Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தாத்தாவும் கிரகப்பிரவேசமும்!
- காந்தலக்ஷ்மி சந்திரமௌலி|நவம்பர் 2025|
Share:
எல்லோருக்கும் அவரவர்களுடைய தாத்தாக்கள் உசத்திதான். என்னுடைய தாத்தாவும் எனக்கு மிகவும் பிடிக்கும்தான். நான் அவர்மீது எத்தனை அன்பு செலுத்தினேனோ அதே அளவு அவர்மீது கோபமும் கொள்வேன்.

கோபமும், ஆத்திரமும் மாறி மாறி வரும்படி அவர் நடந்து கொள்வார். என்னுடையது மிகப்பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது. என் தந்தைக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள். அதனால் ஒட்டுமொத்தமாக என் தாத்தாவிற்கு நவகிரகங்களாக ஒன்பது குழந்தைகள் என்பது எங்கள் குடும்பத்திற்கே உரித்தானது. என் தந்தையின் சகோதரிகள், அதாவது என் அத்தைகள் திருமணமாகி கணவன், குழந்தை குட்டிகள், மாமனார், மாமியார் என்று பெரும்கூட்டம் எங்களோடு இணைந்து வீட்டோடு உறவினர்களாக இருந்தார்கள்.

என் தாத்தாவினுடைய புத்திசாலித்தனமும், கெட்டிக்காரத்தனமும் எந்த அளவிற்குச் சென்றது என்றால், அவர் தன் மாப்பிள்ளைகளை மட்டுமல்ல, சம்பந்திகளையும் மயக்கி வீட்டோடு வைத்துக் கொண்டார். அதற்கு ஒரே காரணம் தன் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் தன்னைப் பிரிந்து வாழக்கூடாது என்பதில் மிகுந்த தீர்மானம் கொண்டிருந்தார்.

தன் மனைவி மற்றும் ஆத்ம நண்பியாக இருந்த என் பாட்டி இறந்த உடனே என் தாத்தா செய்த முதல் காரியம் என் அப்பாவிற்கு அவசர அவசரமாக ஒரு கல்யாணத்தைச் செய்து வைத்தார். பாவம், பலிகடாவாக மாட்டிக் கொண்ட என் தாய்க்கு அப்பொழுது வயது பதினாறு. மெதுவாக என் தாய் தன்னுடைய பதினெட்டு வயதிற்குள் மற்றொரு பாட்டியாகவே மாறிவிட்டாள்.

மிக மெதுவாக என் தாய் குடும்ப அதிகாரத்தைக் கைப்பற்றி, மொத்தக் குடும்பத்தையும் தன் கைப்பிடியில் போட்டுக் கொண்டு தன் அரசாட்சியை நிர்ணயித்து விட்டாள். இப்படி யோசித்துப் பாருங்கள், என் தாத்தா நிறுவனத்தின் சேர்மேன் என்றால் என்தாய் சீஃப் செகரட்டரி, மேனேஜர் மற்றும் அடுத்த சேர்மேனாகக் கொடிகட்டிப் பறக்கத் துவங்கினார்.

என் தந்தையின் மற்ற சகோதரர்களின் மனைவிகள் (சித்திகள்) எப்பொழுதும் அசிஸ்டென்ட் போஸ்டிலேயே இருந்து விட்டனர்.

என் தாத்தா லேசாகச் செறுமினார் என்றால்கூட என் தாய் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் அருகில் வந்து நின்று விடுவார்.

பாவம், என் அத்தைகளும் அவருடன் ஒட்டி வந்தவர்கள் அனைவரும் எப்பொழுதும் விருந்தினர்களாகவே இருந்தனர்.

என் தாத்தா எதற்கெடுத்தாலும் என் அம்மாவிடம்தான் கட்டளைகளை இடுவார். அதைச் சிரமேற்கொண்டு, உடனுக்குடன் அதை நிறைவேற்றி விடுவார் அம்மா.

எங்கள் வீட்டில் எதுவுமே சிம்பிளாக நடந்து பார்த்ததே இல்லை. ஒரு வருடத்தில் ஐந்து அல்லது ஆறு சீதா கல்யாணங்கள், மூன்று நாராயணீயங்கள், ஐயப்பன் பூஜைகள், பிரம்மாண்டமான ஒன்பது படி நவராத்திரி, கார்த்திகை விரதங்கள், புரட்டாசி சனிக்கிழமைகள் என்று வீடு சதாசர்வ காலமும் மாவிலைத் தோரணம் வாழைப்பந்தலோடுதான் காட்சியளிக்கும்.

தன்னுடைய எண்பதாவது வயதிற்குள் பேரன் பேத்திகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு புதுமையான பெயரான ஷ்ரவந்தி, அக்ஷித் போன்ற பெயர்களை எல்லாம் கூட நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்குத் தாத்தா நன்றாக இருந்தார்.

அவருடைய ஒரே குறை என்னவென்றால், அவரது மூன்றாவது தலைமுறையில் பலர் வெளிநாடு சென்றுவிட்டனர் என்பதுதான். தாத்தாவின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்!

எந்த ஊரில், எந்த வீட்டில் திருமணம் என்று அவருக்குப் பத்திரிகை வந்து விட்டால் போதும் அடுத்த கணம் தானே சென்று டிக்கட் ஏற்பாடு செய்து விடுவார். மூன்று முறை அமெரிக்காவிற்கும் சென்று வந்தாகிவிட்டது.

ஊர்க்கொள்ளாத கூட்டத்தை அழைத்து, சதாபிஷேகமும் செய்து முடித்தாகிவிட்டது. சதாபிஷேகம் அன்று வருவோர் போவோரிடம் எல்லாம் "அவள் இல்லையே என்ற குறை தவிர வேறு குறை ஒன்றும் இல்லை" என்று பெருமை அடித்துக் கொள்வதிலும் தாத்தா சளைக்கவில்லை. ஆபிசிற்கு ஓடி ஒளிந்து கொண்டு அனைத்துப் பொறுப்புகளையும் என் தாய்மீது போட்டுவிட்டு நிம்மதியாக இருந்த அப்பாவை சனி பிடித்து ஆட்டியது.

அதாவது ரிடையர்மெண்ட் வந்துவிட்டது. அது நாள்வரை என் தாத்தா அடிக்கும் கூத்திற்கெல்லாம் என் தாய் 'பிராது பட்டியல்' வாசித்தால் என் தந்தை "அப்பா அப்படித்தான், மாற்ற முடியாது அட்ஜெஸ்ட் செய்துகொள்" என்று எடுத்து விட்ட டயலாக்கை இன்று பூமராங்போல் அப்பாவின் முன் திருப்பிவிட்டாள் அம்மா.

வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒரே சீராகவா இருக்கும்? ஆட்சி ஒருவரிடம் இருந்தால் அடுத்த ஐந்தாவது வருடம் அது இன்னொருவரிடம் செல்வது சகஜம்தானே. எந்த ஒரு பெரிய நிகழ்விற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி உண்டு. அத்தகைய ஒரு புள்ளியாக ஒரு கிரகப்பிரவேச அழைப்பு எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் இ-மெயில் வடிவில் வந்தது.

எதையும் சாமர்த்தியமாக மறைத்து வைத்துப் பேசத் தெரியாத என் அப்பா, அதே ஊரில் நடக்க உள்ள கிரகப்பிரவேச அழைப்பிதழை வைத்து காதும் காதும் வைத்தாற்போல் சென்று நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது!

ஊருக்கு வெகுதூரத்தில் ஓரிரண்டு பனை மரங்களை மட்டும் கொண்ட பசுமைத் தோட்டத்தில் அய்யோவென ஒற்றை வீட்டைக் கட்டி, என் தந்தையின் நண்பரான அந்த அசட்டு அப்பாவிற்கு, அமெரிக்க மகன் அளித்த பரிசுதான் அந்த கிரகப் பிரவேச அழைப்பிதழ்.

அழைப்பிதழைப் பார்த்ததிலிருந்து என் தாத்தா எனக்கும் ஒரு அழைப்பிதழ் வேண்டும் என்று குச்சி ஐஸ்கிரீம் கேட்கும் குழந்தையாக மாறி, அசாத்திய பலத்தோடு அடம்பிடிக்கத் துவங்கினார்.

அத்தனை தூரம் செல்ல வேண்டுமா எனும் யோசனையில் என் தந்தையின் மனம் ஊசலாட, என் தாத்தா அடாது மழை வந்தாலும் விடாது போகவேண்டும் என குதிக்கத் துவங்கினார். அப்பா அதெல்லாம் முடியாது என்று தந்தைக்குத் தப்பாது பிறந்த மகனாக அடம்பிடிக்க, வீட்டில் வெடித்தது ராம ராவண யுத்தம்.

கடைசியில் எப்பொழுதும் போல என் தாய் நடுநிலை வகித்து, முதலில் தாத்தா வண்டியில் அங்கு சென்றுவிடவும், பிறகு வீட்டுப் பொறுப்புகளை முடித்துவிட்டு, அம்மா சற்று நிதானமாக மற்றொரு வண்டியில் சென்று விடுவதாகவும் ஏகோபித்த மனதுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடுவன் பூனை முகத்துடனும் கோபக்கனல் வீசும் கண்களுடனும், தன் தடியையும் எப்பொழுதும் அவருடன் உறவாடும் மஞ்சள் பையுடனும் என் தாத்தா யாரிடமும் பேசாமல் கிளம்பினார்.

தாமதமாகச் சென்ற என் அம்மா அங்கு தாத்தாவைக் காணாமல் நண்பர்களிடம் கேட்க அவர் எப்பொழுதோ கிளம்பிச் சென்று விட்டாரே என்று கூற, அம்மா அங்கு உணவு உண்டுவிட்டு மதியம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விட்டார். மாலை மணி ஐந்தை நெருங்க நெருங்க வீட்டில் கவலை சூழ்ந்தது. போன்கால்கள், கைபேசிகள் மூலம் செய்திகள் போர்க்கால அடிப்படையில் பரிமாறப்பட்டன. ஏழு மணி. வீடு மொத்தமும் என் தந்தையைப் பகைவனாகக் கருதி முறைத்தது. பாவம் அப்பா... பாவம் ஓரிடம் பழி ஓரிடம் எனும் கதையாக வயதானவர்களை மொண மொணப்பாகத் திட்டிக் கொண்டிருந்தார். பார்க், கோவில், மளிகைக்கடை, தாத்தாவின் பழையகால நண்பர்கள் என்று ஒவ்வொரு இடமாகத் தேடினர்.

என் அத்தைகள் கண்ணீர் போட்டிக்கு ரெடியாகி, இதுவரை பார்த்த சீரியல்களின் கதைகள் எல்லாம் நினைவு கூர்ந்து "தாத்தா நிச்சயமாகப் பணத்திற்காகக் கடத்தப்பட்டுவிட்டார்" எனும் மசோதாவை அனுப்பிடத் தீர்மானித்துவிட்டனர்.

தாத்தா பணக்காரர்தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவருடைய காவி வேட்டியும், மஞ்சள் பையும், கடுகடு முகத்தோடு நடந்தே போகும் தன்மையையும் கண்டு அவர் பணக்காரர்தான் என்று நாங்கள் சத்தியம் செய்தால்கூட கடத்தல்காரர்கள் நம்ப மாட்டார்கள் என்பதுதான் நிஜம்.

போலீஸிடம் போகக்கூடாது என்று அப்பா தீர்மானமாக இருந்தார். "அவர் திரும்பி வந்தால் உங்களை எல்லாம் எதுவும் சொல்லமாட்டார் எங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். மூத்த மகனான நான் இதை எதிர்கொள்ள முடியாது" என்று தீர்மானமாகக் கூறிவிட்டார் அப்பா. என் தாத்தாவிற்கு காக்கி உடையைக் கண்டாலே பிடிக்காது, அதாவது அவரைப் பொருத்தவரை காக்கி உடை அணிபவன் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடிமை.

இரவு ஒன்பது மணிக்கு அவர் எங்கேயாவது விழுந்திருக்கிறாரோ தன் நில புலன்களைப்பற்றி எங்கேயாவது பிரஸ்தாபித்து யாராவது அவரை வெட்டிப் போட்டு விட்டார்களோ என்று பெரும் கவலை சூழ்ந்தது.

தாத்தா யாரோடும் நட்பு முறையில் கொண்டாடியதாகச் சரித்திரம் கிடையாது. அதனால் அவருக்குக் கீழ்ப்படியும் நண்பர்கள் உண்டே தவிர, உற்ற நண்பர்கள் கிடையாது. பிறகு கிரகப்பிரவேசம் நடந்த இடத்திற்கே சென்று தேடலாமே என்ற எண்ணம் தோன்ற, ஆண்களெல்லாம் ஊர்க்கோடியைத் தேடிச் செல்ல, பெண்கள் எல்லாம் பிள்ளையார் முதல் ஆஞ்சநேயர் வரை அவரவர் இஷ்டத்திற்கு தாத்தாவிடமிருந்த உறவுமுறைக்கேற்ப வேண்டிக் கொண்டனர்.

மேலே இருக்கும் கடவுளுக்கு நிச்சயமாக மனமகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். ஏனெனில் ஒரே நாளில் இத்தனை வேண்டுதல்கள் அவரை நோக்கி ஒரே வீட்டிலிருந்து படையெடுத்தது என்பது குடும்ப ஒற்றுமையைப் பறைசாற்றுகிறது அல்லவா?

இரவு பத்தரை மணிக்கு தாத்தா தொலைந்த இடத்தை அடைந்த தேடுதல் குழு சந்தனக் காட்டில் அந்தக் கால வீரப்பனைத் தேடிச் சென்ற தமிழ்நாடு கர்நாடக போலீஸ் குழுக்களைப் போலத் திரிந்து தேடினர்.

இருட்டு மயமான அந்தப் புது வீட்டின் முன் நின்று வாயிற்கதவை தட்டினர். இனி என் தந்தையின் வார்த்தைகளில் அந்தக் காட்சியை காணலாம்...

"கதவு சிறிய சத்தத்துடன் கிறீச் என்றபடி மெதுவாகத் திறந்தது. இருட்டில் ஒரு உருவம் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு எங்கள் எதிரில் நின்றது. மெதுவாக மெழுகுவர்த்தி உயர்த்தப்பட, அதோ எங்கள் அன்புத் தந்தையின் மீது வெளிச்சம் பட்டது.

அவர் என்ன கூறினார் தெரியுமா?' "கிரகப்பிரவேச முகூர்த்தம் காலை பத்து மணி. இப்படித்தான் இரவு பதினொரு மணிக்கு குடும்பத்துடன் வருவதா?" என்று உங்கள் தாத்தா நக்கலாக கேட்கிறார்...

எப்படியோ தாத்தா வீடு வந்து சேர்ந்து விட்டார். "என்ன ஆச்சு தாத்தா?" என்று பேரக்குழந்தைகளான நாங்கள் கேட்க, அவர் வெகு சாதாரணமாக "நான் உன் அம்மா வருவதற்கு முன்பே கிளம்பிவிட்டேன். ஆனால் மாடியில் உள்ள தாத்தாக்கள் சீட்டு விளையாட அழைத்தனர். விளையாடிக் கொண்டே கண்ணயர்ந்து தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தால் லேசாக இருட்டத் துவங்கியது. வீட்டைப் பூட்டிவிட்டு கிரகப்பிரவேசம் செய்தவர்களே கிளம்பி விட, வீடே, வெறிச்சோடி மின்சார இணைப்பு இல்லாததால் இருட்டோடிக் கிடந்தது. கீழே இறங்கி வந்து யாரையாவது கூப்பிடலாம் என்றால், அருகில் எந்த வீடும் இல்லை..."

"சுவாமி படத்திற்குமுன் இருந்த பால், பழம், பிரசாதம் ஆகியவற்றை எடுத்து, எப்பொழுதும் போல நேரத்துக்கு ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிட்டுத் தேடித்தேடி ஒரு மெழுகுவர்த்தியைக் கண்டுபிடித்துத் தீப்பெட்டியோடு கையில் வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டேன்."

"என் பிள்ளைகளால் எனக்கு எப்பொழுதும் நிம்மதியே கிடையாது. வந்ததுதான் வந்தார்கள்; காலையில் வரக்கூடாதா? நான் பகவத்கீதை உபநிஷத்துகளையெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு நிம்மதியாக இருந்தேன்" என்றார்.

என் மூத்த அத்தை "அப்பா உங்களுக்காக நாங்கள் நிறைய வேண்டிக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் நிறைவேற்றியாக வேண்டும்" என்றாள்.

அதைக்கேட்ட உடனே பகவத்கீதையை யோசித்த நெகிழ்வு போய், என் தாத்தா பழைய தாத்தாவாக மாறி, சிறிய கண்களில் பெரிய கோபக் கனலோடு, "அவரவர் பிரார்த்தனைச் செலவுகளை அவரவர்களே செய்து கொள்ளுங்கள். நானா வேண்டிக்கோங்கோ என்று கேட்டேன். என்கிட்டயிருந்து சல்லிக்காசு கூட பெயராது" என்று எப்பொழுதும் போல கூறிவிட்டார். எப்படியோ வீடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது!
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி
Share: 




© Copyright 2020 Tamilonline