஷன். இன்னிக்குச் சாப்பிடலாமா?"
"பரவாயில்லை. ஆபரேஷன் நாளன்னிக்குத்தான்னு டாக்டர் சொல்லிட்டார்."
"அப்பாடி!" என்று ஒரு புது ஜன்மத்தையே பையனுக்கு விலைக்கு வாங்கிக் கொடுத்துவிட்டாற்போல் நிம்மதியான பெருமூச்சுடன் வெளியேறினார் சர்மா.
★★★★★
மறுநாள்...
மொட்டை மாடியில் மாமனாரின் நிஷ்டையைக் கலைக்காமல், பாலுவை வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, ஆஸ்பத்திரியை அடைந்த அகல்யா கணவனுடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தாள். சரியாகப் பதினோரு மணிக்கு அவள் ஊட்டிய சாதத்தை அணு அணுவாக ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, தூங்கப் போகும் குழந்தையைப் போல் அவள் மடியில் தலை வைத்து, அந்த ஸ்பர்ச சுகத்திலேயே மீளாத் துயிலில் ஆழ்ந்தான் சாமு.
ஒத்திப் போடாமல் இருந்திருந்தால் ஆபரேஷன் இந்த நேரத்துக்குத்தான் முடிந்திருக்க வேண்டும்.
மூர்ச்சித்து விழுந்த அகல்யாவையும், சாமுவையும் ஒரே காரில் வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். உறவினர்களெல்லாம் குழுமி, வீடு இரண்டுபட்டது.
மொட்டை மாடியில் நிஷ்டையிலிருந்த சர்மாவுக்கு விழிப்பு வந்தது. விஷயத்தையும் ஊகித்துக் கொண்டார். "இது என்னைப் பாதிக்காது" என்ற அலட்சியம் அவர் விழி வீச்சில் தெறித்தது. நிதானம் இழக்காமல் கம்பீரத்துடன் அவர் பாதம் ஒவ்வொரு படியாக மிதித்து அவரைக் கூடத்துக்குக் கொண்டு வந்தது. அப்பொழுதுதான் நினைவு திரும்பிய அகல்யா இவரைக் கண்டவுடன் 'ஓ'வென்று அலறிக் காலில் விழுந்தபோதும் அவர் கம்பீரமாகவே நின்று "கவலைப்பட்டு அழறதுக்கு நமக்கு அதிகாரமில்லேம்மா" என்று சொல்லிவிட்டு மேலே நடந்தார். ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொல்லித் துக்கம் விசாரித்தும் இவர் எதையுமே லட்சியம் செய்யாமல் நகர்ந்துகொண்டேயிருந்தார். ஒரத்தில் நினறு கொண்டிருந்த ஜோஸியரின்மீது இவர் பார்வை விழுந்ததும் சாரைப்பாம்பு போல் அவரை நோக்கி விரைந்து அவர் தோள்களைப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கி, "ஓய் ஜோஸியரே! நீர் சொன்னது பலிச்சுடுத்துன்னு நெனச்சுண்டு கர்வம் பிடிச்சு அலையாதேயும். ஜெயிச்சது யார் தெரியுமா? நான்தான்யா, இந்த சர்மாதான். என் கண்ணைப் பாரும். அதிலே ஒரு சொட்டுக் கண்ணீர் இருக்கா? ஜெயிச்சது யார் ஓய்? செத்துப் போயிருக்கிறது என் புள்ளையாண்டான்யா... நான் அழறேனா பார்த்தீரா? அதுக்கு ஞானம் வேணும்யா. ஜோஸியரே, அதுக்கு ஞானம் வேணும்னேன்! புரிஞ்சுதா? முக்காலத்தையும் உணர்ந்த நீர் உம் பிள்ளை இறந்து போனால் இப்படி இருப்பீரா? நீர் வெறும் ஜோஸியன், நான் ஞானி தெரிஞ்சுக்கும்!" என்று கூறி அவர் தோள்களை இன்னொரு முறை உலுக்கிவிட்டு, நேரே சாமுவைக் கிடத்தியிருந்த இடத்துக்குப் போகும்போது -
பேரன் பாலு இவர் கையில் ஒரு காகிதத்தைத் திணித்தான். சர்மா ஓர் அலட்சியப் புன்னகையுடன் அதைப் படித்தார்.
"அப்பா! அகல்யா எப்படியோ சமாளித்துக்கொண்டு விடுவாள். ஏனெனில் அவள் பெண். சாதாரண சஞ்சலங்களுக்கே அழுகை என்ற உயர்ந்த - கைகண்ட - மருந்து அவர்களிடம் எப்பொழுதும் உண்டு. தாங்க முடியாத கவலையென்றால் அவர்களுக்குச் சீக்கிரம் பைத்தியம் பிடித்துவிடும். பிறகு கவலை ஏது? எல்லாவற்றையும் விட, போலிக் கலப்பில்லாத, உறுதியான தெய்வ நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு.
நாம் - ஆண்களைச் சொல்கிறேன் - அப்படியில்லை. நீங்கள் ஜோஸியனைத் தேடி ஓடியதையும், கீதையைக் கட்டிக்கொண்டு அலறியதையும், உங்கள் துக்கத்தைப் பிறருக்குக் காட்டிக் கொள்ளாமல் நீங்கள் தவித்த தவிப்பையும் பற்றி அகல்யா என்னிடம் சொன்னாள். நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள். கொஞ்சம் பொறுத்திருக்கலாம்:.. உங்கள் செய்கை எனக்குப் பழைய சம்பவமொன்றை ஞாபகமூட்டியது. நான் பி.ஏ. பரீட்சை எழுதிய பிறகு ரிஸல்ட்டை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமென்று மெனக்கெட்டு, ஃபெயில் என்று தெரிந்து ஒரு வாரம் முன்னதாகவே அழ ஆரம்பித்து, பிறகு ரிஸல்ட் முறைப்படி வெளியானவுடன் இன்னொரு முறை அழுத கதையைத்தான் சொல்கிறேன்!
இப்பொழுது - மரணத்தின் வாஞ்சை மிகுந்த நெருக்கத்தின் கதகதப்பில் - எனக்குச் சில விஷயங்கள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. அதை நீங்கள் ஞானம் என்று சொன்னாலும் சரி, வேறு எப்படிச் சொன்னாலும் சரி.
கல்ப காலம் வாழ்ந்தாலும், மரணம் கணநேரத்தில் நேர்ந்துவிடும் ஒரு சிறிய விபத்துத்தான். மேலும், உலகத்தில் நாம் காணும் விஷயங்கள் யாவும் திரும்பத் திரும்பப் பழைய விஷயங்களேயாகும். ஒரே விஷயத்தை ஒருநாள் பார்த்தாலென்ன? நூறு ஆண்டுகள் பார்த்தாலென்ன? பிரபஞ்சத்தின் அமைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பக்குவ காலம் என்று இருக்கிறது. காலந் தாழ்ந்தோ, காலத்துக்கு முன்னோ நடப்பது எதுவுமே கிடையாது.
நீங்கள் என் மரணத்தை எப்படித் தாங்கப் போகிறீர்களோ, தெரியாது. உங்கள் வார்த்தைகளையே சொல்லுகிறேன்: "அதைப்பற்றிக் கவலைப்பட எனக்கு அதிகாரம் ஏது?" இருந்தாலும் உங்களுக்கு ரகசியமாக யுக்தி சொல்கிறேன்.
நிம்மதி வேண்டுமென்றால், நன்றாக வாய்விட்டுக் கதறி அழுங்கள்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஆயுள் முழுவதும் ஞானத்தைத் தேடி அலைந்து ஒரு புத்தகம் விடாமல் படித்துவிட்டு, கடைசியாக எதையுமே சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறும் நம்மைப் போன்ற மனிதர்களுக்கு - அழ வேண்டிய சமயத்தில் ஊரறிய அழுதும், சிரிக்க வேண்டிய சமயத்தில் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டும் இருந்தால்தான் மனம் கலகலவென்றிருக்கும். அது ஒன்றுதான் நம் கைக்கு எட்டக்கூடிய ஞானம்! நாம் மனிதர்களாகவே வாழ்வோம், மனிதர்களாகவே மடிவோம். மனிதனும் இல்லாமல், தேவனுமில்லாமல், அந்த இரண்டுங்கெட்டான் நிலை இருக்கிறதே, அது மிகமிகக் கொடிது.
உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையென்றால் அகல்யாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நமஸ்காரம்.
தங்களன்புள்ள, சாமு"
சர்மா கடிதத்தைக் கண்களில் ஒற்றியபடியே 'ஓ'வென்று கதறிக் கதறி, குமுறிக் குமுறி, வாய்விட்டு வீடே அதிரும்படி குலுங்கிக் குலுங்கி அழுது தீர்த்தார். "நான் நாஸ்திகன். தெய்வத்தை நம்பாத நாஸ்திகன். எதிலுமே பிடிப்பில்லாத பாவி. இந்தப் பாவி வயிற்றிலா பிறந்தது இந்தத் தெய்வம்?" என்று சொல்லிச் சொல்லித் தரையிலும் விழுந்து புரண்டார். |