|
|
|
 |
மாடிப்படிகளிலிருந்து வேகமாக இறங்கி வந்த ஜான்னவி என்கிற ஜானி நடுக்கூடத்தில் அம்மாவைக் கண்டதும், "ஹாய் மம்மி" என்று விட்டு ஒரு கணம் தயங்கி நின்றாள். விஷயத்தை இவளிடம் தெரிவிக்கலாமா என்று அவள் மனதில் பளிச்சிட்ட எண்ணம் தன் தாயின் தோற்றத்தைக்கண்ட மறு நிமிடமே மறைந்து போயிற்று.
தழைய உடுத்திய மடிசார்ப் புடவை. நெற்றியில் ரூபாயளவுக்குப் பெரிய பொட்டு. அலட்சியமாக முடியப்பட்ட கூந்தல். கழுத்தில் ஏதோ நகைக்கடை விளம்பரம் போல் அரை டஜன் சங்கிலிகள். ஒல்லியும் இல்லை பருமனும் இல்லை என்ற வாகான உடல் அமைப்பு. அவள் எளிமையாகவும் நாகரீகமாகவும் உடை அணிந்தால் எத்தனை அழகாக இருப்பாள் என்பதை ஜானி கற்பனை செய்து பார்த்தாள்.
இப்படிப் பழமையில் ஊறிப் போனவளிடம் தன் காதல் விவகாரத்தை எப்படிச் சொல்லுவது? அதை அவள் எப்படி வரவேற்பாள்? பூஜை அறையிலிருந்து ஊதுவத்தியின் மணம் காற்றில் கலந்து வந்தது.
அம்மா விளக்கேற்றிப் பூஜையில் உட்கார்ந்திருப்பாள். இனி குறைந்தது அரை மணிநேரம் அவளுடன் யாரும் பேச முடியாது.
ஜான்னவி காரில் ஏறி உட்கார்ந்து அதைக் கிளப்பினாள்.
அவள் மனம் மட்டும் அம்மாவைச் சுற்றி வட்டமிட்டது. அம்மா எதற்கு அத்தனை பூஜை செய்கிறாள்? அப்பாவின் அலட்சியப் போக்கினால் மனமுடைந்து அப்படி அவள் கடவுளிடம் தஞ்சமடைய நினைக்கிறாளோ? அவள் பழமையையே அப்படிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அப்பா ஒன்றும் அவளை வற்புறுத்துகிறவராகத் தெரியவில்லையே. ஜானியின் கல்லூரித் தோழிகளின் தாய்மார்கள் பலரை அவள் சந்தித்திருக்கிறாள்.
அவர்களுடன் தன் தாயை நிறுத்திப் பார்த்த பொழுது அமெரிக்க டாலர் நோட்டுகளுக்கு நடுவில் சமுத்திரகுப்தர் காலத்து நாணயத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது அவளுக்கு.
நாலு வார்த்தைகள் சேர்ந்தாற் போல் ஆங்கிலம் பேச அம்மாவுக்குத் தெரியுமோ? சௌந்தர்ய லஹரியும், சுந்தர காண்டமும் விழுந்து விழுந்து பாராயணம் செய்கிற நேரத்தில் ஒழுங்காக இங்கிலீஷாவது பேசக் கற்றுக் கொண்டிருக்கலாம் அவள் தாய்.
அவள் தந்தையோ அதற்கு நேர் எதிரிடை, வீட்டில் பூஜை அறை எந்தப் பக்கம் இருக்கிறது என்றுகூட அவருக்குத் தெரியாது.
விஸ்கியும், ஜின்னும் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. சிகார் புகையையே மூச்சாக விடுபவர் அவர்.
தன் மனைவி தனக்கேற்ற முறையில் இல்லை என்ற குறை அவருக்கு நிச்சயம் இருக்கும். 'என் மனைவி ஒரு பஞ்சாங்கம்' என்று அவள் காதுபடவே அவர் தன் சிநேகிதர்களிடம் சொல்லுவதை ஜானி கேட்டிருக்கிறாள். அவர் மனதை உணர்ந்த மனைவியாக அம்மாவால் ஏன் இருக்க முடியவில்லை? அவள் தந்தையையும் அவர் ஆபீசில் வேலை பார்த்த ஓரிரு பெண்களையும் இணைத்து அவள் கேட்க நேரிட்ட வதந்திகளுக்கும் அம்மாதான் காரணமோ?
அவரது ஏமாற்றங்களையும் தாபங்களையும் அம்மா ஏன் புரிந்து கொள்ளவே இல்லை?
"ஜானி" என்று உரத்த குரலில் பின்னாலிருந்து யாரோ அழைப்பதை உணர்ந்து காரை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தாள் அவள். வினோத் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தான்.
"ஹாய்." புன்முறுவலுடன் அவள் முன்சீட்டின் கதவைத் திறந்துவிட அவன் ஏறி அமர்ந்தவன் அவள் முகவாட்டத்தைக் கவனிக்கத் தவறவில்லை.
"வாட் ஜானி? எனிதிங் ராங் வித் யூ?" அவன் சற்று நெருங்கி வந்து அவள் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பினான்.
"ஏதாவது ரெஸ்ட்ராண்டுக்குப் போய்க் காப்பி சாப்பிடலாமா? ரொம்ப டல்லாக இருக்கு" என்றாள் அவள்.
"ஷ்யூர். திருப்பு. உனக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என் வீட்டுக்குப் போகலாம். உன்னை என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்." வினோத் அவளை ஆவலுடன் பார்த்தான். ஜானி அரை மனதுடன் ஒப்புக் கொண்டாள்.
அவன் தாய் எப்படி இருப்பாள்? தன்னை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ளுவாளா? அந்தத் திடீர் சந்திப்பை அவள் எதிர்பார்க்கவோ, திட்டமிடவோ இல்லையாதலால் தயக்கமாக இருந்தது.
டிஃபென்ஸ் காலனியில் வினோத்தின் வீடு இருந்தது. வீட்டின் அழகிய முன் அமைப்பையும் தோட்டத்தையும் பார்த்து விட்டு, "சொந்த வீடா வினோத்?" என்றாள் அவள்.
"நாங்கள் ஜானியின் அப்பா மாதிரி கம்பெனியில் டைரக்டர்களா சொந்த வீடு கட்ட?"
"ஓ... வினோத், இந்தக் காம்ப்ளெக்ஸை முதலில் உன் மனதிலிருந்து எடு. அந்தஸ்தைச் சுட்டிக் காட்டும் விதத்தில் யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது."
"ஸாரி ஜானி... நான் வேடிக்கையாகத்தான் அதைச் சொன்னேன்."
வினோத்தின் தாய் அவர்களை வரவேற்றாள். ஜானி வட இந்திய வழக்கபடி அவள் கால்களைத் தொட்டு வணங்கினாள்.
வினோத்தின் முக மலர்ச்சியிலிருந்தே ஜானி யாரென்பதைப் புரிந்து கொண்டுவிட்ட தாய், "அட அசட்டு மகனே... வீட்டுக்கு வரப் போகிற மருமகளை இப்படித்தான் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து நிற்பார்களா? கொடுப்பதற்கு இனிப்புகூட இல்லையே" என்று பரபரத்தவளாய் ஜானிக்கு ஆசி கூறித் தலையை அன்புடன் வருடிவிட்டு, "பேசிக் கொண்டிருங்கள். இதோ ஒரு நொடியில் வந்து விடுகிறேன்" என்று உள்ளே போனாள்.
இதே இடத்தில் அவளுக்குப் பதில் வினோத் நின்று தன் தாயை வணங்கினால் என்ன நடக்கும் என்று ஜானி ஒரு கணம் கற்பனை செய்து பார்த்தாள்.
முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு வினோத்தை வெறுப்புடன் பார்க்கும் தாய் அம்புஜத்தின் முகம் அவள் கண்முன் தோன்றி மறைந்தது.
அப்பா நாகரீகமானவர். ஒன்றும் சொல்ல மாட்டார்.
அம்மாவைச் சமாளிப்பதுதான் அவளுக்குப் பிரச்சினையாக இருக்கப் போகிறது.
அம்மாவின் ஒப்புதல் இன்றியே அவள் திருமணம் நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது என்ன செய்வது?
வினோத்தின் தங்கை வினிதா ஆபீஸிலிருந்து வந்தவள், சட்டென்று ஜானியைப் புரிந்து கொண்டு, "ஹாய் மன்னி..." என்று புன்னகைத்தாள்.
"ஹலோ வினி..."
"என்ன அண்ணா இது... இப்படி முன்னறிவிப்பில்லாமல் மன்னியை அழைத்து வந்து எல்லோருக்கும் ஓர் இனிய ஆச்சரியத்தைக் கொடுக்கிறே... குட் சாய்ஸ், கன்கிராட்ஸ்..."
"தாங்க்யூ வினி..."
வினோத் ஜானியை ஆர்வத்துடன் பார்த்துச் சிரித்தான்.
அவள் வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.
என்ன அன்பான குடும்பம் இது? தன் வீட்டில் மட்டும் இப்படிப்பட்ட பாசத்தின் நெருக்கத்தை அவள் ஏன் உணரவில்லை?
ஒருவேளை அந்தஸ்து உயர்கையில் அன்பும் பாசமும் இருக்கிற இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டு, மனித உறவுகளிலேயே ஒரு செயற்கைத் தன்மை வந்துவிடுமோ?
அன்று வீடு திரும்பிய பின்னும் அவள் மனம் அதைப் பற்றியே யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு வெள்ளிக் கிழமையன்று ஜானி தன் தோழியின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு இரவு எட்டு மணிக்குத் திரும்பி வந்தாள்.
அவள் தந்தை நாதன் வரவேற்பறையிலேயே சிகாரைப் புகைத்துக் கொண்டு கையில் பிரித்து வைத்த புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தார். எதிரே இருந்த கண்ணாடி டம்ளருக்குள் விஸ்கியில் மிதந்த ஐஸ் தன்னைக் கரைத்து அதனுடன் ஐக்கியப் படுத்திக் கொண்டிருந்தது.
ஜானியைப் பார்த்ததும் நாதன், "ஹாய் ஜானி! யாரோ வினோத் என்கிறவன் உன்னை போனில் கூப்பிட்டான்" என்றார். அவள் அவர் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
இதையே தகுந்த சந்தர்ப்பமாக நினைத்து வினோத்தைப் பற்றி அவரிடம் சொல்லி விட்டால் என்ன?
"டாடி...! வினோத் எம்.ஏ. கடைசி வருடம் படிக்கிறான். அடுத்த ஆண்டு ஐ.ஏ.எஸ். எழுதப் போகிறான். உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறான். நான் உங்கள் சௌகரியத்தைக் கேட்டுச் சொல்லுவதாகச் சொன்னேன்."
ஜானி துணிச்சலான பெண்தான் என்றாலும், அப்போது ஏனோ குரல் எழும்ப மறுத்தது.
புத்தகத்தைப் புரட்டியவாறு அலட்சியமான குரலில் நாதன் கேட்டார்.
"ஏன் எதுக்குப் பார்க்கணும்... ஏதாவது வேலைக்குச் சிபாரிசு வேணுமா? இல்லை வேலை வேணுமா...?"
அவர் கேட்ட கேள்விகள், அதை அவர் கேட்ட விதம் எதுவுமே ஜானிக்குப் பிடிக்கவில்லை.
"நோ டாடி... ஜஸ்ட் லைக் தட்... பார்க்க விரும்புகிறான்."
அவள் முகத்தில் கோபமும் நாணமும் சிவப்பேற்றின.
அவள் என்ன சொல்ல விரும்புகிறாள் என்பது நாதனுக்குப் புரிந்துவிட்டது.
"ஜானி...!"
அவர் சற்றுக் கடுமையாகவே அழைத்தார்.
"நீ எதுவும் சொல்லுவதற்கு முன்னால் ஐ வான்ட் யூ டு அண்டர்ஸ்டான்ட் ஒன் திங். நீ சொல்லுகிற அந்த மாணவன் ஏதோ பரீட்சை எழுதி பாஸ் பண்ணி சர்க்கார் உத்தியோகம் பார்த்துக் கழற்றிடப் போறான்னு மட்டும் நம்பி சமூக அந்தஸ்து இல்லாதவனை உனக்குப் பார்ட்னரா தேர்ந்தெடுத்துடாதே. இந்த விஷயத்துலே என் கெளரவத்துக்கு ஹானி வராமல் நீ நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன்..."
அவர் என்ன சொல்லிப் புரிய வைக்க விரும்புகிறார்?
சமூக அந்தஸ்து என்று அவர் குறிப்பிடுவது வெறும் பணத்தை என்றால் அது வினோத்திடம் இல்லை.
ஆனால்...
அன்பும், மகிழ்ச்சியும், மன அமைதியும், எடுக்க எடுக்கக் குறையாத பணக்காரக் குடும்பம் அவனுடையது.
அவர்கள் வீட்டில் இருக்கிற சந்தோஷமும் கலகலப்பும் இங்கில்லையே.
ஜானி ஓடிப்போய்த் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் மனம் குழம்பிய நிலையில் இருந்தது. கண்ணீர் ஏனோ அடக்க முடியாமல் பொங்கி வந்தது. வெளியளவுக்கு நாகரீக வேஷம் போடும் அப்பா, சிகார் புகைப்பதிலும், மது அருந்துவதிலும், காக்டெயில் விருந்து நடத்துவதிலும், டிப் டாப்பாக உடை அணிவதிலும் மேற்கத்தியரைக் காப்பியடிக்கும் அப்பா, மனத்தளவில் இன்னும் பணம், அந்தஸ்து என்று கணக்குப் போடும் பத்தாம் பசலிதான் என்று தெரிந்து கொண்டதில் அவளுக்கு எத்தனை பெரிய ஏமாற்றம். ஓ... எத்தனை பெரிய அதிர்ச்சி அது!
அப்பாவே வினோத்தை ஏற்க மறுத்தால் அம்மா மட்டும் எப்படி அவர்கள் திருமணத்தை வரவேற்பாள்?
வினோத் வரவே வேண்டாம். வந்து வீணாக அவமானப்பட வேண்டாம். அதை அவளால் தாங்கவே முடியாது. அவனுக்கு எப்படியாவது போன் செய்து தடுக்க வேண்டும். அவர்கள் திருமணத்தைப் பற்றி யோசித்து முடிவெடுத்தால் போயிற்று.
அவள் அவனைத்தான் மணப்பாள்.
அது எப்போது என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம்.
மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்தே டெலிபோன் கெட்டுக் கிடந்தது.
இப்போது என்ன செய்யலாம்...
கல்லூரிக்குப் போகவும் மூட் இல்லை. சாப்பிடப் பிடிக்கவில்லை. படுக்கையிலிருந்து எழுந்து குளிக்கக்கூட மனமில்லை. அழுகை அடக்க முடியாமல் வந்ததில் முகம் வீங்கிப் போயிற்று.
அம்மா வந்து கதவைத் தட்டிப் பார்த்து விட்டுப் பிரயோசனப் படாமல் திரும்பிப் போனாள்.
மாலை சுமார் ஐந்தரை மணிக்கு வினோத் அவளைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரி வந்து சொன்னாள்.
'வினோத்தா... ஓ காட்...! அவன் ஏன் இங்கு வந்தான்...? அவமானப்படுவதற்கு முன்னால் அவனைப் போகச் சொல்லிவிட வேண்டும். இந்தக் கோலத்துடன் அவனைப் பார்த்தால் அவன் பயந்துவிடமாட்டானா...'
"அந்த ஐயாவை உட்காரச் சொல்." வேலைக்காரியை அனுப்பிவிட்டு அவசரமாகத் தயாராகி வருவதற்குள் அவள் தந்தை உள்ளிருந்து வந்தவர், வினோத்தைப் பார்த்துவிட்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.
அவள் தவிர்க்க விரும்பியது நடக்கப் போகிறது.
ஜானியின் உடலில் இரத்தம் உறைவதுபோல் இருந்தது.
வினோத் அவரைப் பார்த்ததும் மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தான்.
"யார் நீ...?"
"ஐ ஆம் வினோத் சார்..." என்றான் அவன் அடக்கமாக.
"ஓ... விசிட்டர்கள் வெளி வராண்டாவில் தான் வெயிட் பண்ணனும்... வரவேற்பறையில் நான் என் சிநேகிதர்களையும் பிஸினஸ் அதிகாரிகளையுமே சந்திப்பது வழக்கம்."
"ஸாரி சார்..."
"அனுமதி கிடைத்தால்தான் உள்ளே வரணும் என்கிற எலிமெண்டரி மானர்ஸ் கூடத் தெரியாமே நீ என்ன எம்.ஏ. படிக்கிறே...?"
வினோத்தின் முகம் சிறுத்தது.
'ஸாரி சார்..."
அவன் வெளியேறினான். அவனைக் கடந்து கொண்டு அவர் வேகமாகக் காரில் ஏறி அமர்ந்து கிளம்பிப் போய்விட்டார்.
"வினோத்..." ஜானி பின்னால் ஓடி வந்தாள்.
"அவரைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே. இரண்டு நாளாக அவர் மூடில் இல்லை." அவள் மன்னிப்புக் கேட்கும் குரலில் அவனிடம் சொன்னாள்.
"ஹலோ ஜானி...! நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இன்று நீ வகுப்புக்கு வரவில்லை என்றதும், உடம்பு சரியில்லையோ என்று கவலையாக இருந்தது..." என்றான் சட்டென்று சிரிக்க முயன்றவனாய்.
"ஓ... வினோத்... நீ இங்கே ஏன் வந்தாய்...? சீக்கிரம் போய்விடு... இந்த மாதிரி பங்களாவில் வாழுகிறவர்களுக்கு இதயம் கிடையாது. மற்றவர்கள் கண்களில் இரத்தம் கசிந்தால்கூட அவர்கள் இரக்கப்பட மாட்டார்கள்." ஜானி கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.
"ஜானி... என்ன இது? எதற்காக மனசை இப்படி அலட்டிக்கிறே...?" வினோத் அவளை அணைத்தவாறு உள்ளே அழைத்து வந்தான். தன் கைக்குட்டையை எடுத்து அவள் கண்களைத் துடைத்தான்.
"ஐ... லவ் யூ டார்லிங்..."
"உட்கார் வினோத்."
அம்மாவின் குரல் பின்னாலிருந்து வரவே இருவரும் திடுக்கிட்டார்கள்.
"இன்று காலையிலிருந்து அவள் ஒன்றும் சாப்பிடவில்லை. இப்போதுதான் ரூமை விட்டே வெளியே வந்திருக்கிறாள். உன்னுடன் அவளும் ஏதாவது சாப்பிடட்டும்..." அம்மா உடைந்த ஹிந்தியில் சொல்லிக் களங்கமில்லாமல் சிரித்தாள்.
ஜானி அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு, "அம்மா..., இது வினோத் மெஹ்தா..., வினோத் இது என் மதர்..."
அவள் இருவரையும் அறிமுகப்படுத்தினாள்.
"ஜானி நீ பேசிக் கொண்டிரு... நான் டிபன் காப்பி அனுப்புகிறேன்..."
அம்மா உள்ளே போக எத்தனித்தாள். ஜானி மறுபடியும் திகைத்தாள்.
"டிபன் எல்லாம் எதற்கு...?"
வினோத் மறுக்கப் பார்த்தான்.
"இருக்கட்டும்... முதல் முறை வருகிறாய். அதுவும் நீ ஜானியின் விசேஷ விருந்தினன் இல்லையா...?" அம்மா சிரிப்புடன் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.
டிபன் காப்பி சாப்பிட்டுவிட்டு வினோத் கிளம்புவதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. பஸ் ஸ்டாப் வரை சென்று அவனை வழியனுப்பிய ஜானியிடம் வினோத் சொன்னான். "உங்கம்மாவை எனக்கு மிகவும் பிடித்திருக்கு..."
ஜானி அன்று நடந்தது எதையுமே நம்ப முடியாதவளாய் அறைக்குத் திரும்பியபோது மேஜைமீது அவள் பெயரிட்ட கடிதம் ஒன்றிருந்தது. அதை அவள் ஆவலுடன் எடுத்துப் பிரித்துப் படித்தாள்.
கண்மணி ஜானிக்கு,
இந்தக் கடிதம் உனக்கு வியப்பை அளிக்கலாம். இத்தனை நாள் ஒரு பட்டிக்காட்டுப் பஞ்சாங்கமாக நீ எண்ணியிருந்த நான்கூட இப்படி எல்லாம் எழுதுவேனா என்று நீ ஆச்சரியப்படலாம். மனதுக்கும் வெளித் தோற்றத்துக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. அந்த மனத்தின் ஆசைகளை எப்படிச் சாகடித்துக் கொண்டு வாழ்ந்தேன் என்பது உனக்குத் தெரிய வேண்டும். இதை நேரில் என்னால் உன்னிடம் சொல்ல முடியாது. என் நெஞ்சில் புதையுண்டிருக்கிற துக்கமெல்லாம் தொண்டையில் இறங்கி நான் வாயடைத்துப் போவேன். அதனால்தான் எழுதுகிறேன்.
நான் சின்ன வயசிலேயே திருமணமாகிப் புக்ககம் வந்து விட்டவள். கணவருக்காக அவர் பெற்றோர்களையும், அவர்களுக்காக அவரது அலட்சியப் போக்கையும் அனுசரித்து போகப் பழகிக் கொண்டவள். என் மனத்திலோ ஆயிரம் ஆசைகள். நானும் மற்ற பெண்களைப்போல் நைலானும், வாயிலும் அணிந்து கொள்ள ஆசைப்பட்டேன். கணவனுடன் சினிமா பார்க்க ஆசைப்பட்டேன். ஏழாம் வகுப்போடு நின்றுவிட்ட படிப்பைத் தொடர ஆசைப்பட்டேன். ஆங்கிலம் பேசவும், படிக்கவும் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். நகைகளைக் கழற்றிவிட்டு எளிமையாக இருக்க ஆசைப்பட்டேன்.
ஆயின் பழங்காலப் பழக்க வழக்கங்களில் ஊறிப்போன உன் தாத்தாவும், பாட்டியும், அந்த ஆசைகள் மலராமலேயே கருகிவிடக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திப் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தங்கள் ஒரே மகனை எங்கே நான் வசியப்படுத்தி விடுவேனோ என்று பயப்பட்டார்கள். அவர்கள் அனுமதியின்றி நான் உன் அப்பாவுடைய அறைக்குள் போக முடியாது. அவருடன் பேச முடியாது. ஒரு மனைவி என்பவளுக்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லை என்றால் என்ன வெட்கக் கேடு! ஏதோ விதி இருந்தது. நீ பிறந்தாய்.
உன் தந்தை என்னைப் பஞ்சாங்கம் என்று மட்டம் தட்டினாரே தவிர, தன் பெற்றோர்களைக் கண்டிக்கவே இல்லை. அவர்களது கட்டுப்பாடுகளிலிருந்து என்னை மீட்கவும் உதவவில்லை. என் மனதில் தேங்கிவிட்ட ஆசைகளை அவர் புரிந்து கொள்ளவும் இல்லை. மாறாக உலகமே தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கற்பனை செய்து கொண்டு மது அருந்தத் துவங்கினார். ஒரு மனைவிக்குரிய உரிமைகளை அவர் தராதது இருக்கட்டும், பெண்ணுக்குரிய மரியாதையைக்கூட அவர் அளிக்கவில்லை. மனதில் நெருக்கமோ சிநேகமோ இல்லாத பின் அந்தத் தாம்பத்தியம் இயந்திர வாழ்க்கைதான். அதில் என்ன சுவை இருக்க முடியும்? உன் வாழ்க்கையாவது நல்லபடியாக அமைய வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டேன். அது வீண் போகவில்லை.
வினோத் நல்ல பையன். உன் மனம் கோணாமல் நடப்பான். ஒரு திருமணத்திற்கு முதலில் ஒருமித்த இரு மனங்கள் தேவை. மற்ற லெளகீகங்கள் இரண்டாம் பட்சம். நிறைவுள்ள வாழ்க்கை உனக்காவது கிடைக்கட்டும்.
இதுநாள்வரை உன் தாத்தா பாட்டியைப் பற்றி உன் அப்பாவிடம் நான் குறை சொன்னது கிடையாது. என் உரிமைகளுக்காக குரல் உயர்த்திப் போராடியது கிடையாது. அவர்கள் மறைந்த பின்னரும் அதே தடத்தில் ஓடும் இரயிலைப் போல் என் வாழ்க்கை தொடருகிறது. அதை இனி மாற்ற முடியாது.
ஆனால், உனக்காக என் குரல் உயரும். என் முழுமனதான ஆசிகள் உங்களுக்கு உண்டு. அப்பாவைச் சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு. உன் வழக்குக்காக வாதாடப் போகும் வக்கீலாக என்னை நாளை நீ பார்க்கப் போகிறாய். தைரியமாக இரு. நான் உன் கட்சி.
அம்மா
"மம்மீ...! யூ ஆர் ரியலி கிரேட்... நீ எத்தனை பொறுமைசாலி. உனக்கு எத்தனை பரந்த மனப்பான்மை. உன்னைப் போய், நானும் அப்பாவைப்போல் பஞ்சாங்கம் என்று நினைத்தேனே! அப்பா வெளியுலகுக்காக நாகரீக வேஷம் போடுகிறாரே தவிர, அவர்தான் உண்மையில் பஞ்சாங்கம். நான் உன்னை அம்மாவாக அடைய ரொம்ப லக்கியாக இருக்கணும்..."
ஜானிக்கு அந்த நிமிடமே ஓடிப்போய்த் தன் தாயின் கழுத்தை இறுகக் கட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது. |
|
|
| லக்ஷ்மி ரமணன் |
|
|
|
|
|
|
|
|
|
|