Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஏப்ரல் 2026|
Share:
லூசியானா மாநிலத்தில் இது நன்னீர் நண்டு (Crawfish) அறுவடைக் காலம். மாநிலத்துக்கு $300 மில்லியன் வருவாய் தருவது. ஆனால் இதைப் பிடித்து, பதப்படுத்தி அனுப்புவதற்கு ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இது ஒரு மாநிலத்தின் கதை அல்ல. வேளாண்மை மற்றும் அது சார்ந்த பல்வேறு வேலைகளைச் செய்ய ஆளில்லை என்பதுதான் இன்றைய பரிதாபமான நிலை. அதிகக் கல்வி தேவைப்படாத, உடலுழைப்பைச் சார்ந்த இத்தகைய தொழில்கள் மட்டும்தான் என்றில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம்சார் தொழில்நுட்பப் பணியாளர்கள் என எல்லாவற்றிலும் பற்றாக்குறை உள்ளது. இந்த அழகில், வெளிநாட்டில் இருக்கும் கால் சென்டர்களை மூடிவிட்டு, அமெரிக்காவுக்கே கொண்டு வந்துவிட வேண்டும் என்கிறது ட்ரம்ப் அரசு!

குடிபெயர்ந்து வந்தோரின் நாடு அமெரிக்கா. இங்கே யாரையும் 'வந்தேறி' என்று சொல்லிப் பழிக்கவோ ஒதுக்கவோ முடியாது. கல்வி, கற்பனை, படைப்பாற்றல், கனவு இவற்றோடு கடல்கடந்து வந்தவர்கள்தாம் உலகின் முன்னோடி நாடாக இதனை உயர்த்தினர். எனவே, குடிவரவுக் கொள்கை என்பது 'இங்கே யாரும் வரக்கூடாது' என்று சொல்வதாக இருக்கக் கூடாது. H1B விசாவை விற்கக் கூடாது. மாறாக, வெள்ளைக் காலர் முதல் நீலக் காலர்வரை எல்லா வகைத் திறன்களையும் மதித்து வரவேற்கும் குடிவரவுக் கொள்கையே இந்த நாட்டின் உடனடித் தேவை.

★★★★★


போர் என்பது தாக்கப்படும் நாட்டில் மட்டுமே பேரிடரை உண்டாக்கும் என்கிற காலம் போய்விட்டது. எரிபொருள் விலை ஏற்றம், அதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றம், பணி இழப்பு, விமானங்கள் பறக்க முடியாமல் வான்வழிகள் மூடப்படுதல், உயிரிழப்பு என்பவை போரோடு தொடர்பே இல்லாத நாடுகளிலும் ஏற்படுகின்றன. மக்களுக்கு நல்வாழ்வை உறுதி செய்யவேண்டிய பொருள்வளம், நாசகார சக்தியாக மாற்றப்படுகிறது. இறுதியில் எவரும் வெல்வதில்லை. அமெரிக்காவும் அதன் தலைமையும் இதை அவசரகால அடிப்படையில் சிந்தித்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நாம் கற்காலத்துக்குத் திரும்பிவிடுவோம்.

★★★★★


உழைப்பு, கருணை, ஆன்மிகம், தலைமைப் பண்புகள் எல்லாம் ஒருசேர அமையப்பெற்ற திரு S.K.M. மயிலானந்தன் அவர்களின் வாழ்க்கை இளைஞர் உள்ளத்தில் உற்சாகத் தீயை மூட்டுவது. இரண்டு அருமையான சிறுகதைகள், முன்னோடி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை என யாவுமே நல்விருந்துதாம்.

வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
தென்றல்
ஏப்ரல் 2026
Share: 




© Copyright 2020 Tamilonline