Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-21-b)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2026|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவைகள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பலப்பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை.

வடிவமைப்புக் கோர்வைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் மடடுமல்ல. இந்தத் தொடரில் என் அனுபவ பூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ளக் கருத்துக்களையும், ஒன்று சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம்.

இப்போது ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்க வாருங்கள்!

★★★★★


கேள்வி: நான் ஒரு பெரிய நிறுவனத்தில் விற்பொருள் மேலாண்மை அதிகாரி. சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க யோசனை உள்ளது. அதற்காக மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, நீங்கள் பரிந்துரைத்ததைப் போலவே பலரையும் கலந்து ஆலோசித்தாயிற்று. என் யோசனைக்குச் சாதகமாகக் கருத்துக்கள் கிடைத்துள்ளன. ஆனால் ஓரளவு சந்தேகமும் உள்ளது. வேலையை விடுத்து நிறுவனத்தை ஆரம்பிக்கத் தயக்கமாக உள்ளது. உங்கள் பரிந்துரை என்ன?

கதிரவனின் பதில்: சென்ற பகுதியில் 'தயங்காதீர்கள் தாவி விடுங்கள்' என்று பதிலளித்திருந்தேன்! ஆனால் அப்படித் தாவுவதற்கும் கண்மூடித்தனமாக அல்ல, புத்திசாலித்தனமாக, சில முன் நிபந்தனைகளை அனுசரித்து, பின்பே தாவ வேண்டும் என்றும் சுருக்கமாகக் கூறியிருந்தேன். இப்போது அந்த முன் நிபந்தனைகள் என்ன, ஆரம்பநிலை நிறுவனத்துக்குத் தாவ எம்மாதிரியான செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவற்றை விவரிப்போம்.

முதல் நிபந்தனை, நீங்கள் பெரும் நிறுவன வேலையிலிருந்து விலகி ஆரம்பநிலை நிறுவனத்திலுள்ள சிக்கல்களைச் சந்தித்து, பல வருடங்கள் பாடுபடத் தயாரா என்பதுதான்.

இந்த முதல் நிபந்தனையில் பல துணை அம்சங்கள் உள்ளன. அதைப்பற்றி ஏற்கனவே ஒரு யுக்திக் கட்டுரையில் விவரித்து விட்டதால் இப்போது ஒவ்வொரு துணை அம்சத்தைப் பற்றியும் சுருக்கமாகக் காண்போம்.

முதல் துணை அம்சம் உங்கள் குடும்ப நிதி நிலைமை! பெரும் நிறுவனத்துக்கும் ஆரம்பநிலை நிறுவனத்துக்கும் உள்ள ஒரு பெரும் வித்தியாசம் உங்கள் மாதாந்திர வருமானம். பெரும் நிறுவனத்தில் முக்கியமான மேல்நிலைப் பதவியில் இருக்கும் உங்களுக்குப் பெரும் வருமானம் இருக்கும். ஆனால் ஆரம்பநிலை நிறுவனத்தில், அதுவும் நிறுவனராக இருப்பவர்களுக்கு, பொதுவாக நிறுவனத்தில் ஒரு பெரிய சதவிகிதத்தில் பங்குகள் இருக்குமே ஒழிய முதலில் வருமானமே இருக்காது!

ஆதலால் குடும்பத்தை எப்படி ஓரளவுக்காவது நல்லபடி நடத்துவது என்பதை கணித்துக்கொள்ள வேண்டும். மாதாந்திரச் செலவுகள் பற்பல.

அமெரிக்காவில் சாப்பாட்டுச் செலவு சதவிகிதம் என்று பார்த்தால் குறைவுதான். அதைவிடப் பெரிய செலவுகள் உள்ளன: வீட்டு வாடகை அல்லது வங்கி அடமானம் பெரிய தொகையாக இருக்கும். மேலும், அமெரிக்காவில் உடல்நலக் காப்பீட்டுப் பிரீமியம் தொகை மிக அதிகம்! வேலையில் இருக்கும்போது நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். வேலையை விட்டுவிட்டால் சொந்தமாகத் தேடிக்கொள்ள வேண்டும். குடும்பம் முழுவதற்கும் வேண்டுமானால் இது வானளாவிய தொகையாகிவிடும்!

சொந்த வீடானால், அடமானம் மட்டுமன்றி வீட்டுவரியும் அதிகமாக இருக்கக் கூடும்.

இத்தனையையும் சமாளிக்கச் சில வழிமுறைகள் உள்ளன. முதலாவது, நிறுவனருக்கு ஒரு வாழ்க்கைப் பங்காளி (துணைவர் அல்லது துணைவி) இருந்தால் அவரது மாதாந்திர வருமானம் போதுமானதாக இருக்கலாம். அது மட்டுமன்றி, அவரது நிறுவனம் குடும்பம் முழுவதற்கும் குறைந்த செலவில் உடல்நலச் செலவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடும்.

அப்படி வாழ்க்கைப் பங்காளி இல்லை, தனி ஒருவரின் வருமானமாக இருந்தால், ஓரிரு வருடங்களுக்கான செலவுகளுக்குத் தேவையான ரொக்கச் சேமிப்பு இருப்பது அவசியம். அது உங்கள் பெரும் நிறுவனம் அளிக்கும் பெரும் வருமானத்திலேயே பல வருடங்களாகச் சேமித்ததாக இருக்கலாம். அல்லது பங்குச் சந்தையில் சாமர்த்தியமாக முதலிட்டு வெற்றி பெற்றுச் சேமித்திருக்கலாம். அல்லது தற்போதைய நிறுவனத்துக்கு முன்பு ஓர் ஆரம்பநிலை நிறுவனத்தில் ஓரளவாவது வெற்றி கண்டு அதிலிருந்த பங்கில் நிதிப்பலன் பெற்றிருக்கலாம். இவற்றின் வெவ்வேறு சதவிகிதக் கூட்டுச் சேமிப்பாகவும் இருக்கலாம்.

ஆகமொத்தம் உங்கள் ஆரம்பநிலை நிறுவனத்துக்கு வெளியார் முதலீடு கிடைக்கும்வரை குடும்பச் செலவுகளைச் சமாளிக்க ஒரு திட்டம் தேவை.

ஆரம்பநிலை நிறுவனக் களத்தில் இறங்குவதற்கான முதல் நிபந்தனையின் அடுத்த துணை அம்சங்களைப் பற்றி அடுத்த பகுதியில் விவரிப்போம்.

(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline