விக்ரம் – வேதாளத்தின் கடைசிக் கதை
|
 |
|
 |
ஓர் அமைதியான கிராமம். நெளிந்தோடும் நதியின் கரையில், மரங்கள் சூழ்ந்த பழமையான கிருஷ்ணர் கோவில். சிறிய மதில்சுவரில் இருந்து, குட்டிக்கரணம் போட்டு நதிக்குள் குதிக்கும் சிறியவர்கள், பசுக்களைக் குளிப்பாட்டும் கிராம மக்கள், கோவிலின் மணி ஓசையுடன் தாளமாக ஒலிக்கும் நதி என அந்தச் சூழலைப் பார்க்க ஒரு சிறிய பிருந்தாவனம் போலத் தெரிந்தது .
கோவிலின் உள்ளே கருவறைக்குள், கிருஷ்ணர் தெய்வீகப் பட்டு ஆடையில், மல்லிகை மாலை அணிந்து, புல்லாங்குழலைப் பிடித்தபடி பிரகாசமாக நிற்கும் அழகில் லயித்த அர்ச்சகர் திருப்பாவை முதல் பாடலைப் பாடினார்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
கிருஷ்ணருக்குச் செய்யவேண்டிய கைங்கரியங்களை முடித்துவிட்டு, அங்கிருந்த படியில் வந்து அமர்ந்தார். வயது அவரது குரலில் தெரியாவிட்டாலும் தேகத்தில் தெரிந்தது.
கிராமத்து நபர் ஒருவர் அவர் அருகில் வந்து அமர்ந்து "மாதவன் கேஸ் இன்னிக்குத்தானே ஃபைனல் ஹியரிங்?" என்று சற்று வருத்தத்துடன் கேட்டார்
"ஆமா. ரெண்டு மணிக்கு. கிளம்பிகிட்டே இருக்கேன்" என்றார் அர்ச்சகர். அவரது கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிக்கும் நிலையில் இருப்பதைக் கண்டார் கிராமத்து நபர்.
"நீங்க செய்யுற கிருஷ்ண கைங்கரியத்துக்கு.." என்று கிராமத்து நபர் சொல்லி முடிக்கும் முன்,
"கிருஷ்ணனை ஒன்றும் சொல்லாதீங்க! நான் என் கடமையைத்தான் செய்றேன், பலன் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் இருக்கும். கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று சொல்லிக் கொண்டே, மெதுவாக எழுந்து கிளம்பத் தயாரானார்.
★★★★★
நீதிமன்றம். அவரருகில் இருந்த வக்கீல், அடுத்து நம்ம வழக்குதான், தைரியமாக இருங்கள் என்றார். கிருஷ்ணனைப் பிரார்த்தித்தபடியே, அர்ச்சகர் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார்.
தந்தையாக அவர் சரியாக வழிகாட்ட முயன்றபொழுதிலும், அவர் மகன் மாதவன் தடம்மாறிப் போனான். பணத்தாசை அதிகம். ஒரு கொலை வழக்கில், அவன் முதன்மை சந்தேக நபராகக் கருதப்பட்டு, இன்று இறுதி விசாரணை. ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனைகூட கொடுக்கப்படலாம் என்று ஊரில் பேச்சு . மாதவன், தான் கொலை செய்யவில்லை என்று கதறி அழுதாலும், சாட்சியங்கள் அவனுக்கு எதிராகவே இருந்தன. துக்கம் தொண்டையை அடைத்தது. அப்பொழுது யாரோ அவரது கையை இறுக்கிப் பிடித்ததுபோல இருந்தது.
கண் விழித்துப் பார்த்தார். அவரது அருகில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். அவர் அர்ச்சகரைப் பார்த்து, "ஐயா! கொஞ்சம் தண்ணி குடிங்க. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் இன்றே தீர்ந்துவிடும்" என்று கனிவுடன் கூறினார்.
அவரைப் பார்த்ததும், அர்ச்சகரின் மனதில் இருந்த கவலை எல்லாம் பறந்து போனது போன்ற ஒரு உணர்வு! அவரிடம் இருந்து தண்ணீர் புட்டியை வாங்கி 'கடக்,கடக்' என்று குடித்தார். தண்ணீரின் சுவை, கோவில் துளசி தீர்த்தம் போன்று இருந்தது. அவர் அந்த பெரியவரைப் பார்த்து ஏதோ கேட்க நினைக்கும் பொழுது, வக்கீல் அவர்களது வழக்கு வந்துவிட்டது என்று சொல்லிவிட்டு அர்ச்சகரைக் கூட்டிச் சென்றார்.
சற்று நேரத்தில் இறுதி விசாரணை தொடங்கியது. அந்தப் பெரியவர் அர்ச்சகர் அருகில் வந்து அமர்ந்தார். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அடுக்கடுக்காக மாதவன் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. அர்ச்சகர் கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அப்பொழுது யாரோ ஒரு போலீஸ் அதிகாரி வேகவேகமாக வந்து, அர்ச்சகரின் வழக்கறிஞரிடம் ஒரு முக்கிய ஆதாரத்தைச் சமர்ப்பித்தார். அது ஒரு பதிவு அடங்கிய பென் டிரைவ். நீதிபதியின் ஒப்புதலுடன், அது நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. குற்றம் நடந்த இடத்தில் மாதவன் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
இறுதித் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டு, வழக்கு விசாரணையைச் சற்றுத் தள்ளி வைத்தார் . மாதவன் விரைவில் விடுதலை செய்யப்படுவான் என்று வழக்கறிஞர் அர்ச்சகரிடம் தெரிவித்தார். எல்லாம் அவன் செயல் என்று நினைத்தபடி, சமயத்தில் வந்து உதவிய போலீஸ் அதிகாரிக்கு நன்றி சொல்ல, அவரைப் பார்க்கச் சென்றார்கள்.
அந்த போலீஸ் அதிகாரி அர்ச்சகரைப் பார்த்து, "நீங்கள் நன்றி சொல்லணும் என்றால் உங்க பக்கத்துல அமர்ந்து இருந்தாரே ஒரு பெரியவர், அவருக்குத்தான் சொல்லணும். அவரை உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்.
தெரியாது எனத் தலையை ஆட்டினார் அர்ச்சகர்.
போலீஸ் அதிகாரி ஆச்சரியத்துடன் தொடர்ந்தார்.
"நேற்று அவர் என்னை வந்து சந்தித்தார். அவர் ஒரு கிருஷ்ணர் கோயிலில் பொக்கிஷதாரராகப் பணிபுரிகிறார் என்றும், சமீபத்தில் அந்தக் கோவிலில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒரு பொருள் திருடு போனதை நான் விசாரிப்பதாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார். வீடியோ ஆதாரத்தில் இருந்து சில தகவல்களை எப்படி மீட்டெடுப்பது என்பது குறித்து அவர் எனக்கு ஒரு முக்கியமான துப்புக் கொடுத்தார். என்னால் அவரைக் கோவிலில் சந்திக்க முடியாததால், இன்று அவருக்கு நன்றி சொல்ல விரும்பினேன். ஆனால் அவரைக் காணவில்லை!"
வக்கீலும் அர்ச்சகரும் குழம்பிப் போய் நின்றனர். போலீஸ் அதிகாரி தொடர்ந்தார்.
"உங்கள் மகன் வழக்கையும் நான்தான் விசாரிக்கிறேன். பொருள் திருடு போனதை கண்டுபிடிக்க வீடியோவை இன்று ஆராய்ந்தபொழுது, கொலை நடந்த நேரத்தில் உங்கள் மகன் கோவிலில் இருந்ததைக் கண்டறிந்தேன்."
உடனே குறுக்கிட்ட வக்கீல் “கொலை நடந்த அன்று, மாதவன் மிகவும் பசியாக இருப்பதாகவும், கையில் பணம் இல்லை என்றும் கூறினான். கோவிலில் பிரசாதம் கொடுப்பதைப் பார்த்து உள்ளே சென்றதாகச் சொன்னான். என் தவறுதான். நான் அந்த ஆதாரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொலை நடந்த பிறகுதான், அவன் குற்றம் நடந்த இடத்திற்குச் சென்றுள்ளான். அவனுக்கு அந்த நபருடன் முன்விரோதம் இருந்ததால், அவன்தான் குற்றவாளி என்று போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து விட்டனர்" என்று வருத்தத்துடன் சொன்னார்.
போலீஸ் அதிகாரி அர்ச்சகரைப் பார்த்து "அதற்க்காக என்னை மன்னிக்கவும். வீடியோவைப் பார்க்கும்போது, யாரோ ஒருவர் உணவு விநியோகஸ்தருடன் ஏதோ ஒன்றிற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். எனது மற்றொரு வழக்குக்கான துப்பு கிடைக்குமா என்றுப் பார்த்த பொழுது, அங்கு மாதவனைக் கண்டுபிடித்தேன். கொலை நடந்ததாகச் சொன்ன நேரமும், கோவிலில் அவர் இருந்த நேரமும் ஒத்துப்போனது. நான் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று சொல்லி முடித்தார்.
சில வாரங்கள் கடந்தன. திருந்திய மாதவனும் அர்ச்சகரும், தங்களுக்கு மறுவாழ்வு கொடுத்த பொருளாளரைச் சந்திக்க, அந்தக் கோவிலுக்குச் சென்றனர். பிரதான அலுவலகத்திற்குச் சென்று பொருளாளரைப் பற்றி விசாரித்தனர். பொருளாளர் வெளியே வந்தார். அவர் பார்க்க இளமையாகவும், துடிப்பாகவும் இருந்தார். அவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். சில வாரங்களுக்கு முன்பு பார்த்த நபரைப்போல அந்த அலுவலகத்தில் யாரும் இல்லை!
அர்ச்சகர் குழப்பத்துடன், "கிருஷ்ணரைப் பார்த்துவிட்டு, ஊருக்குப் போகலாம்" என்றார்.
கிருஷ்ணர் சன்னிதி. மகா தீபாரதனைக்காகத் திரை மூடப்பட்டு இருந்தது. சிறிது நேரத்தில் திரை விலகியது. மகா தீபாரதனை காண்பித்த பொழுது, அவர் கண்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அன்று நீதிமன்றத்தில் பார்த்த பெரியவரின் உருவம் கிருஷ்ணரின் சிலையில் பிரதிபலித்தது!
நமக்கு வரும் சோதனைகள், நமது ஆன்மாவின் பயணத்தில், ஒரு வழியில் உதவுவதற்காகத்தான்; ஒவ்வொரு கடினமான சோதனைக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கைக்குப் பின்னால் உள்ள உண்மையை அன்று உணர்ந்தார். |
|
மருங்கர் |
|
 |
More
விக்ரம் – வேதாளத்தின் கடைசிக் கதை
|
 |
|
|
|
|
|