Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தெரிந்ததும் தெளிந்ததும்
- கீழை. அ. கதிர்வேல்|ஜனவரி 2026|
Share:
முகத்தில் கோபம் கொப்பளிக்க கிடுகிடுவென கேஷியர் மேஜைக்கு அருகில் வந்த அந்த ஆள் தன் கையில் இருந்த பொட்டலத்தைக் கேஷியரிடம் கொடுத்து, "இது என்ன பாருங்கள்?" என்று கேட்டபோது ரொம்பவே பயந்து போனார் கேஷியர். நல்லவேளை கூட்டம் இல்லாத நேரத்தில் இந்த ஆள் வந்திருக்கார். பொட்டலத்துக்குள் என்ன அணுகுண்டு இருக்கோ என்று பயந்துபயந்து அதனைப் பிரித்துப் பக்குவமாக ஆராய்ந்தார். சின்னதாக கொழுப்பு மட்டும் மிதந்து கொண்டிருந்தது.

"இது கறி குருமா சார். பாருங்க கொழுப்புகூட லேசாக மிதந்து கொண்டிருக்கிறது!" என்றார்.

"கொழுப்பு இந்தப் பொட்டலத்தில் இல்லை சார். இதனைக் கொடுத்த உங்களிடம் இருக்குன்னுதான் சொல்ல வேண்டும்!" என்றதும், பதறிப்போன கேஷியர், "என்ன சார் சொல்றீங்க?" என்று மறுபடியும் பணிவாகக் கேட்டார்.

"இது நேற்று சாயங்காலம் பார்சல் வாங்கிச் சென்ற பரோட்டாவிற்கு கொடுக்கப்பட்டது. பார்சல் வாங்கும்போதே, நான் சைவம். சாம்பாரோ அல்லது சைவ குருமாவோ வையுங்கள் என்றுதான் சொல்லி வாங்கினேன். உங்கள் ஊழியர் இதனைக் கொடுத்திருக்கிறார். அசைவம் சாப்பிடுபவர் வேண்டுமானால், கறி குருமாவுக்கு பதில் மாறிப்போன சாம்பாரை ஈசியா சாப்பிட்டு விடலாம். என்னைய மாதிரி சைவமா இருக்கிறவங்க எப்படி அசைவத்தைச் சாப்பிட முடியும். இதனை கவனிக்காமல் சாப்பிட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். இதற்குத்தான் நான் இப்படி சைவமும் அசைவமும் சேர்த்து விற்கும் உணவகங்களில் பார்சல் வாங்க பயப்படுவேன். இருந்தாலும் வேற வழி இல்லாமல் வாங்க வேண்டியிருக்கு. இந்த ஏரியாவில் உங்க கடை மட்டும்தானே எங்க டொர்மிட்டரி பக்கத்தில் இருக்கு!" என்றவரிடம், "சார் ரொம்ப வருத்தப்படுறோம். அதற்குப் பதிலா வேற ஒரு பார்சல் தரச் சொல்லுகிறேன்! இப்போதே அந்த பார்சல் கட்டிய பையனை அழைத்து கண்டிக்கிறேன்," என்றபடி, "நேற்று சாயங்காலம் யாருப்பா பார்சல் கட்டியது?" என்று உள்ளே பார்த்து குரல் கொடுக்க...

இதுவரை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த குமரன் தயங்கித் தயங்கி கேஷியர் மேஜைக்கு அருகில் வந்து "நான்தான் நேற்று பார்சல் கட்டிக் கொடுத்தேன்!"

"இவர் சொன்னதை எல்லாம் கேட்டீங்களா. ஏற்கெனவே கொரோனாவால் வியாபாரம் ரொம்பக் குறைந்துபோச்சு. இதில் இப்படி கஸ்டமர்கிட்டே குளறுபடி பண்ணினால், இழுத்து மூடிட்டுப் போக வேண்டியதுதான்," என்ற கேஷியர், கஸ்டமரின் கதையை மறுபடியும் ஒரு மறு ஒலிபரப்பு செய்தார்.

"மன்னிச்சுடுங்கண்ணே தெரியாமல் நடந்துபோச்சு. இனி கவனமா இருந்துக்கிறேன்," என்று குமரன் குழைந்தான் வந்திருந்தவரிடம்.

“எல்லாம் சரி. வேலை முடிந்து களைத்துப் போய் அறைக்குத் திரும்பி, குளிச்சுட்டு வந்து அக்கடான்னு சாப்பிட உட்காரும்போது, இப்படி ஆச்சுனா எப்படி தம்பி. சரிதான்னு சீனியைத் தொட்டுகிட்டு சாப்பிட்டுட்டேன். பதிலுக்கு பார்சல் எல்லாம் வேண்டாம். இனியாவது கவனமாக இருங்க தம்பி," என்று கோபம் தணிந்தவராக பேசியது இரண்டு பேருக்குமே அப்பாடான்னு இருந்தது.

"இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் சார்," என்று கை கூப்பினார் கேஷியர்.

ஒரு நல்ல கஸ்டமரிடம் இப்படி நடந்துகிட்டோமேன்னு குமரனுக்கு உண்மையாகவே வருத்தமாக இருந்தது.

ஏனென்றால் நேற்று அவன் அந்தத் தவற்றை தெரிந்தே செய்தான். அதை ஏன் செய்தான்?

கால் காசு வேலைனாலும் கவர்ன்மென்ட் வேலைதான் சிறந்ததுன்னு நல்லாப் படிச்ச நம்ம குமரனுக்கும் சிறுவயதிலேயே மனதில் பதிந்துபோய்விட்டது.

கவர்ன்மெண்ட் வேலையில இருந்து கடன் வாங்கி வீடு கட்டியவர்களையும், பைக் வாங்கி ஓட்டியவர்களையும் பார்த்துப் பார்த்து வளர்ந்துகொண்டிருந்த போதே ஊருக்கு ரெண்டு பேர் குவைத்துக்கும், சவூதிக்கும் சென்று பணம் சம்பாதித்து கடன் வாங்காமலேயே கார், பங்களான்னு வாங்கி குமரனைக் குழப்பினார்கள்.

கேட்டரிங் படிச்சுட்டு அவனுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு பேர் கப்பலில் வேலை ஆறு மாசம், ஆறு மாசம் வீட்டில் இருக்கலாம்னு சொல்லி வெள்ளிகளை அள்ளி வந்தார்கள்.

கப்பல் கேப்டன் மாதிரி வெள்ளை உடையணிந்து அவர்கள் கொண்டு வந்து காட்டிய புகைப்படங்கள் அவனுக்கும் கேட்டரிங் படிப்பில் ஆசையைத் தூண்டியது. கப்பல் கனவில் மிதக்க ஆரம்பித்தான்.

வீட்டில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்றாலும் அவன் விரும்பிப் படித்தான். படித்து முடித்ததும் அவன் ஆசைப்பட்ட கப்பல் வேலை வருவதற்கு முன்பே, "சிங்கப்பூர் ஹோட்டலில் கேட்டரிங் டிகிரி முடிச்சவங்களுக்கு வேலை இருக்கு. கை நிறைய சம்பளம்," என்று சொல்லி உள்ளூர் ஏஜெண்ட் ஒருத்தர் சொன்னதும். கப்பல் வேலையைவிட சிங்கப்பூர் வேலை அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. ஆங்கிலத்தில் அவன் கொஞ்சம் வீக். சிங்கப்பூரில் தமிழிலேயே எல்லாம் இருக்கு என்பதை ஏற்கெனவே அவன் கேள்விப்பட்டிருந்தான். ஆத்திரம் அவசரம்னா ஊருக்கு போக வர சுலபமான ஊர்.

கப்பலில் போனால் இதெல்லாம் நடக்காதென்பதால் உடனே சம்மதித்து பாஸ்போர்ட்டை கொடுத்தான்.

தமிழ் சாப்பாட்டுக் கடைதான் என்றும், ஓனரும் இங்கே பக்கத்து மாவட்டத்தில் இருந்து சின்ன வயதில் சிங்கப்பூர் போய் பெரிய தொழில்முனைவர் ஆனவர் என்றும் ஏஜெண்ட் சொன்னார்.

கூடவே இண்டர்வியூ பண்ணும் போது எந்த வேலை சொன்னாலும் செய்வேண்ணு சொல்லு என்றும் சொல்லி இருந்தார்.

இண்டர்வியூ செய்யும்போது பெரிதாக கேள்வி எதுவும் கிடைக்கவில்லை. “பன்னிரண்டு மணி நேரம் வேலை. மாதத்தில் ஒரு நாள் லீவு. ஓவர் டைம் எல்லாம் கிடையாது" என்று சொன்னவர், “இதற்கு சம்மதம் என்றால் அப்ளை செய்கின்றேன்" என்றார்.

உடனே அதற்கு சரி சொன்னான்.

பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஏஜெண்ட்டே அதற்கு வழியும் சொன்னார்.

விசா வந்ததும், அதைக்காட்டி ஊரில் கடன் வாங்கித் தரவும் உத்திரவாதம் தந்த ஏஜெண்ட் அதை வாங்கியும் தந்தார். என்ன ஒன்று அதற்கு ஈடாக சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை பிணையமாக எழுதிக்கொடுக்கச் சொன்னார். வானம் பார்த்த பூமியாக இருந்த அந்த நிலத்தை அடமானம் வைக்க வீட்டில் யாரும் ஆட்சேபனை சொல்லல.

சும்மா கிடக்கிற நிலத்தை வச்சு பையன் வெளிநாடு போய் சம்பாதித்து வந்தால் அடகு நிலத்தை மீட்டு அதிகமாகவே வாங்கிடலாம் என்று கணக்கு போட்டிருந்தனர். சொன்ன மாதிரி ஏஜெண்ட் விசா வாங்கித் தந்தார்.

'சீஃப் செஃப்' என்று போட்டு அவரது உணவுக் கடைக்கு எடுத்திருந்தார். உண்மையாகவே தன்னை 'சீஃப் செஃப்' என்று சொல்லிட்டா என்ன பண்றது என்று ஒரு மூலையில் அவனுக்கு சந்தேகம் இருந்தது உண்மைதான்.

ஆனால் அவனுக்கு வந்தவுடன் கொடுத்தது பாத்திரம் கழுவும் வேலைதான்.

முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. முதலில் வேலைக்குச் சேர்கின்ற எல்லோருக்கும் கொடுக்கின்ற பால பாடம் இதுதான் என்றார்கள்.

இப்போது கேஷியராக இருக்கும் ஊர் பையனும் பாத்திரம் கழுவித்தான் படிப்படியாக இந்த இடத்துக்கு உயர்ந்து வந்ததைச் சொன்னார்கள்.

குமரனும் அப்படி சீக்கிரம் உயரவேண்டும் என்று ஆசைப்பட்டு கழுவிக் கழுவி வந்தான்.

வீட்டில் சாப்பிடும்போது வாஷ் பேசினில் போய் கைகழுவ சோம்பல் பட்டு தட்டிலேயே கைகழுவும் அளவுக்கு சோம்பேறி.

அம்மாவும் அவனைத் திட்டாத நாளே இல்லை.

"தட்டுல கை கழுவறதெல்லாம் தப்பில்லை. நான் கழுவி வச்சிடுவேன். உனக்குன்னு கல்யாணம் ஆகி ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்தா... சாப்பிட்ட தட்டில் கைகழுவற ஒரு சோம்பேறிப் பிள்ளையைப் பெத்து வச்சிருக்கதா என்னையத்தான் கழுவி ஊத்துவா," என்று கூறும் அம்மாவின் வாயையும் அடக்கி வைத்துவிடுவான்.

"அதெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்மா. இப்போ என்ன குடி முழுகிப் போச்சு," என்று பதில் சொல்லிட்டுப் போயிடுவான்.

பாத்திரம் கழுவுவது பார்க்க சுலபம் மாதிரி தெரிந்தாலும் அவ்வளவு எளிதல்ல என்பதை முள் கரண்டிகளைக் கழுவும்போதே அவன் உணர்ந்தான்.

கூட்டம் அதிகமாக வரும்போது கரண்டிகளை உடனுக்குடன் கழுவி அதற்கென்றே இருக்கும் டவலில் சுத்தமாக சொட்டு தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டும்.

கைவிரல்கள் மாதிரி இருக்கும் அந்தக் கரண்டியில் சொட்டுத் தண்ணீர் மிச்சம் இருந்தாலும் தலையில் கொட்டு விழற மாதிரி திட்டு விழும்.

சாப்பிட கைகழுவப் போகும்போது கூட தண்ணீரைப் பார்த்தால் ஒரு அலர்ஜி மாதிரி அவனுக்கு தெரியும்.

இப்படி சில வாரங்கள் சென்ற நிலையில் அந்த திங்கட்கிழமை மாத விடுமுறையில் தேக்காவில் பார்த்த ஊர் நண்பன், "வேலை எப்படிப் போகுது?" என்று கேட்டான்.

"அது பளபளன்னு போய்ட்டிருக்கு," என்று கஷ்டத்தை எல்லாம் ஒன்றுவிடாமல் கண்ணீர் விட்டுச் சொன்னான்
.
"இப்படி பாத்திரம் தேய்ச்சுகிட்டே எத்தனை நாள் இருக்கப் போறே? கொஞ்சம் அப்படி இப்படின்னு சுத்தம் இல்லாமல் கழுவு. அப்பத்தான் கிச்சன் ஹெல்பராகவோ, சப்ளையராகவோ வேற வேலைக்கு உன்னை மாத்திடுவாங்க! இப்ப இருக்க சூழ்நிலையில் புதுசா எல்லாம் அவங்களால ஆள் எடுக்க முடியாது. புது பாஸ் அப்ரூவல் ஆகுறதே கஷ்டம், குவாரண்டைனுக்கு கட்டவே ரொம்ப செலவாகும்," என்று தூபம் போட்டான். அது நன்றாகவே புகைந்தது.

"நம்ம குமரன் வர வர க்ளீனிங்கில் சொதப்பறான் அண்ணே! இவனெல்லாம் மேஜை துடைக்கத்தான் லாயக்கு," என்று சீனியர் செஃப் சொல்ல.... அடுத்த சில நாட்களில் அவனுக்கு சப்ளை வேலை தந்தார்கள். சப்ளையில் இருந்தவனைத் தூக்கி கிச்சன் ஹெல்பராக போட்டார்கள்.

சப்ளை செய்வது அவ்வளவு எளிதானதாக இல்லை.

டீ என்றால் ஊரில் ஒன்றிரண்டுதான் இருக்கும். லைட்டா, ஸ்ட்ராங்கா, சீனியோடவா, சீனி இல்லாமலான்னு இதில் எல்லாம் சுலபமா நினைவு வச்சுக்கலாம்.

இங்கே தே.ஓ, காபி ஓ, தே.ஓ.கோசம், தே.ஓ.அலியா, ஒரு பத்துப் பன்னிரண்டு இருக்கும் போல. சாப்பிட்டு கடைசியாக டீ, காபி கொடுக்கும்போது திண்டாடிப் போய்விடுவான்.

பேசாமல் பாத்திரம் தேய்க்கவே போயிடலாம் போலிருக்கு என்று நினைத்துக்கொள்வான்.

இதை எல்லாம் நினைவு வச்சுக்கிட்டு ஆர்டர் சொல்றதே இவ்வளவு கஷ்டமா இருக்கும்போது அதனைப் போடறவருக்கு எவ்வளவு கஷ்டமோ என்று மனக் கண்ணில் வந்துபோகும்.

மறு மாதம் ஊர் நண்பனைப் பார்த்தபோது சப்ளையராக இருக்கும் கஷ்டத்தை சொன்னான்.

"இதிலிருந்து வெளியே வரவும் வழி இருக்குடா. தப்புத்தப்பா ரெண்டு நாளைக்கு பார்சல் கட்டிக் கொடு. ஆட்டோமேட்டிக்கா உன்னைய கிச்சன் ஹெல்பரா அனுப்பிடுவாங்க. ஏற்கெனவே நீதான் சொல்லி இருக்கியே அது ஜாலியான வேலைன்னு."

"ஆமாண்டா அந்த வேலை மட்டும் கிடைச்சுட்டா எப்போதும் எஃப்.எம் ரேடியோ கேட்டுகிட்டு, சமையல் கட்டுல நின்னுகிட்டிருக்கலாம்!"

"அதுக்கு நான் சொன்னபடி செய்து பார்!" என்று சொன்னதைத்தான் நேற்று குமரன் செய்தது.

இரவு பத்து மணிக்கு மேல் கடைக்கு வந்த முதலாளி, அன்றைய கணக்கு வழக்குகளைப் பார்த்துவிட்டு "வேற என்னப்பா இன்னிக்கு செய்திகள் இருக்கு? சப்ளையர்கள் யாராவது வந்தார்களா? ரெண்டு மூணு பேருக்கு போஸ்ட் டேட் செக் இருந்துச்சே!" என்று கேட்கவும், காலையில் கஸ்டமர் வந்து குமரன்மீது சொன்ன புகாரை முதலாளியிடம் சொன்னார் கேஷியர்.

உடனே குமரனை அழைத்தவர், "உனக்கு என்னதான் பிரச்சினை. பாத்திரம் கழுவறது பிடிக்கலேன்னதும், சப்ளையில் போட்டோம். இப்போது இதிலும் புகார் வருது. இதுதான் கடைசியாக இருக்கணும். இனியும் இப்படி ஒரு பிரச்சினை வந்தால் பாஸை கேன்சல் பண்ணி ஊருக்கு அனுப்பறதைத் தவிர வேற வழி இல்லை!" என்றதும் பதறிப்போனான்.

"இனி அப்படி எல்லாம் நடக்காது சார். இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னிச்சிடுங்க," என்றான் குமரன்.

"எந்த வேலை செய்தாலும் ஈடுபாட்டோட செய்யணும், அது இல்லாமல் மனதை அலைபாய விட்டால் இப்படித்தான் சைவத்தில் அசைவம் கலந்திடும்."

"கொரோனாவுக்கு பின்னர். ஏற்கெனவே ரொம்ப நஷ்டத்தில்தான் இந்தக் கடை போயிட்டிருக்கு."

"சரிசரி.. சீக்கிரம் போய் எல்லோருடனும் சேர்ந்து மேஜையை கழுவிட்டு தூங்க போப்பா!"

தெரிந்தோ தெரியாமலோ இனிமேல் ஊர் நண்பர்களைச் சந்திக்கும்போது சொந்த வேலைக் கஷ்டத்தை சொல்லக்கூடாது என்ற முடிவுடன் வழக்கத்தைவிட அதிகமான ஈடுபாட்டுடன் மேஜையைத் துடைக்க ஆரம்பித்தான் குமரன்.
கீழை அ. கதிர்வேல்
Share: 




© Copyright 2020 Tamilonline