Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
அமானுஷ்யம்
கனவும் நிஜமும்
- மனோகர்|ஜூன் 2026|
Share:
அமெரிக்காவின் கான்க்ரீட் காட்டுக்குள் டாலர் வேட்டையில் ஓடிக்கொண்டிருந்தான் மதன். மனைவி மதியுடன் அங்கு செட்டில் ஆகி மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. இருவருமே மென்பொருள் துறையில் பிஸி. மதனின் காலைப் பொழுதுகள் இப்போது கடிகார முட்களோடும், மைக்ரோவேவ் 'பீப்'களோடும் தொடங்குகின்றன.

அடுப்பில் பால் பொங்கும் வாசனையோ, தாளமிடும் தாளிப்புச் சத்தமோ கேட்பதில்லை. கார்ன் ஃப்ளேக்ஸ் கிண்ணங்களும், குறைந்த கொழுப்பு பாக்கெட் பாலும்தான் அவர்களின் நிரந்தர காலை உணவு. மதிய உணவிற்கு சப்பாத்திக்கு பதில் மெக்சிகன் டொர்டியா. வார இறுதியில் வாங்கி அடுக்கிய உணவுகள், வார நாட்களில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே வரும். மைக்ரோவேவில் மறுபடி சூடுபடுத்தப்பட்டு உயிர் பெறும்.

மதன் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிடுபவன். ஒருமுறை, ஆசை மிதமிஞ்சவே, கடையில் விற்கும் 'ரெடிமேட் தோசை மாவு' பாக்கெட்டை வாங்கி வந்தான். மதிக்கு சமையலில் ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. ஒரு 'ஆக்‌ஷன் அட்வென்ச்சர்' போல இருவரும் சேர்ந்து தோசை சுடத் தொடங்கினார்கள். கல் சூடாகும் முன்பே மாவை ஊற்ற, அது ஒட்டிக்கொண்டது. 'இன்னும் கொஞ்சம் சூடாகட்டும்' என்று காத்திருக்க, அடுத்த சில நிமிடங்களில் தோசை கருகி, நிலக்கரித் துண்டுபோல மாறியது. அதைத் தேய்த்துச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில், வீடு முழுக்க மாவு சிதறி அந்த இடமே போர்க்களமானது. தோசை கருகிய சோகக் கதையை cctv படம் எடுத்திருந்தது. அதை யூடியூபில் பதிவிட அதையும் மக்கள் லட்சக்கணக்கில் லைக் போட்டிருந்தார்கள். என்னே இவர்களின் ரசனை என்று தலையில் அடித்துக்கொண்டான் மதன்.

அன்றோடு சரி. "நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!" என்று மதன் முடிவு செய்தான். வாயில் நீர் ஊறவைக்கும் மொறுமொறுப்பான வடையோ, மணக்கும் சாம்பாரோ மதனின் வாழ்க்கையில் காணாமல் போயிருந்தது. கனவிலிருந்தும் விடை பெற்றுக்கொண்டது.

அன்று 'மெட்ராஸ் மாமி' என்ற இந்திய உணவகத்தின் திறப்பு விழா. ஒரு மாற்றத்திற்காக மதன் மதியுடன் அங்கே சென்றான். உள்ளே நுழைந்தவுடன் வந்த மணம் அவனை நிலைகுலையச் செய்தது. அது வெறும் மணம் அல்ல; அவனது பால்ய காலத்து அம்மாவின் கைமணம்.

அங்கே தலைமை செஃப் ஆக இருந்த மாலதி என்ற இளம் பெண்மணியைப் பார்த்தவுடன் மதனின் நினைவுகள் மூன்று வருடங்கள் பின்னோக்கிச் சென்றன.

அன்று பெண் பார்க்கும் படலம். பட்டுப்புடவை சரசரக்க, மாலதி தேவதையைப் போல் வந்தாள்.. அவளது அம்மா சொன்னார், "இங்கே இருக்கும் பலகாரம் எல்லாம் மாலதியின் கைவண்ணம்". மதனுக்குத் தன் அம்மாவின் கைமணம் அங்கே துள்ளியது. ஆனால் அவளது படிப்பு? வெறும் B.Sc. ஹோம் சயன்ஸ். இதற்கெல்லாம் கூட படிப்பு உண்டா என்ன?

இருவரும் தனியாகப் பேசினார்கள். மதன் தொடங்கினான். "ஹோம் சயன்ஸ் வச்சு அமெரிக்காவுல என்ன பண்ண முடியும்? அட்லீஸ்ட் ஒரு ஐ.டி. ஜாப் இருந்தாத்தான் அங்க சர்வைவ் ஆக முடியும்."

மாலதி நிதானமாகச் சொன்னாள், "படிப்புங்கிறது சம்பாதிக்கிறதுக்கு மட்டும் இல்ல மதன். எனக்குத் தெரிஞ்ச கலையை நான் எங்க போனாலும் பிசினஸா மாத்த முடியும். அமெரிக்காவுல மனுஷங்க மெஷினா மட்டும் இருக்க மாட்டாங்க, அவங்களுக்கும் ஒரு ஹோம்லி டேஸ்ட் தேவைப்படும்ல?" மதன் அன்று அதை ஏளனமாக நினைத்தான். "என் லைஃப் ஸ்டைலுக்கு இது செட் ஆகாது" என்று அவளை நிராகரித்தான்.

இப்போது அதே மாலதி அமெரிக்காவின் ஒரு வெற்றிகரமான தலைமை செஃப்! மாலதி சிரித்துக்கொண்டே மதனை அணுகினாள். "நாங்க அமெரிக்கா வந்து ஒரு வருடம்தான் ஆகுது. என் கணவரும் இதே தொழில்தான். நாங்க வீடுகளுக்கும் சப்ளை செய்கிறோம்."

மதன் தடுமாறினான். மதியை அறிமுகம் செய்து வைத்தான். விதியின் விளையாட்டை நினைத்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

காரில் திரும்பும்போது மதனுக்கு ஒரு மெல்லிய குற்ற உணர்வு. அன்று படிப்பு போதாது என்று அவளை ஒதுக்கியது தப்போ? இன்று அதே ஹோம் சயன்ஸ் அவளை உயரத்தில் வைத்திருக்கிறதே! அவன் மௌனத்தைக் கவனித்த மதி, "என்ன மதன், ரொம்ப யோசனையா இருக்கு?" எனக் கேட்டாள்.

மதன் மெதுவாக, "இல்ல மதி... நான் அன்னைக்கு வெறும் ஹோம் சயன்ஸ்னு எவளை வேணாம்னு சொன்னேனோ, அவ இன்னைக்கு அமெரிக்காவுலயும் ஜெயிச்சு நிக்கிறா. நாமதான் ருசியில்லாத மெஷின் லைஃப் வாழறோம்" என்றான்.

மதி சட்டென்று ஒரு புன்னகையுடன் தன் லேப்டாப்பைத் திறந்து ஒரு முதலீட்டு ஒப்பந்தத்தைக் காட்டினாள். "மதன், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த 'மெட்ராஸ் மாமி' உணவகத்தோட 50% முதலீடு என்னோடது!"

மதன் திகைத்தான். மதி தொடர்ந்தாள், "உனக்கு இந்தியச் சுவைமேல இருக்கிற ஏக்கம் எனக்குத் தெரியும். மாலதி அமெரிக்கா வந்தப்போ முதலீடு இல்லாம தவிச்சா. அவளோட பட்டப்படிப்பும், அவ கைமணமும் ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கும்னு எனக்குத் தெரிஞ்சது. எனக்குச் சமைக்கத் தெரியாது, ஆனா ஒரு பிசினஸை எப்படி ஜெயிக்க வைக்கணும்னு தெரியும். இப்போ இந்த உணவகத்தோட பிசினஸ் மூளை நான். ஆன்மா மாலதி!"

மதன் திகைத்து நின்றான். அவன் ஒரு பெண்ணின் தகுதியை அவளது படிப்பை வைத்து மட்டுமே அளவிட்டான். ஆனால் மதி, ஒரு பெண்ணின் திறமையை முதலீடாக மாற்றியிருந்தாள்.

மதி தன் கைப்பையிலிருந்து ஒரு வண்ணமயமான மெனு கார்டை எடுத்து மதனிடம் நீட்டினாள். "இனிமே அந்த கருகிப்போன தோசையும் வேண்டாம், சக்கையா இருக்கிற டொர்டியாவும் வேண்டாம். இதோ பார்..." மதன் ஆர்வத்துடன் அந்த மெனு கார்டைத் திறந்து பார்த்தான்.

முதல் பக்கத்திலேயே பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது:

"நாளை காலை ஸ்பெஷல்: அம்மாவின் கைமணத்தில் சுடச்சுட நெய் பொங்கல், மொறுமொறு மெதுவடை, தேங்காய்ச் சட்னி"

மதனின் நாவில் எச்சில் ஊறியது. மூன்று வருடங்களுக்கு முன்னால் எந்தக் கையை 'சமையல் வேலைக்குத்தான் லாயக்கு' என்று ஒதுக்கித் தள்ளினானோ, அதே கை இன்று அவனது அமெரிக்க இயந்திர வாழ்க்கைக்குள் உயிர்ச்சத்தை ஊட்டப்போகிறது. மதன் மெனு கார்டை மார்போடு அணைத்துக் கொண்டான். அவனது கனவு தேசத்தில், இப்போதுதான் மணம் வீசத் தொடங்கியிருந்தது.
மனோகர்,
மைசூரு
More

அமானுஷ்யம்
Share: 




© Copyright 2020 Tamilonline